அண்மையில், ஒரு பேட்டிக் கட்டுரையில் – துக்ளக்
ஆசிரியர் ‘சோ’ அவர்கள் திரு.ப.சிதம்பரம் அவர்களின்
குணாதிசயங்களைப் பற்றி விவரமாகப் பேசி இருக்கிறார்.
அதிலிருந்து கொஞ்சம் –
” மிகவும் புத்திசாலியானவர் ப.சிதம்பரம். அவருக்கு இருக்கிற புத்திகூர்மை சாதாரணமானது அல்ல.
தமிழ் மாநில காங்கிரசுக்கும், திமுக வுக்கும் கூட்டணி
உருவான சமயத்தில் அவருடன் நெருங்கிப் பழக எனக்கு
வாய்ப்பு கிடைத்தது. பிறகு தமாகா, அதிமுக வுடன்
கூட்டணி அமைந்தபோதும் அந்த சந்தர்ப்பங்களில்
அவருடன் அதிகமாகப் பழக முடிந்தது.
அவர் பண்ணிய தப்பு என்று சொன்னால் மூப்பனாரிடம்
இருந்து விலகிப் போய் தனிக்கட்சியைத் துவக்கியது தான்.
அதை ஏன் பண்ணினார் என்று தெரியவில்லை.
நல்லவேளையாக விரைவில் அதைக்கலைத்து விட்டு,
காங்கிரசில் இணைந்து விட்டார்.
நிர்வாகம், பொருளாதாரம் எல்லாவற்றையும் கரைத்துக்
குடித்தவர் என்று தான் சொல்ல வேண்டும். இன்றைக்கு
காங்கிரசை ஆதரித்துப் பேசுகிறவர்களில் -அவரை மாதிரி
பக்குவத்துடனும், முதிர்ச்சியுடனும் அதன்
கொள்கைகளைப்பற்றி விவரித்துப் பேச வேறு யாரும்
கிடையாது என்கிற அளவுக்கு அவர் ‘எக்ஸ்பர்ட்’.
பொருளாதாரம் பற்றி அவருக்கு மிகவும் ஆழமாகத் தெரியும்.
ஆனால், அதை சாதாரண பாமரர்களும் புரிந்து கொள்கிற
விதத்தில் மிக எளிமையாக விளக்கிப் பேசுவார். அதை
கேட்கிறவர்கள் அதை ஒப்புக்கொள்ளலாம் -மறுக்கலாம்.
அது வேறு விஷயம்., ஆனால் ஒரு திறமையான
வக்கீலைப்போல (!) சிதம்பரம் தன்னுடைய கொள்கைகளை
விளக்கும் விதம் பிரமாதம். நாட்டுக்கு பயன்படக்கூடிய
அறிவுக்கூர்மை அவரிடம் உண்டு. இருந்தாலும்,
விட்டுக்கொடுக்கிற சுபாவம் அவரிடம் இல்லாததால்,
அவ்வப்போது அவருக்குச் சில தடங்கல்கள் ஏற்படுவதுண்டு.
————————
திரு.ப.சி. அவர்களின் பாசிடிவ் குணங்களைப் பற்றி
சோ அவர்கள் கூறியதை அப்படியே ஏற்கலாம்.நமக்கு அதில்
எந்தவித மாறுபாடான கருத்தும் இல்லை.
ஆனால் – இத்தனை சிறந்த தகுதிகளை உடைய
ஒருவரை இன்று பெரும்பாலான தமிழ் மக்கள் விரும்பாததன்
காரணம் என்ன ?
இன்று -தமிழ்நாட்டில் எந்தப்பகுதிக்கு வந்தாலும்,அவரது
குரூப் பைச் சேர்ந்த காங்கிரஸ்காரர்கள் சிலரைத்தவிர,
வேறு யாராவது வரவேற்கிறார்களா ?
தமிழ் மக்கள் அவரை இப்படி வெறுத்து ஒதுக்கும் நிலைக்கு
சென்றதற்கு காரணம் என்ன ?
சுயநலம் – அப்பட்டமான சுயநலம்…!!
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அரசியலில் இருப்பவர்.
சுமார் 20 ஆண்டுகள் மத்திய அரசில், பல்வேறு
துறைகளுக்கு அமைச்சராக இருந்திருப்பவர். காங்கிரஸ்
தலைமையிடம் மிகவும் செல்வாக்கு உடையவர்…!
ஒவ்வொரு முறையும் அவர் தமிழ்நாட்டு தொகுதியிலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்டு (?) தான் அவர் பாராளுமன்றத்திற்கு
போகிறார்.
ஆனால் – இதுவரை, தமிழ் நாட்டிற்கும், தமிழர்களுக்கும்
அவர் செய்தவை என்ன ?
மிகச்சிறிய கால கட்டத்திற்கு,பாட்டாளி மக்கள் கட்சியின்
சார்பாக மத்திய கூட்டணி அரசில் ரெயில்வே அமைச்சராக
பதவி வகித்த திரு ஏ.கே.மூர்த்தி தமிழ் நாட்டிற்கு செய்ததில்
பத்தில் ஒரு பங்கு கூட இவர் செய்ததில்லை என்பது தான்
உண்மை.
சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் 100
வங்கிக்கிளைகளை திறந்து வைத்ததையும், ஏற்கெனவே
திருச்சி வரை ஓடிக்கொண்டிருந்த பல்லவன் எக்ஸ்பிரஸ்
ரெயிலை காரைக்குடி வரை இழுத்ததையும்,
திருச்சி பாய்லர் ப்ளாண்டின் 300 பேர் பணிபுரியக்கூடிய
ஒரு கிளையை புதுக்கோட்டைக்கு கொண்டு வந்ததையும்
இவர் தகுதிக்கும், திறமைக்கும், செல்வாக்குக்கும் –
ஒரு சாதனை என்று சொல்ல முடியுமா ?
“ஊருணி நீர் நிறைந்தற்றே உலகு
அவாம் பேரறிவாளன் திரு”
(ஊரின் நடுவே அமைந்துள்ள ஒரு குளத்தில் நீர் நிறைந்தால்,
அது ஊரிலுள்ள மக்கள் அத்தனை பேரின் தாகத்தையும்
தீர்க்க அது எந்த அளவிற்கு உதவியாக இருக்குமோ –
அது போல் பெரிய அறிவாளிகளிடம் சேரும் செல்வம்
அனைவருக்கும் பயனுடையதாக இருக்கும்.)
என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார் வள்ளுவர்.
பெரிய அறிவாளியும், புத்தி கூர்மை நிறைந்தவருமான
இவரிடம் சேர்ந்த செல்வமும், செல்வாக்கும் உண்மையில்
யாருக்கு பயன் பட்டன ..?
இவரது மகனுக்கும், இவருக்கு தனிப்பட்ட முறையில்
விசுவாசமாக இருக்கும் சில காங்கிரஸ்காரர்களையும்
தவிர, பொது மக்கள் யாருக்காவது, எந்த பயனாவது
உண்டா ?
காங்கிரஸ் தலைமையிடமும், மத்திய அரசிலும்
மிகவும் செல்வாக்குடன் இருக்கும்
இவரது முன்னிலையிலேயே, இவரது துணையுடனேயே –
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசால், வேண்டுமென்றே
தமிழ் நாட்டிற்கு நிகழ்த்தப்பட்ட வஞ்சகங்கள் எத்தனை
எத்தனை ?
காவிரி பிரச்சினையில், நடுவர் மன்றம் தீர்ப்பு அளித்து
5 ஆண்டுகள் ஆகியும், அரசிதழில் வெளியிடாமல்
முரண்டு பிடித்தது,
முல்லைப் பெரியாறு விவகாரத்தில், கேரளா அரசியல்
சட்டத்திற்கே விரோதமாக நடந்து கொண்டதை
கண்டுகொள்ளாமல் விட்டது,
ஏற்கெனவே இருண்டு கிடந்த தமிழகத்திற்கு -மத்திய
தொகுப்பிலிருந்து மின்சாரம் தருவதை குறைத்துக் கொண்டு,
மேலும் இருளைக் கூட்டியது,
ரேஷன்அரிசி, மண்ணெண்ணை ஆகியவற்றில்
தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய பங்கை படிப்படியாக
குறைத்துக் கொண்டே வந்தது,
600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை
ராணுவத்தால் சுடப்பட்டு இறந்ததையும்,
தொடர்ந்து – தமிழக மீனவர்கள் கைது,
படகுகள் பறிமுதல் ஆகியவற்றில் மூர்க்கத்தனமாக
ஈடுபடும் இலங்கையை கட்டுப்படுத்தாதது,
இலங்கையில் ராஜபக்சே அரசுக்கு தணை நின்று,
அத்தனை உதவிகளையும் அளித்து, 40,000 தமிழர்கள்
ஒரே நாளில் கொல்லப்படவும்,
லட்சக்கணக்கான தமிழர்கள் வீடிழந்து, நாடிழந்து,
கை,கால்கள் இழந்து நடைப்பிணமாக வாழும் நிலைக்கு
தள்ளப்படவும் காரணமாக இருந்த காங்கிரஸ் தலைமைக்கும்,
மத்திய அரசுக்கும் துணை போனது –
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை என்கிற
காரணத்தால், தமிழகத்தை இவர் மொத்தமாகப்
புறக்கணித்தது எந்த வகையில் நியாயம் …?
தமிழக நலன்களுக்காக, இவர் என்றாவது மத்திய அரசில்
தன் செல்வாக்கைப் பயன்படுத்தியதுண்டா ?
ராகுல் காந்தியின் முதிர்ச்சியின்மை பற்றி இவருக்கு
தெரியாதா ? அவரைப்பற்றி இவர் அறியாததா ?
120 கோடி மக்களைக் கொண்ட இந்த மாபெரும்
நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க அவர்
தகுதியானவரா?
அப்படி இருந்தும், 10 நாட்களுக்கு முன்னர்,
ராகுல் காந்தியை காங்கிரசின் அடுத்த பிரதமர்
வேட்பாளராக முன்நிறுத்த வேண்டும் என்று அத்தனை
பேரையும் முந்திக்கொண்டு செய்தியாளர்
சந்திப்பில் சொன்னது எதனைக் கருதி ?
எதை எதிர்பார்த்து ?
துக்ளக் ஆசிரியர் நிறைகளை மட்டும் சொன்னார்.
குறைகளையும் சொன்னால் தான் இவரது தோற்றம்
(பர்சனாலிடி) முழுமை பெறும் என்பதால்
இவற்றை இங்கே சுட்டிக்காட்ட நேர்ந்தது – முற்றிலும்
நியாயமானது என்றே கருதுகிறேன்.
சரி தானே நண்பர்களே …?





his image was spoiled by the mehods he used to get elected as M.P.
he never did anything good for tamilnadu.
his busness links (like vedantha) and wife’s carrier are always doubtful only.
except money and power, nothing is important to him. Most selfish, arrrogant man.
அருமையான பதிவு. நன்றி திரு காவிரி மைந்தன்.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நீங்கள் தேவையில்லாமல் சோ விற்கு முக்கியத்துவம் தருவது போல இருக்கிறது.அவர் டம்மி பீஸ் ஆகி பல ஆண்டுகள் ஆகி விட்டன.வயதும் ஆகி விட்டது.விட்டு விடுங்கள் பாவம்..
நம் நாட்டில் நடப்பவை கொள்கை ரீதியான சண்டை அல்ல..ஏழை பணக்காரன் சண்டை.பணக்காரர்கள் தங்களுக்குள் சண்டை போடுவது போல அவ்வப்போது நடிப்பார்கள்.அவ்வளவுதான். நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.இப்பொழுது இராவணன் இருந்தால் காலையில் ராமனுக்கு ஆறுதல் சொல்லி விட்டு மாலை ராவணனின் வீணை கச்சேரிக்கு போகும் மக்கள் நாம்.
காவிரி ஐயா
திரு சோ சொல்லியிருப்பது திரு ப. சிதம்பரத்தின் தனிப்பட்ட ஒழுக்கத்தை. ஆனால் நீங்கள் கூறுவதோ அவர் பதவியினால் தமிழகத்திற்கு எந்த நன்மையையும் ஏற்படுத்தித்தரவில்லை என்று.
இப்போதுதான் தனிவொழுக்கமும் பொதுவொழுக்கமும் வேறு வேறு என்றாகிவிட்டதே!
1984 முதல் இன்றுவரை சிவகங்கை தொகுதியின் (1999-2004 திரு சுதர்ஸன நாச்சியப்பன்) ஒரு சாதாரண மக்களவை உறுப்பினராக இருந்த ஒரு சாதாரண மத்திய அமைச்சரிடம் நீங்கள் எதிர்பார்ப்பது ரொம்பவே அதிகம்
அஜீஸ்..ஏதோ “ஒழுக்கம்” எனும் வார்த்தையை பலமுறை உபயோகித்து
உள்ளீர்களே, அப்படீன்னா?
அப்படி போடுங்க கண்பத் அறுவாள!
நண்பர் எழில் நல்ல பாயிண்ட் சொல்றாரு பாருங்க!
துக்ளக் ஆசிரியர், அமைச்ச்சரின் குணாதிசயங்களை விளக்கி பேசுவதில் ஏதாவது உள்ளர்த்தம் இருக்குமோ? (எலி அவ்வளவு இலகுவாக அம்மணமா போகாதே!)
நீங்கள் குறிப்பிட்டுள்ள குறைகள் 100% உண்மை. இவற்றை தாத்தாவுக்கும் பொருத்தினால் மிகச் சரியாகவே இருக்கும். ப.சி. ஏழைகளின் பசியறியாத இன்னொரு பிணந்தின்னி கழுகு அவ்வளவே.
Education without character is a menace என்ற காந்தியின் சொற்களுக்கு முழு உதாரணம் சிதம்பரமே.. வேறென்ன சொல்ல?
ஏ.கே.மூர்த்தி செய்ததில் 1 சதவீதம் கூட தமிழகத்திற்கு செய்யவில்லை என்பதே உண்மை.
Your Counter statements are absolutely correct.
ஐயா தஙகளின் வலைப்பூ இன்று தான் கண்டேன்,
ப.சி,பற்றியும்,ராகுல்,ஜூவி,கருத்து கணிப்பு பற்றி அலசியது
ஆகிய அனைத்தும் அருமை,
இல.கணேசன் ஜீ கருத்து அற்புதம்
தொடர வாழ்த்துக்கள்,