நாகேஷ் …மறக்க முடியாதவை..!
மறக்க முடியாத அனுபவங்கள் என்று சில
எல்லார் வாழ்க்கையிலும் நிகழ்ந்திருக்கும்.
அவற்றில் சில மட்டுமே –
வெளியில் சொல்லத்தக்கதாக இருக்கும்.
அதிலும் பல விஷயங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு
மட்டுமே ரசிக்கும்.ஆனால் அபூர்வமாக ஒரு சில
சம்பவங்கள் மற்றவர்களும் ரசிக்கக்கூடியதாக இருக்கும்.
அதுவும் புகழ்பெற்ற மனிதர்கள், பொது வாழ்வில்
ஈடுபட்டவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் என்றால் –
எல்லாருக்குமே ஒரு ஆர்வம் தான்.
சென்ற மாதம் – நாகேஷ் பிறந்த நாள். அதையொட்டி,
நாகேஷ் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
நாகேஷ் பற்றிய பல சுவாரஸ்யமான
விஷயங்களைப் படித்தேன். அதில் ஒன்று –
தன் ஆரம்ப காலம் பற்றி நாகேஷின்
வார்த்தைகளிலேயே –
——
“ஒரு நாள் வாஹினி ஸ்டூடியோவுக்குள் நடந்து போய்க்
கொண்டிருந்தேன். புரொடக்ஷன் மேனேஜர் ஜெகந்நாதன்
என்னைப் பார்த்து
“நாகேஷ், வாஹினியில் தெலுங்கு
தமிழ் என இரண்டு மொழிகளிலும் ஒரு படம்
எடுக்கிறோம். ஜெமினி கணேசன் ஹீரோ. இன்னிக்கு
எடுக்கப்போற சீன் துவக்கத்தில், ஒரு சர்வர் டேபிளைத்
துடைப்பது போல் ஒரு காட்சி இருக்கிறது. அந்த ஒரு
ஷாட்டில் நீ நடிக்கணும். எவ்வளவு பணம் வேணும் ?
500 ரூபாய் போதுமில்லையா?”
என்று கேட்டார்.
நான் “சரி” என்றதும் காத்திருக்கச் சொன்னார்.
அப்போது அந்தப்பக்கம் ஒரு வயதான மனிதர்,
தன் உடலை, வில் போல பின்னுக்கு வளைத்துக் கொண்டு
நடந்து போய்க் கொண்டிருந்தார். அவர் என் கவனத்தை
ஈர்த்தார். அவர் கையில் ஒரு சிகரெட் பெட்டியும், ஒரு
தீப்பெட்டியும் இருந்தது.
என் குசும்பு புத்தி சும்மா இருக்குமா ?
கிடுகிடுவென்று அவரிடம் போனேன். அவரது
தோள்பட்டையை தொட்டு, “ரொம்ப கஷ்டப்பட்டு சிகரெட்
பெட்டியைத் தூக்கிக்கிட்டு போறாப்போல இருக்கு.
என்கிட்ட வேணும்னா கொடுங்க. நான் எடுத்துக்கிட்டு
வர்ரேன்” என்றேன்.
அவர் “ஹா..ஹா..” என்று சிரித்து விட்டு தன்
பின்னோக்கிய வில் நடையைத் தொடர்ந்தார்.
சிறிது நேரத்தில் எனக்கு அழைப்பு வந்தது. செட்டுக்குள்
போனேன். ஜெகந்நாதன் “ஒரு முறை ஒத்திகை
பார்த்துக்கலாம்” என்றார்.
நான், ஒரு சிறு டவலை வாங்கி, தோளில் போட்டு,
தட்டு, டம்ளர்கள் போடுகிற பக்கெட்டை எடுத்துக்
கொண்டேன். டேபிளில் இருந்த ஒரு டம்ளரை,
மேலே தூக்கிப் போட்டுவிட்டு,
அந்த டேபிளை சுத்தம் செய்துவிட்டு, மறுபக்கம்
வேகமாக வந்து, கீழே விழப்போகும் டம்ளரை
லாவகமாக பக்கெட்டில் பிடித்துக் கொண்டேன்.
“சபாஷ், ரொம்ப நல்லா நடிக்கிறயேப்பா” என்று
ஒரு குரல் கேட்டது. செட்டுக்கு வெளியே ஒருவரின்
நடையை கேலி பண்ணினேனே..அதே மனிதர் தான் –
வாஹினி ஸ்டூடியோ அதிபரான சக்ரபாணி.
“சார் கொஞ்ச நேரத்துக்கு முன், நீங்க நடந்து வந்துகிட்டு
இருந்தபோது, யாருன்னு தெரியாம உங்களை கேலி
பண்ணிட்டேன். தயவு செஞ்சு மன்னிச்சுடுங்க..” என்று
காலில் விழாத குறையாக கெஞ்சினேன்.
“அதை நான் எப்பவோ மறந்தாச்சு.
நீ நல்லா நடிக்கிறயே..” என்றவர், அடுத்தபடியாக
“உனக்கு எவ்வளவு பணம் பேசியிருக்கு ?” என்று கேட்டார்.
500 ரூபாய் என்றார் ஜெகந்நாதன்.
“தமிழ்ல நடிக்கத்தானே 500 ரூபாய் பேசியிருக்கு.
தெலுங்குலயும் நீயே பண்ணிடு. இரண்டுக்குமா சேத்து
1000 ரூபாய் வாங்கிக்கோ…” என்றார். எனக்கு
கனவா, நனவா என்று சந்தேகமே வந்து விட்டது.
தமிழ், தெலுங்கு இரண்டு படங்களின் காட்சிகளும்
எடுக்கப்பட்டன.
புரொடக்ஷன் மேனேஜர் ஜெகந்நாதனை கூப்பிட்டு,
1000 ரூபாய்க்கு செக் எழுதிக் கொண்டு வரச் சொன்னார்.
நான்”சார் சார் செக்கெல்லாம் வேண்டாமே” என்றேன்.
(அப்போது அவருக்கு வங்கிக் கணக்கே இல்லை !)
அவரோ என்னப்பார்த்து சிரித்தபடி“வாஹினி பெரிய கம்பெனி.
செக்கெல்லாம் திரும்ப வராது. பயப்படாதே” என்றார்.
“அதுக்கு இல்லை சார் ! எனக்கு அவசரமா பணம்
தேவைப்படுது. அதனால் பணமா கொடுத்தீங்கன்னா
ரொம்ப சௌகரியமா இருக்கும்” என்றேன்.
“அப்படியா .. சரி” என்று சொல்லி, ஜெகந்நாதனிடம்
“காரில் இவரை அழைச்சிட்டு நேரே பேங்குக்கு போய்,
செக்கை பணமா மாத்திகொடுத்து விடு. இவரையும்
இவரது இடத்தில் கொண்டு போய்விட்டு விட்டு வா”
என்றார்.
அந்த ஆயிரம் ரூபாயை, என் வாழ்வில் மறக்கவே
முடியாது. அந்தப் பணத்தில்,
ஒரு பட்டுப்புடவை,
ஒரு தாலி,
பிரவுன் கலரில் ஒரு பேண்ட் வாங்கி –
நான் காதலித்த ரெஜினாவை பதிவுத் திருமணம்
செய்து கொண்டேன்.”
————–
எனக்குக்கூட – சில வித்தியாசமான மனிதர்களுடன்
ஏற்பட்ட அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து
கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.அவை சுவையான
அனுபவங்களாக அமைந்ததற்கு, நான் காரணம் அல்ல.
சம்பந்தப்பட்டவர்களே காரணமானார்கள்.
நான் என் சொந்த அனுபவங்கள் சிலவற்றை ஏற்கெனவே
இந்த வலைத்தளத்தில் எழுதி இருக்கிறேன். (கொலைகார
நண்பன், ராஜீவ் காந்தியுடன் அரை நாள் etc.etc.).
எதிர்காலத்தில் இன்னும் சிலவும் எழுதலாம் என்று
தோன்றுகிறது. அதற்குரிய நேரம் வரட்டும்…!
இந்த வலைத்தள நண்பர்கள் வாழ்வில் கூட அத்தகைய
சில சுவையான, மற்றவர்கள் ரசிக்கக்கூடிய அனுபவங்கள்
நிகழ்ந்திருக்கும். அவர்கள் யாராவது, அத்தகைய
அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்
என்று நினைத்தால் – அதை எனக்கு தனிப்பட்ட முறையில்
அனுப்பினால்,
(kavirimainthan@gmail.com)
இதே வலைத்தளத்தில்,
உரிய முறையில் பதிவேற்றம் செய்ய நான் தயாராக
இருக்கிறேன்.




கூடையே கடையாகி
http://deviyar-illam.blogspot.in/2013/10/blog-post_17.html
சுவாரஸ்யமான சம்பவம்… ம்… இன்றைய நடிக நடிகையர்களின் நிலையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை…
அருமையான பதிவு.
நன்றி.