ஸ்ரீநகரில் என்ன விசேஷம் …….?

பனிமலையின் முதல் தோற்றம் -விமானத்திலிருந்து –

vimanam thotram panimalai-1

dal lake house boat-2

gulmarg view from r.p.

ஸ்ரீநகர் வந்த மறுநாளே இதை எழுதினேன்….

ஆனால் … முன்கூட்டியே இடம் பதிவு செய்யும்போது –
நான் தங்கி இருந்த 4 வெவ்வேறு இடங்களிலும்
அற்புதமான wifi வசதி உண்டு என்று தலைமேல் அடித்து
சத்தியம் செய்யாத குறையாக சொல்லி இருந்தாலும் –

நிஜம் வேறு மாதிரியாக இருந்தது….
தொடர்பு கிடைப்பதே இல்லை. தப்பித்தவறி கிடைத்தாலும்,
ஒரு மணி நேரம் ஆனாலும், வெப்சைட் திறப்பதே இல்லை.

எனவே எழுதியதை கொஞ்சம் update செய்து
வைத்திருக்கிறேன். எப்போது தொடர்பு கிடைத்தாலும்
இதை பதிவேற்றி விடுவதாக உத்தேசம்….!!!

———-

இமயத்திற்கு எத்தனை தடவை பயணம் வந்தாலும்
அலுப்பதே இல்லை…தாகம் தீர்வதே இல்லை….
அப்படி ஒரு ஈர்ப்பு இந்த மலைப்பிரதேசத்திற்கு….

ஜம்மு வரை பல தடவைகள் வந்தாகி விட்டது.
ஆனால் ஸ்ரீநகர் வருவது இதுவே முதல் தடவை.

கடந்த மூன்றாவது வருடம் வைஷ்ணோ தேவி,
அம்ருத்சர் பொற்கோயில், ஜாலியன்வாலாபாக் என்று
போயிற்று….

கடந்த இரண்டாவது வருடம் – பச்சைப்பசேலென்று
குலு, மணாலி, ரோதங்க் பாஸ் என்று…..

கடந்த ஆண்டு – ஆன்மிக பிரதேசம் – ஹரித்வார்,
ரிஷிகேஷ்….என்று…

இந்த ஆண்டு எங்கே என்று மனதில் வடித்திருந்தேன்….
ஆனால் கடைசி வரை – முடியுமோ முடியாதோ
என்று சந்தேகம்… எனவே வெளியில் சொல்லவில்லை.

கபிர்தாஸ் கூறுகிறார்…..
“ஜோ கல் கரே – வோ ஆஜ் கரே….
ஜோ ஆஜ் கரே – வோ அப் கரே…”

– எதை நாளை செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ,
அதை இன்றே செய்து விடேன்….
எதை இன்று செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ,
அதை இப்போதே செய்து விடு….!!!
( அப்புறம் செய்வதற்கு நீ இருப்பாய் என்பது
என்ன நிச்சயம் …?)

காஷ்மீர் வர நினைத்ததற்கு பல காரணங்கள்…

– இந்த ஆண்டின் கடைசி தினத்தை வடக்கே
பனிமலையில் காவல் புரியும் படைவீரர்கள் சிலருடன்
செலவழிக்க வேண்டும் என்கிற ஒரு விருப்பம்…..

– ஆண்டில் பத்து மாதங்களை 38-40 டிகிரியில் கழிக்கும்
நமக்கு மைனஸ் 8 டிகிரி எப்படி உறைக்கிறது என்று
அனுபவித்துப் பார்க்க விருப்பம்…..

– உறைந்து கிடக்கும் இந்த குளிரில் மக்கள் அன்றாட
வாழ்வை எப்படிக் கழிக்கிறார்கள் என்று அவர்கள் கூட
சில நாட்கள் இருந்து பார்க்க ஒரு விருப்பம்….

என்ன தான் தொலைவிலிருந்து ஊடகங்கள் மூலம்
தெரிந்து கொண்டாலும் – உண்மையில் காஷ்மீர் மக்கள்
என்ன தான் நினைக்கிறார்கள்….?
இந்த தேசத்தைப் பற்றிய அவர்களின் உணர்வுகள்,
அபிப்பிராயங்கள் எப்படி இருக்கின்றன என்பதை
அவர்களில் சிலருடன் நேரிலேயே பேசி, பார்த்து,
தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற விருப்பம்….

கடைசியாக – முப்டி-பாஜக ஆட்சி எப்படி செயல்படுகிறது,
உள்ளூர் மக்கள் அது குறித்து என்ன சொல்கிறார்கள்
என்றும் பார்க்க விருப்பம்….
கூடவே, குல்மார்க், பஹல்காம் – சிகரங்களை பார்க்கவும்,
14,000 அடி உயரத்தில் இமயத்தை பார்க்கவும் விருப்பம்.

ஸ்ரீநகர் வந்து சேர்ந்தாயிற்று….
அற்புதமான காட்சிகள்… சுற்றிலும் 360 டிகிரியில்
கிட்டவும், தூரமுமாக அத்தனையும் வெள்ளைவெளேரென்று

பனிச்சிகரங்கள்… பாரதி நினைவுக்கு வருகிறார்…

“வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்…
…….. …..
…..எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்… !”

betaab valley

betab valley-2

பின் குறிப்பு –

( சனிக்கிழமை காலை சென்னை வந்து விடுவேன் …
அதன் பிறகு வலைத்தொடர்பில் எந்த சிரமும் இருக்காது…! )

போனது, வந்தது போன்ற பயண விவரங்களை எல்லாம்
எழுதுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. மக்களின் பண்பாடு,
கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், அரசியல் உணர்வுகள்
போன்றவற்றில் நான் பார்த்த, உணர்ந்த வித்தியாசமான,
விசேஷமான சூழல் குறித்த விவரங்களைப் பற்றி மட்டும்
எழுத விரும்புகிறேன்.

அதுவும் உடனடியாக அல்ல….
சமயம் வரும்போது,
கொஞ்சம் கொஞ்சமாக பகிர்ந்து கொள்கிறேன்…..

—————

சரி …
உள்ளூரில் (தமிழ் நாட்டில்) என்ன விசேஷம் …?
கடந்த ஒரு வாரமாக நான் செய்தியும் கேட்க முடியாமல்,
செய்திப் பத்திரிகைகளும் கிடைக்காமல்,
நம்ம ஊரில் என்ன நடந்தது என்கிற விவரமே தெரியாமல்
(திரு.விஜய்காந்த் மாதிரி…? ) இருக்கிறேன்.
சென்னை வந்த பிறகு தான் தெரிந்து கொள்ள வேண்டும்….

கடந்த ஒரு வாரத்தில் – எதாவது சுவையான விஷயங்கள்

நடந்திருந்தால், நண்பர்கள் பின்னூட்டத்தில்
பகிர்ந்து கொள்ளலாமே…!
விவாதிக்க சௌகரியமாக இருக்கும்….!!!

pahalgam-1

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ஸ்ரீநகரில் என்ன விசேஷம் …….?

  1. Chandrasekaran vg's avatar Chandrasekaran vg சொல்கிறார்:

    செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தை பீப் சர்ச்சை மறக்கடித்தது பீப் சர்ச்சையை தூ விவகாரம் மலுங்கடித்து போன்ற விவகாரங்களின் பின் மறைந்துள்ள மறைஅரசியல் காரணங்களை தங்களை போன்ற ஊடகவியளாளர் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

  2. நல்லவேளை சார்..நீங்க தப்பிச்சீங்க..இங்க விஜயகாந்துக்கு பைத்த்யம் முத்தி போயி பத்திரிக்கையாளர் மேல தூ ன்னு காறி துப்புனது, அம்மா படத்தை பார்த்தாலே பயமாயிருக்குன்னு அலறி கழட்ட சொன்னதுன்னு ஒரே காமெடி சீன்ஸ் தான்..இவ்வளவு காமெடியும் பண்ற காமெடியனை எல்லா கட்சிகளும்( அதிமுக தவிர) கூட்டணிக்கு வாங்க வாங்கன்னு கூப்பிடறது தான் பெரிய காமெடி…

  3. thiruvengadam's avatar thiruvengadam சொல்கிறார்:

    கடந்தவார நிகழ்வுகளுக்கு நமது எம்ஜுஆர் & முரசொலி இரண்டையும் பார்த்து நிலை அறியலாம். விஜய்காந்த் யாருடனும் சேராமல் இருந்தால் நலமென ஒருசாராரும் , தங்களுடன் சேர்ந்தால் கூடுதல் பலமென மற்றவர் கருதுகின்றனர். நான் அறிந்தவரை டிரேட் மார்க் பொருள் தயாரிப்பு நிறுத்தம் குறிப்பிட்ட காலம் தாண்டி, காலவதி ஆகாமல் இருக்க ஒரு முறை மட்டும் தயாரித்து மார்க்கெட் வரும். அதுபோல் இரட்டைஇலையை மக்கள் மனதில் நிறுத்தியவர் தற்பொது முன்னிலைப்படுத்தப்படுகிறார். மு க தேர்தல் நிதி கேட்கிறார். பாக்கியுள்ள இடங்களுக்கு இலவசப்பொருள் விநியோகம் விரைகிறது. இரண்டு தரப்புமே இலக்கை அடைவது எளிதல்ல என்று உணர்ந்திருப்பது யதார்த்தம்.

  4. paamaranselvarajan's avatar paamaranselvarajan சொல்கிறார்:

    சுவையான விஷயங்கள்…. ? அதிகமாக தேர்தலை குறிவைத்தும் — விஜயகாந்தின் அத்து மீறிய செயல்களும் — வழக்கம்போல ஸ்டாலின் — வை.கோ … பேச்சுகளும் — அ . தி.மு.க. வரும் தேர்தலில் தனித்து போட்டியா என்று ஆவலோடு எதிர்நோக்கி மற்ற கட்சிகளும் — ஊடகங்களும் காத்திருந்த வேளையில் ஜெயாவின் ” ஆப்பு ” அறிவிப்பும் — கீழ்கண்ட தேதிகளில் நடந்த விஷயங்கள் —- 27– டிசெம்பர் — 2015, பத்திரிகைகாரங்களா நீங்க…த்தூ…செய்தியாளர்கள் முகத்தில் காறித் துப்பிய விஜயகாந்த் -பரபரப்பு —– 31 — ம் தேதி பத்திரிகையாளர்கள் மீது தேமுதிக குண்டர்கள் வெறித் தாக்குதல்—- அதிமுக பொதுக்குழுக் கூட்டம்— காலத்திற்கு ஏற்ப தேர்தல் வியூகம் அமைத்து போட்டி — ஜெயா அறிவிப்பு —- 1– ஜனவரி — 2016 — நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்… அடுத்த வாரம் மீண்டும் தொடங்குகிறார் ஸ்டாலின் —- சிறப்பாக செயல்படுகிறோம்.. சீக்கிரமே முடிவு கட்டி விடுவோம்.. நம்பிக்கையைத் தெறிக்க விடும் ஸ்டாலின்! —தேர்தலுக்கு முன்பாகவே மீண்டும் சிறைக்குச் செல்வார் ஜெ.. வைகோ பரபரப்பு பேட்டி …. !!!

  5. நெல்லைத் தமிழன்'s avatar நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    நம்ம ஊர் அரசியல் இருக்கவே இருக்கு. அரசியல்வாதிகள் உங்களுக்கு ஏராளமான பதிவுகளுக்கு விஷயதானம் செய்துகொண்டே இருப்பார்கள். அதை விடுங்கள்.

    இந்தப் படங்கள் எல்லாம் நீங்கள் எடுத்ததுதானா? காஷ்மீர் சுற்றுலா செல்வது பாதுகாப்பாக இருக்கிறதா? என்ன என்ன இடங்கள் பார்க்கலாம்? நல்ல உறை பனியிருக்கும் இடங்களுக்கு ஒரு வாரம் சுற்றுலா செல்லலாம் எனப் பல வருடங்களாகக் கனவு கண்டுகொண்டிருக்கிறேன். மாஸ்கோ போகலாமா என்று நினைத்தேன். உள்ளூரில் கஷ்டம் இல்லைனா, காஷ்மீர் செல்லலாம் என்று நினைக்கிறேன். அதைப் பற்றி சுருக்கமாகவாவது எழுதுங்கள்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நெல்லைத்தமிழன்,

      சிறிது பொறுத்து, நிதானமாக, அவசியமானதை மட்டும்
      எழுதலாம் என்று நினைத்தேன். உங்களுக்காக விரைவிலேயே
      எழுதுகிறேன்….
      இந்த உறைபனி காஷ்மீரில் பிப்ரவரி இறுதிவரை இருக்கும்…
      இந்த புகைப்படங்கள் அனைத்தும் நான் எடுத்தவை தான்……!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.