…
…

…
இந்த காட்டுமிராண்டித்தனம் எப்படி இங்கு நுழைந்தது…. ?
இது நம் ரத்தத்தில், ஜீனில், பண்பாட்டில் இல்லையே…
இன்றைய தினம் பெண் குழந்தைகளை சீரழிக்கும், சமுதாயத்தின் அடித்தளத்தையே சிதைக்கும் புதிய கொடூரம்…
நாம் எங்கே தவறினோம்…?
முன்பெல்லாம் இப்படி இல்லையே…
அண்மைய காலங்களில் தானே இந்த சீர்கேடு….
இதற்கான அடிப்படை காரணம் என்ன….?
பள்ளியில் moral science என்கிற பாடப்பிரிவையே
இப்போதெல்லாம் காணோமே…
மீண்டும் அடித்தளத்திலிருந்து செப்பனிட வேண்டும்…
இன்றைய பள்ளிச்சிறுவர்களுக்கு மென்மையாக
சொல்லிக் கொடுக்க வேண்டும். பெண்களை பரிவுடன்
புரிந்து கொள்ள, நடத்த – சிறுவயதிலேயே தெரிந்துகொண்டால்,
இன்று நிகழும் பல அவலங்கள் நிச்சயம் நடக்காது.
பெண்களை நேசிக்க வேண்டும்…அவர்களிடம்
பரிவோடு நடந்து கொள்ள வேண்டும்; பெண்களை பாதுகாப்பது,
ஆணாகப் பிறந்த ஒவ்வொருவனின் கடமையும் கூட –
என்கிற ஒரு உணர்வை –
பள்ளியில் மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது…
பெற்றவர்களுக்கும் இதில் பெரும் பங்கு உண்டு…
பாடங்களில் முதல் மார்க் பெறுவதை விட,
ஒரு பண்பான சிறுவனாக உருவாவது முக்கியம்…
———————————
இதை எழுதும்போது, சில பழைய நினைவுகள் என் மனதில் எழுகின்றன…
பழைய காலம் எப்படி இருந்தது….?
என் வாழ்க்கை அனுபவம் எனக்கு என்ன சொல்லிக் கொடுத்தது …?
—————–

வாழ்க்கையில் நல்ல அனுபவங்களே நம்மை செம்மைப்
படுத்துகின்றன. ஆணோ, பெண்ணோ – சிறு வயதில் அவர்கள்
வளர்க்கப்படும் விதம், பின்னர் அவர்கள் வளரும் சூழ்நிலை,
எதிர்கொள்ளும் அனுபவங்கள் ஆகியவை தான் அவர்களின்
குணாதிசயங்களை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு
வகிக்கின்றன.
– இடுகையில் சொல்லப்படும் விஷயங்களை,
நான் என் இயல்புடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டேன்.
பொதுவாக நான் என் வாழ்வில், எனக்குத் தெரிந்த,
நான் பழகிய, பெண்களைப் பற்றிய நினைவும்,
அவர்களுக்கும் எனக்குமான புரிதல்கள், உறவுகள் – எப்படி
இருந்தன என்பது பற்றியும் யோசிக்கத் தோன்றியது.
முதல் முதலில் 20 வயதில் நான் மத்திய அரசுப்பணியில்
சேர்ந்தபோது, எனக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து
பணிபுரிந்து வந்த மஞ்சுஷா சாட்டர்ஜி ( என்னை விட
இரண்டு வயது மூத்த, அழகிய ராட்சசி –
பெங்காலி பெண்…! நல்ல நண்பி… ) –
துவங்கி, நான் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு
இரண்டு வருடங்கள் முன்னதாக, கடைசியாக எனக்கு
அறிமுகமான திருமதி புஷ்பா ராமகிருஷ்ணன் வரை
நினைவிலிருக்கும் அனைவரை பற்றியும் மீண்டும்
கொஞ்சம் நினைத்துப் பார்த்தேன்.
என் அனுபவங்கள் இனிமையானவை.
மிகவும் அற்புதமானவை.
என்னைப் பொருத்த வரையில் – பெண்கள் இயல்பாகவே
இனிமையானவர்கள், மென்மையானவர்கள்; ( எங்குமே
சில விதிவிலக்குகள் இருக்கக்கூடும் என்பதை நான்
மறுக்கவில்லை)
என் 40 ஆண்டுக்கால அலுவலக வாழ்விலும் சரி,
சொந்த வாழ்விலும் சரி – பெண்களுடன்- பெரிய கசப்பான
அனுபவங்கள் – நினைவில் வைத்து சொல்லக்கூடிய அளவிற்கு –
என்று எதுவும் எனக்கு ஏற்பட்டதில்லை.
பெண்கள் – பொதுவாகவே மென்மையானவர்கள் என்பதால்,
வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய
இன்னல்களிலிருந்து – அவர்கள் மீள இயன்ற வரை உதவுவதும்,
அவர்களது பாதுகாப்பை எப்போதும் உறுதி செய்வதும்
ஆண்களின் கடமை என்கிற உணர்வு
சிறிய வயதிலிருந்தே என் மனதில் உருவாகி நிலைத்து விட்டது.
இதற்கு முக்கிய காரணம் என் அம்மா தான்.
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து –
என் அம்மா பட்ட துன்பங்களை எல்லாம் கூடவே
உடனிருந்து பார்த்திருக்கிறேன்.
அவர் துயரத்தைப் போக்கும் சக்தி எனக்கில்லையே என்று
அப்போதே வருந்தி இருக்கிறேன். எட்டு-பத்து வயதுப் பையனாக,
அவருக்கு சமையலறையில் பாத்திரம் தேய்த்துக் கொடுத்தும்,
கல்-உரலில் இட்லி மாவு அரைக்க கைகொடுத்தும்,
சப்பாத்தி இட்டுக் கொடுத்தும் –
அவர் கடை-கண்ணிக்குப் போகும்போதெல்லாம்
கூடவே துணைக்குப் போவதும் என்று பல விதங்களிலும்
அவருக்குத் துணை நின்றிருக்கிறேன்.
என் அம்மாவின் நிலை என் அடிமனதில் ஆழப்பதிந்து
விட்டதே – நான் வளர்ந்த பிறகு – என் அம்மாவைப் போல்,
என் மனைவியோ மகளோ வருந்தக் கூடிய சூழ்நிலை
ஒருக்காலும் உருவாகக் கூடாது என்று நான் உறுதியாகச்
செயல்பட அடிப்படையானது.
அம்மாவின் மீது சிறுவயதில் எனக்கு ஏற்பட்ட
அந்த அக்கரை தான் – பிற்காலத்தில்
நான் சந்திக்க நேர்ந்த அனைத்துப் பெண்களின் மீதும்
பிரதிபலித்தது.
பெண்களுடன் பழகுவதில் 28-30 வயது வரை ஓரளவு
தயக்கம் காட்டிய நான், என் திருமணத்திற்குப் பிறகு
எந்தவித தயக்கமுமின்றி மிக சகஜமாகப் பழக ஆரம்பித்தேன்.
அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை என்னால் எளிதாக
புரிந்து கொள்ள முடிந்தது. அவர்களின் அலுவலகம்
தொடர்பான பிரச்சினைகளை விசேஷ அக்கரை
எடுத்துக் கொண்டு சரி செய்து கொடுத்தேன். அதன் பிறகு
எனக்கு வயதும், அனுபவமும், பதவிப் பொறுப்பும் கூடக்கூட,
என் இயல்பான குணங்களைப் புரிந்து கொண்ட,
என்னுடன் பணிபுரிய நேர்ந்த பெண்கள் தங்கள் சொந்த
வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைக் கூட
நம்பிக்கையுடன் மனம் விட்டுக்கூறி, தங்கள் கவலைகளை
பகிர்ந்து கொண்டார்கள்.
அலுவலகத்தில், மேலதிகாரிகளிடம் எனக்கிருந்த
செல்வாக்கு, நல்ல பெயர் காரணமாகவும் –
எனக்கிருந்த பெரிய நண்பர்கள் வட்டத்தின் துணை
காரணமாகவும், நான் பல விதங்களில் அவர்களுக்கு
உதவி புரிய முடிந்தது.
அவர்கள் குடும்பங்களில் நோய்வாய்ப்பட்ட யாருக்காவது
விசேஷ மருத்துவ உதவிகள், அவர்கள் குழந்தைகளுக்கு,
பள்ளி- கல்லூரிகளில் அட்மிஷன்,
அலுவலக, கூட்டுறவு வங்கிகள் மூலம் ஓரளவு கடனுதவி –
சில சமயங்களில் குடிகார குடும்ப உறுப்பினர்களின்
தொல்லையிலிருந்து விடுபட உதவி, நினைத்தால் வியப்பாக
இருக்கும் – என்னுடன் பணி புரிந்த இரண்டு பெண்களுக்கு
திருமண விஷயத்தில் முழுமுயற்சிகள் மேற்கொண்டு
நடத்தி வைத்திருக்கிறேன்.
என் வீட்டைப் பொறுத்த வரையில், இறைவன் அருளால்,
இன்று வரை என் மனைவிக்கு எந்த குறையும் இல்லாமல்
ஒரு நல்ல கணவனாக இருந்திருக்கிறேன். பணியில்
இருக்கும்போது, நான் பொது வாழ்வில் அதிகமாக
ஈடுபட்டிருந்ததால் – வீட்டில் இருக்கும் நேரம் மிகவும்
குறைவாகவே இருக்கும்.
இதை ஈடுகட்ட –
என் இரண்டு பெண்களுமே – சிறு குழந்தைகளாக
இருந்தபோது – என் மனைவியின் சிரமத்தைக் குறைக்க
வேண்டும் என்பதற்காக, ஒரு ஏற்பாடு செய்து கொண்டேன்.
பகல் முழுவதும் குழந்தையை அவள் பார்த்துக் கொள்வாள்.
இரவு முழுவதும் குழந்தையைப் பார்த்துக் கொள்வது
என் பொறுப்பு. குழந்தை சிணுங்கினாலும், அழுதாலும்
அவள் எழுந்திருக்க வேண்டிய அவசியமில்லை
என்று கண்டிப்பாகச் சொல்லி இருந்தேன்…..
இன்றைய இளம் வயதினருக்கு… நான் சொல்லும்
இந்த விஷயம் குறித்து தெரிந்திருக்காது…டயாஃபர் எல்லாம் கண்டுபிடிக்கப்படாத காலம் அது….
அப்போதெல்லாம், புடவைத்துணியில் கட்டிய தூளியில்
தான் குழந்தைகள் தூங்கும். இரவில் குறைந்தது
இரண்டு-மூன்று தடவைகளாவது மூத்திரம் போகும்… அழும்.
அழும் சப்தம் கேட்கும்போதெல்லாம் விழித்தெழுந்து,
குழந்தையை வெளியில் எடுத்து தோளில் சாத்திக் கொண்டு,
ஒரு கையால் துணியை மாற்றி விட்டு, தூளித்துணியை
நகர்த்தி, படுக்கப்போட்டு, 5-10 நிமிடங்கள் தூளியை ஆட்டி,
மீண்டும் தூங்க வைக்க வேண்டும். எந்தவித
எரிச்சலும் இல்லாமல், நான் முழுமனதுடன் விரும்பியே,
குழந்தைகள் வளர்ந்து அடுத்த நிலைக்குப் போகும் வரையில்
இதைத் தொடர்ந்தேன்.
நான் வாழ்ந்து முடிந்து விட்டேன்.
இப்போது, அந்திமக் காலத்தில் அழைப்பை எதிர்பார்த்து
காத்திருக்கிறேன். இந்த நேரத்தில் –
என அனுபவங்களைச் சொல்வது, அடுத்த
தலைமுறையினருக்கு எந்த விதத்திலாவது உதவியாக
இருக்கலாம் என்கிற எண்ணத்தில் தான்
இவற்றை எல்லாம் எழுதுகிறேன்.
பொதுவாக, குழந்தைகளின் வளர்ப்பில்,
துணையாக இருக்கலாமே தவிர,
பெண்களின் பங்கை ஆண்களால் எந்த விதத்திலும்
ஈடு செய்ய முடியாது.
குழந்தைகள் நல்ல சூழ்நிலையில், ஆரோக்கியமாக,
நல்ல பண்புள்ளவர்களாக வளர வேண்டுமானால் –
அதில் பெண்களின் ஈடுபாடு மிக மிக அவசியம்.
அந்தப் பெண்கள் கவலையற்ற சூழ்நிலையில் –
முழு ஈடுபாட்டோடு குழந்தைகளை வளர்க்கத் தேவையான,
நல்ல அமைதியான குடும்பச் சூழலை ஆண்கள்
அமைத்துக் கொடுக்க வேண்டியது அவசியம்.
அந்தப் பெண்கள் நிம்மதியும், பாதுகாப்பும் உள்ளவராக உணர,
ஆண்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
சம்பாதித்தால் போதாது. வீட்டிற்கு வேண்டியவற்றை
வாங்கிப் போட்டு விட்டாலும் போதாது.
பெண்களைப் பற்றிய,
அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளைப் பற்றிய,
அவர்களின் கவலைகளைப் பற்றிய,
– ஒரு புரிதலும்,
அவர்களிடம் ஒரு பரிவும் ஆண்களுக்கு எப்போதும்
இருப்பது மிகவும் அவசியம்.
வித்தியாசமாக சில சமயங்களில், ஆண் பலவீனனாகவும்,
அவனுக்கு இணை சேரும் பெண் தைரியமும், உறுதியும்
உள்ளவளாகவும் அமைவது உண்டு. இத்தகைய நேரங்களில்,
ஆண் சுமக்க வேண்டிய அத்தனை பாரத்தையும் சேர்த்து,
பெண்ணே சுமக்க வேண்டி இருக்கும்
இங்கு ஆண் பெரியவனா, பெண் பெரியவளா என்கிற
பேச்சு எழுவதில் அர்த்தமே இல்லை. ஆணைத் தவிர்த்து
பெண் தனியாகவோ, பெண்ணைத் தவிர்த்து ஆண் மட்டும்
தனியாகவோ வாழ்வது – சாத்தியமே இல்லை.
அது இயற்கைக்கு முரணானதும் கூட.
அவர்கள் இணைந்து வாழவென்றே இயற்கையால் –
இறைவனால் படைக்கப்பட்டவர்கள்.
அதே போல், குடும்பத்தில் – தாயிடம், மனைவியிடம்,
சகோதரிகளிடம், மகளிடம் காட்டும் அதே அக்கறையும்,
கரிசனமும் – அனைத்துப் பெண்களிடமும் காட்டப்பட
வேண்டும். பெண்களை நன்றாக கவனித்துக் கொள்ளும்
சமுதாயம் தான் உலகில் சிறந்து விளங்கும்.
இந்த உலகமும், குடும்பமும், வாழ்வும் – ரம்மியமானவை.
அதை உணர – இங்கு தேவைப்படுவது – புரிந்து கொள்ளுதலும்,
பரிவு கொள்ளுதலும் மட்டுமே.
இன்றைய சிறுவர், சிறுமிகளுக்கு நாம் இதையெல்லாம்
சொல்லிக் கொடுக்க வேண்டியது – மிக மிக அவசியம்.
.
—————————————————————————–



மிக அற்புதமான பகிர்வு. அதிலும் இரவில் குழந்தையைப் பார்த்துக்கொண்டது இருக்கே அதுக்கு ஈடு,இணை இல்லை. நல்லாச் சொல்லி இருக்கீங்க! இன்றைய இளைய தலைமுறைகள் புரிஞ்சுக்கணும்.
Hats Off Sir…
பிங்குபாக்: பெண்கள் ….. – TamilBlogs
சொல்ல வார்த்தை இல்லை.
நீங்கள் கடைப்பிடித்துள்ள நடைமுறைகளில் முமுழுவதும் இல்லை என்றாலும் நானும் என்னை சார்ந்த பெண்களிடம் அதாவது என் அம்மா மூன்று சகோதரிகள் மனைவி ஆகியோரிடம் இன்றளவும் இனக்கமாகவே இருக்கிறேன்.
ஆனால், உங்கள் அளவுக்கு இல்லை.
YOU are great Sir.
திருமதி கீதா சாம்பசிவம்,
கணேஷ்,
அறிவழகு,
உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
—————–
அனைத்து நண்பர்களுக்குமே –
பெண் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும்…
அதற்காக நாம் எத்தகைய சிரமங்களையும் மேற்கொள்ளலாம்…… குழந்தையை பெற்றவர்கள் மட்டும் தான் என்றில்லாமல்,
சமூக அக்கறை உள்ள அனைவருமே, பொதுவாகவே
அனைத்து பெண் குழந்தைகளின் மீதும் பார்வையை செலுத்திக் கொண்டே இருபோமே… அவர்கள் பின்னணியை, அவர்கள் கூட இருப்பவர்களை விழிப்புடன் கவனித்துக் கொண்டே இருப்போமே.
அத்தனை குடும்பங்கள் வசிக்கும் ஒரு காலனியில்
(Gated community) 6-7 மாதங்கள் வரை தொடர்ந்து நடந்த
அட்டூழியங்களை யாருமே கவனிக்கவில்லையே… இப்படி ஒரு உணர்வற்ற சமூகமாக இருக்கலாமா…?
நாமும் விழித்திருப்போம். மற்றவர்களையும் விழிப்புடன்
இருக்கச் சொல்வோம்…. நமது குடும்பத்து சிறுவர்களை
பண்புள்ளவர்களாக, பெண்களை நேசிப்பவர்களாக, பெண்களை மதிப்பவர்களாக, பாதுகாப்பவர்களாக வளர்ப்போம்…
கொஞ்ச காலம் சமூகம் முழுவதுமே ஒரு விழிப்புணர்வுடன்
இருந்தால், இந்த கொடூரத்தை நிச்சயம் ஒழித்து விடலாம்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Sir,
Do you remember anyone “Hema” (Hema Venkat ) by name
in your Official career ? ………………………………..
……………………………………..
……………………………………( deleted.. )
Hello Hema,
What a pleasant surprise.. !!!
YES … it is Me.
I know well about your interest in Tamil.
But never expected you in this background.
It is more than 32-33 years…
After getting married, you left the job and
went abroad. Thereafter I have not heard
anything….
I am really happy to see your Mail.
I want to hear many things from you…
About your family, children, life style ….
You can write to me separately
addressing kavirimainthan@gmail.com.
-with all best wishes,
K.M.
Wow sir !
maybe 50% of what you did I am doing now sir 🙂
You had such a fulfilled life.
Dear Sir
Porn contents are the major reason which is easily available now a days.
உண்மை.
டாஸ்மாக் சாராயமும், பெண்களைத் துரத்தும் மட்டமான கேரக்டர்களை ஹீரோவாகக் காட்டும் சினிமா படங்களும் கூட முக்கிய காரணங்கள்.
இது பதிவல்ல! ஆண்குழந்தைகளுக்கு பள்ளிகளில் கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டிய பாடம்..
கண்பத்,
தற்போதைய பள்ளிக்கல்வி அமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார் என்று தோன்றுகிறது.
பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடையே நல்ல பண்புகளை உருவாக்க, கல்வித்திட்டத்தில் (சிலபஸ்)
அவர் சில சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டால், குறைந்த பட்சம் எதிர்காலத்தில், பண்பான இளைஞர்களை
உருவாக்கலாம்…
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Dear KM Sir,
I am a regular reader of your blog. I have been reading your blogs without fail for several years now.
I completely differ from you in some of your political opinions.
But, I am reading your today’s article with tearful eyes.
My humble namaskarams to you, sir.
Ganapathi Sibramanian
கணபதி சுப்ரமணியன்,
நான் அரசியல் எழுதுவது – அநேகமாக மற்றவர்களுக்காக. ஆனால் என் அரசியல் கட்டுரைகளைப் படிப்பதனால் மட்டுமே யாரும் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்வார்கள் என்று நான் நம்பவில்லை.
ஆனால், இந்த கட்டுரையை நான் எழுதியது என் மனதிருப்திக்காகவும், உண்மையாகவே இந்த மாதிரியெல்லாம்
சிந்திக்கக்கூடிய சூழ்நிலையில் வளராத இந்த காலத்து இளைஞர்களுக்காகவும் தான். அவர்களில் சிலர் மனதையாவது
இந்த கட்டுரை தொட்டிருந்தால், அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
அது உங்களுக்கும் பிடித்திருந்தது என்றறிய மனம் நிறைகிறது.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்