ஜெயமோகனின் ஒரு முக்கியமான கருத்தும் அதற்கு அப்பாலும் …

ஜெயமோகனின் ஒரு முக்கியமான கருத்தும்
அதற்கு அப்பாலும் …

tamizh-1

அண்மையில் திரு.ஜெயமோகன் எழுதியுள்ள ஒரு
கட்டுரையின் தலைப்பு “நமக்குத் தேவை டான் பிரவுன்கள்”.

ஜெயமோகன் ஒரு மிகச்சிறந்த சிந்தனையாளர் –
ஆளுமை மிக்க எழுத்தாளர். தன் எண்ணங்களை அப்படியே
எழுத்தில் வடிப்பதில் அபார திறமையுள்ளவர்.

இந்த கட்டுரையில் அவர் கூறும் சில விஷயங்கள் சிந்திக்கத்
தகுந்தவை. விவாதத்திற்குரியவை.

முதலில் அவரது கட்டுரையிலிருந்து விவாதத்திற்கான
சில முக்கிய பகுதிகள் –

——————————–

நவீன தமிழிலக்கியம் புதுமைப்பித்தன் கால கட்டத்தில் தீவிரமான
வீச்சுடன் ஆரம்பித்தது. ஆனால், விரைவிலேயே அந்த அலை
அணைந்தது. கல்கி பெருவாரியான வாசகர்களை ஈர்த்து ஒரு
புதிய அலையைத் தொடங்கிவைத்தார். எளிமையான மொழியில்
மனக்கிளர்ச்சியூட்டும் எழுத்து முறை தமிழில் வேரூன்றியது.
அந்த வகை எழுத்து ஒரு வெற்றிகரமான வணிகமாக இருக்க
முடியும் என நிரூபணமாகியது.

தமிழின் முக்கியமான வார இதழ்கள் உருவாகிவந்த காலகட்டம்
அது. தொடர்கதை என்ற வடிவம் லட்சக் கணக்கானவர்களைச்
சென்றடைந்தது. அகிலன், ஆர்.வி., எல்.ஆர்.வி. என்று
ஓர் எழுத்தாளர் வரிசையே இருந்தது. அவர்களையே
இலக்கியவாதிகளாக அன்றைய வாசகர்கள் மட்டுமல்ல; கல்வித்
துறையினர்கூட நம்பினார்கள். விருதுகளும் அங்கீகாரங்களும்
அவர்களுக்கே சென்றன.

அன்று தமிழில் உலகின் எந்த மொழியிலும் எழுதிய இலக்கிய
மேதைகளுக்கு நிகரான படைப்பாளிகள் உருவாகியிருந்தனர்.
லா.ச.ரா.,கு.அழகிரிசாமி,ப.சிங்காரம், சுந்தர ராமசாமி,
தி.ஜானகிராமன், அசோகமித்திரன் போன்றவர்களின் மகத்தான
படைப்புகள் அப்போதுதான் வந்தன. அவை வாசகர்களைச்
சென்றடையவே அன்று வழியில்லை. சில நூறு பிரதிகள்
அச்சிடப்பட்ட சிற்றிதழ்களில் அவர்கள் எழுதினார்கள்.

அவர்களின் நூல்கள் ஐந்நூறு பிரதிகள் விற்க பத்து
வருடங்களாயின. புகழ் இல்லை, பணம் இல்லை.
எவ்வகையிலும் மரியாதை இல்லை. வாசகர்கள் இருக்கிறார்களா
என்றே தெரியவில்லை. ஆனாலும், புயல் காற்றில் தீபத்தைக்
கையால் பொத்திக்கொண்டு செல்வதுபோல அவர்கள்
இலக்கியத்தை முன்னெடுத்தார்கள். மனைவியின் நகைகளை
விற்றுச் சிற்றிதழ் நடத்தினார்கள். அவர்களுடைய எழுத்துகள்
மட்டும்தான் காலம் கடந்து இன்றும் வாசிக்கப்படுகின்றன.

1990-களில் திடீரென்று ஒரு மாற்றம் நிகழ்ந்தது. ஒன்று,
தொலைக்காட்சி மிகப் பெரிய கேளிக்கை ஊடகமாக மலர்ச்சி
அடைந்தது. அதுவரை தொடர்கதை
வாசித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் தொலைக்காட்சித்
தொடர்கள் பார்க்க ஆரம்பித்தனர். வாசிப்பு ஒரு கேளிக்கையாக
இல்லாமல் ஆகியது.

அந்தக் காலி இடத்தில் ஒரு சிறு பகுதியை இலக்கியம் நிரப்ப
ஆரம்பித்தது. ‘தினமணி’, ‘இந்தியா டுடே’,
‘சுபமங்களா’போன்ற இதழ்கள் நல்ல இலக்கியத்தை
மக்களிடையே கொண்டுசேர்த்தன. அத்துடன் அன்று ஆப்செட்
அச்சகங்கள் பெருகின. கணிப்பொறித் தொழில்நுட்பத்தில்
நூல்களை வெளியிட ஆரம்பித்தபோது நூல் தயாரிப்பு
எளிமையாக ஆனது. ஏராளமான பதிப்பகங்கள் வந்தன.
அவர்கள் புத்தகச் சந்தை என்ற விற்பனை முறையை உருவாக்கி,
நூல்களை மக்களிடையே கொண்டுசென்றார்கள். இணையம்
வந்தபோது நூல்களைப் பற்றிய தகவல்கள் மக்களிடம்
சென்றுசேர்வதும் எளிதாகியது. இன்று எல்லா
இலக்கியவாதிகளின் படைப்புகளும் மறுஅச்சாகிக்
கிடைக்கின்றன. இலக்கிய வாசிப்பு பல மடங்கு வளர்ந்துள்ளது.
க.நா.சு-வும் சுந்தர ராமசாமியும் கனவு கண்டது நிகழ்ந்துள்ளது.

ஆனால், இதற்கு ஒரு மறுபக்கம் உள்ளது என இப்போது
படுகிறது. இன்று இலக்கியம் வாசிப்பவர்கள் சிறுவர்களாக
இருந்தபோது அன்று புகழுடன் இருந்த வணிக எழுத்துகளை
வாசித்து வாசிப்புப் பழக்கத்தை அடைந்தவர்கள். அந்த வாசிப்பு
வழியாக முதிர்ந்து அவர்கள் தீவிர இலக்கியம் நோக்கி
வருகிறார்கள். அதுவே இயல்பான பாதை. ஆனால், இன்றுள்ள
இளைய தலைமுறைக்கு அந்தப் பாதை இருக்கிறதா?
தீவிர இலக்கியம்தான் ஒரு ஆரோக்கியமான பண்பாட்டின்
வளர்ச்சிக்கு உதவக்கூடியது என்பதில் ஐயமே இல்லை.
வாழ்க்கையை நுட்பமாக அணுகவும் அதை வரலாற்றில் வைத்துப்
புரிந்துகொள்ளவும் உதவக்கூடியவை இலக்கியப் படைப்புகளே.
ஆனால், அவை வாசிக்கும் பயிற்சி கொண்டவர்களுக்கு
உரியவை. வாசிக்கும் பயிற்சியை அளிப்பதற்கு எளிமையான,
விறுவிறுப்பான புனைகதைகள் தேவை.
இன்று அத்தகைய வணிகக் கேளிக்கை எழுத்து அநேகமாக
அழிந்துவிட்டது. சென்ற தலைமுறையில் சுஜாதா,
பாலகுமாரன், இந்துமதி, வாசந்தி, சிவசங்கரி போன்ற
நட்சத்திர அந்தஸ்து கொண்ட வணிகக் கேளிக்கை எழுத்தாளர்கள்
இருந்தனர். அவர்கள் வாசகர்களைக் கவர்ந்து வாசிப்புக்குள்
கொண்டுவந்தனர். அவர்களின் வாசகர்களில் ஒரு சாரார் பின்னர்
இலக்கிய வாசகர்களாக ஆனார்கள்.

இந்தத் தலைமுறையில் அப்படி எவருமே இல்லை. அவ்வாறு
நவீன வணிக எழுத்து நிறைய வந்தால் மட்டும்தான் லட்சக்
கணக்கானவர்கள் தமிழில் வாசிக்க ஆரம்பிப்பார்கள். வாசிப்பு
ஒரு சமூக இயக்கமாக நிகழும். அவ்வாறு 10 லட்சம் பேர்
தமிழில் எதையாவது வாசித்தால்தான் அதில் 10 ஆயிரம் பேர்
தரமான இலக்கியத்துக்கு வருவார்கள்.

அத்தகைய வணிகக் கேளிக்கை எழுத்து தமிழில் இல்லை
என்றால், இளம் வாசகர்கள் ஆங்கிலத்தில்தான் அவற்றை
வாசிக்க ஆரம்பிப்பார்கள். இன்று சுஜாதா இல்லை. ஆகவே,
நம் இளைய தலைமுறை டான் பிரவுனையும் சேத்தன்
பகத்தையும் வாசிக்கிறது.

க.நா.சுப்ரமணியமும் சுந்தர ராமசாமியும் வணிக எழுத்தை
அத்தனை ஆவேசமாக எதிர்த்தார்கள் என்றால், அதற்கான
காரணம் அது இலக்கியத்தை மறைத்தது என்பதுதான்; இலக்கிய
மேதைகளும் பேரிலக்கியப் படைப்புகளும் தமிழில் இருந்தும்
வணிக எழுத்தாளர்களும் கேளிக்கைப் படைப்புகளும்
கொண்டாடப்பட்டன என்பதுதான். ஆனால், இனிமேல் அப்படி
வணிக எழுத்து இலக்கியத்தை மறைக்க முடியாது. இன்றைய
உச்சக்கட்டத் தகவல்தொடர்புமுறை எல்லாவற்றையும்
கொண்டுசென்று சேர்த்துவிடும்.

ஆகவே, தமிழில் நமக்கு இன்று தேவை டான் பிரவுன்போல,
ஸ்டீபன் கிங்போல,சேத்தன் பகத்போல ஈர்ப்புள்ள வணிக
எழுத்தாளர்கள். அவர்களை உருவாக்கிக் கொண்டுசேர்க்க
பதிப்பாளர்கள் முயல வேண்டும். இல்லையேல், அடுத்த
தலைமுறையில் தமிழில் வாசிக்க யாரும் இருக்க மாட்டார்கள்!

—————————————-

அன்று பிரச்சினையாக உணரப்பட்டது –

வணிக எழுத்தாளர்களின் படைப்புகளால் வாசகர்கள்
ஈர்க்கப்பட்டு விட்டதால், அடுத்த கட்டமான இலக்கியத்
தரமான படைப்புகளுக்குள் அவர்கள் செல்லவே
இல்லை என்பதே.
வணிக எழுத்துக்கள் இலக்கியங்களை மறைத்தன.
எனவே தரமான இலக்கியப் படைப்புகளும்,
படைப்பாளிகளும் கண்டு கொள்ளப்படவே இல்லை.

இன்று பிரச்சினையாக உணரப்படுவது –

பொதுவாக வாசிக்கும் பழக்கமே பெரும்பாலானவருக்கு
இல்லாமல் போய் விட்டது. வாசிக்கும் பழக்கமே
இல்லாதவர்களை இலக்கியத் தரமுள்ள படைப்புகளால்
நேரடியாக கவர்ந்து ஈர்க்க முடியாது.

முதலில் அவர்களை வாசிக்கும் பழக்கத்திற்குள்
இழுத்துக் கொண்டு வர -இன்று வணிக எழுத்துக்களின்
அவசியம் உருவாகி இருக்கிறது …!

முதலில் டான் பிரவுன் போல, ஸ்டீபன் கிங் போல,
சேத்தன் பகத்போல ஈர்ப்புள்ள வணிக எழுத்தாளர்களை
தமிழில் உருவாக்க வேண்டும்.

இந்த வணிக எழுத்துக்கள் இலக்கியத்தை மறைத்து விடுமோ
என்கிற பழைய அச்சம் இன்றைய கால கட்டத்தில் தேவை
இல்லை. இன்றைய உச்சக்கட்டத் தகவல்தொடர்புமுறை
எல்லாவற்றையும் வாசகர்களிடம் கொண்டுசென்று
சேர்த்துவிடும்.

இது கட்டுரையின் அடிப்படைக் கருத்து.

ஆனால் இந்த கருத்து எவ்வளவு தூரம் சரி ….?

முதலில் வணிக எழுத்தாளர்கள் இன்று இல்லை என்கிற
கருத்து எவ்வளவு தூரம் பொருந்தும் ?

இன்றைக்கு தமிழில் எக்கச்சக்கமான வார இதழ்களும்,
வாரம் இருமுறை இதழ்களும், மாத இதழ்களும்
வெளிவருகின்றன.
இவற்றில் 99 விழுக்காடு – வணிக எழுத்துக்களை
கொண்டவை தானே ?
மாத(பாக்கெட்) நாவல்கள் -குறைந்த விலையில்
எக்கச்சக்கமாக வெளிவருகின்றனவே.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் –
பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார்,
இந்திரா சவுந்தரராஜன், ரமணிசந்திரன், தேவிபாலா,
இன்னும் பலர் ! இவை லட்சக்கணக்கில் இல்லாவிட்டாலும்,
நிச்சயமாக ஆயிரக்கணக்கில் விற்கின்றன.

எனவே தமிழில் வணிக எழுத்தாளர்கள் இல்லை
என்பது முழுமையான கருத்தாகத் தெரியவில்லை.ஆனால்,
சேதன் பகத் போல் இளைஞர்களை பெரிய அளவில்
ஈர்க்கக்கூடிய அளவிற்கு இந்த நாவல்கள் இல்லை என்பதும்
உண்மை தான்.
ஆனால் -ஜெயமோகன் கூறியதைத் தாண்டியும்,
அதற்கு அப்பாலும் சில காரணங்கள்
இருப்பதாக நான் உணர்கிறேன்…!!

1) தமிழில் படிக்கக்கூடிய இன்றைய தலைமுறை
இளைஞர்கள் – தமிழ்ப் புத்தகங்களை வாங்கிப் படிப்பதையோ,
கையில் எடுத்துக் கொண்டு போவதையோ நாகரீகமாகக்
கருதுவதில்லை. டாம் ப்ரவுன், சேதன் பகத் போன்றோரின்
ஆங்கிலப் புத்தகங்கள் ஒரு ஸ்டேடஸ் சிம்பல் ஆகி விட்டன.

2) இன்றைய இளைஞர்களை – படிப்பதை விட,இன்னும்
கவர்ச்சிகரமான பல விஷயங்கள் (சினிமா, இன்டர்னெட்,
பேஸ்புக், ட்விட்டர் போன்றவை) ஆக்கிரமித்துள்ளன.

3) முன்பெல்லாம் வாசகர்களில் – நிறைய
எண்ணிக்கையில் பெண்கள் இருந்தார்கள்.
அதில் பெரும்பாலானோர், வேலைக்குச் செல்லாமல் –
வீட்டை கவனித்துக் கொண்டிருந்த
பெண்கள் (house wives). இப்போதும்கூட குறைந்த
எண்ணிக்கையில் இருக்கும் அத்தகைய பெண்கள்
இன்று தொலைக்காட்சிகளில் நீண்ட நெடிய மெகா தொடர்களில்
மூழ்கி விடுகிறார்கள்.

4) இன்றைய இளைய தலைமுறைப்பெண்களோ -80
சதவீதத்திற்கும் மேற்பட்டோர் எதாவது ஒரு வேலைக்குச்
செல்கிறார்கள். எனவே படிப்பதற்கு அவர்களுக்கு
அவகாசம் கிடைப்பதில்லை.
மீதி இருக்கும் 20 % பெண்களுக்கு – படிப்பதைவிட
சுவாரஸ்யமான பல விஷயங்கள் கிடைக்கின்றன.
எனவே வாசிப்பதில் அவர்களுக்கு நாட்டமில்லை.

5) அடுத்து – இப்போது பள்ளி செல்லும் நிலையில்
இருக்கும் அடுத்த தலைமுறை சிறுவர்-சிறுமிகளோ
60 சதவீதம் பேர் தமிழே அறியாதவர்கள். அதாவது,
தமிழை இரண்டாவது அல்லது மூன்றாவது மொழியாகத்
தேர்ந்தெடுத்து விட்டு, உயிரெழுத்தையும்
மெய்யெழுத்தையும் மட்டுமே பத்தாவது வகுப்பு வரை
படித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குத் தமிழ்
கற்றுத்தருவதிலும் யாருக்கும் ஆர்வமில்லை.
பெற்றோர்களும் இந்த விஷயத்தில் தீவிரம் காட்டுவதில்லை.

எனவே, அடுத்த தலைமுறையில் தமிழில் வாசிக்க
யாரும் இருக்க மாட்டார்களோ என்கிற அச்சம்
ஓரளவிற்கு நிஜமே ..!
எனவே – தமிழில் வாசிக்கும் பழக்கத்தை மீண்டும்
நம் இளைஞர்களிடம் கொண்டு வர வேண்டுமானால் …..

என்ன செய்யலாம் .. ?
எனக்குத் தோன்றிய சில யோசனைகள் –

1) தமிழ்நாட்டில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும்
பள்ளிகளில் தமிழை அவசியம் சொல்லித் தர வேண்டும்.
(தமிழில் படிப்பவர்களைப் பற்றி பிரச்சினையே இல்லை.)

2) தமிழை இரண்டாவது அல்லது மூன்றாவது மொழியாக
எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு –
வாரத்தில் குறைந்தது 4 பீரியடுகளாவது தமிழ்
கற்றுத்தரப்பட வேண்டும்.
ஆனால் பாஸ் செய்வதை கட்டாயப் படுத்தக் கூடாது …!
(கட்டாயப்படுத்திச் சொல்லிக் கொடுக்கும் எதிலும் பொதுவாக
படிப்பவர்களுக்கு விருப்பம் இருப்பதில்லை.)

அதற்கு என்ன வழி ?
தமிழில் பரீட்சையே வைக்ககூடாது ..!
அடுத்த வகுப்பிற்கு செல்வதற்கு தமிழில் பாஸ் செய்ய
வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கக்கூடாது.

3) அடிப்படைத் தமிழை சொல்லிக் கொடுத்ததற்குப் பிறகு,
அவரவர் வயதிற்குத் தகுந்தாற்போல்,சிறு சிறு கதைப்
புத்தகங்களையே பாட புத்தகங்களாக வைக்க வேண்டும்.

4) மூன்று மாதங்களுக்கு ஒரு புத்தகம் என்று வைக்கலாம்.
அந்த புத்தகங்களை முடித்த பிறகு, பரீட்சை என்று இல்லாமல்,
அந்த மாணவர்களிடையே போட்டி ஒன்றை வைக்கலாம்.
முதல் மூன்று என்று மட்டும் பரிசுகளைக் கொடுக்காமல்,
குறைந்த பட்ச அளவிற்கு வெற்றிகரமாகத் தேறும் சிறுவர்கள்
அனைவருக்குமே ஊக்கப் பரிசுகள் கொடுக்கலாம்.

அந்த பரிசுகள் அவரவர் வயதிற்குத் தகுந்தாற்போல்,
அதைப் பெற அவர்களிடையே ஆர்வத்தினை தூண்டுகிறாப்போல்
இருக்க வேண்டும்.

5) சிறிய வகுப்புகளில் -இலக்கணத்தை அதிகம்
வற்புறுத்தக்கூடாது. அனைத்தும் கதை சொல்லும்
போக்கிலேயே இருக்க வேண்டும்.

6) ஏழு, எட்டு – வகுப்புகளுக்கு போன பிறகு
இலக்கணத்தை நன்கு கற்றுக் கொடுக்கலாம். இதற்குள்
அவர்களுக்கே மொழியில் நல்ல ஆர்வமும், பிடிப்பும்
வந்திருக்கும்.

7) அடிக்கடி கதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள்,
பேச்சுப் போட்டிகள் போன்றவற்றை அவர்களின் வயதிற்கு
தகுந்த தலைப்புகளில் நடத்தி, பங்கு பெறும் அனைத்து
மாணவர்களுக்குமே பரிசுகள் தரலாம்.
இங்கும் பரிசுகள் கடனுக்கே என்றில்லாமல் –
அவர்கள் அதைப் பெற வேண்டும் என்று ஆசைப்படும்
வகையில் இருக்க வேண்டும்.
இதன் பலனாக விளையக்கூடிய நன்மைகளை
எண்ணிப்பார்த்தால் -இதெல்லாம் பெரிய செலவுகளே அல்ல.
அரசும் தமிழின் எதிர்காலத்தை எண்ணி, இத்தகைய
செலவுகளை எதிர்கொள்வதில் தயக்கம் காட்டக்கூடாது.

தமிழ் எழுத்தாளர்களும், தமிழறிஞர்களும்,
தமிழ் ஆசிரியர்களும், தமிழ் புத்தக பதிப்பாளர்களும்,
வெளியீட்டாளர்களும் – தமிழ் தமிழ் என்று மேடைதோறும்
முழங்கிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும் –
இதில் அக்கரை காட்ட வேண்டும்.

எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்.
நீங்களும் தான் கொஞ்சம் யோசித்து உங்களுக்குத்
தோன்றுவதையும் சொல்லுங்களேன் …!

 

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to ஜெயமோகனின் ஒரு முக்கியமான கருத்தும் அதற்கு அப்பாலும் …

  1. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    1. தனியார் அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களிடம் நீங்கள் கடைசியாக எப்போது நல்ல புத்தகங்கள் படித்தீர்கள் என்று கேட்டுப்பாருங்கள். ஙே என்று விழிப்பார்கள்.

    2. முன்பு துணைப்பாடம் ஒன்று இருந்தது. இப்போது இல்லை. ஐந்தாவது வகுப்பு முதல் கடந்த ஐந்தாண்டுகளில் வெளிவந்த அந்தந்த வகுப்பு மாணவர்களுக்கு ஏற்றாற் போல உள்ள புதிய புத்தகங்களை வாசிக்கச் செய்து அதில் இருந்து கேள்விகள் கேட்பதும் அதற்கு தனியாக மதிப்பெண் கொடுத்தால் சற்று வாசிப்பு பழக்கம் மேம்படும்.

    3. எந்த விழாவிலும் மாலை மரியாதை பொன்னாடை இல்லாமல் எல்லா இடங்களிலும் புத்தகங்கள் மட்டுமே பரிசாக கொடுக்கப்பட வேண்டும் என்று கொண்டு வந்தால் புத்தக சந்தை மேம்படும்.

    4. வணிக எழுத்து வாசிப்பு எழுத்து என்று எதுவுமே இல்லை. இது அவரவர் வாசிப்பின் ருசியே அவர்களை மேம்படுத்தும்.

  2. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    ஒரு வேதனையான விஷயம்; என் பிள்ளைக்கு தமிழ் வாசிக்க தெரியாது என்பதை பெருமையுடன் சொல்லும் பெற்றோர்கள் நிறைய.
    எனவே, அடுத்த தலைமுறையில் தமிழில் வாசிக்க
    யாரும் இருக்க மாட்டார்களோ என்கிற அச்சம்
    ஓரளவிற்கு நிஜமே ..!

    திரு ஜோதிஜி அவர்களின் கருத்துகள் அனைத்தும் எனக்கு உடன்பாடானது.
    நண்பர்கள் படித்து கருத்தை பகிர வேண்டுகிறேன்.

  3. todayandme's avatar todayandme சொல்கிறார்:

    முதலில் ‘நான் தமிழன்’ என்கிற உணர்வு (கர்வம் / பெருமை) உள்ளுக்குள் இருக்கவேண்டும்.

    இரண்டாவதாக ஒருவரையொருவர் சந்திக்கும் போது தமிழைப் பேச்சுமொழியாக உணர வேண்டும், தமிழிலேயே பேசவும் வேண்டும்.

    தமிழில் தானும் எழுதவேண்டும், மற்றவரையும் எழுதத் தூண்டவேண்டும்.

    தானாகத் தமிழ் வளரும். யாரும் அதை வளர்க்க வேண்டாம்.

    ———————–

    தமிழ் யார் ? என்ன ? எதை? எப்படி?இல்லை என்றால் என்ன ஆகும்?

    தமிழ்த் தாயே பாடியதாக பாரதியின் பாடல்

    ஆதிசிவன் பெற்று விட்டான்-என்னை
    ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
    வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை
    மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

    மூன்று குலத்தமிழ் மன்னர்-என்னை
    மூண்டநல் லன்பொடு நித்தம் வளர்த்தார்;
    ஆன்ற மொழிகளி னுள்ளே-உயர்
    ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.

    கள்ளையும் தீயையும் சேர்த்து-நல்ல
    காற்றையும் வான வெளியையும சேர்த்துத்
    தெள்ளு தமிழ்ப்புல வோர்கள்-பல
    தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.

    சாத்திரங் கள்பல தந்தார்-இந்தத்
    தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
    நேத்திரங் கெட்டவன் காலன்-தன்முன்
    நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.

    நன்றென்றுந் தீதென்றும் பாரான்-முன்பு
    நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
    சென்றிடுங் காட்டுவெள் ளம்போல்-வையச்
    சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.

    கன்னிப் பருவத்தில் அந்நாள்-என்தன்
    காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
    என்னென்ன வோபெய ருண்டு-பின்னர்
    யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்!

    தந்தை அருள்வலி யாலும்-முன்பு
    சான்ற புலவர் தவவலி யாலும்
    இந்தக் கணமட்டும் காலன்-என்னை
    ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான்.

    இன்றொரு சொல்லினைக் கேட்டேன்-இனி
    ஏதுசெய் வேன்?என தாருயிர் மக்காள்!
    கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு
    கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

    “புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
    பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
    மெத்த வளருது மேற்கே-அந்த
    மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

    சொல்லவும் கூடுவ தில்லை-அவை
    சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
    மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
    மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்”

    என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ!
    இந்த வசையெனக் கெய்திட லாமோ?
    சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச்
    செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

    தந்தை அருள்வலி யாலும்-இன்று
    சார்ந்த புலவர் தவவலி யாலும்
    இந்தப் பெரும்பழி தீரும்-புகழ்
    ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

    ——————–

    பேச்சுத்தமிழ் வளர்க்கிறேன், எழுத்துத்தமிழ் வளர்க்கிறேன், இயல் இசை நாடகம் எனும் முத்தமிழையும் வளர்க்கிறேன் என்பவர்கள்(ளை) எல்லாம் …………

    ஐயகோ!

  4. vinoth's avatar vinoth சொல்கிறார்:

    தமிழ் மட்டுமல்ல பொருளாதார வணிக பயன்பாடு இல்லாத எதுவும் மக்களால் நிராகரிக்கபடும்.

    நீங்கள் சொல்லும் 11000 வருடம் முன்னால் இருந்த தமிழனும் செல்வ செழிப்புடன் அகன்ற தெருவுடன் வீடு கடை கட்டி இருந்ததால் தான் இன்று கண்டுபிடிக்கபட்டு இருக்கான்.

    ரொககனைசேசன்.. நம் இருப்பை பிறர் ஒத்துகொள்ள நமக்கு பொருளாதார வலிமை.. அதை பாதுகாக்க ஆட்சி இதெல்லாம் தேவை. யாரொ ஆளும்போது அடிமையாய் இருப்பவர் எதற்கும் லாயக்கறவர்.

    இன்றைக்கு தேதிக்கு இதேல்லாம் ஊமை கண்ட கனவுபோல்..

    தமிழன் வலுவாக இருந்தான் என்று வெள்ளை காரன் சொன்னதாக நீஙக்ள் சொன்னால் சரி பார்க்கலாம் ஆனால் எந்த சாதி வலுவாக இருந்தது என்று முதலில் பார்ப்போம்..

    அதில் நம் சாதி இருந்தால் .. தமிழனுக்கு நிகர் தமிழன் தான்.. இல்லையானால்.. இந்த மொத்தமும் பொய்..

    இப்ப என்ன செய்வீங்க ஜி…

    தமிழன்ன்னு யாரும் இல்லா தமிழத்தில்.. தன் ஆயுளை எண்ணிகொண்டிருக்கும் மொழிக்கு கொள்ளி போடுவது தான் நம் செய்துகொண்டிருக்கும் வேலை..

    மனசாட்சி படி சொல்லுக்ன்க… உங்கள் குழந்தைகளை தமிழ் மீடியம் மட்டும் படிக்கவைக்க நீஙக்ள் தயாரா?

    தமிழே தெரியாமல் ஆங்கிலம் படித்து தமிழகத்தில் கோடிகணக்கில் பொருளீட்டி வாழ முடியும்.. தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது ..

    அப்படி இருக்கும்போது .. அதி தமிழன் இருந்தால் என்ன செத்தால் என்ன…? புத்தகம் இருந்தென்னெ எரிந்தென்ன..
    http://deviyar-illam.blogspot.in/2013/09/blog-post_23.html

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் வினோத்,

      நான் 40 ஆண்டுக்காலம் மத்திய அரசுப் பணியில்
      இருந்தேன். நான் பணி புரிந்த மாநிலங்கள் –
      மத்திய பிரதேசம்,
      மஹாராஷ்டிரா,
      உத்திரப் பிரதேசம் மற்றும்
      தமிழ் நாடு. எனவே என் குழந்தைகள் மத்திய அரசின்
      Kendriya Vidyalaya வில் ( அடிக்கடி பணிமாற்றம்
      பெறும் மத்திய ஊழியர்களுக்கானது) தான்
      படித்தார்கள்.

      (ஆனால் – இது ஒரு சாக்காக முடியாது.
      இல்லா விட்டாலும் கூட அவர்களை ஆங்கில மீடியத்தில்
      தான் படிக்க வைத்திருப்பேன் என்பது தான் உண்மை !)

      ஆனால் – ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்.
      நான் தனிப்பட்ட முறையில் அக்கரை எடுத்துக்கொண்டு,
      துவக்கத்திலிருந்து அவர்களுக்குத் தமிழ் சொல்லிக்
      கொடுத்தேன்.
      உயிரெழுத்து, மெய்யெழுத்தில் ஆரம்பித்து –
      தினத்தந்தி – ஆனந்த விகடன் படிக்கும் வரை அவர்களை
      தயார் செய்தேன். அவர்களும் ஒத்துழைத்தார்கள்.

      இன்றைய காலகட்டத்தில் – என் பேத்திக்கு
      (5வது படிக்கிறாள்- பள்ளியில் அவளுக்கு தமிழ்
      3வது மொழி ) தனிப்பட்ட அக்கரை எடுத்துக் கொண்டு
      தமிழ் சொல்லிக் கொடுக்கிறேன்.
      அவளையும் – தமிழ் வார இதழ் படிக்கும் அளவிற்கு
      நிச்சயம் தயார்படுத்தி விடுவேன் !
      ( அதுவரை நான் இருந்தால் !).

      இதில் மற்ற சூழ்நிலைகளை விட, பெற்றோர்களின்
      அக்கரை மிக முக்கியமானது. தன் குழந்தைகளுக்கு
      தாய் மொழியில் எழுத, படிக்க – நிச்சயம் தெரிந்திருக்க
      வேண்டும் என்று ஒவ்வொரு தாய்-தந்தையும்
      உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

      நான் சொல்வது சரிதானே ?

      -வாழ்த்துக்களுடன்,

      காவிரிமைந்தன்

      • vinoth's avatar vinoth சொல்கிறார்:

        //..தாய் மொழியில் எழுத, படிக்க – நிச்சயம் தெரிந்திருக்க
        வேண்டும் என்று ஒவ்வொரு தாய்-தந்தையும்
        உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
        நான் சொல்வது சரிதானே ?..//

        //..துவக்கத்திலிருந்து அவர்களுக்குத் தமிழ் சொல்லிக்
        கொடுத்தேன்.உயிரெழுத்து, மெய்யெழுத்தில் ஆரம்பித்து –
        தினத்தந்தி – ஆனந்த விகடன் படிக்கும் வரை அவர்களை
        தயார் செய்தேன். அவர்களும் ஒத்துழைத்தார்கள்…//

        தினசரி வாழ்க்கைக்கு உதவுவதே நிலை நிற்கும்.
        நாம் சொல்லி கொடுத்தாலும் .. அவர்களும் படித்தாலும்
        அவர்களாக பள்ளியில் படித்து வாழ்கையில் பயன்படுத்தியது போல் இருக்காது..
        6வது விரல் போன்ற பயன் பாடற்றதாகவே இருக்கும்’…

        நீங்கள் உங்கள் பேரன் பேத்திக்கு சொல்லிகொடுப்பது போல்..
        அவர்கள் சொல்லி கொடுப்ப்ரா?

        தமிழ் கற்கும் கடைசி தலைமுறை நீஙக்ள் என்பதை இன்னை 2 தலைமுறை நீட்டித்திருக்கிறீர்கள் அவ்வளவு தான்.

        உண்மயில் தமிழ் வாழ அது வளரவேண்டும்…

        இயற்கையில் வளர்ச்சி இல்லயேல் வீழ்ச்சி.. இது அனைத்துக்குமான விதி.

  5. nparamasivam1951's avatar nparamasivam1951 சொல்கிறார்:

    ஜெயமோகன் அவர்களின் கருத்து சரி என எனக்குத் தோன்றுகிறது. மேலும் நீங்கள் கூறியபடி அரசும் அதன் பங்கிற்கு சில நடவடிக்கை எடுத்தால் நன்று. இது குறித்து நான் ஒன்று கூற விரும்புகிறேன் (நண்பர்கள் போர்க்கொடி பிடிக்க வேண்டாம்) நாம் அருகில் உள்ள மலையாளம் பேசும் அன்பர்களிடம் சென்று பாடம் படித்து கொண்டால் நல்லது. எவ்வாறு தங்கள் தாய்மொழியை வளர்த்து, முன் எடுத்து செல்வது என்று அவர்கிளிடம் பாடம் கற்கலாம்.

  6. Srini's avatar Srini சொல்கிறார்:

    KM sir, profile photo change seiya enna karanam… ? solluveergala??

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் ஸ்ரீனி,

      மதியம் தான் மாற்றினேன். இரவில் நிதானமாக
      இது குறித்து எழுத நினைத்தேன்.
      அதற்குள் நீங்களே கேட்டு விட்டீர்கள் ..! நன்றி.

      இந்த புகைப்படத்துக்கும் எனது இன்றைய தோற்றத்திற்கும்
      சம்பந்தமே இல்லை. இது சுமார் 25 வருடங்களுக்கு
      முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம்.

      அந்த வயதில், நான் பணி புரிந்த பல ஊர்களில்
      எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள்.
      தமிழ் தெரிந்தவர்கள் –
      ஏறக்குறைய என் taste உள்ளவர்கள்.

      மாற்றலில் சென்று கொண்டே இருந்ததால்,
      நான் பெரும் அளவிலான அந்தக் கால நண்பர்களின்
      தொடர்பை இழந்து விட்டேன்.
      அவர்களுக்கு என்னை இந்த தோற்றத்தில் தான் தெரியும் !

      இந்த வலைத்தளத்திற்கு வருகின்ற நண்பர்களின்
      எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இதில்
      என் பழைய நண்பர்கள் யாராவது இருப்பார்களோ என்று
      ஒரு ஆவல் – அவர்களைத் தேடும் ஒரு முயற்சி தான்
      இந்த புகைப்படம்.

      என் நண்பர்கள் பார்க்கா விட்டாலும், அவர்களது வாரிசுகள்
      இந்த தளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கவும் வாய்ப்பு
      இருக்கிறது.

      (அதிருஷ்டவசமாக அப்படி யாராவது என்னை
      அடையாளம் கண்டு கொள்ள நேர்ந்தால் – அவர்களுக்கு
      ஒரு வேண்டுகோள் –
      தயவுசெய்து எனக்கு தனிப்பட்ட முறையில்
      kavirimainthan@gmail.com என்கிற
      விலாசத்திற்கு ஒரு மெயில் அனுப்புங்கள் …!
      நானே உங்களுடன் விவரமாகத் தொடர்பு கொள்கிறேன். )

      நண்பர் ஸ்ரீனி,
      உங்கள் மூலமாகவே இந்த வேண்டுகோள் வெளியாக
      வாய்ப்பை உருவாக்கியமைக்காக
      உங்களுக்கு என் தனிப்பட்ட நன்றி.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

        என்னது அது நீங்களா?
        நான், நடிகர் அர்ஜுன் (இளவயது) போட்டோ என்றல்லவா நினைத்தேன்!
        🙂

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          நன்றி கண்பத் .. !

          ஆனால் என் இன்றைய தோற்றத்தை
          என்றாவது காண நேர்ந்தால் (!) –
          நீங்கள் எப்பேற்பட்ட தவற்றைச்
          செய்திருக்கிறீர்கள் என்பது உங்களுக்குப்
          புரிய வரும் ….!!!

          -வாழ்த்துக்களுடன்,
          காவிரிமைந்தன்

  7. reader's avatar reader சொல்கிறார்:

    //இன்று சுஜாதா இல்லை. ஆகவே,
    நம் இளைய தலைமுறை டான் பிரவுனையும் சேத்தன்
    பகத்தையும் வாசிக்கிறது.//

    நீங்கள் குறிப்பிடும் 5-ஆம் காரணந்தான். என் கணிப்பில் இன்று இருப்பது இரண்டாம் தலைமுறை. ஆம் தங்கள் சிறார்களை பள்ளியில் சேர்க்கும் தலைமுறை.

    //மனசாட்சி படி சொல்லுக்ன்க… உங்கள் குழந்தைகளை தமிழ் மீடியம் மட்டும் படிக்கவைக்க நீஙக்ள் தயாரா?//

    இல்லை என்பதே கசப்பான உண்மை. I’ve been vetoed. என் மகள் வீட்டில் இதுவரை தமிழிலேயே பேசி வந்தாள். Eurokids ‘நிறுவனம்’ நடத்தும் நர்சரி எனப்படும் வகுப்பில் சமீபத்தில் சேர்த்தேன். உரிமையாளர் Orientation என்று பேசிய 1 மணி நேரப் பேச்சில் மூன்றே மூன்று தமிழ் சொற்கள். அனைத்து Miss-களும் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள். இதில் குழந்தைகள் எங்கிருந்து தமிழைக் கற்பார்கள்?

    இப்படிப் பள்ளியில் ஒதுக்கப்படும் தமிழ் நாளிதழ், வார இதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் நசுக்கப்படுகிறது. பின் எப்படி இன்றைய இளைஞன் தமிழைப் படிப்பான்?

    முகப்புத்தகத்தில் இருக்கும் என் உறவு இளைஞர்கள் யாருக்கும் தமிழிலே எழுதத் தெரியாது. Either romanized Tamil or english only.

  8. Stalin M's avatar Stalin M சொல்கிறார்:

    நல்ல யோசனைகள்.
    pulp எழுத்து வேறு வணிக எழுத்து வேறு. ஸ்டீபன் கிங்’கை ராஜேஷ்குமாருடன் ஒப்பிடுவது படு அபத்தம். அதேபோல் வார இதழ்களில் ஒரே ஒரு தொடர்கதை மற்றும் ஒரு பக்க அளவிலான சிறுகதை மட்டுமே வருகிறது. மற்றபடி சினிமாவும் சினிமா சார்ந்த விஷயங்கள் தான் நிறைய. இவை வணிக எழுத்துகள் அல்ல.

  9. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் வெங்கட்ரமணியின் நீண்ண்ண்ட – ஆனால்
    சுவையான பின்னூட்டம் கீழே –

    ———————

    அன்பர் காவிரிமைந்தன் அவர்களுக்கு,
    வணக்கம். எனது வோர்டு பிரஸ் அக்கவுண்டில் சிறிய
    பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே இந்த மெயில்.
    முன்னர் சொன்னது போல, எழுத வேண்டாம் என்பது தான்
    எனது எண்ணம், ஆனால், your posting was so tempting. எனவே,
    எழுதுகிறேன். அதை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.
    நன்றியுடன், வெங்கட்ரமணி –

    —————–

    நன்றி நண்பர் வெங்கட்ரமணி. உங்கள் பின்னூட்டம் தளத்தில் பிரசுரமாகிறது. தொடர்ந்து எழுதுங்கள் – ஆனால் கொஞ்சம் சுருக்கமாகவே ?

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    ———————–

    வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க இன்னும் பலர் எழுத வர
    வேண்டுமென்கிறார் ஜெயமோகன். தமிழ்நாட்டுப் பெண்கள்
    வாசிப்பதை மறந்து, டி.வி சீரியல் பார்க்கப் போய்
    விட்டார்கள் என்கிறீர்கள் நீங்கள். சிரிப்பு வருகிறது.
    புதுமைப்பித்தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்:
    பிரபல நாதஸ்வர வித்வான் எதோ எழுதவிருக்கிறார் என்பதை
    அறிந்து, அவரைச் சந்தித்து தனக்கு நாதஸ்வரம் வாசிக்கக்
    கற்றுத் தரும்படி வேண்டினாராம். மகிழ்ந்து போன வித்வான்,
    வித்தையை ஆரம்பிக்க சம்மதித்து தனது நாதஸ்வரத்தில்
    ஒன்றை அவரிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறார். வாங்கி வந்த
    சூட்டோடு அதை தனது வீட்டு உத்திரத்தில் கட்டித் தொங்கவிட்டு
    விட்டாராம்.நாதஸ்வரம் தொங்குவதைக் கண்ணுற்ற நண்பர்கள்
    என்ன்வென்று வினவ, தனக்கு நாதஸ்வரம் கற்க ஆசை
    வந்த விஷயத்தைச் சொன்னார். ஏனய்யா விபரீத ஆசை?
    நன்றாகத்தானே இருந்தீர்கள்? என்றவர்களிடம்,“என்னிடம்
    வந்து கேட்பதை வித்வானிடம் ஏன் யாரும் கேட்கவில்லை”
    என்று திருப்பிக் கேட்டாராம்.
    Morale: யாருக்கு எது வருமோ அதைச் செய்ய வேண்டும்.

    தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லாத பெண்கள் என்றில்லை
    பலரிடம் படிக்கும் பழக்கம் வழக்கொழிந்து போனதற்கு பல
    காரணங்கள் உள. மேலோட்டப் பார்வைக்கு அவை ஒன்றுக்கு
    ஒன்று தொடர்பற்றவையாக தெரிந்தாலும், நெருங்கிய
    தொடர்புடையவை. அதையெல்லாம் சொன்னால் நானும் கூட
    தமிழினத் தூரோகியாகி விடுவேன்.
    பெருகிவிட்ட பொழுதுபோக்கு சாதனங்கள் முக்கிய
    காரணமானாலும், பெற்றோரும் மூத்தோரும் பிள்ளைகளிடம்
    பொருளாதார வ்லிமையடைவதையே வலியுறுத்துகிறார்கள்.
    அதற்கு பொழுதுபோக்கு,கேளிக்கை விவகாரங்கள்,
    விளையாட்டுப் போன்றவற்றில் ஈடுபடுவது “பெரும் தடையாக
    இருக்கும்” என்று உளமாற நம்புகிறார்கள். பிள்ளைகளின்
    விருப்பம் வேறாகவே இருந்தாலும் கூட, பொருளாதாரம்
    மட்டும்தான் வாழ்வின் “ஆதாரம்” என்கிற தங்களது நினைப்பின்
    காரணத்தினால், பிள்ளைகளுக்குக் கிடைக்கின்ற ஒவ்வொரு மணித்துளியையும் அவர்களின் “கூடுதல் தகுதிகளுக்காக”
    செலவழிக்க வைக்கிறார்கள். அந்த தகுதிகள் அவர்களைப்
    பணமென்னும் பேயின் பின்னால் ஓட வைக்கின்றதே தவிர
    உருப்படியான காரியம் எதையும் செய்ய வைக்கவில்லை. நான்
    பள்ளிப்படிப்பை முடித்த காலத்திலிருந்து இன்று வரை,
    பாடங்களில் முதல் மதிப்பெண் பெறும் பிள்ளைகள், “அவைச்
    சார்ந்த துறைகளில் பெரிதாக” சாதிக்க நினைப்பதாகவே சொல்லி
    வருகிறார்கள். ஆனால், இதுநாள் வரை யாரும் எந்தத்
    துறையிலும் எதையும் சாதித்ததாக செய்திகள் இல்லை.
    அவர்களுக்குத் துறைச் சார்ந்த அறிவோ அல்லது பொது அறிவோ
    பெரிதாக இல்லை. பிள்ளைகள் புத்தகத்தில் உள்ளதை ஒப்புவிக்கும் அல்லது மறுபிரசுரம் செய்யும் கருவிகளாகத்தான் மாறியிருக்கிறார்கள்
    என நான் நினைக்கிறேன். நான் படித்த காலத்தில், நிறைய
    “மன்றங்கள்” இருந்தன. அவற்றில் மாதந்தோறும் எதாவது ஒரு
    கூட்டம் இருக்கும். கம்யூனிஸ்ட் இளைஞர்கள் கூட மன்றம்
    கொண்டிருந்ததாக் நினைவு. பல பெரியவர்கள் வந்து, பல
    விஷயங்களைப் பற்றிப் பேசுவார்கள். பேச்சாள்ருடன் நேர்முகம்
    கூட இருந்தது. சரியோ தவறோ எதாவது கேள்வி கேட்டு வைப்பேன்.
    அது இன்னமும் தொடர்வது வேறு விஷயம்.
    பின்னாட்களில் நண்பர்களோடு சேர்ந்து, இனி நம்ம ஒரு மன்றம்
    வைப்போம் என் துணிந்து, பிரபஞ்சன், ல.சா.ரா, பாலகுமாரன், சுபான்னு பலரை வைத்து கூட்டம் போட்டு இருக்கிறோம். இதன்
    விளைவாக அதைப் படி, இதைப் படி என்பதான் தூண்டுதல் கிடைத்து
    பல எழுத்தாளர்கள் (ஜெயகாந்தன், அசோகமித்ரன், ஜானகிராமன்,
    கு.பா.ரா, கந்தசாமி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி,
    க நா சுன்னு பல பேரைப் படிச்சு, பைத்தியம் பிடிச்ச கதை வேறு
    இருக்கு.) சென்னையில், இருந்த காலத்தில்
    நூலகங்களில் “என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று
    எழுதி வைக்காத குறை. கோவையில் இருந்த போது, சொல்லி
    வைத்து புத்தகம் வாங்கி வருவேன். சொந்த ஊரில், சந்தா கட்டி
    உறுப்பினராகி இருந்தேன்.இத்தகைய வாய்ப்புகள் இன்றைய
    பிள்ளைகளுக்கு இல்லை.
    இது ஒரு புறம் கிடக்க, தமிழைப் பயிற்று மொழியாக்குவதிலும்
    திராவிட கட்சிகள் பெரிய ஆர்வம் காட்டியதாக்த் தோன்றவில்லை. கேரளத்திலும், இங்கு கர்னாடகத்திலும் தாய்மொழி அவசியம்
    என்கிற நிலை இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் அந்த நிலை
    இல்லை. தமிழர்கள், இலக்கிய, இலக்கண வளமும் சொற்களஞ்சியங்களும் நிறைந்த தாய் மொழியை “மார்வாடிகளை
    விடவும் மட்டமாக” உச்சரிக்கிறார்கள். மார்வடிகளில் கூட
    நன்றாக தமிழ் பேசவும் எழுதவும் இருக்கிறார்கள். சென்னையில்,
    என் பிள்ளைக்குத் தமிழ்த் தெரியாது. but he knows french
    என்று பெருமைப்படும் பெற்றோரே அதிகம். நிலைமை இப்படி
    இருப்பதை அறிந்தோ அறியாமலோ தான் “தமிழுக்காக உயிர்விடத் துணியும்” அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் சார்பாளர்கள்
    தனித்தமிழ் பேசி, தமிழைப் பெரிதும் நேசிக்கும் என் போன்றோரை “பயமுறுத்துகிறார்கள்”. இவர்கள், ஆகஸ்டை ஆகத்து என்பார்கள். கேட்பவன், “ஆ” என கத்திக் கொண்டு ஓடிப் போகாமல் என்ன செய்வான்?
    இன்றைய பயன்பாட்டில் தமிழ் “நீர்த்துப் போவதைத் தடுக்கத்”
    தவறியதாக ஆசிரியர்களைக் குறை சொல்லுகிறார்கள். ஓரளவுக்கு
    உண்மைதான் என்ற போதிலும், உரிய நடவடிக்கைகளை
    எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் வேலை. மொழிவழிக் கல்வி
    வேண்டாம், குறைந்தது மொழிக்கு முக்கியத்துவமுள்ள கல்வித்
    திட்டமாவது வேண்டாமா? ஆனால், ஆட்சியாளர்கள் செய்யத்
    தயங்குகிறார்கள். காரணம் பலவுண்டு. முதன்மையாக நான்
    நினைப்பது: மக்களின் எதிர்கால பொருளாதாரம்.
    கல்வித் திட்டத்தில் கை வைத்தால், தமிழ்க் குடும்பங்களின்
    பொருளாதாரம் நிச்சயம் கேள்விக் குறியாகும். அதற்கு மாற்றும்
    அரசுகளிடம் இல்லை. பெரும்பான்மை பிள்ளைகளிடம் தொழில்
    சார்ந்த அறிவுமில்லை. எல்லோரும் பெங்களூருக்கும், புனேவுக்கும், ஹைதராபாத்துக்கும் போய், ஆயிரங்களைப் பார்க்கின்ற அளவுக்குத்
    தான் அறிவாளிகள்.
    பாடத்திட்டமும் இல்லாமல், சமூக சூழலும் சரி இல்லாமல்
    வாத்தியார் தமிழ் வளர்ப்பது எப்படி? எனக்குத் தமிழ்ப் பாடம்
    சொன்ன புலவர் (உண்மையில் புலவர்தான்) அருணகிரி, முத்துக்குமாரசாமி, நாமதேவன் (உண்மைப் பெயரே அதுதானா
    என்கிற சந்தேகம் இன்னமும் தீரவில்லை) போன்று பாடம் நடத்தி மொழிமீது மாணவனுக்கு விருப்பத்தை ஏற்படுத்தும் ஆசிரியர்கள்
    தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள். ஆனால்,
    மொழிக்காக, அதன் வளர்ச்சிக்காக தனது வாழ்நாளின் பெரும்
    பகுதியை செலவிட்ட நபர்களின் பொருளாதார நிலை ஊர் மெச்சும்படியில்லை. பல (அரசியல்)காரணங்களுக்காக அவர்களின் பங்களிப்பும் பெரிதாக பேசப்படுவதும் இல்லை.

    “மந்திரம் கற்போம் வினைத்
    தந்திரம் கற்போம்
    வானை யளப்போம் கடல்
    மீனை யளப் போம்
    சந்திர மண்டலத் தியல்
    கண்டு தெளிவோம்
    சந்தித் தெருப் பெருக்கும்
    சாத்திரம் கற்போம்…”
    இது கைகூட வேண்டுமானால்,

    “இறவாத புகழுடைய புதுநூல்கள்
    தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்…”

    மொழியின் வாயிலாக கலைச்சொற்களும்,சொற்றோடர்களும் அமைந்தால்தான் மொழி, பாரதி சொன்ன பிற பயன்பாட்டிற்கும்
    வரும் வாய்ப்பைப் பெறும். ஆனால், தேவையான காரியத்தை
    “திராவிட”அரசுகள் செய்வதாகத் தெரியவில்லை. இப்போதுள்ள
    “அறிஞர்களும்” கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
    இவர்களின் பொருளாதாரம் ஆட்சியாளர்கள் சார்ந்ததாக இருக்கிறது.
    மலையாளிகள் தான் மலையாளியென்கிற மொழி அடையாளத்தை
    யாரிடமும் மறைப்பதில்லை. அது போலவே, கன்னடர்களும்
    ஹிந்திக்காரர்களும் தங்களுக்கான மொழி அடையாளத்தை
    மறைத்துக் கொள்வதில்லை. ஆனால், தமிழர்கள் தான் தமிழர்
    என்பதை தமிழரிடமே மறைத்து வாழ “விரும்புகிறார்கள்”.

    அவர்களுக்கு, “மூடர்கூடத்தில்” வரும் வசனத்தை நினைவுப்
    படுத்த விரும்புகிறேன். அது: “தமிழ்த் தெரியாத வெள்ளக்காரன்
    கிட்ட தமிழ்ப் பேசக்கூடாதுன்னு தெரிஞ்ச உனக்கு இங்கிலீஷ்
    தெரியாத தமிழன் கிட்ட இங்கிலீஷ் பேசக் கூடாதுன்னு ஏண்டா
    தெரியல?”

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.