…
…

…
எனக்கு மிகவும் பிடித்த –
நான் மிகவும் மதிக்கும் –
ஒரு சிறந்த சிந்தனையாளர்.
தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான…
திரு.சுகி சிவம் அவர்கள் –
IBC Tamil என்னும் வலைத்தளத்திற்காக,
மிக அண்மையில், 4 நாட்களுக்கு முன்னதாக
அளித்துள்ள சிறப்பான ஒரு பேட்டி கீழே –
பல முக்கியமான விஷயங்கள் பற்றி, தனது ஆழ்ந்த கருத்துகளை,
தெளிவாகக் கூறுகிறார் சுகி சிவம்.
இந்த காரணத்தினாலேயே, நான் அடிக்கடி சுகி சிவம் அவர்களின்
உரைகளை இந்த தளத்தில் பதிவு செய்வதை வழக்கமாகக்
கொண்டிருக்கிறேன்.
இதில் எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் –
நாம் நீண்ட நாட்களாக இந்த வலைத்தளத்தில் திரும்பத் திரும்ப
சொல்லி வரும், எழுதி வரும் – ஒரு கருத்தை –
அவரும் வலியுறுத்துகிறார்…
ஆன்மிகம் என்பது மதம் சார்ந்ததல்ல…
மதம் வேறு…ஆன்மிகம் வேறு..
மதங்களை கடந்தது தான் ஆன்மிகம்…
ஞானிகள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள்…
கடவுளை உண்மையாக உணர்ந்தவன்,
மதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டான்…
அனைத்து மதங்களையும் ஒன்றாக பாவிப்பவன் தான்
ஆன்மிகவாதியாக இருக்க முடியும்…
– இந்த கருத்தை, இந்த விமரிசனம் தளத்தில் பல இடுகைகளில் நாம்
வலியுறுத்தி வந்திருக்கிறோம்…தொடர்ந்து வலியுறுத்துவோம்.
….
-வாசக நண்பர்களுடன் இந்த காணொளியை பகிர்ந்து கொள்வதில்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்…
(நன்றி – IBC Tamil வலைத்தளம்…)
…
.
———————————————————————————————————



பிங்குபாக்: திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி……..!!! – TamilBlogs
Ayya, can you give few examples of how spirituality is different from religion?
கார்த்திக்,
மிக நுணுக்கமான கேள்வி இது…பல விஷயங்களை ஆழ சிந்தித்து ஏற்க வேண்டிய விஷயம்…
இந்த இடத்தில், ஒரு பின்னூட்டத்தில் – விளக்குவது மிகக் கடினம்…
இருந்தாலும், உங்கள் கேள்விக்கு அவசியம் விளக்கம் அளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். தத்துவார்த்தங்களைச் சொல்லி குழப்பாமல், எனக்குத் தெரிந்தவரையில், சுருக்கமாக இதன் அடிப்படையை மட்டும் சொல்கிறேனே…
————————-
மதம் என்பது குறிப்பிட்ட கடவுள் அல்லது கடவுளர்களை அடையாளம் காட்டி, அதனை முதன்மைப்படுத்தி,
அதையொட்டிய வழிபாட்டு முறைகள், சடங்குகள் ஆகியவற்றை மேற்கொள்ளச் செய்கிறது. அந்த மதத்தினை பின்பற்றுவோர்க்கென கோட்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. குருமார்கள் வருகின்றனர்.
கடவுள் நம்பிக்கையில் இது ஒரு நிலை…. ஒரு வகையில் பார்த்தால், இதில் தவறேதும் இல்லை…
ஆனால், நான் நம்புவது தான் சரி. நான் கடைபிடிக்கும் வழி மட்டுமே சரி. மற்றதனைத்தும் பொய்… ஏற்கத்தகாதவை என்று நினைப்பது தான் பிரச்சினைகளை உண்டாக்குகிறது.
தான் கடைபிடிக்கும் வழியைத் தவிர – வேறு வழியே இல்லை என்று மதவாதிகள் நம்புகிறார்கள்….
துரதிருஷ்டவசமாக, பல மதபோதகர்களும் இதையே போதிக்கிறார்கள்.
இங்கிருக்கும் சென்னையிலிருந்து – டெல்லி போக வேண்டுமானால், நேராக வடக்கே நாக்பூர், போபால் – வழியாக போகலாம். இல்லையெனில், மேற்கே மும்பை சென்று அங்கிருந்தும் போகலாம். அதுவும் வேண்டாமென்றால், கிழக்கே கல்கத்தா சென்று அங்கிருந்தும் டெல்லி போகலாம்…. இந்தியாவில் இருக்கும் ஒரு ஊருக்கு செல்வதற்கே இவ்வளவு வழிகள் உண்டென்றால் – இந்த மாபெரும் பிரபஞ்சத்தையே படைத்தவனை அடைய பல்வேறு வழிகள் இல்லாமலா இருக்கும்…?
உலகின் வெவ்வெறு பகுதிகளில், பல மதங்களும், அவற்றிலிருந்து பல்வேறு கிளைகளும் உருவாகி,
பலராலும் பின்பற்றப்படுகின்றன.
இந்த மதங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு இறைவன் என்று பல்வேறு இறைவர்கள் இருக்க முடியுமா…?
இந்த உலகைப் படைத்தவன் ஒருவனாகத்தானே இருக்க முடியும்….?
அவனையே பல்வேறு மதத்தினரும், பல்வேறு பிரிவினரும் அவரவர் வந்த வழிப்படி, அவர்கள் சார்ந்த சமூகங்களின் முறைப்படி, அவர்களின் முன்னோர்கள் சொல்லித்தந்தபடி – அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பெயர்களில் அழைக்கிறார்கள்.
எந்த மதத்தினர் என்ன பெயரில் அழைத்தாலும், படைத்தவன் ஒருவன் தானே…?
அவனை யார், எந்த பெயரில் அழைத்தால் என்ன…?
எல்லாருக்கும் பொதுவான அவனை – அவரவர், அவரவருக்கு பிடித்த முறையில் அழைக்கட்டுமே..
இப்படித்தான் அழைக்க வேண்டும்…
இப்படித்தான் வணங்க வேண்டும்…
இந்த விதிமுறைகளைத்தான் அனைவரும் பின்பற்ற வேண்டும்
என்று ஒவ்வொரு மதத்தினரும் நினைப்பதால் தானே,
மற்றவர்களையும் வற்புறுத்துவதால் தானே –
மதத்தின் அடிப்படையில் பாகுபாடு, சண்டை-சச்சரவுகள்
அனைத்தும் ஏற்படுகின்றன.
அனைத்து மதங்களும் அடிப்படையில் – அன்பு, கருணை, இரக்கம், உண்மை, நேர்மை
ஆகியவற்றைத் தானே போதிக்கின்றன.
அவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு, அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்தி, இரக்கம் காட்டி, ஒருவருக்கொருவர் உதவி செய்து, நேர்மையாக நடந்தால் –
அந்த வழி எந்த மதத்திற்கும் எதிரானது அல்லவே…? அனைத்து மதங்களுக்கும் பொதுவானது தானே…?
அது தான் ஆன்மிக வழி. அனைத்து மதங்களையும் ஒன்று தான் என்று, அனைத்து கடவுளர்களும் ஒரே இறைவனின் வெவ்வெறு பிரதிபலிப்பு தான் என்று ஏற்று செயல்பட்டால் –
பல்வேறு மதங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு அடிப்படையே இல்லாது போய் விடுமே…
மதம் என்பதற்கும், ஆன்மிகம் என்பதற்கும்
உள்ள வித்தியாசம் இது தான்.
இது நடைமுறையில் சாத்தியமா என்று கேட்பீர்கள்…
சாத்தியம் தான்.
நான் ஒரு ஹிந்து என்கிற முறையில், நான் வளர்ந்த விதத்தில்,
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கோவிலுக்கு போகிறேன். சர்ச்சுக்கோ, மசூதிக்கோ – தேடிப்போவதில்லை.
ஆனால், ஒரு சர்ச்சை, அல்லது ஒரு மசூதியை கடக்கும்போது – அவசியம் அதன் உள்ளே சென்று, அல்லது வாயிலில் நின்று, ஓரிரு நிமிடங்கள் என்னுடைய வழக்கப்படியான பிரார்த்தனையை செய்து விட்டு செல்கிறேன்.
இதில் எனக்கு எந்தவித சங்கடமும் இல்லை.
நான் அனைத்து மதங்களையும், அனைத்து கடவுளர்களையும்
ஒன்றே என்று ஏற்கிறேன். என்னால் முடிவது, அனைவருக்கும் முடியும் என்று நம்புகிறேன். மனம் ஏற்றுக்கொள்ள – சிறிது பயிற்சி தேவை…
எல்லாருடனும் இணக்கமாக இருக்கவேண்டும் என்கிற உணர்வு தேவை….அவ்வளவு தான்.
இது தான் ஆன்மிகம் என்று நான் நம்புகிறேன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அருமை சார் 🤝
அற்புதமான விளக்கம். வாழ்த்துகள் கே.எம்.சார்.
சில நாட்களுக்கு முன் இந்த வீடியோவை பார்த்தேன் – அக மகிழ்ந்தேன் – அது உங்களுக்கு பிடிப்பதில் கூடுதல் மகிழ்ச்சி 🙂
Ayya, nalla vilakkam. Innum irandu pathivugal mattrum kanoli pakiravum. Ungalaku sevai, aluthamana nattu patru, nadu nilamai – amazing ayya.
God bless you,
Pl continue your teaching..
கார்த்திக்,
நீங்கள் என் மீது வைத்திருக்கும் அபிமானத்திற்கு நன்றி.
உங்கள் நம்பிக்கை வீணாகாதவாறு செயல்பட அவசியம்
முயற்சி செய்கிறேன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
–