உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பதுக்கி
வைக்கப்பட்டிருக்கும் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை
வெளிக்கொண்டு வர வேண்டும் என்று அனைத்து கட்சிகளும்
மக்களும், மீடியாவும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும்,
மத்திய அரசை ஆளும் காங்கிரஸ் தலைமையோ,
முன்னர் நிதியமைச்சராக இருந்த பிரனாப் முகர்ஜியோ,
நீண்ட காலமாக நிதியமைச்சக பொறுப்பில்
இருந்த/இருக்கும் திரு.ப.சி.யோ எந்தவித உருப்படியான
நடவடிக்கைகளிலும் இறங்கியதாகத் தெரியவில்லை.
பல தடவைகள், இந்தப் பிரச்சினை
எழுப்பப்பட்டபோதெல்லாம் பிரனாப் முகர்ஜி – எதையாவது
சாக்கு போக்கு சொல்லியே காலந்தள்ளி வந்தார்.
ப.சி.அவர்கள் இந்த விஷயம்
குறித்து பேசுவதையே தவிர்த்து வந்தார்.
கடந்த வருடம் ரிசர்வ் வங்கியின் கவர்னராக
புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட திரு ரகுராம் ராஜன்,
துவக்கத்திலிருந்தே பல முக்கியமான முடிவுகளை
மேற்கொண்டு, பொருளாதாரத்தை சீர்படுத்த
அவரளவில் முயற்சிகள் மேற்கொண்டிருந்தார்.
அதல பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருந்த டாலருக்கு
எதிரான ரூபாயின் சரிவைத் தடுத்து நிறுத்தியதில்
பெரும் பங்கு அவருடையது.
என்ன காரணத்தாலோ – நிதியமைச்சகத்திலிருந்து
அவருக்கு சரியான ஒத்துழைப்போ, ஆதரவோ இல்லாமல்
இருந்து வந்திருக்கிறது. தனியாகவே, தன்னால்
முடிந்ததை எல்லாம் செய்கிறார்.
அதன் லேடஸ்ட் முயற்சி தான் 2005ஆம் ஆண்டிற்கு
முந்தி வெளியிடப்பட்ட (முக்கியமாக ) 500 மற்றும் 1000 ரூபாய்
நோட்டுக்களை திரும்பப் பெறுவது என்கிற ரிசர்வ் வங்கியின்
உத்திரவு.
(இப்போதும், நிதியமைச்சகத்திலிருந்து அவருக்கு
எந்த அளவு ஆலோசனையும், ஒத்துழைப்பும் கிடைத்தது
என்பது கேள்விக்குறியதே. முக்கியமாக நிதியமைச்சர்
ப.சி. அவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம்
போயிருக்கும்போது ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு
வெளிவந்திருக்கிறது. இந்த முயற்சியைப் பாராட்டி
இதுவரை எதுவும் சொல்லாதவர், ரகுராம் ராஜனின்
(inflation) பணவீக்கத்தை கட்டுப்படுத்தும்
மற்ற சில நடவடிக்கைகளை குறை கூறுவது போல்
மட்டும் வெளிநாட்டிலிருந்து கொண்டே ஒரு பேட்டியில்
கூறி இருக்கிறார் !)
உள்நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம்
பெரும்பாலும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களாகவே
இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. அதில் கணிசமான அளவு
பழைய நோட்டுக்களாக, அதாவது 2005 ஆம்
ஆண்டிற்கு முந்தியதாக இருக்கலாம்.
இப்போதைய ரிசர்வ் வங்கியின் முயற்சியின் காரணமாக,
இந்தப்பணம் முழுவதும் வெளிவந்தாக வேண்டும்.
பணத்தைப் பதுக்கியவர்களை சட்டத்தின் பிடியில்
சிக்கவைக்க இதனால் முடியாதென்றாலும் – உள்ளே
பதுங்கி இருக்கும் கருப்புப்பணம் முழுவதும் வெளியே
புழக்கத்திற்கு வந்தே ஆக வேண்டும் என்பதால் –
நாட்டின் பொருளாதார நிலையில் குறிப்பிடத்தக்க அளவில்
மாற்றம் வரலாம்.
சாதாரண பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தாமல்,
கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரும்
ரிசர்வ் வங்கியின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது.
அதற்கு காரணமான அதன் கவர்னர் ரகுராம் ராஜன் –
பாராட்டுதல்களுக்கு உரியவர்.
பின்குறிப்பு –
இது குறித்த ரிசர்வ் வங்கியின் தகவலை தவற
விட்டவர்களுக்காக கீழே ஒரு சிறிய விளக்கம்.
2005ஆம் ஆண்டிற்கு பின் வெளியிடப்பட்ட
கரன்சி நோட்டுகளிலெல்லாம், அதன் பின் பக்கத்தில்,
கீழ்ப்புறத்தில், நட்ட நடுவில் வெளியிடும் ஆண்டு எண்
அச்சடிக்கப்பட்டிருக்கிறது.
முழு நோட்டு –

குறிப்பிடப்பட்டுள்ள பகுதி பெரிதுபடுத்தப்பட்டுள்ளது –

2005க்கு முந்திய நோட்டுகளில் இந்தவிதம்
ஆண்டு எண் இருக்காது.
பெரிதுபடுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட பகுதி –

ஆண்டு எண் அச்சடிக்கப்படாத, 2005க்கு முந்தைய
நோட்டுக்களை ஜூன் மாதம் 30ந்தேதி வரை,
எந்தவித விளக்கமும் கொடுக்க தேவையின்றி,
வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுக்களை
பெற்றுக் கொள்ளலாம்.
ஜூன் 30க்குப் பிறகும் இவை செல்லுபடியாகும்.
ஆனால் நோட்டுகளை பரிமாறிக் கொள்ளும்போது,
வங்கிகளில், நம்மைப்பற்றிய தகவல்களை
ஆதாரங்களுடன் கொடுக்க வேண்டி இருக்கும்.




காவிரிமைந்தன்,
எவ்வளவு பொறுப்பாக எழுதுகிறீர்கள் !
உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது
இந்த பொறுப்புணர்ச்சி தான்.
மிக்க நன்றி கா.மை. அவர்களே.
=மிகவும் பயனுள்ள பதிவு.நன்றி.திரு.கா.மை..
=ஆதார் அட்டை thittam நந்தன் நிலேகனி பொறுப்பில் சீராக சென்று கொண்டிருந்தபொழுது,குறுக்கே புகுந்து குட்டிச்சுவராக்கியவர் ப,சி.(அப்பொழுது உள்துறை அமைச்சர்) கூடிய விரைவில் இங்கும் அவர் கைவண்ணத்தை எதிர்பார்க்கலாம்.
=மேலும் இந்த திட்டம் சாதாரண மக்களுக்கு புரியவே மார்ச்31 ஆகி விடும்..அதாவது 2024ஆம் ஆண்டு.
=2005ஆண்டிற்கு முன் வருடம் குறிப்பது வழக்கத்தில் இல்லை.எனவே July’14 க்குப்பிறகு கீழே 2005/2206…என்று போலியாக பிரின்ட் செய்த நோட்டுக்கள் புழங்க ஆரம்பிக்கும்.
**We have three problems for every solution
//எவ்வாறாயினும் ரகுராம்ஜி செயல்/முயற்சி பாராட்டுக்குரியது.//
🙂
ரகுராம் ராஜனின் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். ஆனால் இதனால் கறுப்பு பணம் எந்த வகையில் வெளிவரும் என்பது தான் குழப்பமே. கள்ள நோட்டை ஒருவேளை ஒழிக்கலாம். அதாவது 2005க்கு முன் அச்சடித்த கள்ள நோட்டுக்களை ஒழிக்கலாம், ஆனால் எப்படி கறுப்பு நோட்டை ஒழிப்பீங்க.. கறுப்பு பணத்தை வெள்ளையா மாற்றி தரவே பல தனியார் வங்கிங்கள் செயல்பட்டதை கோப்ரா இணையம் வெளிக்காட்டியது, அப்படி இருக்க, இந்த தனியார் வங்கிங்கள் மூலமாய் அரசியல் வாதிகள் உட்பட பலரும் கோடிக்கணக்கான கறுப்பு பணத்தை லட்டு மாதிரி வெள்ளையா மாற்றிக் கொண்டு போவார்கள் பாருங்கள். அத்தோடு என்ன தான் ஆண்ட்டை நோட்டில் அச்சடித்தாலும், கொஞ்ச நாளில் மாபியாக்கள் ஆண்டு போட்ட புதிய கள்ள நோட்டையும் புழக்கத்தில் விடத்தான் போகின்றது. கறுப்பு பணத்தை மொத்தமாக அமுக்குவதற்கு பல வாய்ப்புக்கள் இருந்தும் நம் அரசு மெத்தனமாகவே இருந்தது, காரணம் ஆளும் காங்கிரசும் அதன் சகா கட்சிகளும் தான் அதிகளவு கறுப்பு பணத்தை முடக்கி வைத்துள்ளன.
ரகுராம் ராஜனின் முயற்சி ஓரளவு வெற்றி தருமே ஒழிய முழுமையாக வெற்றி தர வேண்டுமானால், மொத்தமாக கறுப்பு பண அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்காமல் பதவிகளில் இருந்து இறக்க வேண்டும்.