
சிலரின் நினைவுகள் –
அவர்களது பிறந்த நாளின்போதும்,
மறைந்த நாளின் போதும் மட்டும் வரும்….
( காந்திஜியை காங்கிரஸ்காரர்கள்
நினைத்துக் கொள்வது போல ….!!! )
ஆனால் சிலரின் நினைவுகள் நம்மை விட்டு என்றுமே
நீங்குவதில்லை. அவர்களது பிறந்த நாளன்றோ,
மறைந்த நாளன்றோ மட்டும் தான் நாம் அவர்களை
மனதில் நினைவு கொள்கிறோம் என்பது இல்லை….
இன்று கவிஞர் கண்ணதாசன் அவர்களின்
பிறந்த நாள்…. நேற்றிரவு நண்பர் செல்வராஜன்
எழுதியிருந்த பின்னூட்டத்தை படிக்கும்போது தான்
நினைவுக்கு வந்தது.
கவிஞரை மறந்தால் தானே நினைவு கூற….?
பதிவு செய்து வைத்திருக்கும் பாடல்களின் மூலம்
தினமும் அவரது பாடல்கள் சிலவற்றை
அனுபவித்துக் கொண்டே தான் இருக்கிறேன்.
நான் மட்டும் தானா என்ன ?
உங்களிலும் எத்தனையோ பேர் அப்படித்தானே…?
கண்ணதாசன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சிவாஜி –
என் இளமைக் காலங்களில் என்னை முற்றிலுமாக
ஆக்கிரமித்துக் கொண்ட காம்பினேஷன் இது…..
எக்கச்சக்கமான ஹிட்ஸ்….
எல்லாமே மனதில் அப்படியே பசுமையாக இருக்கின்றன..
வாழ்க்கையின் மாலைப்பொழுதை
கடந்து கொண்டிருக்கும் இந்த நாட்களில்
மனதுக்கு நிம்மதியும்,
போதையில்லாமலே மயக்கமும்
கொடுப்பவை கவிஞரின் பாடல்கள்….
இன்று கவிஞரின் பிறந்த நாளையொட்டி,
எனக்குப் பிடித்த எத்தனையோ பாடல்களில்
சிலதை மட்டும் -( உங்களது நேரம் கருதி )
உங்களுக்கு பரிசாக அளிக்க விரும்புகிறேன்…..
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
மயக்கமா கலக்கமா
https://youtu.be/gFcOsnk8DM0
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
https://youtu.be/-Z3QfPOsY84
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மாலைப்பொழுதின் மயக்கத்திலே
https://youtu.be/v-GBZWUiVxg
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே



//வாழ்க்கையின் மாலைப்பொழுதை
கடந்து கொண்டிருக்கும் இந்த நாட்களில்
மனதுக்கு நிம்மதியும்,
போதையில்லாமலே மயக்கமும்
கொடுப்பவை கவிஞரின் பாடல்கள்// உண்மை . உண்மை. நன்றி.
அய்யா … ! நாம் ரசிக்க — மனதில் மகிழ்வு பொங்க –வாழ்வில் நிகழும் எந்தவொரு சம்பவத்திற்கும் — துணை நிற்க — கவியரசரின் பாடல்கள் எழுத்து வடிவில் இருந்ததை — ” இசைவடிவமாக ” மாற்றிய மெல்லியிசை மன்னர் திரு எம் . எஸ் . விஸ்வநாதனின் பிறந்தநாளும் இதே ஜுன் 24 – ம் தேதி தான் என்பது நிறைய பேருக்கு தெரியாது — என்ன ஒரு ஒற்றுமை பார்த்தித்தீர்களா … ? இவர்கள் இருவரையும் மறக்க இயலுமா … ? காலத்தாலும் அழிக்க முடியாதவற்றை — அளித்தவர்கள் அல்லவா …. !!
இருவருக்கும் சேர்த்து கவிஞரின் வரியில் ” கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது ! ” என்று பாடி நினைவு கூறுவோம் … !!!
Kaladasan-Kannadasan
வாலி வெற்றிகரமான ஆயிரக்கணக்கான பாடல்களை மூன்று நான்’கு தலைமுறைக்கு சினிமாவில் எழுதியவர். இறக்கும்வரை பாடல்கள் எழுதியவர். அவரது வாழ்க்கைச் சரிதத்தில் எழுதிய மூன்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.
1958-60ல் தி நகர் சிவா விஷ்ணு கோவிலுக்கு எதிரில் இருந்த விடுதிகளில் அவர், நாகேஷ், ஸ்ரீகாந்த் போன்றோர் தங்கியிருந்த காலம். சினிமாவில் ஆடிக்கு ஒருதரம் அமாவாசைக்கு ஒருதரம் என்று பத்துக்கும் குறைவான பாடல்களே 6 வருடங்களில் எழுதியிருந்த காலம். இனி சினிமா வாழ்க்கை இல்லை என்று மூட்டை கட்டுகிறார். இரவு மறுபடியும் ஸ்ரீரங்கத்துக்கே திரும்பப் போகிறார். மாலை, பி.பி.ஸ்ரீனிவாஸ் அவரது அறைக்கு வருகிறார். வாலி அவரிடம், ஏதாவது சமீபத்தில் பாடிய பாடலைப் பாடுங்களேன் என்று கேட்க, சில நாட்கள் முன்பு பதிவு செய்த, ‘மயக்கமா கலக்கமா’ என்ற பாடலைப் பாடுகிறார். (அப்போதெல்லாம் பாடல் வந்து பிரபலமாகவில்லை). அதன் அர்த்தத்தை உணர்ந்து, “வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை… எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்’ என்ற வரிகளைக் கேட்டு உத்வேகம் பெற்ற வாலி, தி.நகரிலேயே தங்கி வாய்ப்புகளைப் பெற விடாப்பிடியாக முயற்சிக்கிறார். காலம் அவருக்கு 1964ல் தன் கதவுகளைத் திறக்கிறது. பிற்காலத்தில் (சில வருடங்களுக்குப் பிறகு) கண்ணதாசனிடம், உம்ம பாட்டால்தான் எனக்கு உத்வேகம் வந்து மீண்டும் வாய்ப்புகளுக்கு முயற்சித்து இன்று நல்ல நிலைமைக்கு வந்துவிட்டேன் என்று சொல்லி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார். இது கண்ணதாசனின் வாக்கு வன்மைக்கு எடுத்துக்காட்டு. அவரும் வாலியும் பின்பு நல்ல நண்பர்களானார்கள் (வாலியின் ஏதேனும் சினிமாப் பாடல் அட்டகாசமாக இருந்தது என்று கண்ணதாசன் கருதுவாரேயானால், அன்று இரவு ஒரு பாட்டிலை வாலிக்குப் பரிசாக அனுப்புவது போன்ற நட்பு). 1964ல், கற்பகம் படத்துக்குப் பின்பு, வாலிக்கு எம்.எஸ்.வி அவர்கள் ஏராளமான பாடல்களைக் (வாய்ப்பை) கொடுத்தார். அது பொருட்டு எப்போதும் கண்ணதாசன் வருந்தியதில்லை.பொறாமைப் பட்டதில்லை. இது அவரின் மாண்பு.
கண்ணதாசன் அவர்கள் கவிதா ஓட்டலில்தான் எப்போதும் தங்கியிருப்பார். அப்போது, அவருக்கும் வாலிக்கும் தொழில்போட்டி, மற்றும், கட்சியினால் மனதில் (அல்லது சுற்றியிருந்தவர்களால்) பகை. (எம்ஜியாருக்கு வாலிமட்டும்தான் பாடல் எழுதவேண்டும் என்பதும், எம்ஜியாருக்கும் கண்ணதாசனுக்கும் மனஸ்தாபம் இருந்த நேரம்). கண்ணதாசன் அழைப்பின்பேரில் அவர் ஓட்டலுக்கு வாலி வந்து, இருவரும் மது அருந்துகின்றனர். பின்பு வாலி, ஒரு பெண்ணோடு ஒரு அறையில் (மற்றொரு) ஒதுங்குகிறார். கண்ணதாசனின் கூட இருந்த நட்பு ஒருவர், அவரிடம், நீங்கள் இப்போது போலீசுக்குப் போன் பண்ணினால் ரெய்டு நடந்து வாலி அசிங்கப்படுவார், எம்ஜியாருக்கும் கெட்ட பெயராகும் என்று சொல்கிறார். உடனே கண்ணதாசன், அவரை ஒரு அறை கொடுக்கிறார். யாரிடம் இந்தமாதிரிப் பேசுற. என் அழைப்பின்பேரில் வாலி இங்கு வந்திருக்கிறார். அவர் வீடு செல்லும்வரை, அவரைப் பத்திரமாகப் பாதுகாப்பது என் கடமை என்று சொல்கிறார். இது கண்ணதாசனின் குணத்துக்கு எடுத்துக்காட்டு.
கடைசிகாலத்தில் (கண்ணதாசனுக்குத் தெரியாது), வாலி அவரிடம், உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்க என்று சொல்லும்போது, கண்ணதாசன் அவரிடம், நான் இறந்தால் எனக்கு இறங்கற்பா நீங்கள்தான் பாடவேண்டும் என்று சொல்கிறார். அதற்கு வாலி, அச்சானியமாகப் பேசாதீங்க. நீங்கள் நலமுடன் திரும்பிவருவீர்கள் என்று சொல்கிறார். கண்ணதாசன் உடல்தான் திரும்பிவந்தது. வாலிதான் இறங்கற்பா பாட நேர்ந்தது.
கண்ணதாசனின் குறைகளை அவரே மன வாசத்தில் எழுதியுள்ளார். குழந்தைத் தனமாக எல்லோரிடமும் ஏமாந்ததையும் அவர் சொல்லியுள்ளார். அவர் நிறைய இலக்கியங்களையும் புத்தகங்களையும் படித்திருக்கலாம். ஆனால், ஒரு சிச்சுவேஷன் சொன்னதும், டியூன் போட்டதும் (அதாவது ஒவ்வொரு வரி டியூன் போட்டதும்) மொத்தமாகப் பின்னால் படிக்கும்போது சரியாக கதையை (சிச்சுவேஷனை)ப் பிரதிபலிக்கிற மாதிரி பாடல் எழுதுவது, சரஸ்வதி கடாட்சமில்லாமல் வேறு எதுவுமில்லை. டியூனைக் கொடு, யோசிக்கிறேன் என்ற கதை அவரிடம் இல்லை. அவரை நாம் நினைவுகூர அவசியமில்லை. அவரின் காலத்தால் அழியாத பாடல்கள் அந்த வேலையைச் சுலபமாகச் செய்துவிடும்.
நெல்லைத்தமிழன்,
நிறைய உணர்வுபூர்வமான செய்திகளை
சொல்லி இருக்கிறீர்கள்.
மிக்க நன்றி.
இந்த மாதிரி மனிதர்களை எல்லாம் நாம் இனி எங்கே
பார்க்கப் போகிறோம்….?
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
JI i had read the versatile writer SOUNDARA KAILASAMS POEMS
She had remarked that THADUMARUM PODHAIYILUM
KAVI PADUM MEDHAI AVAN………
What a rich tribute to kavignar kannadasan…………