ஏதுக்கித்தனை வேகமய்யா ?..அய்யா ப.சி. அவர்களே ..!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் தனியார் வங்கிகளை
நாட்டுடைமை ஆக்கும்போது முன் வைத்த முக்கிய காரணம்

“வங்கிகள் தனியார் வசம் இருப்பதால், அவற்றின் நிதி வசதிகளை,
பலன்களை -பெரிய பெரிய தனியார் தொழில் நிறுவனங்களும்,
தொழிலதிபர்களும் தான் அனுபவிக்கிறார்கள். சாதாரண குடிமகனுக்கு
வங்கிகளின் பயன் சென்று அடைய வேண்டுமானால், வங்கிகளை
நாட்டுடைமை ஆக்கி, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு
வருவது தான் ஒரே வழி !!”

இப்போது, அதே காங்கிரஸ் கட்சியின் தலைமையும்,
நிதியமைச்சரும், புதிது புதிதாக தனியார் வங்கிகளைத் துவக்க
துடியாய்த் துடிக்கிறார்கள். தனியார் வங்கிகளை துவங்க
விரும்புபவர்களிடமிருந்து அவசர அவசரமாக விண்ணப்பங்கள்
பெறப்பட்டன. 27 தொழிலதிபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வந்தன. அவற்றில் –

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் க்ரூப்,
ஆதித்ய பிர்லா க்ரூப்,
பஜாஜ் பைனான்ஸ்,
முத்தூட் நிதி நிறுவனம்

-ஆகியவையும் உள்ளடங்கும் ….
புதிய வங்கிகளுக்கு “லைசென்ஸ்” கொடுக்கும் பொறுப்பும்,
அதிகாரமும் ரிசர்வ் வங்கியின் வசம் தான் இருக்கிறது.

p.c. and raghuram rajan

எனவே, ரிசர்வ் வங்கி எந்த வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு,
லைசென்ஸ் அளிக்கலாம் என்பதை ஆராய்ந்து பரிந்துரைக்க
“ஜலான் கமிட்டி” ஒன்றை மத்திய அரசு அமைத்தது.

ஜலான் கமிட்டி பரிந்துரைகளைப் பரிசீலித்து,
கிடப்பிலிருக்கும் 27 கம்பெனிகளின் விண்ணப்பங்களைப் பரிசீலித்து,
முதல் கட்டமாக, 6 அல்லது 7 கம்பெனிகளுக்கு
“ப்ரைவேட் வங்கிகளை” துவக்க ரிசர்வ் வங்கி அனுமதி
அளிக்க வேண்டும். இவற்றிற்கான பணிகள் நடந்து
கொண்டிருக்கின்றன.

ஜலான் கமிட்டி அறிக்கையே பிப்ரவரி 25ந்தேதி தான்
ரிசர்வ் வங்கி கவர்னர் திரு ரகுராம் ராஜனிடம்
சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் அறிவிப்பு வரும் முன்னரே, இந்த லைசென்சுகள்
கொடுக்கும் வேலையை முடிக்க,மத்திய அரசால் முடிந்த அளவு
அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் அறிவிப்பு வருவதற்குள் லைசென்சுகள் கொடுக்கும்
பணி முடிவடையவில்லை என்பது தெரிந்ததும்,
நிதியமைச்சர், தேர்தல் அறிவிப்புகள் வந்தாலென்ன ?
புதிய வங்கிகளுக்கான லைசென்சுகளை கொடுப்பதற்கும்,
தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததற்கும் எந்தவித
சம்பந்தமும் இல்லை. இப்போதும் தாராளமாக லைசென்சு
கொடுக்கலாம் என்றார்.

மீண்டும் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
வெள்ளிக்கிழமை ரகுராம் ராஜன்
சொல்கிறார் “புதிய லைசென்சுகளை கொடுப்பது சம்பந்தமான
பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தேர்தல் நடத்தை
விதிகள் அமலுக்கு வந்திருப்பதால், எதற்கும் தேர்தல் கமிஷனின்
அனுமதிக்காக இதை அனுப்பி, அவர்களின் ஒப்புதல் கிடைத்த பின்னர்
வெளியிடப்படும்” என்கிறார்.

மீண்டும், நிதியமைச்சகம் அழுத்தம் கொடுக்கிறது.
கூடவே அரசு இந்த விஷயத்தில் தலையிடவில்லை என்றும்
நிதியமைச்சர் சொல்கிறார். வெள்ளியன்று
செய்தியாளர்களிடையே பேசும்போது, “புதிய வங்கிகளுக்கான
நடைமுறை கொள்கைகளை வகுக்க, ஜலான் கமிட்டியை
மத்திய அரசு தான் அமைத்தது. இருந்தாலும், கமிட்டி
ரிப்போர்ட் நேரடியாக ரிசர்வ் வங்கி கவர்னரிடம்
கொடுக்கப்பட்டாகி விட்டது. நான் கமிட்டி ரிப்போர்ட்டையே
பார்க்கவில்லை.

அதில் என்ன பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன என்பதும்
நிதியமைச்சகத்துக்கு தெரியாது. இருந்தாலும், ரிசர்வ் வங்கி
இதுகுறித்து எதாவது தகவல்களைக் கூறினால் –
கேட்டுக் கொள்வேன். கமிட்டியின் பரிந்துரைகளைக் கருத்தில்
கொண்டு, ரிசர்வ் வங்கி கூடிய விரைவில் ப்ரைவேட் வங்கிகளுக்கான
லைசென்சை அளிக்குமென்று நம்புகிறேன்” !

இரண்டு கேள்விகள் எழுகின்றன …!

இந்திரா காந்தி அம்மையாரின் கொள்கைக்கு
நேர் விரோதமான இந்த கொள்கையை
நடைமுறைப்படுத்த மத்திய அரசு துடிப்பது ஏன் ?

.
தேர்தலுக்கு முன்னால் – ப்ரைவேட் வங்கிகளுக்கான
லைசென்சை வழங்கி விட வேண்டும் என்று மத்திய அரசு
இவ்வளவு ஆவலாக இருப்பது ஏன் ..?

.
பாவம் ரகுராம் ராஜன் – தாக்குப் பிடிப்பாரா …?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to ஏதுக்கித்தனை வேகமய்யா ?..அய்யா ப.சி. அவர்களே ..!

  1. vaanaram.'s avatar vaanaram. சொல்கிறார்:

    1. காந்தியோட கொள்கைய கை கழுவிட்டாங்க , இதுல இந்திரா காந்தி எங்க ?

    2. நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு அப்புறம் காங்கரஸ் கட்சி நிராயுத பாணி ஆகிட்டா என்ன பண்றது . அதுக்கு தான் இந்த முன்னேற்பாடு .
    இத கொண்டுவரலேனா அப்பப்ப குடிசையில தங்கி, கஞ்சி சாப்பிட்டு,
    சட்டி தூக்குறது எல்லாம் நிரந்தரமா செய்ய வேண்டி வரும் .

  2. Rajagopalan Rangarajan's avatar Rajagopalan Rangarajan சொல்கிறார்:

    ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு pressure கொடுக்கப்படுவதும், அவர் வெளியில் அதை காட்டிக்கொள்ளாமலே, விஷயத்தை தள்ளிப்போட முயல்வதும் தெரிகிறது.
    தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர், கொள்கை முடிவுகள் எதுவும் எடுக்கப்படக்கூடாது என்பது தெரிந்தும், மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது. காரணம் license பெற காத்திருக்கும் waiting list companies-ல் அவர்களுக்கு
    வேண்டப்பட்டவர்கள் இருக்கலாம்.
    புதிய அரசு வந்தால், ப்ரைவேட் வங்கிக்கு அனுமதி
    கொடுக்கும் கொள்கையே கைவிடப்பட்டால் என்ன செய்வது என்கிற பயமும் காரணமாக இருக்கும்.

    இதெல்லாம் – இவர்களுக்கு ரொம்ப சகஜம் சார்.

  3. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    கிடைக்கிறவரைக்கும் இலாபமென நினைப்பதால் வந்த அவசரம்தான் இது!
    ஆட்சி மாறினாலும் கொள்கைகளில் மாறுதலேதும் வராது.
    கொள்ளையில் பங்கு கிடைக்காதே என்பதாலேயே பெட்டிகளை நிரப்பிக்கொள்ள யாரை அழுத்தம் கொடுத்து அனைத்தையும் பதுக்க நினைக்கின்றனர்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.