இந்த 40 லட்சம் பேர் விவாதம் இப்போது கிளப்பப்பட்டது ஏன்….?



புதியவன்,

உங்களுக்கு சில கேள்விகள் –

நான் கேட்டது –
“இந்த 40 லட்சம் மக்களை என்ன செய்வதாக உத்தேசம்…?”

-அதற்கு நீங்கள் சரியான விளக்கம் சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை.
மற்றபடி ஒரு hardcore ஆர்.எஸ்.எஸ்.காரர் சொல்லக்கூடிய
அத்தனையையும் நீங்கள் இங்கே வெகு விளக்கமாக சொல்கிறீர்கள்….

– இந்த சமயத்தில் இந்த பிரச்சினையை பாஜக கிளப்பியது ஏன்…?

சுப்ரீம்கோர்ட் உத்திரவை காரணம் காட்டாதீர்கள்…. அதை எதாவது
நொண்டிச்சாக்கு சொல்லியே இன்னும் 5 – 10 ஆண்டுகளுக்கு வெகு சுலபமாக தள்ளிப்போட மத்திய அரசால் முடியும்.

– திரும்ப திரும்ப ராஜீவ் காந்தி போட்ட ஒப்பந்தம் என்று சொல்கிறாரே பாஜக தலைவர் – ஒரு காங்கிரஸ் தலைவர் போட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் பாஜக தலைமைக்கு ஏன் இத்தனை அக்கறை…?

– இந்த 40 லட்சத்தில், பிற மாநிலத்திருந்து
வந்து செட்டில் ஆனவர்கள் எவ்வளவு பேர், பங்களா தேஷிலிருந்து
வந்தவர்கள் எத்தனை பேர் என்று மத்திய அரசால் கண்டு பிடிக்க முடியுமா…?

– கண்டுபிடிக்க முடியாதென்றால், நம் நாட்டிலேயே வேறு ஒரு
மாநிலத்திலிருந்து வந்தவர்களை, அந்நிய நாட்டிலிருந்து வந்த அகதி
என்று சொல்லி தண்டிப்பது நியாயமா..?

– கண்டு பிடிக்க முடியும் என்றால் – எப்போது அதைச் செய்ய
முடியும்….?

– அதை முதலில் செய்து விட்டு, பிறகு லிஸ்டை வெளியிடுவதற்கென்ன…? அதற்குள்ளாக ஏன்…?

( அதற்குள் தேர்தல்கள் முடிந்து விடும்…. அதனால் தானே…?)

– சரி, எந்தவித தடங்கலுமின்றி – 40 லட்சம் பேர் வேறு ஒரு நாட்டிலிருந்து எல்லையை தாண்டி இந்த நாட்டிற்குள் வர முடிகிறதென்றால், இந்த நாட்டில் மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது….? 40 லட்சம் பேர் அத்தனை சுலபமாக தாண்டி வரக்கூடிய அளவிலா நமது எல்லைகள் இருக்கின்றன……?

– மத்திய அரசின் வழிகாட்டுதலில் தயாரித்த NRC -யில் இடம் பெற
வேண்டுமானால், அதற்கு என்னென்ன ஆவணங்கள் தரவேண்டும்
என்பதைப்பற்றிய விவரங்கள் தெரிந்தால் ஆச்சரியப்பட்டு விடுவீர்கள்…
ஒன்றே ஒன்றை மட்டும் இங்கே சொல்கிறேன்…

அது கேட்கும் விவரங்களை – கொடுத்தால் தான் குடியுரிமை
உறுதிப்படுத்தப்படும் என்றால் – என்னாலேயே கூட நான் ஒரு இந்தியன்
என்பதை நிரூபிக்க முடியாது……

– 1951-ஆம் வருடத்திற்கு முன்பாக எனது தந்தை இந்தியாவில் தான் இருந்தார் என்பதையும், அவர் எந்த ஊரில், எந்த விலாசத்தில் இருந்தார் என்பதையும் ஆவண ஆதாரங்களுடன் நிரூபித்தாக வேண்டும்…

1951 சென்சஸ் ரிப்போர்ட் அல்லது Voter’s List -லிருந்து அத்தாட்சி
எடுக்க வேண்டும்…. சொந்தமாக, சொந்த ஊரில், சொத்து-பத்து இல்லாத எத்தனை பேர்களால் இத்தகைய ஆவணங்களை கொடுக்க முடியும்…. ?

———————————-

இதெல்லாம் கிடக்கட்டும் விடுங்கள் –
இந்த விஷயத்தை பாஜக /ஆர்.எஸ்.எஸ். இப்போது கையில் எடுத்துக்
கொண்டதன் காரணம் என்ன…?

– இன்னும் 40 வருடங்கள் ஆனாலும், இந்த 40 லட்சம் பேரை என்ன
செய்வது என்பது குறித்து, எந்த அரசாலும், எந்த தீர்மானத்திற்கும் வர
முடியாது… அது அவர்களுக்கும் தெரியும்.

அதிக பட்சம் – அவர்கள் செய்யக்கூடியது – இதில் யார் யாருக்கு தற்போது ஓட்டுரிமை இருக்கிறதோ… அது விலக்கிக் கொள்ளப்படலாம்.சொத்துரிமை மறுக்கப்படலாம்…… அவ்வளவே…

அவர்களின் குடியுரிமை உறுதி செய்யப்படாத வரையில்
அவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது என்று அறிவித்து விட்டால்
தற்போதைக்கு எந்தவித டென்ஷனையும் உண்டுபண்ணாமலே
பிரச்சினை தீர்ந்து விடும் அல்லவா…?

ஆனால், பிரச்சினை அவ்வளவு சுலபமாக தீர்க்கப்படுவதை
ஆளும் கட்சியினர் விரும்பவில்லையே…!

வெளியில் சொல்லாத,
அவர்கள் இவ்வாறு டென்ஷனை கிளப்பி செயல்பட –
மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது…..
இதில் சம்பந்தப்பட்ட மக்களை அவர்களால்
நிரந்தரமாக அச்சத்தில் ஆழ்த்த முடியும்.

அதே போல், இந்த விஷயத்தை,
ஒரு விவாதப்பொருளாக்கி,
நாட்டு மக்களிடையே சூடேற்றினால் –
ஹிந்து-முஸ்லிம் மக்களிடையே
விரோதத்தை, வெறுப்பை, குரோதத்தை
உண்டு பண்ணலாம்.

ஹிந்துக்களுக்கு – முஸ்லிம்கள் தங்கள் சொத்தை,
வேலையை, நிலத்தை அபகரிக்க வந்தவர்கள் என்கிற
தோற்றத்தை உண்டுபண்ணி – வெறுப்பை
அதிகரிக்கலாம்.

முஸ்லிம்களிடையே – ஹிந்துக்களால், தங்களுக்கு எப்போது
வேண்டுமானாலும் ஆபத்து உண்டாகக்கூடும் என்கிற நிரந்தர அச்சத்தை உண்டு பண்ணலாம்.

மக்களிடையே இதை மட்டுமே முக்கிய பிரச்சினையாக உருவாக்கி விட்டால், தேர்தல் நேரத்தில் – இதுவே மிகப்பெரிய பிரச்சினையாகி விடும்… பாஜக அரசின் தோல்விகள் …எதிர்மறையான பிரச்சினைகள் அனைத்தும் மறைக்கப்படும்…….மறக்கப்படும்…!!!

( பொருளாதார வீழ்ச்சி, 500-1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்ததால்
ஏற்பட்ட விபரீத விளைவுகள், ஜிஎஸ்டி-யால் ஏற்பட்ட விளைவுகள்,
பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பியோட உதவியது –
அரசு வங்கிகளில் வாராக்கடன் மலையளவு அதிகரித்தது, பொதுத்துறை
வங்கிகளின் வீழ்ச்சி,
வெளியுறவுக் கொள்கையின் மாற்றம் காரணமாக நம்மைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்தும், நமக்கு எதிராக செயல்படுவது,
குறிப்பிடத்தக்க தொழிலதிபர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் …..
போன்ற அனைத்து விவகாரங்களும், ஹிந்து-முஸ்லிம் பிரச்சினையை
உருவாக்கி வளர்த்து விடுவதன் மூலம் மறைந்து விடுமென்று
ஆளும் கட்சி நினைப்பதன் விளைவு தானே – தற்போதைய 40 லட்சம்
மக்கள் பற்றிய வெளிப்பாடு….? )

NRC -யை ஆதரிக்கும் – உங்களைப்போன்ற அனைவருமே,
பாஜக அரசை ஆதரிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்… உருவாக்கப்படும்.

பாஜக தலைமை முயற்சிப்பது அந்த சூழ்நிலையை உருவாக்கவே…!

—————————–

“மதம்” என்பது அபினை விட அதிகமாக போதை தரும் வஸ்து….சாதாரணமாக – ஓரளவு காரணங்களோடு – விவாதிக்கக்கூடிய உங்களைக்கூட அது மயக்கி திசைதிருப்பி இருப்பதிலிருந்தே அதை உணரலாம்.

இந்த நாட்டில் – நிம்மதியும், அமைதியும், சந்தோஷமும் நிலவ வேண்டுமானால் – அது ஹிந்து மற்றும் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையால் மட்டுமே முடியும்.

ஆனால் பாஜக /ஆர்.எஸ்.எஸ். ஆட்சியை தொடர வேண்டுமானால்,
இந்த இரு சமூகத்தினரிடையேயும் விரோதத்தை மூட்டி விட்டு,
அந்த நெருப்பை தொடர்ந்து அணையாமல் பாதுகாப்பதன் மூலம்
மட்டுமே முடியும்….

பாஜக, ஆர்.எஸ்.எஸ். தனது நடவடிக்கைகளில்
தீவிரமாக
ஈடுபட்டிருக்கிறது….

இதை- இந்த நாட்டின் மெஜாரிடியினரான ஹிந்து மக்கள்
எந்த அளவிற்கு புரிந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே –
எதிர்காலம் அமையும்….

“ஈஸ்வர அல்லா தேரே நாம்” – என்று சொன்னவரை
ஏற்றுக் கொண்ட நாடு இது…

அப்படிச் சொன்னவரையே கொன்றவர்கள் பலம் பெற்றால், பிறகு
இந்த நாட்டின் கதி என்ன ஆகும்…?

நீங்கள் உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதற்காக
நான் இதை எழுதவில்லை… அது உங்கள் விருப்பம்…. உரிமை.

இந்த வலைத்தளத்திற்கு வருகை தரும் நண்பர்களுக்கு இந்த கருத்தை
விளக்கமாக எடுத்துச்சொல்ல வேண்டிய கடமை எனக்கிருப்பதாக
நான் கருதுவதால் – இவ்வளவு விவரமாக எழுதுகிறேன்.
ஒருவேளை அது உங்கள் நிலையிலும் எதாவது மாற்றத்தை
ஏற்படுத்தியிருக்குமேயானால், எனக்கு மகிழ்ச்சியே…

———————————————————————————————————-

பின் குறிப்பு – ” NRC-யில் இடம் பெறாத அந்த 40 லட்சம் மக்களை என்ன
செய்யலாம்…? ” என்கிற தலைப்பில் நேற்று காலை வெளியான
இடுகைக்கு, நண்பர் புதியவன் மற்றும் சிலரால் எழுப்பப்பட்ட
கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக
நான் எழுதிய மறுமொழி தான் மேலே இருப்பது…..
நேற்றிரவு அந்த மறுமொழி எழுதப்பட்ட பிறகு,
வேறு ஒரு இடுகையும் வெளியாகிவிட்ட நிலையில், அந்த மறுமொழியை
அதிகம் பேர் பார்ப்பதற்கில்லை என்று தோன்றியது….

ஆனால், ( இதில் சொல்லப்படும் கருத்தினை ஏற்றுக் கொள்கிறார்களோ-இல்லையோ ) நமது தளத்தின் வாசக நண்பர்கள் அனைவரும் இந்த செய்தியை அவசியம் படிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். எனவே, அதே மறுமொழியை, சிறிய மாற்றத்துடன் மேலே தனி இடுகையாக பதிப்பித்திருக்கிறேன்.

இந்த இடுகையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தில் –

தமிழ்நாடு தனித்திருக்கிறது…
இந்தியா முழுவதுமே கொந்தளித்தாலும்
கூட தமிழ்நாட்டில் மதத்தை வைத்து யாரும்
அரசியல் வியாபாரம் செய்ய முடியாது…..
இங்கே – ஹிந்து-முஸ்லிம் மக்களிடையே
எந்தவித பேதபாவமும் இல்லை;
எவ்வளவு முயற்சி செய்தாலும்
அதை யாரும் உருவாக்கவும் முடியாது என்பது தான் உண்மை…

இந்த விஷயத்தில் தமிழக மக்களை நினைத்து நான்
பெருமைப்படுகிறேன்.

.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

.
—————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to இந்த 40 லட்சம் பேர் விவாதம் இப்போது கிளப்பப்பட்டது ஏன்….?

  1. பிங்குபாக்: இந்த 40 லட்சம் பேர் விவாதம் இப்போது கிளப்பப்பட்டது ஏன்….? – TamilBlogs

  2. Mani's avatar Mani சொல்கிறார்:

    அருமையான விளக்கம். தமிழகத்தில் இவர்களது முயற்சி பலனளிக்காது.
    தமிழகத்திற்கு வெளியேயும், மக்கள் விழித்துக் கொள்ளத் துவங்கி விட்டார்கள்.
    நீங்கள் சொல்வது போல், 1971-ல் நடந்த சம்பவத்தை, 48 வருடங்களுக்குப் பிறகு இப்போது இவர்கல் பூதாகாரமாக்குவது ஏன் ? மத உணர்வை தூண்டிவிடத்தானே ?

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இதனை தனி இடுகையாக வெளியிட்டது வரவேற்கவேண்டிய செயல்.

    நான் உங்கள் மறுமொழியை அங்கும் படித்தேன். உங்கள் கருத்தையும் அதன் காரணத்தையும் புரிந்துகொள்ள முடிந்தது.

    //NRC -யை ஆதரிக்கும் – உங்களைப்போன்ற அனைவருமே, பாஜக அரசை ஆதரிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்… // – அப்படி ஆகாது என்றே நான் நினைக்கிறேன். அரசின் செயலைப் பொறுத்தே நம் கணிப்பும் அமையும். வெறும் வெறுப்பின் அடிப்படையில், ஒரு கட்சியை ஆதரிக்கமுடியாது. யார் ஆண்டாலும் அது நமக்கு நன்மை தருவதாக மட்டுமே இருக்கவேண்டும்.

    இந்த இடுகையின் மேலான கருத்தைப் புரிந்துகொண்டு இதற்கு மேல் நான் எழுதவில்லை. ஆனால், நாம் இதே ஸ்கேலைத்தான் ஈழத்/மலேசியத்/மற்ற தேசத் தமிழர்களிடம் உபயோகப்படுத்துகிறோமா என்பதையும் நாம் நினைக்கவேண்டும் என்று வேண்டுகிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.