…
…

..

..
“காலா பாணி” (சிறைச்சாலை…) என்று 1996-ல்
தமிழிலும், மலையாளத்திலும் ஒரு படம் வந்தது.
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் சொந்தமாகத் தயாரித்திருந்தார். இயக்குநர் ப்ரியதர்ஷன் ….
இசை – இளையராஜா ……
ஒளிப்பதிவு -சந்தோஷ் சிவன் …
மோகன்லால், பிரபு, தபு – நடித்தது…! 1910 -வாக்கில், பிரிட்டிஷ்
ஆட்சிக்காலத்தில், சுதந்திர போராட்ட பின்னணியில் நடந்ததாக ஒரு கதை….
அற்புதமான படம்…. ஆனால் … படம் Super Flop… ஓடவில்லை…!!!
இந்த படத்தைப் பார்த்த அனுபவம் எனக்கு இன்னமும் அப்படியே நினைவில் இருக்கிறது.
திருச்சி, காவேரி திரையரங்கில் படம் வெளியாகி இருந்தது.
வெள்ளிக்கிழமை ரிலீசான படத்தை, தவிர்க்க முடியாத வேலைகள்
காரணமாக அந்த வார இறுதியில் பார்க்க கூடவில்லை… ..
சரி இப்போது தானே ரிலீஸ் ஆகியிருக்கிறது…அடுத்த ஞாயிறு அவசியம் பார்த்து விடலாம் என்றிருந்தேன்.
நான் வசித்து வந்த இடம், திருச்சி நகரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் இருந்தது. அப்போதெல்லாம் (1996) – இரவு நேர பஸ்கள் கிடையாது.
சினிமா பார்ப்பதாக இருந்தால், பகல் காட்சி பார்த்தால் தான் வீடு திரும்ப
முடியும்.
வியாழக்கிழமை மதியம், எதேச்சையாக திருச்சி நகரிலிருந்து வரும்
தொழிற்சாலை ஊழியர் ஒருவர் சொன்னார்… சிறைச்சாலை(காலாபாணி) படத்தை அன்றோடு தூக்குகிறார்கள். படம் ஃப்ளாப் என்று.
எனக்கு மனம் கேட்கவில்லை. படத்தின் பின்னணி எல்லாம் எனக்கு
ஏற்கெனவே தெரியும். எனவே உணர்வுபூர்வமான அந்த படத்தை பார்க்க மிகவும் ஆவலாக இருந்தேன்…
சரி.. எப்படியும் அன்றிரவே – 10 மணி காட்சி போய் விடுவது என்று
தீர்மானித்தேன். கூட யாராவது வருவார்களா என்று நண்பர்களிடையே விசாரித்து பார்த்தேன்…. நாராயணன் என்று ஒரு நெருங்கிய நண்பர் – அவருக்கு அந்த அளவு ஆர்வம் இல்லாவிட்டாலும், எனக்கு கம்பெனி
கொடுப்பதற்காக கூட வருவதாகச் சொன்னார்.
அதே போல் இரவு 10 மணி காட்சி பார்த்துவிட்டு,
வெளியே வந்தபோது, அதிகாலை 2 மணி… மறக்க முடியாத படம்…!
மனம் முழுவதுமாக உணர்ச்சி வசப்பட்டிருந்தது.
தெருவில் – ஈ, காக்கை இல்லை…!!!
காவேரி(பாலக்கரை) திரையரங்கிலிருந்து மத்திய பேருந்து
நிலையம் வரை, இருவரும் நடந்தே வந்தோம்.
இரவு சொச்ச நேரம் முழுவதும் அங்கேயே ஒரு டீக்கடை வாசலில் (டீ, பிஸ்கட்டுடன்), படத்தில் வந்த சுதந்திர போராட்ட கால சூழ்நிலைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருந்து விட்டு, அதிகாலை நாலே முக்கால் மணிக்கு முதல் பஸ்ஸை பிடித்துக்கொண்டு வீடு வந்தோம்…. (காலை ஏழரை மணிக்கு வழக்கம்போல் அலுவலகம்…! )
ஆக, இந்த திரைப்படத்தை பார்க்க, இரவு பூராவும் கண் விழித்திருந்தது –
இன்னமும் நன்கு நினைவிருக்கிறது.
நல்ல கலைப்படங்கள், தேசபக்தி திரைப்படங்கள்
எல்லாவற்றிற்கும் இங்கு இது தான் கதி.
சிவாஜியின் கப்பலோட்டிய தமிழனையே பல தியேட்டர்களில்
முதல் வாரத்தோடு தூக்கி விட்டார்களே…!
சிறைச்சாலை திரைப்படத்திலிருந்து
நண்பர்களுக்காக, ஒரு சாம்பிள் காட்சி கீழே …..
…
..
சரி – இந்த கதையை நான் இப்போது எழுதக் காரணம்…?
நண்பர் அஜீஸ் ஒரு வீடியோ லிங்க் அனுப்பி இருந்தார்…
அதைப் பார்த்தவுடன் இந்த கதையெல்லாம் தானாகவே நினைவிற்கு வந்து விட்டது.
100 வருடங்களுக்குப் பிறகு, இந்த காலா பாணி சிறைச்சாலை இப்போது – சுதந்திர இந்தியாவில் – எப்படி இருக்கிறது… என்பதைக் காட்டும் ஒரு வீடியோ…
கீழே காணொளியில்… ( நண்பர் அஜீஸ் அவர்களுக்கு நன்றி…)
…
..
———————————————————————————



பிங்குபாக்: கொடுமையான பிரிட்டிஷ் ” செல்லுலார் ஜெயில்….” அனுபவங்கள்…. – TamilBlogs
சுதந்திர பாேராட்ட வீரர்களுக்கு அந்தமான் சிறை …வங்கி ஏய்ப்பாளனுக்கு சாெகுசான சிறை ….! நாடு நல்ல நாடு ….?
செல்வராஜன்,
அவனென்ன இளிச்சவாயனா இங்கே வந்து சிறையில் குடித்தனம் பண்ண …?
முதலில் அவன் வந்து சேரட்டும் பார்க்கலாம்…
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அண்ணா
நானும் கூட அந்த படத்தை பார்த்தேன்.டி .வியில்தான்.ஆனால் முழுமையாக பார்க்கவில்லை.பார்க்க முடியவில்லை.மனது டன் டன்னாய் கனத்தது.நல்ல படங்கள் ஓடாததற்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
karthik amma
கார்த்திக் அம்மா,
சுதந்திர போராட்ட காலத்து படங்களை பார்க்கும்போது மனம் கனக்கிறது என்பது உண்மையே.
இருந்தாலும், அந்த படங்கள் தோல்வியுறும்போது, மனம் அதைவிட அதிகமாக கனக்கின்றதே –
என்ன செய்ய….?
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
பகிர்வுக்கு நன்றி கா.மை சார். என் மனதில் தோன்றும் எண்ணம் இதுதான்.
நாம், தமிழர்கள் சுயநலவாதிகள். இந்தியர்களாக நாம் எல்லோருடைய தியாகத்தையும் மறந்துவிட்டோம். கேரளத்தில் எழுத்தாளர்களுக்குக் கொடுக்கும் மரியாதையை நாம் தமிழகத்தில் கொடுப்பதில்லை. சுதந்திரப் போராட்ட தியாகிகளை நாம், காங்கிரஸ் காரன், என்று துர் சொல் சொல்லிப் புறக்கணித்துவிட்டோம். இதற்கு அரசியல்வாதிகள், சரியான தலைவர்களாக இல்லை என்று மட்டும் சொல்லித் தப்பித்துவிடமுடியாது. அவர்களை அந்த இடத்துக்குக் கொண்டுவந்தது நாம்.
சிவாஜி அவர்கள் ஒரு பேட்டியில், உயிரைக் கொடுத்து நடித்த கப்பலோட்டிய தமிழன் படம் (படு) தோல்வியைத் தன்னால் ஜீரணிக்கமுடிந்ததில்லை என்று சொல்லியிருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் அவ்வளவு சிறப்பான வரவேற்பில்லை. இது நம் மக்களின் நன்றிகெட்ட தன்மையையே வெளிக்காட்டுகிறது. ‘செக்கிழுத்த செம்மல்’ என்று சொன்னால் மட்டும் போதாது. கப்பல் ஓட்டி தன் வியாபாரத்தைக் கெடுத்ததால், அவரை உயிரோடு புதைத்தது பிரிட்டிஷ் அரசாங்கம். அவர் என்ன தன் சொந்த நன்மைக்கா இதனைச் செய்தார். அவருக்கு நம் அரசாங்கங்கள் எதுவுமே (சுதந்திரத்துக்குப் பின்) உதவவில்லை என்பது பெரிய சோகம். சுதந்திரப் போராட்ட தியாகிகள் அனைவருக்கும் 10% இட ஒதுக்கீடு இரண்டு தலைமுறைக்கு, கல்வியில் உண்டு என்று சட்டம் போட்டிருக்க எவ்வளவு நேரமாயிருக்கும்?
இதனைப் பற்றி தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி செய்து ப்ரைம் டயத்தில் வெளியிட்டு கடைசியில் ‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம்’ பாடலைச் சேர்த்தால் எல்லோருடைய மனதும் கனக்கவைத்துவிடும். (நான் வ.உ.சி அவர்களைப் பற்றி ஒருவர் திருச்சி மலைக்கோட்டை யானை கட்டும் இடத்திற்கு வெளியே இருந்த கடைக்காரர் ஒருவர் சொன்னதை இங்கு எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். வெறும், ‘பிள்ளைமார் ஜாதி, வ.உ.சி வாரிசுகளுக்குச் செய்தால் என்ன வாக்கு வந்துவிடப்போகிறது, ஒவ்வொரு ஜாதியா அப்புறம் வந்துடுவாங்களே’ என்ற குறுகிய அரசியல் புத்தி. அதனால மக்களையும் சாதிக்கண்ணோட்டத்திலேயே வளர்த்திருக்கு சுதந்திர இந்தியா என்று தோன்றுகிறது)
நீங்கள், கவனிக்க மறந்தவைகளைக் கவனத்தில் கொண்டுவருவதை நான் பாராட்டுகிறேன். ஒரு மீடியானா, வெறும்ன கட்சி அரசியலை மட்டும் பேசி டென்ஷன் வரவைக்காமல், மற்றவற்றிர்க்கும் தகுந்த (இட ஒதுக்கீது) இடம் கொடுக்கறீங்க. துக்ளக்கில் நீங்கள் பணியாற்றும் தகுதி (என் மனதில் பாஜக வைப் பற்றிய சுருதி கொஞ்சம் குறையணும் என்று தோன்றுகிறது, ஆனால் காலம்தான் எனக்கு இதற்கான பதிலைச் சொல்லும், ஏனென்றால் உங்கள் சொந்த நலத்திற்கு நீங்கள் இத்தகைய கட்டுரைகளை எழுதுவதில்லை என்பதில் எனக்கு நம்பிக்கை) உங்களுக்கு உள்ளது என்று என் மனதில் படுகிறது.
புதியவன்,
// துக்ளக்கில் நீங்கள் பணியாற்றும் தகுதி
உங்களுக்கு உள்ளது என்று என் மனதில்
படுகிறது. //
உங்கள் கருத்துக்கு நன்றி.
-எந்த அமைப்பில் பணியாற்றினாலும், இப்போது இருக்கும் சுதந்திரத்துடன் நான் எழுதவோ, இயங்கவோ முடியாது என்பது உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன். (அதுவும் பாஜகவை எதிர்த்து துக்ளக்’கில்… 🙂 🙂 )
எனக்கு எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லை… எனக்கு வேண்டியதை இறைவன் ஏற்கெனவே கொடுத்திருக்கிறான்….
எனவே, மனசாட்சி சொல்கிறபடி இயங்க முடிகிறது என்பதால் – என்னைப் பொருத்த வரையில் இந்த வலைத்தளத்தில் எழுதுவதே எனக்கு சாலச் சிறந்தது.
– உங்கள் ஆர்வத்தைப் பார்க்கும்போது, இதுவரை நான் யாரிடமும் சொல்லாத ஒரு ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது…
சோ சார் இருக்கும்போதே – துக்ளக்’கில் என் சொந்தப் பெயருடன் புகைப்படமும் வந்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா…?
// பாஜக வைப் பற்றிய சுருதி கொஞ்சம் குறையணும் //
– இந்த நாட்டுக்கு, தமிழ் மக்களுக்கு – எது நல்லதோ அதைத்தான் நான் செய்கிறேன்…. சுருதியை குறைத்துக் கொள்ளும் விதத்தில் பாஜக இயங்கும்போது, இந்த பிரச்சினை தானாகவே காணாமல் போய் விடுமே… 🙂 🙂
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
மன் கீ பாத்-ல் தமிழ் மொழியை பற்றி சிலாகித்து பேசியிருப்பதை பற்றி தங்களின் கருத்தை கூறுங்கள் ஐயா
அஜீஸ்,
உங்களுக்கு பழைய தமிழ் திரைப்பட பாடல்கள் தெரிந்திருக்கும்.
தூக்கு தூக்கி’யில் ஒரு பாடல் வரி-
“ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே…
காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே…!!! ”
இதில் “காரியம்” என்பது வரவிருக்கும் “பாராளுமன்ற தேர்தல்..”
என்று கொள்ளலாம் …!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அய்யா …! உங்களுக்கு பாேதும் என்ற மனமே பாென் செய்யும் மருந்து என்கிற மனது …! இந்த விமரிசனம் தளம் 2009 ஜூலையில் ஆரம்பித்து 2018 ஆகஸ்ட்
இன்று வரை 2803 இடுகைகளை பதிவாக்கி // இன்றில்லாவிட்டால் நாளையாவது மாறுமல்லவா…? // என்ற எண்ணத்தாேடு ஒன்பது ஆண்டுகளாக நாட்டின் நடப்புகளை பாரபட்சமின்றி தங்களின் பாணியில் எழுத்தாக்கி உளளிர்கள் …!
” எனக்கு பிடித்தது தமிழும் , தமிழ்நாடும் ” என்பது தாெடரட்டும் …வருடத்திற்கு சராசரியாக சுமார் 320 இடுகைகள்என்பது … பிரமிக்க வைக்கிறது …!
முதல் இடுகை எஸ் .வீ . சேகரில் ஆரம்பித்து இன்று செல்லுலார் ஜெயில் முடிய ….. வாழ்த்துகள் ….!!!
செல்வராஜன்,
புள்ளி விவரங்களை அள்ளி வீசி நீங்கள் என்னை பிரமிக்க வைக்கிறீர்கள்…!
நீங்கள் சொன்ன பிறகு தான், நானும் இவற்றைப்பற்றி எல்லாம் யோசித்தேன்.. இவை சாத்தியமாக – அடிப்படையில் இரண்டு காரணங்கள்…
ஒன்று – இறைவன் ஆசி…
இரண்டு – உங்களைப் போன்ற வாசக நண்பர்கள் தரும் பேராதரவு. அந்த ஊக்கம் தொடர்ந்து பின்னூட்டங்கள் மூலம் கிடைத்துக் கொண்டே இருப்பதால் தான் – என்னால் உற்சாகத்துடன் எழுதிக்கொண்டே இருக்க முடிகிறது.
உங்கள் வாழ்த்துகளுக்கும், நல்லெண்ணங்களுக்கும் மிக்க நன்றி செல்வராஜன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Kanoliyil oru Vasanam: ” Padachavan ungala kakkatum”…..impressive.