உதயநிதி ஸ்டாலின் -க்கு இரண்டு கேள்விகள் …!!

உதயநிதி ஸ்டாலின் -க்கு இரண்டு கேள்விகள் …!!

udhayanidhi-stalin-–-hummer-h3

தன் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்காமல்
வணிக வரித்துறையினர் முறைகேடு செய்கின்றனர் என்று
உதயநிதி ஸ்டாலின் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
சங்கத்திற்கு புகார் கொடுத்துள்ளார்.

உதயநிதியின் புகாரில் ஒரு பகுதி –

——–
2006-ல் திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழில் பெயர்
சூட்டப்பட்டாலே போதும் – கேளிக்கை வரியிலிருந்து
விலக்கு கொடுத்தார்கள்.

பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் –

‘தமிழில் பெயர் வைத்தால் மட்டும் போதாது –
படத்துக்கு சென்சாரில் ‘யு’ சர்டிபிகேட் பெற்றிருக்க வேண்டும்.
படத்தின் கதைக்கரு தமிழ் மொழி –
மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும் –
பெரும்பாலான வசனங்கள் தமிழில் இருக்க வேண்டும்-
வன்முறை மற்றும் ஆபாசங்கள் குறைவாக
இருக்க வேண்டும் -‘

போன்ற விதிகளை அமல்படுத்தினர். இந்த விதிகளை
முறையாகப் பின்பற்றினாலும், சில படங்களுக்கு வரிவிலக்கு
கிடைக்கவில்லை. நான் தயாரித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’
‘வணக்கம் சென்னை’ படங்களுக்கு வரிவிலக்கு தரமுடியாது
என்று சொல்லி விட்டார்கள். ஏனென்று கேட்டால்,
தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்றது போல் இல்லை என்று
சொல்கிறார்கள்.

ஏன் வரிவிலக்கு கொடுக்கவில்லை என்று கேட்டு
எல்லாருக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன்.

இப்போதைய வரிவிலக்கு குழுவில் உள்ள கே.எம்.சேகர்,
எல்.ஆர்.ஈஸ்வரி,ராஜஸ்ரீ, சங்கர்கணேஷ் ஆகியோர் படம்
பார்த்தால் நிச்சயம் வரிவிலக்கு கிடைக்காது. இவர்கள்
இப்படி செயல்படுவதற்கு வேறு சில காரணங்களும்
இருக்கின்றன. அடுத்து நான் நடித்து, தயாரிக்கும் படம்
வரப்போகிறது. அதற்கும் வரிவிலக்கு கொடுக்க மாட்டார்கள்.
மறுபடியும் நான் கோர்ட்டுக்கு போயாக வேண்டும்.

——-

இது பற்றி வரிவிலக்கு குழுவில் உள்ள
எல்.ஆர்.ஈஸ்வரி பதில் கொடுத்திருக்கிறார்.

‘உதயநிதியின் ‘வணக்கம் சென்னை’ படத்தில்
கல்யாணம் ஆகாத ஒரு பெண்ணும், பையனும் ஒரே வீட்டில்
தங்கி இருப்பது போல் கதை இருக்கிறது.
இது தமிழ்ப் பண்பாட்டுக்கு உடன்பாடானதா ?

படத்தின் ஒரு காட்சியில் இரண்டு பேரும் ராத்திரியில்
நல்லா குடிக்கறாங்க. விடிஞ்சு பார்த்தா, இவ டிரெஸ்ஸை
அவனும், அவன் டிரஸ்ஸை இவளும் போட்டிருக்காங்க !
இது தான் தமிழ்ப் பண்பாடா ?
இது போன்ற காரணங்களுக்காக தான் வரி விலக்கு தர
முடியவில்லை’ என்று கூறி இருக்கிறார்.

———–

நான் இந்த விஷயங்களுக்கு அப்பால் சில கேள்விகளை
எழுப்ப விரும்புகிறேன்.

முதல் கேள்வி –

சினிமா தயாரிப்பது என்ன எதாவது பொது சேவையா ?
முழுக்க முழுக்க பொழுதுபோக்கு, கேளிக்கை
சம்பந்தப்பட்ட விவகாரம்.

அதற்கு எதற்காக வரி விலக்கு… ?

இங்கு அன்றாடம் தெருமுனையில் குடிக்கும்
டீ, காப்பியிலிருந்து
பேசும் தொலைபேசி உரையாடலிலிருந்து,
உப்பு, புளி, மிளகாயிலிருந்து –
அனைத்து அவசியமான பொருட்களுக்குமே வரி
விதிக்கப்படும்போது –
சினிமாவிற்கு எதற்காக வரி விலக்கு …?

கருப்புப் பணம் பெருமளவில் புழங்கும் இரண்டு துறைகள்
சினிமாவும், ரியல் எஸ்டேட்டும். ஹோட்டல்களில் ரூம்
போட்டு தண்ணியடித்து விட்டு ‘story discussion’
‘பண்ண’வும், ஹீரோ, ஹீரோயின்களுக்கு கோடிக்கணக்கில்
கருப்புப் பணமாக சம்பளம் கொடுக்கவுமே பெரும்பாலான
பணம் செலவழிக்கப்படுகிறது.
(மிகச் சிறுபான்மையாக உள்ள, நான் மிகவும் மதிக்கும்
சில நேர்மையாளர்களை இதில் நான் சேர்க்கவில்லை )

தயாரிப்பும் சரி, விநியோகமும் சரி, திரையரங்க
வெளியீடுகளும் சரி – அனைத்தும் வியாபார நோக்கில்,
வியாபாரமாகத்தானே செய்யப்படுகின்றன ?
வயிற்றுச் சோற்றிற்கே வரி விலக்கு இல்லை எனும்போது –
இந்த வியாபாரத்திற்கு ஏன் வரி விலக்கு ?

(தமிழகத்தில் ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’
நடத்த கலைஞர் ஆரம்பித்து வைத்த கூத்து இது !
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கேளிக்கை வரி -45 % )

அடுத்த கேள்வி –

ஒரு வேளை அரசாங்கம் விசேஷமாக சில படங்களுக்கு
வரிவிலக்கு கொடுத்தாலும் –
அந்த வரி விலக்கின் பயன் திரைப்படத்தை பார்க்கும்
பொதுமக்களுக்கு போய்ச்சேர வேண்டுமா அல்லது
படத்தயாரிப்பாளர்களுக்கு போக வேண்டுமா ?

சிறு படத்தயாரிப்பாளர்களுக்கும்,(low budget films)
நல்ல நோக்கங்களை/கருத்துக்களை பிரதிபலிக்கும்
படங்களுக்கும், அரசாங்கம் ஏற்கெனவே ஆண்டுதோறும்
தனியே பண உதவி அளித்து வருகிறது.

இந்நிலையில், வரிவிலக்கு கொடுக்கப்பட்டால் –
அதன் பயன் பயன்பாட்டாளர்களுக்கு, அதாவது
படம் பார்க்கும் பொதுமக்களுக்குத் தானே போய்ச்சேர
வேண்டும் ?
வரிவிலக்கு அளிக்கப்படும் படங்களுக்கு டிக்கெட் விலை
குறைக்கப்பட வேண்டுமா இல்லையா ?

முன்பெல்லாம் அந்த நிலை தானே இருந்தது ?
கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களுக்கு எல்லாம்
வரிவிலக்கு கொடுக்கப்பட்டபோது, டிக்கெட் விலையும்
குறைக்கப்பட்டதே ! இது மாறியது யார் காலத்தில் ..?

பொது மக்களுக்கு எந்த பலனும் போய்ச்சேர
வேண்டியதில்லை என்கிற நிலையில் –
வரி விலக்கு எதற்காக …?

ஹம்மர் கார் வாங்கி வலம் வரவா ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to உதயநிதி ஸ்டாலின் -க்கு இரண்டு கேள்விகள் …!!

  1. ராஜகோபாலன்.R.'s avatar ராஜகோபாலன்.R. சொல்கிறார்:

    kavirimainthan Sir,

    SUPER SHOT ….yaaraiyum vidatheergal.

    ராஜகோபாலன்.R.

  2. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    ஐயா,
    இது டமில் வாட்ச்மேனின் பேரன் என்பதற்காக போட்ட பதிவா,
    இல்லை பொதுவா அனைத்து திரைப்படங்களுக்கும் வரிவிலக்கு தரக்கூடாது என்பதற்கான பதிவா, இல்லை வரிவிலக்கு தந்தால் அது மக்களுக்கு போய் சேரவேண்டிய சலுகை என்பதை சுட்டிக்காட்ட போடப்பட்ட பதிவா?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது அஜீஸ் ..?

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

        அதாவது ஐயா
        வெளிநாட்டிலிருந்து வந்து புரிந்துணர்வு போட்டு ஆரம்பிக்கப்படும் தொழிலுக்கு பல சலுகைகளை கொடுக்கும் நம் நாடு!
        அதேபோல சினிமாக்காரனுக்கும் சலுகைகளை கொடுக்கிறது!
        இருந்தாலும் எவனும் சலுகைகளை பெற்றுக்கொண்டு ஒழுங்காக தன்னுடைய கடமையை நிறைவேற்றுவதில்லை!

        அதே நேரத்தில் கையில் வைத்துள்ள சில ஆயிரங்களைக்கொண்டு ஏதோ ஒரு தொழில் செய்து தானும் பிழைத்துக்கொண்டு தன்னால் முடிந்தவரை ஓரிருவருக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தருபவனுக்கு இந்த அரசு தரும் “ஆப்”பிருக்கே, சொல்லி மாளாது.

        ஆக மொத்தத்தில் சினிமாக்காரனுக்கு கொடுக்கும் சலுகை என்பது மேலும் கருப்புப் பணத்தையே உற்பத்தி செய்யும் என்பது என் கருத்து. (அது உதயநிதியாக இருக்கட்டும் அல்லது வேறு யாராகவாவது இருக்கட்டும்… வேஸ்ட்டு வேஸ்ட்டுதான்)

  3. kalakarthik's avatar kalakarthik சொல்கிறார்:

    Good questions. I too support your ?s .

  4. ravikumar's avatar ravikumar சொல்கிறார்:

    No cinema to be excluded from tax. they have to pay or get rid of field

  5. kinarruthavalai's avatar kinarruthavalai சொல்கிறார்:

    எவ்வளவோ திறமையானவர்கள் அவரவர் தொழில்களில் தோல்வியடையும் போது இவர்களை போன்று புதியவர்கள், ஒரு விதத்திலும் அனுபவம் இல்லாதவர்கள் எப்படி இப்படிப்பட்ட வெற்றிகளை தொடர்ந்து பெற்றுக் கொண்டு வருகிறார்கள் என்று நான் ஆச்சரியப் படுவதுண்டு. எல்லாம் பணம் செய்யும் வித்தைதான். கோடிகளில் இருந்தால் கோடி (பாதாளம்) வரை நாமும் பாயலாம் என்பதை இவர்கள் மூலம் நான் தெரிந்துக் கொண்ட வாழ்க்கையின் உண்மை. உதயநிதி ஸ்டாலின், கேடி பிரதர்ஸ் போன்றவர்கள் நமது தமிழ் நாட்டின் ஆசான் போன்றவர்கள். எப்படியெல்லாம் முறை தவறினாலும் இப்படியெல்லாம் வாழலாம் என்று கற்றுக் கொடுத்தவர்கள் வரிசையில் இவர்கள் வருவார்கள்.

    • Srinivasan's avatar Srinivasan சொல்கிறார்:

      // நமது தமிழ் நாட்டின் ஆசான் போன்றவர்கள். எப்படியெல்லாம் முறை தவறினாலும் இப்படியெல்லாம் வாழலாம் என்று கற்றுக் கொடுத்தவர்கள் வரிசையில் இவர்கள் வருவார்கள். //

      மிக மிகத் தவறான கருத்து

      • kinarruthavalai's avatar kinarruthavalai சொல்கிறார்:

        திரு சீனிவாசன் அவர்களே,
        என் கருத்தை என்ன புரிந்துக் கொண்டீர்கள் தவறான கருத்து என்கிறீர்கள்? இவர்களை இன்றைய பல இளைஞர்கள் வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு இன்னும் என்ன நடக்குமோ என்ற வேதனையில் நான் எழுதியிருப்பதை தவறு என்று நீங்கள் எடுத்துக் கொண்டால் உதயநிதி ஸ்டாலின், கேடி பிரதர்ஸ் முறையாக சம்பாதித்த நேர்மையான முறையில்….சரி இந்த விஷயத்தை இத்தோடு விட்டு விடுவோம். உங்களுக்கு புரிந்தது அவ்வளவுதான்.

  6. tamil's avatar tamil சொல்கிறார்:

    before reading your article , i also support uday, but i change my mind after reading it. But goverment rules also equal to all.

  7. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    வணக்கம்.
    படத்தின் பெயர் தமிழில் இருந்தால் அதற்கு வரி விலக்கு என்பது ஒரு உச்ச கட்ட அபத்தம்.”இனிமையான இரவுகள்” என்று ஒரு முழு நீலப்படம் எடுத்தால் அதற்கு வரி விலக்கு வேண்டுமா?
    சரி இந்த சட்டத்தை மாற்ற முடியாது என சொன்னால்,அதை வலை தளத்திற்கும் விரிவாக்க வேண்டும்.தமிழில் வலைதள பெயர்கள் வைத்து தங்கள் பெயரையும் தமிழில் வைத்துள்ள பதிவாளர்களுக்கு ஒரு லட்ச ரூபா பொற்கிழி வழங்க வேண்டும்.(இதில் சத்தியமாக உள்குத்து ஏதுமில்லை)

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      //தமிழில் வலைதள பெயர்கள் வைத்து தங்கள்
      பெயரையும் தமிழில் வைத்துள்ள பதிவாளர்களுக்கு
      ஒரு லட்ச ரூபா பொற்கிழி வழங்க வேண்டும்.
      (இதில் சத்தியமாக உள்குத்து ஏதுமில்லை)// –
      —————-

      நண்பர் கண்பத்’திற்கு மிக நல்ல மனது..!
      நல்ல பரிந்துரை தான் …..
      ஆனால் இதற்கும் தகுதியானவற்றை/வர்களை
      தேர்வு செய்ய ஒரு கமிட்டி அமைப்பார்களே ?

      திரு கண்பத் அவர்களையே அந்த கமிட்டியின் தலைவராகப்
      போட அரசு ஒத்துக் கொண்டால் தேவலை …..!!!

      (இதில் (அ)சத்தியமாக, உள்குத்து-வெளிகுத்து
      எதுவுமே இல்லை நண்பரே !)

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

        //திரு கண்பத் அவர்களையே அந்த கமிட்டியின் தலைவராகப்
        போட அரசு ஒத்துக் கொண்டால் தேவலை …..!!!//
        அது மட்டும் போதுமா நண்பரே?
        நமக்குள் என்ன டீல்?
        :-)))

  8. c.venkatasubramanian's avatar c.venkatasubramanian சொல்கிறார்:

    for films
    tax exemption should b banned

  9. Paramasivam's avatar Paramasivam சொல்கிறார்:

    Tax exemption should be passed on to public only and not for producers. The expectation of Udayanidhi is …..what to say?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.