மூன்று வெவ்வேறு நேரங்களில் – மூன்று வெவ்வேறு இடங்களில் – இரண்டு வெவ்வேறு நாடுகளில் – பிறந்த ஒரு அதிசய நபர் .. ராகுல் காந்தியின் சாய்ஸ்…!!

மூன்று வெவ்வேறு நேரங்களில் –
மூன்று வெவ்வேறு இடங்களில் –
இரண்டு வெவ்வேறு நாடுகளில் –
பிறந்த ஒரு அதிசய நபர் ..
ராகுல் காந்தியின் சாய்ஸ்…!!

————-

பத்து நாட்களுக்கு முன்னர், இந்திய அரசியலையே
புரட்டிப்போடக்கூடிய தனது புகழ்பெற்ற உரையை
ராஜஸ்தானில்- பாரு மாவட்ட பேரணியில் –
நிகழ்த்தினார் காங்கிரஸ் கட்சியின்
துணைத்தலைவரும், கட்சியின் ஆதர்ஷ எதிர்கால
பிரதமருமான ராகுல் காந்தி.

அந்த கூட்டத்தில் அவர் வெளிப்படுத்திய கருத்து
முத்துக்களில் குறிப்பிடத்தக்கவை –

இந்தியாவில் அரசியலும், அதிகாரமும் ஒரு குறிப்பிட்ட
குழுவிடமே இருக்கிறது. அதிகமாகப் போனால்
500 பேருக்குள் அடங்கி விடக்கூடிய இவர்களிடம்
குவிந்து கிடக்கும் இந்த அதிகாரம் பரவலாக்கப்பட
வேண்டும். அரசியலில் புதிதாக பலர் வர வேண்டும்.
பொது மக்களிடம் இந்த அதிகாரம் சென்றடைய வேண்டும்.

அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும்.
குற்றப்பின்னணி உடைய அரசியல்வாதிகளுக்கு
எந்த கட்சியும் பாதுகாப்பு கொடுக்கக் கூடாது –
பதவி கொடுக்கக்கூடாது.

ஆட்சி அதிகாரம் இளைஞர்களிடம் சென்றடைய
வேண்டும்.அதற்கு மூத்த தலைவர்கள் வழிவிட வேண்டும்.

அதற்கு ஒரு வாரம் முன்னதாகத் தான் அவரது
புகழ்பெற்ற “நான்சென்ஸ்” நாடகம் நடந்தது.
கிரிமினல் அரசியல்வாதிகளைக் காப்பாற்றும் அவசர
சட்டத்திற்கு ஜனாதிபதி அனுமதி கொடுக்க மாட்டார்
என்பது தெரிந்ததும், அவசர அவசரமாக அஜேய் மாக்கனின்
பத்திரிகையாளர் சந்திப்பில் புகுந்து –

“அவசர சட்டம் கொண்டு வர முயற்சித்தது ‘நான்சென்ஸ்’
என்றும், குப்பைக்கூடையில் கிழித்துப் போடத்தான்
அது லாயக்கானது “ என்றும் சொல்லி அகில உலகப்
புகழை ஐந்தே நிமிடத்தில் பெற்றார். (அந்த சமயத்தில்
பிரதமர் அமெரிக்கா சென்றிருந்ததால் – இந்த செய்தியும்
உலக அளவில் சென்றடைந்து விட்டது.பிரதமரின்
செயலையே ‘நான்சென்ஸ்’ என்று கூறி விட்டதால்
ம.மோ.சி. உடனே ராஜினாமா செய்து விட்டு,
நாடு திரும்பி விடக்கூடும் என்று அமெரிக்க பத்திரிகைகள்
தலைப்புச் செய்தி போடும் அளவிற்கு போய் விட்டது !!)

இத்தகைய தத்துவங்களை கண்டெடுத்த
அன்னை சோனியா பெற்றெடுத்த அருந்தவப்புதல்வன்,
உத்தமபுத்திரன் – ராகுல் காந்தி,
காங்கிரஸ்கட்சியையும்,
இந்தியத் திருநாட்டையும்
எங்கேயோ கொண்டு செல்லப்போகிறார் என்று
ஏகப்பட்ட பேர் கனவுகளுடனும்,
ஆசை ஆசையாகவும் காத்திருக்கின்றனர்.

அவர்கள் ஆசை நிராசையாகி விடக்கூடாதே என்கிற
ஆர்வத்துடன், -விரைவில் தேர்தல் நிகழவிருக்கும்
சட்டீஸ்கர் சட்டமன்றத்திற்கான காங்கிரஸ்
வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தியின்
தீவிர பரிசீலனைக்குப் பிந்தைய ஒப்புதலுடன்
வெளியிடப்பட்டிருக்கிறது.

முதியவர்கள் ஒதுங்க வேண்டும்.
இளைஞர்களிடம் அதிகாரம் தரப்பட வேண்டும் –
என்கிற இளவரசரின் தத்துவப்படி,
சட்டீஸ்கரில் இதுவரை கோலோச்சி வந்த, முன்னாள்
முதலமைச்சர் அஜித் ஜோகிக்கு இந்த முறை சீட்
வழங்கப்படவில்லை.

என்ன – அதிசயமாக இருக்கிறதா ?
அவசரப்பட வேண்டாம் அதைவிட பெரிய அதிசயம்
பின்னால் ஓடி வருகிறது.

35 அல்லது
36 அல்லது
37 (?) வயதுடைய,
இந்தியாவில் மத்தியப் பிரதேசத்திலும், பஞ்சாபிலும்,
அமெரிக்காவில் டல்லாஸிலும் பிறந்த (!!!)-
அமெரிக்க இந்தியர் அல்லது
இந்திய அமெரிக்கர் …

ஒரு கொலை வழக்கு,
ஒரு லஞ்சம் கொடுத்த வழக்கு,
ஒரு பொய் சர்டிபிகேட் வழக்கு –
ஆகியவைகளில் மட்டும் சம்பந்தப்பட்டு
தற்போது சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் பெற்று
உலா வந்துகொண்டிருக்கும்
ஒரு இளைஞர் சட்டீஸ்கர் சட்டமன்ற தேர்தலில்
-அடுத்த முதலமைச்சராக (காங்கிரஸ் வெற்றி பெற்றால்)
வருவதற்கென ராகுல் காந்தியால் ஸ்பெஷலாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் !
யாரது – யார் அது ? – என்று ஆவலுடன்
கேட்பவர்களுக்கு –

amit jogi.2

சாட்சாத் அஜீத் ஜோகியின் ஒரே செல்ல மகன்
அமீத் (ஐஸ்வர்யா)ஜோகி தான் அது…!
ஒரு வேளை பெண்டிங் வழக்குகள் காரணமாக –
இவருக்கு தேர்தல் கமிஷனால் எதாவது இடையூறு
ஏற்பட்டால் – இடைக்கால ஏற்பாடாக
(அதாவது – ஸ்டாப் கேப் சீப் மினிஸ்டர் …!)
இவரது ‘அன்னை’ ரேணு ஜோகிக்கும், அதாவது
அஜீத் ஜோகியின் மனைவிக்கும் ராகுல் காந்தியால்
சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ளதே 70 சீட்டுகள் தான்.
அதில் இரண்டு இப்படி …!

இவ்வளவு சொன்னதற்கு – முழு விவரங்களையும்
கொடுக்க வேண்டும் அல்லவா ? இதோ –

சட்டீஸ்கர் முன்னாள் முதலமைச்சர்,
2000 கோடி சொத்துக்கு அதிபதியான,
அஜீத் ஜோகியின் ஒரே மகன் அமீத் ஜோகி.
(ஒரு மகளும் இருந்தார். ஆனால் அவர் தன்
20வது வயதில் தற்கொலை செய்து கொண்டு
இறந்து விட்டார். என்ன காரணமென்று இதுவரை
வெளியில் சொல்லப்படவில்லை)

அமீத் ஜோகி- இதுவரை 3 விதமான பிறந்த தேதி
சர்டிபிகேட்டுகளை கொடுத்திருக்கிறார்.

முதலாவதாக – 2001ஆம் ஆண்டு, இந்தியக் குடியுரிமை
பெறுவதற்காக, மத்திய அரசுக்கு சமர்ப்பித்த விண்ணப்ப
படிவத்தில், தான் 07/08/1977 அன்று அமெரிக்காவில்
டல்லாஸ்-டெக்சாஸில் பிறந்ததாகக்கூறி அதற்கான
சான்றிதழ்களையும் சமர்ப்பித்திருக்கிறார்.

இரண்டாவதாக – 2002ஆம் ஆண்டு, தான் சட்டீஸ்கரில்
வசிப்பவர் என்பதற்கான ஆதார சான்றிதழ் கேட்டு
மாநில அரசுக்கு அளித்துள்ள விண்ணப்பத்தில்-
தான் 07/08/1978 அன்று பிலாஸ்பூர் மாவட்டத்தில்
(இந்தியா-மத்தியபிரதேசம்) உள்ள பேந்திரா என்கிற
கிராமத்தில் பிறந்ததாகக் கூறி இருக்கிறார் !
விண்ணப்பம் அளித்த அதே நாளில்,
அமீத் ஜோகி சட்டீஸ்கரில் வசிப்பவர் தான் என்று
மாவட்ட கலெக்டரே அத்தாட்சி சர்டிபிகேட் கொடுத்து
விட்டார் !

அதெப்படி அதே நாளில் என்று கேட்கிறீர்களா ?
அப்போது அந்த மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த
முதல்வர் அவருடைய அப்ப்ப்ப்பா அஜீத் ஜோகி ஆயிற்றே !
மூன்றாவது தடவையாக –

ஆகஸ்ட், 2004-ல் தனக்கு, ஷெட்யூல்டு ட்ரைப்
(பழங்குடி இனத்தவர்) சர்டிபிகேட் வழங்க வேண்டுமென்று
கோரி மாநில அரசுக்கு ஒரு விண்ணப்பம் சமர்ப்பித்தார்.
இதில் அவரது பிறந்த தேதியாக காட்டியது முதன் முதலில்
கொடுத்த அதே 07/08/1977 தான்.

ஆனால் பிறந்த இடத்தை அமெரிக்காவிலுள்ள டெக்சாஸுக்கு
பதிலாக மத்திய பிரதேசத்திலுள்ள பிலாஸ்பூர் என்று
காட்டி இருக்கிறார். இதையும் மாவட்ட கலெக்டர்
ஏற்றுக் கொண்டு அவர் கோரியபடி சர்டிபிகேட்டும்
வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பிறந்தவர் –
இந்த ஒரு அப்ளிகேஷன் மூலம் இந்தியாவில் பிறந்தவராகி
விட்டார் !!

இதைத் தவிர இவர் மீது நிலுவையில் உள்ள
மற்ற கிரிமினல் வழக்குகள் –

2003-ல் பாஜக துணையமைச்சராக இருந்த
துலிப்சிங் ஜுடியோ என்பவருக்கு லஞ்சம் கொடுத்து
கட்சி மாற்ற முயற்சித்த விவகாரம்.
NCP கட்சியைச் சேர்ந்த ராம் அவதார் ஜக்கி என்கிற
தலைவரை கொலை செய்ய இன்னும் சிலருடன்
சேர்ந்து சதிசெய்ததாக ஒரு criminal conspiracy
வழக்கும் இவர் மீது உள்ளது. அதில் இவர் ஜாமீனில்
வெளிவந்திருக்கிறார்.

——————–
எப்படி இருக்கிறது பட்டத்து இளவரசரின் புரட்சி… ?

அடுத்த தலைமுறையிடம் அதிகாரத்தைக் கொடுக்க
வேண்டும் என்கிற லட்சியத்தின் முதல்படி இது.
அடுத்தபடியாக, இதை எல்லா மாநிலங்களுக்கும்
விரிவு படுத்த வேண்டும். அதான் மாநிலத்துக்கு மாநிலம்
மூத்த தலைவர்கள் எல்லாரும் வரிசையாக வாரிசுகளைப்
பெற்று வைத்திருக்கிறார்களே. அதில் ஒன்றும் சிரமம்
இருக்க வாய்ப்பில்லை ! ஆனால் நம் ஊரைப் போல்
வாரிசுகளுக்குள் அடிதடி வந்து விடாமல் பார்த்துக்
கொள்ள வேண்டும்.. !

அடுத்து …. ஓ .. கிரிமினல் பின்னணி பற்றி
யோசிக்கிறீர்களா ? அதனால் என்ன – வழக்கு
நிலுவையில் இருப்பதால் மட்டும் ஒருவர்
குற்றவாளி ஆகி விடுவாரா என்ன ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to மூன்று வெவ்வேறு நேரங்களில் – மூன்று வெவ்வேறு இடங்களில் – இரண்டு வெவ்வேறு நாடுகளில் – பிறந்த ஒரு அதிசய நபர் .. ராகுல் காந்தியின் சாய்ஸ்…!!

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    அடுத்து ராகுகாலத்திற்கு ஒரு மூதேவி பிறந்து வந்து இதை நான்ஸென்ஸ்னு சொல்லும்வரை நாம் காத்திருக்கவேண்டியதுதான்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.