…
…

…
இது பாலகுமாரன் அவர்களின் மொழியிலேயே –
( இந்த சம்பவத்தில் பெயர் சொல்லப்படாத அந்த இயக்குநர் – திரு.கே.பாலசந்தர்… நடிகை – திருமதி சரிதா…!!! )
இப்பொழுது யோசித்துப் பார்த்தால் சினிமாவில் நான் சேர்ந்தது சினிமாவுக்காக அல்ல என்று தோன்றுகிறது. சினிமாவைப் பற்றி கதைகள் எழுதும் எண்ணத்தில் சினிமாவின் மீது ஆசைப்பட்டிருக்கிறேனோ என்றும் தோன்றுகிறது.
ஆனால் அப்படி ஒன்றும் சினிமாவைப் பற்றி கதை எழுதிக் கிழித்து
விடவில்லை. சினிமா எனக்கு வேறு ஒரு உலகை – வேறுவிதமான மனிதர்களை – நல்ல அனுபவங்களை – அந்த அனுபவத்தால் புத்தி தெளிவை- நிதானத்தைக் கொடுத்திருக்கிறது. வாழ்க தமிழ் சினிமா. இந்த நேரத்தில் ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
சினிமாவில் நான் உதவி இயக்குனராக சேர்ந்தேன். அந்த உதவி இயக்குனர் வேலையில் ஒன்று கன்டினியூடி. அதாவது ஒரே ஒரு சீனை முதல் நாள் எடுத்து, பிறகு இரண்டு நாள் கழித்து எடுத்து, பிறகு ஒரு வாரம் கழித்து மறுபடியும் தொடர்வார்கள்.
அதாவது தோட்டத்தில் ஆடிப் பாடிய பெண் அதே உடைகளோடு தானே
வீட்டிற்குள் நுழைவாள். தோட்டத்தில் ஆடிப் பாடியது ஜனவரி 1-ஆம் தேதிஎன்றால், வீட்டிற் குள் நுழைவது பிப்ரவரி 3-ஆம் தேதியாக இருக்கும். அப்படித்தான் ஷூட்டிங் நடக்கும்.
அந்த நேரம் வீட்டிற்குள் நுழையும்போது தோட்டத்தில் ஆடிய போது என்ன நகைகள் அணிந்திருந்தாளோ அதோடு இருப்பதுதான் சிறப்பாக இருக்கும். இதற்குத்தான் கன்டினியூடி என்று பெயர். காதில் தோடு, கை வளையல்கள், கழுத்து நகைகள்,மூக்குத்தி, கால் மெட்டி, புடவை, ரவிக்கை, தலை வாரலுடைய அமைப்பு இவையெல்லாம் ஒரு உதவி இயக்குனர் குறித்துக் கொள்ள வேண்டும்.
அவர் மிகப் பெரிய நடிகை. நன்கு நடிக்கக் கூடியவர். படப் பிடிப்பில், நான் அவருடைய நகைகளைக் கொடுத்துக் கொண்டிருந் தேன். ஒரு நமுட்டுச் சிரிப்பு அவரிடம் இருந்தது. படப்பிடிப்பு முடிந்த போது “தயவு செய்து அந்த நகைகளைக் கழட்டிக் கொடுத்து விடுங்கள் அது மறுபடியும் கன்டினியூடிக்கு தேவைப்படுகிறது’ என்று சொன்னேன்.
அவர், “இப்பொழுது வேண்டாம். களைப்பாக இருக்கிறது. நாளைக்கு காலையில் வந்து தருகிறேன்’ என்று சொன்னார்.
அவர்கிளம்பி போனதும் “நாளைக்கும் இதே இடத்தில் இதே சீனை எடுக்கப் போகிறேன்’ என்று டைரக்டர் சொன்னார். சரி. . காலையில்தான் நடிகை நகைகளைக் கொண்டுவந்து விடுவாரே என்று நான் சந்தோஷமானேன். மறுநாள் காலை நடிகை வந்து இறங்கியதும் ஓடிப்போய் நகைகளைக் கேட்டேன். கழுத்துச் செயின், மூக்குத்தி, கைவிரல் மோதிரங்கள், உடுப்பு,ரவிக்கை, தலைவாரல் எல்லாம் அப்படியே இருந்தது. காதில் வேறு தோடுபோட்டிருந்தார். “அந்தத் தோடு இல்லையே’ என்று கேட்டதற்கு, “அது காணவில்லை. எங்கேயோ
தொலைந்து விட்டது’ என்று சாதாரணமாகச் சொன்னார்.
“தயவு செய்து அப்படிச் சொல்லாதீர்கள். அந்த தோடு வேண்டும்’ என்று கூறினேன். “என்னிடம் இல்லை. நேற்றே வாங்கி வைக்க வேண்டியதுதானே. ஏன்இப்போது வந்து உயிரை வாங்குகிறீர்கள்’ என்று சள்ளென்று என்மீது எரிந்துவிழுந்தார்.
காலங்காலையில் உரக்க ஒரு நடிகை என்னைப் பார்த்து கோபமுறுவதை யூனிட்டில் எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். எனக்கு வெட்கமாக இருந்தது. நான் என்ன செய்வது என்று காஸ்ட்யூமரோடு போய் ஒட்டிக் கொள்ள, அந்தக் காஸ்ட்யூமர் மிகவும் பிரயத்தனப்பட்டு கிட்டத்தட்ட அதேபோல ஒரு நகையைத் தேர்ந்தெடுத்து அவரை அணியச் சொன்னார். அவரும், “ஆஹா, கிட்டத்தட்ட அதே நகையைக் கொண்டுவந்து விட்டீர்களே! பாராட்டுக்கள்’ என்று கூறி
அணிந்துகொண்டார். நான் உள்ளுக்குள் மகிழ்ந்தேன்.
ஆனால் அந்த காஸ்ட்யூமர் அப்படி மகிழவில்லை. கோபமாக அந்த நடிகையைத் திட்டிக்கொண்டே நகர்ந்து போனார். அவர் திட்டியது என் காதில் மட்டும்தான் விழுந்தது. படப்பிடிப்பு ஆரம்பித்தது. இரண்டு டேக்குகள் முடிந்தன. மூன்றாவது டேக் ஆரம்பிக்கிறபோது ஒரு க்ளோஸப் ஷாட் வைத்திருந்தது.
நடிகை டைரக்டரைக் கூப்பிட்டார். “இந்த தோடு நேற்று போட்டதல்ல;
வேறு மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள்’ என்று சொன்னார். டைரக்டருக்கு
கடுங்கோபம். என்னைக் கூப்பிட்டார். நான் ஆமாம் என்று சொன்னேன்.
காஸ்ட்யூமரை அழைத்தார். “என்ன இது’ என்று கேட்டார். நாங்கள் விவரிக்க முயல்வதற்குள் நடிகை மேலும் தூண்டிவிட, கோபத்தின் உச்சிக்குப் போனார். நான் புதியவன் என்பதால் என்னை அதிகம் திட்டவில்லை. காஸ்ட்யூமருக்குப் பலமாக இரண்டு அடி விழுந்தது.
காஸ்ட்யூமர் தலைகுனிந்து பல பேர் முன்னால் அவமானத்தோடு மௌனமாக நின்றார். ஒன்றும் பெரிதாகத் தெரியாது என்று மற்றவர்கள் சொல்ல, காமிராமேன் வாக்குறுதி கொடுக்க, காது அருகில் தெரியாதபடி க்ளோஸப் ஷாட் மாற்றிவைக்கப்பட்டு அந்த சீன் எடுக்கப்பட்டது.
அந்த நடிகை அன்று மாலை படப்பிடிப்பு விட்டுப் போகும்போது நான் நகைகளைக் கொடுத்தே ஆக வேண்டும் என்று நிற்க, அவர் மிகவும் ஒழுங்குப் பிள்ளையாய் நகைகளைக் கழட்டிக் கொடுத்தார்.
பெட்டியிலிலிருந்த முந்தைய நாள் நகையையும் எடுத்துக் கொடுத்தார்.
நான் திகைத்துப் போனேன்.
“ஏன் இப்படிச் செய்தீர்கள்’ என்று கெஞ்சலாகக் கேட்டேன். “வாழ்க்கை
போரடிக்கிறது’ என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு காரில் ஏறி கிளம்பிப் போனார். எனக்குத் திகைப்பாய் இருந்தது.
காஸ்ட்யூமரிடம் இதைப்போய் சொன்னேன். அவர் பல படங்களுக்குப்
பணியாற்றியவர். மறுபடியும் கோபமாகத் திட்டினார். நான் திகைத்துப் போனேன்.
அந்த நடிகை அதற்குப் பின்னால் ஒரு உச்சிக்குப் போய் மெல்ல சரிந்து,
கல்யாணம் என்று ஆரம்பித்து, விவாகரத்து என்று மாறி, குழந்தை
வேண்டும் என்று சொல்லி, குழந்தை வேண்டாம் என்று தள்ளி,
சொத்துபற்றி வழக்குப்போட்டு,
சொத்து சேர்ப்பதற்காக பொய் சொன்னார்
என்று வழக்குப் போட்டு விதவிதமான சிக்கல்களில் சிக்கிக் கொண்டார்.
அவமானப்பட்டார்.
நான் யோசித்துப் பார்த்தேன். வாழ்க்கை போரடிக்கிறது என்பதற்காக
இவற்றையெல்லாம் செய்கிறாரோ என்று யோசனை செய்தேன்.
மனிதர்கள் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் செய்யத் தயங்காதவர்கள் என்று எனக்கு அப்போது புரிந்தது. எல்லார் மீதும் எப்போதும் சந்தேகத்தோடு இருப்பதே சரி என்பதும் எனக்கு உறுதிஆயிற்று.
மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள்தான். சிலசமயம் மனிதர்களுக்கு
கிறுக்குப் பிடிக்கும். பொறுத்துக் கொள்ளவும், தப்பித்துக் கொள்ளவும் பழகிக் கொள்ளவேண்டும். இது சினிமா எனக்குக் கற்றுத் தந்த முதல் பாடம். ”
.
———————————————————————————



The story shows Ignorance of Late. Shri. Balakumaran. Even an average level person knew about Film Industry is Rotten and Cut throats filed. I do not understand how he had underestimated it.
yes sir you are right.the total industry is rotten and worst by all means.
vellaivaranan
மிஸ்டர் டெல்லி பயணம்,
எல்லாம் தெரிந்த மாதிரி எழுதக் கூடாது. எந்த இண்டஸ்டிரியில் மோசமானவர்கள் இல்லை ? நீங்கள் எந்த இண்டஸ்ற்றீ ? உங்கள் இண்டஸ்ற்றீயில் அத்தனை பேரும் உத்தமரா ?
இதில் பாலகுமாரன் சார், தனக்கு மிக சின்ன வயதில், 35-40 வயதில் நேர்ந்த அனுபவத்தை கூறுகிறார். எல்லாருக்கும் அனுபவித்தில் தான் பல விஷயங்கள் தெரிய வருகிறது. பிற்காலத்தில் பாலகுமாரன் சார் எழுதியவற்றை படித்திருந்தால் நீங்கள் இப்படி கமெண்ட் எழுதி இருக்க மாட்டீர்கள்.
நீங்கள் குறைகூறுவது இயக்குநர் சிகரம் பாலசந்தர் அவர்களை.
அவர் எத்தகைய discipline உள்ளவர் என்பது உங்களுக்கு தெரியுமா ?
பொத்தாம் பொதுவாக கமெண்ட் போடுவது அரைவேக்காட்டுத்தனம்.
@அரவிந்தன் – இதில் பாலசந்தரைக் குறை சொல்லி எதுவுமே இல்லையே. திரைப்பட டைரக்டர் பணி என்பது மிகுந்த டென்ஷன் உடைய வேலை. இதனை மேற்கொள்ளும் பெரும்பாலானவர்கள் மிகுந்த உணர்ச்சிவசப்படும் இயல்பு உடையவர்களாகத்தான் இருப்பர். பாலசந்தரை இந்த இடுகையில் குறை சொல்லவில்லை. சரிதா (அவர்தான் அந்த நடிகை என்றால்) அவர்களின் விளையாட்டுத்தனத்தை (சிறுபிள்ளைத் தனத்தை) பாலகுமாரன் எழுதியுள்ளார். எளிமையானவர்களைத் துன்புறுத்திப் பார்க்கும் மனநிலையை பாலகுமாரன் அவர்கள் சொல்லியிருக்கிறார்.
அந்த எண்ணத்தின் தரம் காரணமாக சரிதா வாழ்க்கையில் கஷ்டப்பட்டார். இதனை, ‘ஆட்டோ சங்கர்’ எழுதிய அவருடைய சுய சரிதத்தில் காணலாம்.