…
…
வருமான வரித்துறை ரெய்டு நடத்தியபோது கிடைத்த
ஆவணங்களில் ஒன்று, (அமைச்சரின் ஆடிட்டரிடமிருந்து
வருமானவரித்துறையால் கைப்பற்றப்பட்டிருக்கிறது )
அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பிலிருந்து டாக்டர் பாலாஜிக்கு
5 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது.

இது எதற்காக கொடுக்கப்பட்ட பணம் என்கிற சந்தேகம்
வந்தபோது, ஒருவேளை ஜெ.அவர்கள் மருத்துவமனையில்
இருந்தபோது பெறப்பட்ட ஆவணங்களில் இந்த டாக்டர்
கையொப்பம் இட்டதற்கான சம்பளமாக (?) இருக்குமோ
என்று மீடியாக்கள் ஐயத்தைக் கிளப்பின.
——————————–
அப்போது, ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் தரப்பில் இருந்து
டாக்டர் பாலாஜியை தொடர்பு கொண்டு இது குறித்து
கேட்ட போது, அவர் தன்னிலை விளக்கம் அளித்தார்.
தன்மீது கூறப்பட்ட லஞ்சப் புகாரிலிருந்து தப்பிக்க
அவர் கொடுத்த விளக்கம் இது –
———————————
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டன் டாக்டர் ரிச்சர்ட்
பீலே, 4 முறை சென்னை வந்தார். முதல் 3 முறை அவர்
தனியாக வந்தபோது, தாஜ் கோரமண்டல் ஹோட்டலில்
தங்கினார். அக்டோபர் 23-ம் தேதி 4-வது முறையாக வந்தபோது,
அவருடன் குடும்பத்தினரும் வந்திருந்தனர். அதனால், அவரை
ரெயின் ட்ரீ ஹோட்டலில் தங்குமாறு அப்போலோ
மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால், அவர் தாஜ்
கோரமண்டல் ஹோட்டலிலேயே தங்கினார்.
நவம்பர் 2-ம் தேதி அதிகாலை அவர் லண்டன் புறப்பட இருந்
தார். அவர் தங்கியதற்கான ஹோட்டல் கட்டணத்தை நவம்பர்
1-ம் தேதி செலுத்த வேண்டும். அப்போலோ மருத்துவமனை
நிர்வாகத்தினரோ, ‘நாங்கள் ரெயின் ட்ரீ ஹோட்டலில் தான்
தங்கச் சொல்லியிருந்தோம். அவர் ஏன் தாஜ் கோரமண்டலில்
தங்கினார். அதனால், நாங்கள் கட்டணத்தை செலுத்த
முடியாது’ என்று தெரிவித்தனர்.
இதுபற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
கவனத்துக்கு கொண்டு சென்றேன். அமைச்சர் உடனடியாக
தனது உதவியாளரிடம் ரூ.5 லட்சத்தை கொடுத்து
அனுப்பினார். ஹோட்டல் கட்டணம் ரூ.4 லட்சத்து 20
ஆயிரத்து 898 செலுத்தப்பட்டது. மீதமுள்ள பணத்தை
அமைச்சரின் உதவியாளர் கொண்டு சென்றுவிட்டார்.
ஜெயலலிதாவிடம் ரேகை பதிவு செய்ததற்காக, நான் ரூ.5
லட்சம் வாங்கியதாக தேவையில்லாமல் வதந்திகளை பரப்பி
வருகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை.
————————————–
இந்த உரையாடலை, ‘தி இந்து’ நிர்வாகம் முன்ஜாக்கிரதையாக
பதிவு பண்ணி வைத்திருக்கிறது.
(அந்த ஆடியோ பதிவை கீழே தந்திருக்கிறேன்…)
ஆனால், யாரிடமிருந்து வந்த மிரட்டலோ,
டாக்டர் பாலாஜி இப்போது “ஜகா” வாங்குகிறார்….
இப்போது அவர் கூறுவது –
சுகாதாரத்துறை அமைச்சர் தனது உதவியாளர் மூலம் ரூ.5
லட்சம் கொடுத்ததாகவும், அந்த தொகையைக் கொண்டு
ஹோட்டல் கட்டணத்தை செலுத்தியதாகவும் பல்வேறு
பத்திரிகைகள் மற்றும் ஊடங்களில் நேற்றும், இன்றும்
செய்திகள் வெளியாகின. ஊடகங்களில் வெளியானது
ஆதாரமற்ற தவறான செய்தி.
இந்த பிரச்சினை தொடர்பாக நான் எந்த பத்திரிகைக்கும்,
ஊடகத்துக்கும் பேட்டி அளிக்கவில்லை. அந்த செய்தியில்
கூறியிருப்பதைப் போல், நான் கட்டணமாகவோ அல்லது
வேற எந்த வகையிலும் பணத்தையும் பெறவில்லை
என்பதை தெளிவுபடுத்துகிறேன்”
——————————————
“எங்க அப்பன் குதிருக்குள்ள இல்லவே இல்லை” என்று
சொல்லி மாட்டிக்கொண்டதைப்போல், இருக்கிறது இப்போது
டாக்டர் பாலாஜி விடுத்திருக்கும் அறிக்கை.
ரெயின் ட்ரீ ஓட்டலுக்கு யார் பணம் கொடுத்து
டாக்டர் பீலேயின் பில்லை செட்டில் செய்தார்கள்…?
காசோலையாகவா அல்லது ரொக்கமாகவா…?
அவ்வளவு பெரிய தொகையை ஓட்டல் எப்படி
ரொக்கமாக பெற்றிருக்கும்…?
அப்போலோ ஹாஸ்பிடல் தரப்பில் கொடுக்கப்பட்டிருந்தாலும்
அதுவும் காசோலையாகவே இருக்கும்…
பில்லில் பணம் செட்டில் செய்பவராக கையெழுத்து
போட்டிருப்பது யார்…?
என்பது போன்ற விவரங்களையும்,
அங்கே பில் செட்டில் செய்தபோது
பதிவாகி இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் பார்த்தால்
நொடியில் தெளிவாகி விடும்
யார் பொய் சொல்கிறார்களென்று……
புலனாய்வு நிறுவனத்தினர், அரை மணி நேரத்தில் இதை
உறுதி செய்து விடுவார்கள்….
டாக்டரை மிரட்டி, முன்னால் அவர் தன்னை
லஞ்சப்புகாரிலிருந்து காத்துக்கொள்ள – சொன்னதை
இல்லையென்று சொல்ல வைத்திருக்கிறார்களா …. ஏன்…?
இதில் 5 லட்சம் விவகாரம் அவ்வளாவு முக்கியமில்லை…
மேலேயுள்ள பட்டியலை பார்த்தால் விஷயம் புரிய வரும்.
அந்த பட்டியல், அமைச்சரின் ஆடிட்டரிடமிருந்து
வருமானவரித்துறையால் கைப்பற்றப்பட்டிருக்கிறது.
மார்ச் மாத வரவு, செலவு பூராவும் அதில் பிரதிபலிக்கப்பட்டு
இருக்கிறது…. யார் யாரிடமிருந்து எவ்வளவு (லஞ்சம் அல்லது
நன்கொடை (…! ) வசூல் செய்யப்பட்டது என்கிற விவரங்கள்
அதில் இருக்கின்றன.
இந்த 5 லட்ச ரூபாய் செலவு டாக்டர் பாலாஜியால்
confirm செய்யப்பட்டால், அந்த பட்டியலில் உள்ள மற்ற
அனைத்து வரவு,செலவு இனங்களும் உண்மை என்று
உறுதி செய்யப்பட்டு விடும்…. அமைச்சர் தரப்பு அந்த
பட்டியலே ‘போலி’ என்று சத்தியம் செய்து
கொண்டிருக்கும்போது, டாக்டர் இப்படி “எங்கப்பன் குதிருக்குள்
இல்லை” என்று சொன்னால் எப்படி…?
அதான்….. டாக்டர் பாலாஜியின் அந்தர் பல்டி…
‘Rs 5 Lakhs is not for me’ – Dr Balaji Exclusive Interview –



மருத்துவத் துறையிலும் எவ்வளவு அரசியல் புகுந்துவிட்டது. டாக்டர் பாலாஜியெல்லாம் மருத்துவம் படித்தாரா அல்லது MA POLITICAL SCIENCE படித்துவிட்டு டாக்டரானாரா? தமிழ்’நாட்டில் ‘அரசியல்’ புகாத துறை எதுவுமே இல்லை போலிருக்கிறது.
மா’நில முதலமைச்சரின் செக்கப்புக்காக வருகின்ற லண்டன் ஸ்பெஷல் மருத்துவர் EXCURSION மேற்கொள்கிறார். அதற்கு அரசு பணம் தருகிறது. ஜெ.வின் கைரேகை வாங்க(?) அரசு டாக்டர் லஞ்சம் பெற்றுக்கொள்கிறார். தோண்டத் தோண்ட பூதங்கள்.
சமீபத்தில்தான் நான் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சொந்த குவாரி போன்ற பல தொழில்கள் வைத்திருக்கிறார் என்று. எத்தகைய எத்தர்களை அரசில் பெற்றிருக்கிறோம் நாம். ஊழல், ஆக்டோபஸ் போன்று எல்லாக் கட்சியினரிடமும் பரவியுள்ளது. எல்லாக் கொள்ளைகளிலும் எல்லாக்கட்சியினரின் INVOLVEMENT இருக்கிறது.
சரத்குமார் 7 கோடி பெற்றுக்கொண்டு தினகரனை ஆதரித்ததும், வாலன்டியராக அப்போலோ சென்று ‘ஜெ. நன்றாக இருக்கிறார்’ என்று திருமாவளவன் கதைத்ததற்கும் (வேறு என்ன.. பணம் கொள்ளையடித்துத்தான்)….. மக்கள் நம்பிக்கையைப் பெற்ற ஒரு நல்லவனும் அரசியலில் இல்லையா? நல்லக்கண்ணு போன்ற நல்லவர்களை, மக்களுக்காகப் போராடும் கம்யூனிஸ்டுகளை ஆதரிக்க இந்த மக்களை எது தடுக்கிறது?
இந்த கொள்ளைக்கார அரசியல்வாதிகள் அத்தனை பேரும்
ஒரே இடத்தில் எதற்காகவாவது குழுமினால் –
ஒருவேளை பூமிக்கே அது பொறுக்காமல், இவர்களை
விழுங்கி விடக்கூடும்.
மக்களிடம் கவர்ச்சி அரசியல் தான் எடுபடுகிறது…
நல்லகண்ணு போன்ற
நல்லவர்களை யாரும் கண்டுகொள்வது இல்லை.
இப்போது இருக்கும் கட்சிகள், அரசியல் தலைவர்கள் அத்தனை பேரும் (ஒன்றிரண்டு விதிவிலக்குகளைத் தவிர ) ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்டு –
புதிய இயக்கம், தலைமை எதாவது தோன்றினால் தான் தமிழகம்
பிழைக்கும்.
இது நடக்குமா…?
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்