(நேற்றைய ” நாறுகிறது புலனாய்வு – பிரதமர் மோடி
மிக அவசரமாக கவனிக்க வேண்டிய ஒரு இடம் …..”
என்கிற தலைப்பில் வெளியான இடுகையின் தொடர்ச்சி …)
———
நேற்று (04/09/2014) காலையில் வழக்கு கோர்ட்டில்
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது என்றும், சிபிஐ டைரக்டர் ரஞ்சித் சின்ஹா இந்த விஷயங்களை மீடியாவில் வெளியிடவோ, விவாதம் நடத்தவோ தடை விதிக்க வேண்டும் என்று கோரப்போகிறார் என்றும் தகவல் கிடைத்தது.
அதனால் தான் காலையில் வெகுசீக்கிரமாகவே நான்
எனக்குக் கிடைத்த தகவல்களை எல்லாம் வெளியிட்டேன்.
எதிர்பார்த்தது போலவே, கோர்ட்டில், ரஞ்சித்சின்ஹா
செய்திகளை மீடியாவில் வெளியிடவும், விவாதிக்கவும் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால், கோர்ட் வழக்கை திங்கள் வரை ஒத்திவைத்தது.
இடைக்காலத்தடை எதையும் விதிக்க முடியாது என்றும்
கூறி விட்டது.
எனவே, நேற்று மாலை-இரவு, டெல்லி தொலைக்காட்சிகளில் இது குறித்து விவரமான விவாதங்கள் நடைபெற்றன.
கடைசியாகக் கிடைத்த தகவலின்படி,
கோர்ட் விரும்பினால்,
தான் 2ஜி வழக்கிலிருந்து விலகியிருக்கத் தயார் என்று
சின்ஹா கோர்ட்டில் மனுப் போட இருக்கிறாராம்.
கோர்ட் இதை அப்படியே ஏற்றுக்கொண்டால் –
இவர் வெகு சுலபமாக தான் செய்த குற்றங்களிலிருந்து
தப்பித்து விடுவார்.
விசாரணை அதிகாரி என்கிற பொறுப்பில் இருந்தும் கூட,
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக,
இவர் பதவியிலிருந்து தற்காலிக வேலைநீக்கம்
(ஸஸ்பெண்ட்) செய்யப்பட்டு, இவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
இதற்குள்ளாகவே இவர் 2ஜி வழக்கில் எவ்வளவு சாட்சியங்களை, எவ்வளவு ஆதாரங்களை அழித்து விட்டாரோ -யார் கண்டது…?
நேற்றைய விவாதங்கள் அனைத்துமே தற்போதைய
டைரக்டர் ரஞ்சித் சின்ஹா பற்றியது மட்டும் தான்.
இவருக்கு முன்னதாக பதவியில் இருந்த ஏ.பி.சிங் சம்பந்தப்பட்ட பல விவரங்கள் நேற்றைய இடுகையில் சொல்லப்பட்டிருக்கின்றன.அவர் பற்றிய விவரங்கள் எதுவுமே இன்னமும் விவாதத்திற்கு வரவில்லை.
வருமான வரி இலாகா ஜூன் 10ம் தேதி அவருக்கு கொடுத்த நோட்டீசுக்குப் பிறகு இதுவரை எத்தகைய மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றிய செய்திகள் எதுவும் இன்னமும் வெளிவரவில்லை.
அரிச்சந்திரனுக்கு அண்ணன் போல் அப்பாவியாகத்
தோற்றமளிக்கும் ( முதல் புகைப்படம் )
இந்த மனிதர் இன்னமும்
மத்திய தேர்வாணைய குழு (UPSC ) உறுப்பினராகத்
தொடர்வது மத்திய அரசுக்கு மிகவும் அவக்கேடு.
அவர் மீதான வருமான வரித்துறையின் வழக்கு
துரிதப்படுத்தப்பட வேண்டும். அந்த வழக்கு முடியும் வரை அவர் UPSC உறுப்பினராகத் தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்கப்பட வேண்டும்.
அரசாங்கத்தில் உயர்ந்த பொறுப்புகளில் பணியாற்றுபவர்களை கண்காணிக்கவும், இத்தகைய “களை”களை வளரவிடாமல்,
உருவாகும் நிலையிலேயே – உடனுக்குடன் “களைய”வும் புதிய உத்திகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.



எப்பேர்பட்ட வயல் வெளி நம்முடையது!!..ஆடு மாடுகளை விட வேலிகளிடமிருந்து பயிரைக் காத்திடத்தான் படாத பாடு பட வேண்டி உள்ளது.