சட்டம் – கடிக்கும், உதைக்கும் – கட்டிப்பிடித்து முத்தமும் கொடுக்கும்….!!!



..

முன்னால் போனால் கடிக்கும்…
பின்னால் போனால் உதைக்கும்…
சட்டம் – ஒரு கழுதை என்று சொன்னவர்கள் உண்டு.

சட்டம் ஒரு இருட்டறை –
வக்கீல்களின் வாதம் அதில் ஒரு விளக்கு
என்று சொன்னவர்கள் உண்டு.

ஒவ்வொரு வக்கீலும் ஒவ்வொரு கலர் விளக்கை காண்பித்தால்,
சட்டத்தின் வடிவம் எதைப் பிரதிபலிக்கும்…? குழப்பம் தான் விளையும்…!

சட்டம் – சில சமயங்களில் கட்டிப்பிடித்து முத்தமும் கொடுக்கும் என்பதை இன்று நிரூபிக்கிறது 7 பேர் வழக்கில்.

Criminal Procedure Code -432 மற்றும் 433 பிரிவுகள் தண்டனைக் கைதிகளின் தண்டனைக் காலத்தை குறைப்பது, ரத்து செய்வது என்பவை குறித்து மாநில அரசுகளுக்கு இருக்கும் அதிகாரம் குறித்து பேசுகின்றன.

Criminal Procedure Code -பிரிவு 435 –
மாநில அரசு இந்த அதிகாரத்தை பயன்படுத்தும்போது –

மத்திய அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளில், தண்டனைக் கைதிகளின்
தண்டனைகளை குறைப்பது, ரத்து செய்வது என்றால் – மத்திய அரசை கலந்து ஆலோசனை செய்த பிறகே செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

அரசியல் சட்ட பிரிவு 161 – தண்டனைக்கைதிகளின் தண்டனைகளை
குறைப்பது, ரத்து செய்வது முதலியன குறித்து மாநில கவர்னருக்கு
உள்ள அதிகாரத்தைப் பற்றி பேசுகிறது.

இந்த 7 பேர் வழக்கில், மாநில அரசு Cr.P.C- பிரிவு 435 -ன் கீழ் நடவடிக்கை எடுத்து, அவர்களை மன்னித்து விடுவிக்கத் தீர்மானித்து சட்டத்தின் தேவைப்படி, அதை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி அதன் கருத்தை கேட்டது…

மத்தியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு இதில் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்த வாய்ப்பு இருக்கிறது என்று கருதியபடியால், 3 நாட்களுக்குள் மத்திய அரசிடமிருந்து பதில் வரவில்லையென்றால்,

மாநில அரசு தன் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் என்றும் மத்திய அரசுக்கு தெரிவித்தது.

அன்றைக்கு மத்தியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு (அதில் திமுகவும் அடக்கம்…) தமிழகம் பயந்தபடியே இந்த தீர்மானத்திற்கு முட்டுக்கட்டை போட்டது.

தமிழக அரசின் கடிதத்தை உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு போய், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் தமிழக அரசு முடிவெடுப்பது சட்டவிரோதம் என்று வழக்கு தொடர்ந்தது….

நீண்டுகொண்டே போனது வழக்கு…..
மத்திய அரசுக்கு அதைப்பற்றி என்ன கவலை…?

3 நீதிபதிகளை கொண்ட பென்ச், இதை உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பிரிவிற்கு விளக்கம் கோரி அனுப்பியது…. அரசியல் சாசன பென்ச் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு மாநில அரசு இதில் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் மத்திய அரசின் ஒப்புதல் அவசியமென்றும் விளக்கம் தந்து, மீண்டும் 3 நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்பியது.

3 நீதிபதிகள் அமர்வு, மாநில அரசின், கைதிகளை விடுதலை செய்வது குறித்த முடிவு பற்றி மத்திய அரசு தனது கருத்தை முதலில் தெரிவிக்க வேண்டுமென்று உத்திரவு போட்டது.

இப்போது ஆட்சியில் இருந்தது பாஜக அரசு…
ஆனாலும் காங்கிரஸ் அரசை விட கடுமையாக
இந்த விஷயத்தை எதிர்த்தது.
7 பேரை விடுதலை செய்வதை
தாம் முற்றிலும் எதிர்ப்பதாகச் சொல்லி விட்டது.

காங்கிரசாக இருந்தால் என்ன…
பாஜக வாக இருந்தால் என்ன…
தமிழகத்தைப் பொறுத்த வரையில் இரண்டும் ஒன்று தானே…?

இதற்குள்ளாக, பேரறிவாளன் – தான் அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ் அனுப்பிய கருணை மனுவின்மீது இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருக்கிறது என்று ஒரு நினைவுறுத்தல் கொடுத்தார். தமிழக அரசும் இதில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி உத்திரவை கேட்டு அழுத்தம் கொடுத்தது.

அதன் விளைவே, இன்றைய இனிய திருப்பம்….

சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட பென்ச் கொடுத்த
விளக்கத்தையும் தாண்டி, அதற்கு அப்பாலும்,
நீதியின் மனசாட்சி வேலை செய்திருக்கிறது.

3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு – இறுதியாக, ( முன்னர் கிடைத்த அரசியல் சாசன பிரிவிலிருந்து கிடைத்த விளக்கங்களுக்கு மாற்றாக…)

மாநில கவர்னர் (அதாவது மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு)-

அரசியல் சட்டம் 121-வது பிரிவு மாநிலங்களுக்கு
அளித்திருக்கும் அதிகாரத்தின் கீழ் –
(மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டிய தேவை இல்லாமல்… )
தானே சுயமாக இந்த விஷயத்தில்
முடிவெடுக்கலாம் என்பது தான் அந்த தீர்ப்பு….

வீட்டில் தாய் தன் மகளுக்கு –
“அந்த வழியாக போனால் தானே உன்னை வம்புக்கு இழுக்கிறார்கள்…
நீ இந்த வழியாக போ கண்ணா” என்று யோசனை சொல்வது போல்,

Cr.P.C.வழியில் போனால் தானே உங்களுக்கு பிரச்சினை… அரசியல் சட்டம் கொடுக்கும் அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் – (உங்களை எவன் தடுக்கிறான் பார்ப்போம் ) என்று சொல்லிக் கொடுத்திருக்கிறது….

( மாநில அரசு முதல் நிலையிலேயே இந்த பிரிவை பயன்படுத்துவதில்
சில சிக்கல்கள் இருந்தன… அவற்றை வெளிப்படையாக இங்கே
விவாதிப்பது சரியாக இருக்காது…. இப்போது உச்சநீதிமன்றமே சொல்லி
விட்டதால், இனி செயல்பட தடை இருக்காது … )

வாழ்க நீதியின் மனசாட்சி…

மாநில அரசு ஏற்கெனவே இந்த தீர்மானத்தில் உறுதியாக இருப்பதால்
– உச்சநீதிமன்ற தீர்ப்பு கையில் கிடைத்தவுடன், நிச்சயமாக அடுத்த கட்டத்திற்கு செல்லும் ….இனி எதுவும் இந்த விஷயத்தில் குறுக்கிட வழி இல்லை என்று நம்பலாம்….

இருந்தாலும், மாநில அரசு, உரிய சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு தான் இதில் செயல்பட வேண்டும் என்பதால்….அதற்கான கால அவகாசம் அதற்கு தேவைப்படும்…

( மத்திய பாஜக அரசு வேண்டுமென்றே எதாவது வம்பு செய்து, கவர்னர் மூலம் குறுக்கிட்டாலொழிய… இந்த பிரச்சினை சுமுகமாக தீரும் என்று நம்பலாம்…)

இனியாவது அந்த சிறைப்பறவைகள் –
சுதந்திரமாக சிறகடித்துப்
பறக்கட்டும் …..என்று வேண்டுவோமாக.

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to சட்டம் – கடிக்கும், உதைக்கும் – கட்டிப்பிடித்து முத்தமும் கொடுக்கும்….!!!

  1. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    காவிரிமைந்தன்,

    எல்லாருக்கும் புரியும்படியாக, மிகத் தெளிவாக, வழக்கு விவரங்கள், சட்ட விதிகள் பற்றியெல்லாம் எழுதி இருக்கிறீர்கள். செய்தித்தாள்களில் கூட இந்த அளவு
    தெளிவாக இல்லை. நன்றி.

  2. பிங்குபாக்: சட்டம் – கடிக்கும், உதைக்கும் – கட்டிப்பிடித்து முத்தமும் கொடுக்கும்….!!! – TamilBlogs

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    நீங்கள் எது நடக்கவேண்டுமோ அந்தக் குறிக்கோளை மாத்திரம் மனதில் வைத்து இடுகை எழுதியிருக்கீங்க.

    அவர்கள் விடுதலை பெறக் கேட்க (ie to demand, as they have exhausted all the available channels) எந்த முகாந்திரமும் அவர்களுக்கு (நளினி, முருகன் & கோ) இல்லை. அரசு சட்ட நெறிமுறைகளின்படி செய்தால் அது அரசின் முடிவு. இதுதான் என் நிலைப்பாடு இந்த விஷயத்தில். (நீங்கள் சொல்லியிருக்கும் ‘சட்டத்தின் விளக்கம்’-முன்னால் போனால்… பின்னால் வந்தால்.. முற்றிலும் சரியே)

    இதுவரை திமுகவின் நிலைப்பாடு, இவர்களின் விடுதலைக்கு எதிராகத்தான் இருந்தது. இப்போது ஜெ. அரசு எடுத்துக்கொண்ட சட்டப்போராட்டம் வெற்றி பெற்றதால், தங்கள் முகத்தில் உள்ள கரியைத் துடைத்துக்கொள்ள, ஸ்டாலின், தமிழக அரசு இவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். திமுகவிற்கு, ஈழத் தமிழர்களின் மீது உள்ள அன்பு எல்லோருக்கும் தெரியும்தானே.

    ஜெ. வின் சட்டப் போராட்டமும், அரசியல் காரணங்களுக்காக இருக்கலாம் என்பதுதான் என்னுடைய எண்ணம்.

    • Mani's avatar Mani சொல்கிறார்:

      புதியவன்,

      //அவர்கள் விடுதலை பெறக் கேட்க (ie to demand, as they have exhausted all the available channels) எந்த முகாந்திரமும் அவர்களுக்கு (நளினி, முருகன் & கோ) இல்லை. //

      அப்போது சுப்ரீம் கோர்ட் என்ன முட்டாளா ?

  4. Vishnu's avatar Vishnu சொல்கிறார்:

    Dear sir,
    I too wish them early freedom.

    But I differ with you in the way you greet them .

    The feel in your writing and the call from others is

    as if they they have been immprisoned for freedom struggle

    or some noble cause. Except one all others were knowingly

    involved in the diabolical murder of a probable future PM.

    Hence it is better to advice them to repent and live straight.

  5. மெய்ப்பொருள்'s avatar மெய்ப்பொருள் சொல்கிறார்:

    சட்டச்சிக்கல் என்று சொல்லிவிட்டால் பிரச்சனை முடிந்தது .
    சிக்கல் இல்லாவிடிலும் ஒத்திப் போட முடியும் .
    இந்திய கோர்ட்களிடம் ஒரு வழக்கு போனால்
    அது முடியாமல் போக வைக்கவும் முடியும் .

    சிங்கப்பூர் மலேசியா துபாய் போன்ற இடங்களில்
    கோர்ட்டில் ஒரு வாரத்திலோ மிஞ்சிப்போனால் ஒரு மாதத்திலோ
    தீர்ப்பு கொடுத்து விடுவார்கள் .

    ஆயுள் தண்டனை என்பது இருபது வருடம் . பொதுவாக
    பதினான்கு ஆண்டில் வெளியே வந்து விடுவார்கள் .

    காந்தி கொலை வழக்கில் சதியில் ஈடுபட்டவர்கள் விடுதலை
    செய்யப்பட்டார்கள் . இந்த வழக்கில் தண்டனை பெற்ற
    அனைவரும் சதியில் ஈடுபட்டவர்கள் இல்லை .
    திட்டமிட்டு சதி செய்தவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் .
    இவர்கள் சிவராசன் கூட பழக்கம் உண்டு .அவ்வளவுதான் .

    சி பி ஐ இந்த வழக்கை சரியாக கையாளவில்லை என்ற கருத்தும் உண்டு .
    இந்த சதிக்கு பணம் கொடுத்தவர்கள் யார் என்று இன்னமும் தெரியவில்லை .

  6. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    https://vimarisanam.wordpress.com/2015/06/26/24-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88/ ….இந்த இடுகையில் பேரறிவாளன் அவர்களின் பத்திரிக்கை பேட்டி உள்ளது ..படித்தால் புரியும் பல விவரங்கள் …!!!

  7. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    செல்வராஜன்,

    இதை இங்கு நினைவுபடுத்தியதற்கு நன்றி.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.