இது தான் அரசியல் … இப்படியும் ஒரு கோணம்…!!!


சூதும் வாதும் நிறைந்தது அரசியல்…
யார், எப்போது, எதற்காக, எதை செய்கிறார்கள் …?
அதில் ஜெயித்தது யார்…? தோற்றது யார்…?
யார் அறிவர்….?
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்… சொல்லும்…!!!

கலைஞருக்கு மெரினாவில் இடம் இல்லையென்றதும்,
எடப்பாடி அவர்கள் மீது பலத்த கண்டனங்கள் எழுந்தன…
சின்னத்தனம் என்று மீடியா மொத்தமும் சீறிப்பாய்ந்தது..

ஐந்து வெவ்வேறு வழக்குகள் – மெரினாவில்
ஜெயலலிதாவுக்கு இருப்பிடம் கொடுத்தது குறித்தும்,
நினைவு மண்டபம் அமைப்பது குறித்தும் – தடை கோரி –
திராவிடர் கழகத்தை சேர்ந்த ஒரு வக்கீலும்,
பாமக வைச் சேர்ந்த ஒரு வக்கீலும் தொடுத்தவை –
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை
அரசு ஒரு காரணமாக காட்டியது…

Within no time – அந்த 5 வழக்குகளும் சம்பந்தப்பட்டவர்களால்,
நடு இரவில், நீதிமன்றத்திற்கு சென்று திரும்பப் பெறப்பட்டன.
இப்போது எந்த வழக்கும் நிலுவையில் இல்லையே –
அனுமதி கொடுப்பதில் என்ன சிக்கல் என்று வாதிக்கப்பட்டது…

இறுதியில் நீதிமன்றமும் அதே பின்னணியில் அனுமதி கொடுத்தது…

இரு தரப்புமே வேண்டுமென்றே இதில் அரசியல் செய்கிறார்கள்
என்பதை – நாமும் கூறி இருந்தோம்…
அநாவசியமாக விவாதங்களை உருவாக்கி விட்டார்கள்…

இப்போது தினமணி நாளிதழ் – அது குறித்து ஒரு விளக்கமான செய்திக்கட்டுரையே எழுதி இருக்கிறது.

வாசக நண்பர்களின் பார்வைக்காக அதனை கீழே தந்திருக்கிறேன்…

மீண்டும் தலைப்புக்கு போகிறேன் –

” ஜெயித்தது யார்…? தோற்றது யார்…?
யார் அறிவர்….?
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்… சொல்லும்…!!! ”

——————————————————————————-
(நன்றி – தினமணி செய்தி வலைத்தளம் )

நினைத்தது நடந்திருக்கிறது!
By DIN | Published on : 09th August 2018 02:40 AM | அ+அ அ- |
..

..

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் தொடர்பான வழக்குகளை வாபஸ் பெற வைப்பது, திமுகவினரால் திட்டித் தீர்க்கப்பட்டு, அதன் வழியே அதிமுக தொண்டர்களிடையே செல்வாக்குப் பெறுவது என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க முற்பட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

அதிமுக அமைச்சர்களிலேயே சிலர் அண்ணா சமாதிக்கு அருகில் திமுகவின் தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கி விடலாம் என்று கருத்துத் தெரிவித்தும்கூட, முதல்வர் அதை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது பலரையும் வியப்படையச் செய்தது. தில்லியிலிருந்து பிரதமர் அலுவலகமும், உள்துறை அமைச்சகமும் தலையிட்டு இடம் ஒதுக்க உத்தரவிட்டால் அவமானமாகப் போய்விடும் என்று சில அமைச்சர்களும், அதிகாரிகளும் கருத்துத் தெரிவித்தும்கூட, முதல்வர் மெளனம் காத்து அவர்களை ஆச்சரியப்படுத்தினார்.

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி உடல்நிலை மோசமடைந்து, கடந்த செவ்வாய்க்கிழமை உயிர் பிரியும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கருணாநிதிக்கு இறுதி நிகழ்வுகளை நடத்தவும், அவர் விரும்பியபடியே அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்யவும் திமுக தலைமை முடிவு செய்தது.

இதற்காக முதல்வரும், பொதுப்பணித் துறைக்கு பொறுப்பு வகிப்பவருமான எடப்பாடி கே.பழனிசாமியை திமுகவினர் அணுகினர். முதலில் எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்த போதும் அதற்கு அனுமதி தரவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த போதும், அண்ணா நினைவிடத்தில்தான் அடக்கம் என்பதில் திமுக தலைமை உறுதியாக இருந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியைச் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பில் கருணாநிதியின் உடலை பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கவும், அடக்கம் செய்வதற்கு அண்ணா நினைவிடத்தில் இடமும் கோரப்பட்டது. முதல் கோரிக்கையை ஏற்ற முதல்வர் பழனிசாமி தரப்பு, இரண்டாவது கோரிக்கையை ஏற்க மறுத்தது. இதனால், குழப்பத்தில் ஆழ்ந்தது திமுக.

ஆனாலும், கருணாநிதி மரணம் குறித்த அதிகாரப்பூர்வ செய்தியை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 7) மாலை அறிவித்தனர். இறுதி அஞ்சலிக்கான ஏற்பாடுகளைச் செய்த அதே வேளையில், அண்ணா நினைவிடத்தில் இடம் தரப்படவில்லை என்ற தகவலையும் பொது வெளியில் போட்டு உடைத்தனர். இதையடுத்து, மெரீனாவில் இடம் வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர்ந்தது.

அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய இடம் வேண்டுமெனக் கேட்ட திமுகவின் மனுவுக்கு பதிலளித்த தமிழக அரசு, சட்டச் சிக்கல்கள் மற்றும் வழக்குகள் இருப்பதைச் சுட்டிக் காட்டியது. இதையடுத்து, வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாக ஐந்து மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த மனுக்கள் வேறு ஏதுமில்லை. சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்பதைப் பிரதான கோரிக்கையாகக் கொண்ட மனுக்களாகும். இதுபோன்ற சட்டச் சிக்கல்கள் இருப்பதால் அண்ணா நினைவிடத்தில் மறைந்த கருணாநிதிக்கு இடம் வழங்க வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்தது.

தங்களது வழக்குகளால் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் கிடைக்காமல் போய் விடக் கூடாது என எண்ணிய மனுதாரர்களே தங்களது வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். திரும்பப் பெற்றனர்.

இது, அதிமுகவினர் தங்களுக்குக் கிடைத்த மௌன வெற்றியாகப் பார்க்கிறார்கள்.

கடந்த இரண்டு மூன்று நாள்களாக அண்ணா சமாதியில் கருணாநிதியை
அடக்கம் செய்வது குறித்த விவாதம் இழுத்தடிக்கப்பட்டிருந்தபோது, கருணாநிதி முதல்வராக இருந்தபோது ராஜாஜி, காமராஜர் ஆகியோரை மெரீனாவில் அடக்கம் செய்ய அனுமதி மறுத்ததாக சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டது.

அண்ணா நினைவிடத்தில் மறைந்த கருணாநிதிக்கு இடம் கிடைத்தது திமுகவுக்குக் கிடைத்த வெளிப்படையான வெற்றி என்றால், ஜெயலலிதாவின் நினைவிடம் அங்கேயே இருப்பதை உறுதி செய்திருப்பது அதிமுகவுக்குக் கிடைத்த மறைமுக வெற்றியாகும். இதன் மூலம், ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு நீதிமன்ற வழக்குகள் மூலம் வந்த ஆபத்துகள் அகன்றிருக்கின்றன.

அரசுத் தரப்பில் அழுத்தமான வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தலைமைச் செயலர் வெளியிட்ட அறிக்கையிலும் பதவியில் இருக்கும்போது மறைந்த முதல்வர்கள் மட்டுமே மெரீனாவில் அடக்கம் செய்யப்படுவதாகவும், முன்னாள் முதல்வர்களுக்கு கிண்டியில் இடம் ஒதுக்கப்படும் வழக்கத்தை ஏற்படுத்தியதே கருணாநிதி அரசுதான் என்றும் தெரிவிக்காமல் விட்டதேகூட, வேண்டுமென்றே செய்யப்பட்டதுதான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

தமிழகத்தில் எப்போதும் திமுக-அதிமுகதான் பரம வைரிகள் என்பது உலகறிந்த ரகசியம். ஆனால், கடந்த சில மாதங்களாக குறிப்பாக சட்டப்பேரவை போன்ற நிகழ்வுகளில் அதிமுக-திமுக இடையே ஒத்துழைப்பு இருப்பதாக கருத்துகள் நிலவின. இந்த கருத்துகளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் இப்போது அகற்றப்பட்டுள்ளது.

கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்காக வந்திருந்த திமுக தொண்டர்கள் தங்களது தலைவரைப் புகழும் அதேவேளையில் இடம் தர மறுத்ததாகக் கூறி முதல்வர் உள்ளிட்ட அதிமுகவினரை பழித்துப் பேசினர்.

கருணாநிதிக்கு இடம் தர மாட்டோம் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில் தெரிவித்து, தாங்கள் எப்போதும் திமுகவின் பரம வைரிகள்தான் எனத் தெரிவித்து திமுகவினரின் ஏச்சுகளையும், பேச்சுகளையும் தெரிந்தே பெற்றிருக்கிறது முதல்வர் எடப்பாடி தரப்பு.

கருணாநிதி-ஜெயலலிதா மறைவுகளுக்குப் பிறகு அவர்கள் நடத்திய காழ்ப்புணர்வு அரசியலுக்கு சுபம்’ போடாமல், தொடரும்’ என பகுதி இரண்டு ஆரம்பமாகி இருக்கிறது.

.
————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to இது தான் அரசியல் … இப்படியும் ஒரு கோணம்…!!!

  1. பிங்குபாக்: இது தான் அரசியல் … இப்படியும் ஒரு கோணம்…!!! – TamilBlogs

  2. மெய்ப்பொருள்'s avatar மெய்ப்பொருள் சொல்கிறார்:

    தினமணி கட்டுரை மிக கவனமாக எழுதப்பட்டிருக்கிறது .
    சொல்லப்படுகிறது ,கூறப்படுகிறது , ஒரு கருத்து நிலவுகிறது ,
    என்பதெல்லாம் வெறும் ” hearsay “.

    முதல் கேள்வி சட்டப்பிரச்சினை இருந்ததா ?
    ஜெயா இறந்த பிறகு மெரினா புதைக்கும் இடமாக ,
    அதாவது இடுகாடாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது .
    இதை அரசே நீதி மன்றத்தில் சொல்லியுள்ளது .

    ஆக சட்டசிக்கல் கிடையாது .

    வெற்றிகரமாக வழக்கை வாபஸ் செய்தது வெற்றி என கட்டுரை கூறுகிறது .
    நாளை வேறு யாரோ நாலு பேர் கேஸ் போடலாமே ? அப்போது என்ன ஆகும் ?

    காமராஜர் , ராஜாஜி ஆகியோருக்கு கலைஞர் இடம் மறுத்தார் .
    அப்போதைய காங்கிரெஸ் , சுதந்த்ரா நிர்வாகிகள் இல்லை
    என்று சொல்லிவிட்டார்கள் .வெறும் கட்டுக்கதை !

    கலைஞர் எதிர்த்ததின் மூலம் அ தி மு க ஆதரவு பெருகி உள்ளது .
    நிசமாகவா – யாரிடம் கேட்டீர்கள் ?
    இறந்த பிறகு வன்மம் பாராட்டுவதை யார் ஆதரிப்பார் ?

    கலைஞர் இறந்த பிறகு சிக்கல் இல்லாமல் போகக்கூடாது
    என்ற ஒரே காரணம் – அதற்காக இடம் இல்லை என சொல்லப் பட்டது .

    அரசு செயலர் உத்தரவு போடவில்லை .வெறும் பத்திரிகை குறிப்புதான்
    வெளியிட்டார் . எந்த சட்ட சிக்கலும் இல்லை .எதற்காக ?

    கலைஞர் மூத்த தலைவர் – இரண்டு ஆண்டுகளாக உடல் நலம்
    இடம் கொடுக்காததால் அரசியலில் இல்லை .

    இறந்தவர் மீது அவதூறு கூறுதல் ரசிக்கும்படியாக இல்லை .
    சாதாரண மக்கள் இதை ஏற்கப் போவதில்லை – தினமணியே சொன்னாலும் சரி .

  3. Mani's avatar Mani சொல்கிறார்:

    மெய்ப்பொருள்

    அதிமுகவைப் பற்றி குறை கூறிய நீங்கள்,
    திமுக சாவை வைத்து அரசியல் செய்ததே அதை பற்றி ஏன் சொல்லவில்லை ?
    கே.எம்.சார் சொன்னது போல், கலைஞருக்கு அண்ணா அறிவாலத்திலேயே
    இடம் கொடுத்திருக்கலாமே;ஏன் செய்யவில்லை ?
    ஜெயலலிதாவிற்கு இடம் கொடுத்ததை எதிர்த்து கோர்ட்டில் வழக்குபோட்ட
    துரைசாமி திமுக வக்கீல் தானே ? சட்டசிக்கல் என்றதும் நடுராத்திரி கோர்ட்டுக்கு
    ஓடி வந்து வழக்கை வாபஸ் பெற்றது அரசியல் இல்லையா ?
    இரண்டு கட்சிகளும் அரசியல் தான் செய்தன;

  4. tamilmani's avatar tamilmani சொல்கிறார்:

    DMK is always opportunisic. They filed cases against Jayalaitha”s burial at Marina Beach..But when they wanted their leader (who is not even a sitting CM) to be buried they withdrew their
    cases. We dont want both DMK and AIADMK to rule us Both from 1967 have looted Tamilnadu’ and they have enough wealth to last for seven generations. Let a new CM take over Tamilnadu
    as and when the elections come and do something for the common people.

  5. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    மேலிடத்து (மத்திய அரசு) விருப்பத்தினால்தான், மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் மறுக்கப்பட்டதாக செய்தி வந்ததே (வதந்திதான்). இப்போது மத்திய அரசு, கருணாநிதிக்கு ‘பாரதரத்னா’ விருது பரிசீலிக்க ஒரு குழு அமைத்துள்ளதாமே (இல கணேசன் சொல்லியிருக்கிறார்).

    இது எப்படி இருக்கு? எம்ஜியாருக்கு காங்கிரஸ் அரசு பாரதரத்னா வழங்கியது, அவரது தேசப்பற்றுக்காக. ‘தேசத் துரோகம்’ என்ற காரணத்துக்காக கருணாநிதி அரசு 91ல் பதவி விலக்கம் செய்யப்பட்டது, ஏற்கனவே 2ஜி, தொலைக்காட்சி வழக்குகள் என்று பலவும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

    பாரதரத்னா விருது வழங்க ஒரே ஒரு காரணம்தான் எனக்குத் தோன்றுகிறது. ஈழப் படுகொலையின்போது, இந்தியாவிற்கு/மத்திய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி பெரிய தர்மசங்கடத்திலோ பிரச்சனையிலோ இந்திய அரசை கருணாநிதி ஆழ்த்தவில்லை. ஆனால் இதற்கு, ‘நமது தேசம்’ என்ற தேசப்பற்று காரணமில்லை, ‘வரவு’ வரும் துறைகளில் தங்கள் அமைச்சர்கள் இருந்த காரணம்தான் என்பது சின்னப் பிள்ளைகளுக்குக் கூடத் தெரியுமே. அவரது, ‘பிரதமரை கல்லெறிந்து கொல்லப் பார்த்த சம்பவம்’, ‘நேருவுக்கு எதிரான போராட்டம்’, ‘எப்போதும் காங்கிரசுக்கு எதிராக வி.பி.சிங்கிற்கான ஆதரவு’, ‘ராஜீவ் காந்தியின் துரதிருஷ்ட மரணத்தின் கறை படிந்தது’ என்று ஏகப்பட்ட காரணங்கள் இருந்தும், சோனியாவிற்கு கருணாநிதி ‘அப்பா’ ஸ்தானத்தில் மாறியதுதான் ‘காலத்தின் கோலம்’ என்று சொல்லலாமா?

    இதைப் பற்றி உங்களிடமிருந்து இடுகை எதிர்பார்க்கலாமா?

    • நெல்லை பழனி's avatar நெல்லை பழனி சொல்கிறார்:

      இது எப்படி இருக்கு? எம்ஜியாருக்கு காங்கிரஸ் அரசு பாரதரத்னா வழங்கியது, அவரது தேசப்பற்றுக்காக……..???? தேசத்திற்காக என்ன செய்தார் … அவர் மீதும் ரே கமிசன் , பால் கமிசன், ராபின் மெயின் முறை கேடு, பால்டிகா கப்பல் நிலக்கரி முறைகேடு என எல்லோர் மீதும் ஊழல் குற்றசாட்டுக்கள் இருந்தன

  6. மெய்ப்பொருள்'s avatar மெய்ப்பொருள் சொல்கிறார்:

    அண்ணாவின் அருகே இடம் கேட்டது அரசியல் இல்லை .
    அது கலைஞரின் நெடு நாள் விருப்பம் – சில மேடைகளில்
    இது பற்றி பேசியுள்ளார் . இது அ தி மு க விற்கும் தெரியும் .

    உயர் நீதி மன்ற உத்தரவு வந்தவுடன் ராஜாஜி ஹாலில்
    இருந்த தி மு க நிர்வாகிகள் கண்கலங்கி நின்றதை நீங்களும்
    பார்த்து இருக்கலாம் – அது அரசியலோ நடிப்போ இல்லை .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.