…
…

ஜெயகாந்தன் பேட்டியளித்த காலத்தில் இப்படித்தான் இருந்தார்….!!!
…
– எழுத்துத் துறைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்….?
நான் வரவில்லை, எங்கோ போய்க் கொண்டிருந்த வழியில்,
எழுத்தாளனாய் வரவேற்கப்பட்டேன். நான் கதைகள் எழுதிப்
பத்திரிகைகளுக்கு அனுப்பியதில்லை. என்னைப் பத்திரிகைகள்
ஆதரிக்கவில்லை என்று புலம்பியதுமில்லை.
நான் கல்லூரியிலோ, உயர்நிலைப் பள்ளியிலோ படித்தவனல்ல,
அங்கே எழுத்தையோ இலக்கியத்தையோ கற்பதற்கு!
நான் நடைபாதையில், குழாயடியில், சில நாட்கள் வேலைக்குப்
போன சிறிய தொழிற்சாலைகளில் பொதுவான நடைமுறை
வாழ்க்கையில்தான் இலக்கியத்தைக் கற்றேன்.
பிறகு, அங்கேதான் எழுத்தும் இலக்கியங்களுமே பிறக்கின்றன
என்று அறிந்தேன். அறிந்ததை – வாழ்க்கை எனக்கு அறிவித்ததை –
திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
வந்தவன்தான் போவான்.
நான் வந்தவனும் இல்லை; போகிறவனும் இல்லை…..!!!
– ஓர் எழுத்தாளன் எழுத்தை மட்டுமே நம்பிப் பிழைக்க முடியும்
என்று நம்புகிறீர்களா?
பிழைப்பு என்றாலே ரொம்பச் சிரமமான காரியம்தான்.
‘என்ன பிழைப்பு?’ என்பது அலுப்புக் குரல். இலக்கணப்படிப்
பார்த்தால், பிழைப்பு என்பது குற்றம் என்றும் பொருள்படும்.
எழுத்தை வெறும் பிழைப்பாகக்கொள்வது ஒரு குற்றமே.
பிழைக்க முடியுமா என்பதல்ல; கூடாது என்பது என் கொள்கை.
என்னைப் பொறுத்தவரை எழுதுவதற்கு எனக்குக் காசு
தருகிறார்கள்.
ஆனால், நான் எழுதுவதே காசுக்காக அல்ல.
கல்லடி கிடைத்தாலும் நான் எழுதுவேன். எழுத்து, காசு
தராவிட்டால்தான் என்ன..? பிழைப்புக்கு வேறு ஏதேனும் தொழில்
செய்வேன். எழுத்து எனக்கு சீவனமல்ல; அது என் ஜீவன்…!
– தனித் தமிழில் எழுதுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அதில் யாரும் எழுதுவதில்லையே ! எழுத வேண்டும் என்று
பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஆசைக்கு ஒரு கடிதம்,
ஒரு கட்டுரை எழுத சிலர் முயலலாம். கதை எழுத முடியாது.
கதை என்பது, இன்றைய வாழ்வின் பிரச்னை. இந்த இருபதாம்
நூற்றாண்டுத் தமிழனுக்குப் பிரச்னை, தமிழின் தனிமையல்ல!
– தங்கள் மனத்தைக் கவர்ந்த எழுத்தாளர் யார்?
விமர்சகர் யார்?
கவர்ச்சி என்பதே ஒன்றின் வளர்ச்சி பற்றிய பிரச்னை.
சின்னப் பிள்ளைக்கு, மண் பிடிக்கும், வாலிபனுக்கு,
பெண் பிடிக்கும்.
வயது முதிர்ந்தால் அவரவர் வளர்ச்சிக்கு ஏற்ப கவர்ச்சிகள்
பேதப்படும்.
அதே போல் எனது ரசனை வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு காலத்தில்,
ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொருவரைப் பிடித்திருந்தது; பிடிக்கிறது.
ஏதோ நீங்கள் கேட்டதற்காகச் சொல்வது என்றால்,
டால்ஸ்டாய் என்பேன். இந்தக் கவர்ச்சிக்குக் காரணம் கேட்பீர்களோ?
என் வளர்ச்சிதான்.
விமர்சகரா? நானறிந்தமட்டில் அப்படி ஒருவர் இங்கே இல்லை ஐயா.
– நீங்கள் ஏன் தொடர் கதைகள் எழுதுவதில்லை?
நான்தான் தொடர்ந்து கதை எழுதி வருகிறேனே! தொடர் கதை
என்று இலக்கியத்தில் ஒரு பிரிவு கிடையாது. மேல் நாட்டில்
மிகப் பெரிய எழுத்தாளர்களின் நாவல்களைக்கூட
சில பத்திரிகைகள் வசதிக்காக அவ்விதம் பிரசுரித்தது உண்டாம்.
எனினும், அவை தொடர் கதைகள் என்பதற்காகப்
பாராட்டப்படவில்லை.
இங்கேயோ அது பெரும்பான்மை வாசகரை மயக்கும் ஒரு
தந்திரமாகவே கையாளப்பட்டு வருகிறது.
பத்திரிகைகளோ, வாசகரோ என்னிடம் அதை எதிர்பார்க்கவில்லை.
எனக்கும் அதில் பழக்கமோ, விருப்பமோ இல்லை!
– ஜனரஞ்சகமாக எழுதக் கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஆம். ஜனங்கள் வளர்ந்துகொண்டே இருப்பவர்கள்.
வளர்ந்துகொண்டிருக்கும் ஒன்றின் அருகே குறிப்பிட்ட ஒரு
வளர்ச்சிக்குச் சமமாகப் போய் நின்றுவிட்டால், நாளைக்கு நாம்
குறைந்துவிடப் போகிறோம் என்று அர்த்தம். ஜனங்களை விட்டு
ஒதுங்கிவிடவும் கூடாது; கலந்துவிடவும் கூடாது.
எப்போதும் ஓர் அடி முன்னே சென்றால்தான் ஜனங்களை இழுத்துச்
செல்லவும் முடியும். அவர்கள் எதை வேகமாக
விரும்பி ஏற்கிறார்களோ,
அதை அவர்கள் அதே வேகத்தோடு வீசியும் எறிகிறார்கள்.
ஜனரஞ்சகம் என்ற பெயரால் என் எழுத்துக்கள் எறியப்பட வேண்டாம்
என்றும் நான் நினைக்கிறேன்!
– தாங்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் பங்கு கொண்டிருக்கிறீர்களா?
அதனால் உங்கள் எழுத்து பாதிக்கப்படுகிறதா?
நான் ஒரு கம்யூனிஸ்ட். வாழ்க்கையின் எத்தனையோ
பாதிப்புகளினால்தான் எழுத்தே உருவாகிறது. பாதிக்கட்டுமே!
– ஓர் எழுத்தாளன் என்ற முறையில் தமிழ்ப் பட உலகைப் பற்றி
தங்கள் அபிப்பிராயம் என்ன?
நான் தமிழ்ப் படம் பார்த்து மூன்று வருஷம் ஆகிறது.
ஓர் எழுத்தாளன் என்ற முறையில் அபிப்பிராயம் சொன்னால்…
வேண்டாம் சார், விடுங்கள்!
– திரைப்படங்கள் எதற்கேனும் எழுத உத்தேசித்திருக்கிறீர்களா?
எழுத உத்தேசமில்லை;
எடுக்க உத்தேசம் உண்டு.
அப்போது ஒருவேளை எழுதலாம்!

..
– உங்கள் மாத வருமானம் என்ன? அது போதுமானதாக இருக்கிறதா?
இல்லையென்றால் பற்றாக்குறைக்கு என்ன செய்து சமாளிக்கிறீர்கள்
வாழ்க்கை ஐம்பது ரூபாயிலும் இருக்கிறது, நூறு ரூபாயிலும்,
ஆயிரம் ரூபாயிலும் இருக்கத்தான் செய்கிறது. நான் வாழ்க்கை
வண்டியில் எல்லா ‘கிளாஸ்’களிலும் பிரயாணம் செய்திருக்கிறேன்.
இன்றைக்கு எனக்கு ரூ.350-ல் தாங்குகிறது. நாளைக்கு
முடியாவிட்டால், வேறு ‘கிளாஸு’க்கு இறங்கி விடுகிறேன்.
முடிந்தால் உயரே போவது. ஆனால், கடன் வாங்க மாட்டேன்.
பொருளாதார வாழ்க்கை என்பது, வாழத் தெரிந்தவர்களுக்கு
ரொம்பச் சாதாரணமானது. பொருளாதார வீழ்ச்சியும் சரி,
உயர்வும் சரி ஓர் எழுத்தாளனின் வீழ்ச்சியோ உயர்வோ ஆகாது.
அவை யாவும் அனுபவங்கள் அல்லவா?
எனக்குப் பிரச்னை, என்னுடைய ஆன்மிக வாழ்க்கையும், பிறருடைய
சமூக வாழ்க்கையும்தான். பிரச்னைகளுக்குப் பற்றாக்குறை ஏது?
.
———————————————————————————



பிங்குபாக்: ஜே.கே… ஜே.கே தான்…. 54 ஆண்டுகளுக்கு முந்தைய – ஒரு ஜெயகாந்தன் பேட்டி… – TamilBlogs
எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் https://www.youtube.com/watch?v=iy0xpl5NztA