கமலஹாசன் சொல்கிறார் -“போர்னோகிராபியால்
தான் இன்டர்னெட் வளர்ந்தது”..!!
——–
ஒவ்வொரு முறை தன் படம் வெளிவரும்போதும்,
எதையாவது ஏறுமாறாகச் சொல்லி அல்லது செய்து,
செலவில்லாமல் பப்ளிசிடி தேடும் கமல் இந்த முறையும்
அதே டெக்னிக்கை கையாள்கிறார்.
விஸ்வரூபம் பார்ட்-2 ரெடி என்று பலமுறை தெரிவித்தும்
எதிர்பார்த்த பரபரப்புகள் எதுவும் கிளம்பாத நிலையில்,
கமலஹாசன் பல சர்ச்சைக்கிடமான கருத்துக்களை
புதிதாக ஒரு பேட்டியில் கூறி இருப்பதன் மூலம் பரபரப்பிற்கான
சூழ்நிலைக்கு வித்திட்டிருக்கிறார்….!
இதுவாவது அவருக்கு கை கொடுக்குமா..?
Best of Luck Kamal …!
நேரமில்லாதவர்களுக்கு சுருக்கமாக
தலைப்புச் செய்திகள் –
காந்தியும், பெரியாரும் சினிமாவுக்கு பெரும்
அநீதி இழைத்து விட்டார்கள் .. !
திராவிட இயக்கங்கள் சினிமாவை பயன்படுத்தி
தாங்கள் முன்னேறியதோடு சரி ..!
சினிமா பிரபலமாக இருந்தாலும், அதற்குள்ள
மரியாதையை இழந்து விட்டது ..!
இன்றைக்கு யார் வேண்டுமானாலும் சினிமாவை
உருவாக்க முடியும் ..!
நான் பரிசோதனை முயற்சிகளை குறைத்துக்
கொண்டதற்கு காரணம் நான் செய்திருக்கும் முதலீடு !
இன்டர்னெட் தேடுபொறிகள் வலுவடைந்ததற்கு
காரணம் அறிவியல் இல்லை – போர்னோகிராபி !
ஜெயகாந்தனுக்கும், பெரியாருக்கும் இருந்த
கருத்து சுதந்திரம் கூட கமலுக்கு கிடையாது !
ஏன் –(கி)வீரமணிக்கே கருத்து சுதந்திரம் கிடையாது !!!
சகிப்புத்தன்மை இன்மை என்பதே இங்கு
கலாச்சாரமாக இருக்கிறது !
ஸ்பார்டகஸ் ஜெயித்திருந்தால் –
ஏசு கிறிஸ்துவுக்கும்- கார்ல் மார்க்ஸுக்கும்
வேலை இருந்திருக்காது..!
கமல் காப்பி அடிப்பதாக குற்றம் சாட்டுகிறீர்கள் –
இங்கு யார் தான் காப்பி அடிப்பதில்லை ?
தமிழ் சினிமாத் துறையில் படம் பண்ணுவது
முறையற்ற பாலுணர்வு புணர்ச்சியாக இருக்கிறது.. !!
நான் ஒழுங்காக வரி கட்டுகிறேன்.
கருப்புப் பணத்தை கையால் தொடுவதில்லை.
எல்லாரும் இதுபோல் ஒழுங்காக வரி செலுத்த வேண்டும் !!!
—————————
நேரம் இருப்பவர்கள் பேட்டியின் சுருக்கத்தை கீழே
படிக்கலாம். இயன்ற வரை கமல் கூறிய சொற்களின்
அடிப்படையிலேயே சுருக்கி மொழி
பெயர்க்கப்பட்டிருக்கிறது.
(அடைப்புக்குறிக்குள் இருப்பவை மட்டும்
எரிச்சலை வெளிப்படுத்தும் என் விளக்கங்கள் !)
– இந்திய சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி
frontline ஆங்கில இதழுக்கு கமல் அளித்துள்ள
பேட்டியிலிருந்து சில பகுதிகள் கீழே –
——————————-
குழந்தையாக இருக்கும்போதே சினிமாவிற்கு வந்த
நான் இதை எப்படி நினைவு கூர்கிறேன் …?
ஒருவன் முதல் முதலில் பள்ளிக்குச் சென்றதை,
முதல் முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்டதை,
சுன்னத் செய்து கொண்டதை –
எப்படி உணர்வானோ அப்படி…
என் அபிப்பிராயத்தில் திரைப்படம் என்பது துவக்கத்தில்
மரியாதையை பெற்றிருந்தது. பிறகு தற்போது அதனை
இழந்து விட்டது.
காந்தி தான் என்னுடைய கதாநாயகன் என்றாலும் –
அவரால் சினிமாவிற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது.
ஏனெனில் பெரும் தீர்க்க தரிசனம் உடைய காந்திக்கு
சினிமாவைப் பிடிக்காமல் போய் விட்டது.
பெரியாரும் சினிமாவை விரும்பியதில்லை.
முல்லாக்கள் சினிமாவைப் பற்றி என்ன மனப்பான்மை
கொண்டிருந்தனரோ அதே மனப்பான்மையை காந்தியும்
கொண்டிருந்தார்.
(“Cinema is a sinful technology,” என்று
காந்திஜி நவம்பர் 12, 1927-ல் ஒரு கேள்விக்கு
பதில் அளிக்கையில் கூறி இருக்கிறார். இது தான்
அவர் செய்த பெரிய பாவம் ! கூடவே –
“I should be unfit to answer your
questionnaire as I have never been
to a cinema…. But even to an outsider,
the evil that it (cinema) has done
and
it is doing is patent.
The good, if it has done at all,
remains to be proved.”
என்றும் சொன்னார். அத்தோடு சரி. அதன் பின்னர்
அவர் அதுகுறித்து எதுவும் சொன்னதாகத் தெரியவில்லை.
கமல் பிறப்பதற்கும் முன்னர் காந்திஜி கூறிய கருத்து
அது…!இந்த கருத்தைக் குறித்து தான் கமல்
வருத்தப்படுகிறார் !)
திராவிட இயக்கங்கள் சினிமாவை பயன்படுத்திக்
கொண்டது குறித்து …
திராவிட இயக்கம் சினிமாவை பயன்படுத்திக்கொண்டது
ஆனால் அவர்கள் வெற்றி பெற்றபிறகு, திராவிட
இயக்கத்தை வெற்றிகரமாக மாற்றிய அனைத்தையும்
பரிகாசம் செய்தனர். அவர்களை வெற்றிகரமாக ஆக்கிய
அனைத்து வழிகளையும் கேலி செய்தனர்.பேச்சுத் திறமை
கேலி செய்யப்பட்டது. வழிவகைகள் கேலி செய்யப்பட்டன.
இது வடக்கிலிருந்து துவங்கியது.
சினிமா தன் மரியாதையை இழந்தாலும், பிரபலமாகிக்
கொண்டு தான் இருக்கிறது. இன்றைய இண்டர்னெட்
உலகத்தில் யார் வேண்டுமானாலும் தங்களது சொந்த
சினிமாவை உருவாக்க முடியும்.
சூது கவ்வும், அட்டகத்தி போன்ற படங்களை உருவாக்கிய
புதிய தமிழ்ப்பட இயக்குநர்களை இந்தவிதமானவர்கள்
என்று கூறலாமா என்றால் –
சினிமா ஏற்கெனவே சாதாரண மனிதனின் கைக்கு வந்து
விட்டது. யார் வேண்டுமானாலும் இப்போது ஒரு
கதாசிரியராகவோ, இயக்குநராகவோ முடியும். சினிமா
எடுப்பது இனியும் கடவுளால் அருளப்பட்ட அற்புதமாக
இருக்காது. ஆர்வம் உள்ள எவரும் படம் எடுக்கலாம்.
1970களில், பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா
போன்றவர்கள் சினிமாவை ஸ்டூடியோவிற்கு வெளியே,
கிராமங்களுக்கு கொண்டு போனார்கள். நன்றாக
உருவாகிய இந்த புதிய பாதை பின்னர் “சகலகலாவல்லவன்”
“முரட்டுக்காளை” என்று அடைபட்டு நின்று விட்டதே
என்று கேட்டால் –
இது நடக்கத்தான் செய்யும். இது வியாபார இடையூறு.
வியாபாரம் இல்லாமல் சினிமா எடுக்க முடியாது.
நான் பரிசோதனை முயற்சிகளைக் குறைத்துக் கொண்டேன்
என்றால் அதற்கு காரணம் நான் செய்யும் பெரிய முதலீடு !
இதை அரசாங்கம் தான் கவனிக்க வேண்டும்.
(அதாவது அரசாங்க உதவி கிடைக்கவில்லை
என்றால் கமர்ஷியல் சினிமாக்கள் தான் வரும் என்கிறார்.
சினிமா எடுப்பது மிகச்சுலபம் – சூது கவ்வும் மாதிரி
படங்களை யார் வேண்டுமானாலும் எடுக்கும் அளவிற்கு
அது சகஜமாக, சுலபமாகி விட்டது
என்று கூறுபவர் ஆண்டுக்கு இரண்டு குறைந்த பட்ச
பட்ஜெட்டில் ஒரு கோடியிலோ, இரண்டு கோடியிலோ
படம் எடுக்க முடியாதா என்ன ?
100 கோடியில், குடியிருக்கும் வீட்டை அடகு வைத்து
சினிமா எடுத்திருக்கிறேன். ஓடவில்லையென்றால்
நடுத்தெருவிற்கு வந்து விடுவேன் – இல்லையென்றால்
வெளிநாட்டிற்கு போய் விடுவேன் என்றெல்லாம்
புலம்பியது ஏன் ? )
இன்று நாம் குழந்தைகளுக்கென்று படங்கள் எடுப்பதை
நிறுத்தி விட்டோம். “எல்லாரும் பார்க்கக்கூடிய”
படங்களைத்தான் எடுக்கிறோம். இல்லையென்றால்
வர்த்தக ரீதியில் அவை வெற்றி பெறுவதில்லை !
அடுத்து –
இன்றைய வலைத்தள நுண்ணறிவு உலகத்தில்
தினசரி வாழ்க்கையில் போர்னோகிராபியும் ஒரு
அங்கமாகி விட்டது …!
இன்டர்னெட் தேடுபொறிகள் ( search engines)
மேலும் மேலும் சக்தி வாய்ந்தவையாக உருவாகிறது
என்றால் அதற்கு காரணம் –
விஞ்ஞானமோ, அறிவியலோ இல்லை …
சதைத் தேடல் …!!! ( it is not due to
science – it is due to flesh ..!
simple need to watch flesh ..!))
(இவரது கூற்றின்படி, இன்டர்நெட்டில் தேடுபொறிகளைப்
பயன்படுத்துபவர் அனைவரும் போர்னோகிராபி
வலைத்தளங்களைத் தான் தேடுகின்றனராம் ..!)
அடுத்து –
இங்கு அரசியல் சுதந்திரம் இல்லை.
பெரியார் காலத்தில் இருந்த அரசியல் சுதந்திரம் கூட
கமலஹாசனுக்கு கிடையாது. நீங்கள் தைரியமானவராக
இருந்தால் கூட உங்களுக்கு சுதந்திரம் கிடையாது !
(திராவிடர் கழகத் தலைவர்) வீரமணிக்கு கூட
அந்த சுதந்திரம் இல்லை. நாம் எல்லைகளை
மேலும் மேலும் இறுக்கிக்கிட்டே வர்றோம்.
( சுதந்திரம் ஏன் இல்லை ? எல்லாருக்கும் சுதந்திரம்
இருக்கிறது. இன்றும் வீரமணியும், கலைஞரும்
எந்த அளவிற்கு வேண்டுமானாலும் பேசத்தான்
செய்கிறார்கள். கமல் தனக்கு அந்த சுதந்திரம்
இல்லை என்று நினைத்தால் அதற்கு காரணம் அவர்
அந்த சுதந்திரத்தை வியாபாரமாக்க – காசாக்க –
நினைப்பதால் தான். அவர் தன் சுதந்திரத்தை
சினிமாவில் தான் காட்ட வேண்டுமென்று ஏன் நினைக்க
வேண்டும் ? என்ன வேண்டுமானாலும் அவர் பேசுவதை
யார் தடுக்க முடியும் ? ஏன் -இந்த பேட்டியிலேயே
அவர் நினைப்பதை எல்லாம் கூற முடியவில்லையா ?)
‘மெட்ராஸ் கபே’ கதை இலங்கைப் பிரச்சினையின்
ஒரு பக்கத்தை காட்டியிருந்தது (?)
அதோட மறுபக்கத்தைப்பற்றி நான் படமெடுக்க
விரும்பினால் கூட அப்படி படமெடுக்க அனுமதிக்கப்பட
மாட்டேன்.
இங்கே நினைப்பதைச் சொல்ல சுதந்திரம் இல்லை.
ஒரு எழுத்தாளராக ஜெயகாந்தனோ, பெரியாரோ
அனுபவித்த சுதந்திரம் கூட ஒரு திரைப்பட
நடிகனாக எனக்கு கிடைக்கவில்லை.
இங்கு சகிப்புத்தன்மை இல்லை. அதுவே இங்கு
ஒரு கலாச்சாரமாக இருக்கிறது.
நான் சுயமரியாதை இயக்கத்தின் உருவாக்கம்.
சுயமரியாதை உள்ளவனாகவே வளர்ந்தேன்.
வேறு மாதிரியாக என்னைக் காட்டிக்கொள்ள
என்றும் விரும்பியதும் இல்லை. என் சினிமாக்களும்
இதையே பிரதிபலிக்கும்.
இங்கே நிறைய விஷயங்கள் தவறாகவே
இருக்கின்றன. அடையாறையும், கூவத்தையும் கூட
சரி செய்யவில்லை.
இங்கு எதையும் சரியாகப் புரிந்து கொள்வதில்லை.
சரித்திரத்தையும், புராணத்தையும் குழப்பிக் கொள்கிறார்கள்.
ராமாயணம் சரித்திரமா ?
எதாவது இடத்தை காட்டி, இங்கு தான் ராமர் நின்றார்
என்கிறார்கள். ராமருடைய காலடித் தடத்தை கூட
அவர்கள் காட்டுகிறார்கள். சிறு வயதில் நான் கன்யாகுமரிக்கு
போனபோது பெரிய அளவிலான ஒரு காலடித்தடத்தை
காட்டி, இது ராமரின் பாதங்கள் என்றனர். அது மிகவும்
பெரிய அளவில் இருந்ததால் நான் “ராமர் என்ன ராட்சசனா?”
என்று கேட்டேன். என் பகுத்தறிவுப் பயணம் இங்கு தான்
துவங்கியது.
“மக்கள் நான் உள்ளுக்குள் கம்யூனிஸ்ட் என்று
நினைக்கிறார்கள்.
( நான் என்னவோ – இவரை நம்பர் ஒன்
சுயநலவாதி,தந்திரசாலி, சாமர்த்தியசாலி
என்று தான் நினைக்கிறேன் !).
உண்மை என்னவென்றால் – சமூக அவலங்களுக்கு
முதலாளித்துவம், பொதுவுடைமை, பகுத்தறிவு வாதம்
போன்ற எதுவும் முழுமையான தீர்வு ஆகாது”.
மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒன்றை
நான் சொல்லட்டுமா ?
ஸ்பார்டகஸ் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் –
உலகத்தின் சரித்திரமே மாறி இருக்கும்.
கிறிஸ்துவின் போதனைகள் மாறி இருக்கும்.
கார்ல் மார்க்ஸ் கம்யூனிசத்தை
பற்றியே பேசியிருக்க மாட்டார்.
(ஸ்பார்டகஸ் கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய நூற்றாண்டில்
வாழ்ந்த அடிமைகளின் புகழ்பெற்ற ஒரு தலைவர். ரோம்
பேரரசை எதிர்த்து தோல்வி கண்டவர் – இவரை நாயகனாக
வைத்து சில வெற்றித் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன ! –
மற்றபடி, தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழாவிற்கும்,
ஏசு கிறிஸ்துவிற்கும், கார்ல் மார்க்ஸுக்கும்,
ஸ்பார்டாகஸுக்கும் என்ன சம்பந்தம் என்பது கமல் போன்ற
அறிவுஜீவிகளுக்கு மட்டும் தான் புரியும்.
கமல் ஒரு அறிவுஜீவி தான் என்பதை ஏற்கெனவே
மக்கள் ஒத்துக் கொண்டு விட்டார்கள். இருந்தாலும்,
அதற்கான தேவை இல்லாமலே, மீண்டும் மீண்டும் –
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் “நான் ஒரு அறிவுஜீவியாக்கும்”
என்று கமல் நிரூபிக்க முயல்வது எரிச்சலையே
உண்டு பண்ணுகிறது.)
தமிழ் இலக்கியங்கள் திரைப்படத்துக்கான பெரிய ஆதாரமாக
இருந்தாலும் கூட அவை ஏன் பெரிய அளவில் தமிழ்ப்
படங்களில் பயன்படுத்தப்படவில்லை என்கிற கேள்விக்கு –
தமிழ் சினிமாத் துறையில் படம் பண்ணுவது முறையற்ற
பாலுணர்வு புணர்ச்சியாக இருக்கிறது.
(கமல் பயன்படுத்தியுள்ள வார்த்தை incestuous
அதன் அர்த்தம் – ref –
http://www.thefreedictionary.com/incest
(in·cest (nsst)
n.
1. Sexual relations between persons
who are so closely related that their
marriage is illegal or forbidden
by custom.
2. The statutory crime of sexual
relations with such a near relative.
——————————————–
(கமலின் ரசனைக்கும், அறிவுஜீவித்தனத்திற்கு இதைவிட
வேறு சான்று வேண்டுமா ?)
கேரளாவில் வெற்றிப்படங்களில் பெரும்பாலானவை
இலக்கியத்திலிருந்தும், நாவல்களையும் அடிப்படையாகக்
கொண்டவை. இங்கு வெறும் காப்பி. ஹாலிவுட்
படங்களின் அப்பட்டமான காப்பி. கமல் காப்பி அடிக்கிறார்
என்று குற்றம் சாட்டுகிறார்கள் ! இங்கு எது ஒரிஜினல் படம் ?
பெரிய படங்கள் எதுவும் ஒரிஜினல் கிடையாது !
(சுய வாக்குமூலம் – நான் மட்டுமா காப்பி –
எல்லாரும் தான் !)
நாங்கள் சுஜாதாவையும், பாலகுமாரனையும் கொண்டு
வந்தோம் ( சுஜாதாவும், பாலகுமாரனும் கமல் கூப்பிடும்
முன்னரே திரையுலகிற்கு வந்து விட்டார்கள். மேலும்
இவர்களின் எந்த இலக்கியத்தை கமல் திரைப்படமாக
எடுத்தார் ..??)
திரைப்படத் துறையில் மாறுதலை எப்படி ஏற்படுத்துவது ?
எங்கே துவங்குவது என்றால் –
வெளிப்படைத்தன்மை தான் மாற்றத்தை கொண்டு வரும்.
துவக்கமாக எல்லாரும் ஒழுங்காக வரி செலுத்த வேண்டும் !
எனக்கு ஒரு பைசா கூட வரி பாக்கி கிடையாது.
நான் கருப்புப் பணத்தை கையால் தொடுவது கிடையாது !!
நம்முடைய வரிகளை ஒழுங்காகச் செலுத்த வேண்டும் !!!
(ஒ யெஸ் – இங்கிருந்தே துவங்கலாமே !
முதலில் விஸ்வரூபம் படத்திற்கு எவ்வளவு ரூபாய் –
எந்தெந்த வகைகளில் செலவானது ?
எவ்வளவு வருமானம்
எந்தெந்த வகைகளில் வந்தது ?
குடியிருக்கும் வீட்டை எந்த வங்கியில்
அடமானம் வைத்தது ? எவ்வளவு ரூபாய்க்கு ?
போன வருடம் – 2012-13க்கு எவ்வளவு வருமான வரி
கட்டினீர்கள் etc….etc… )
நான் இயல்பாகவே அரசியல் சார்புடையவனா ? என்று
தொடர்ந்து கேள்வி வந்துக்கொண்டே இருக்கிறது.
என் பதில் என்னவென்றால் – நான் கூடி வாழும் சமூக
இயல்புடையவன்.
(அதாவது சமூகத்தோடு ஒத்து வாழ்பவர் –
அதனால் தான் விரும்பிய ஆணும் பெண்ணும்
கூடி வாழ்வதற்கு திருமணம், குடும்பம் என்கிற
சம்பிரதாயங்கள் எல்லாம் எதற்கு என்று கேட்டார்
போலும் ..!!)




Shared in my Face Book page.
Thank You Sir.
கமல் தன்னை அறிவு ஜீவி என எண்ணிக் கொண்டு தத்து பித்து என்று கூறுவது வழக்கமாக கொண்டுள்ளார்.
பரமசிவம்
ஒரு மனிதன் தனக்குத் தோன்றியதை சொல்கிறான்.. கேளுங்க..விட்டுத்தள்ளுங்க.. ஏன் குறை சொல்கிறீர்.. உமக்கு எரிச்சலாக இருந்தால் அது அவர் தவறல்ல… தயவு செய்து நான் சொன்னவ்ற்றில் உள்ள உள்ளர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்
காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் கமலஹாசனுக்கு எதற்கெடுத்தாலும் செக்ஸ். ஒரே பேட்டியில் எவ்வளவு வார்த்தைகள் ?
“முறையற்ற பாலுணர்வு புணர்ச்சி”
“சுன்னத் செய்து கொண்டதை
எப்படி உணர்வானோ அப்படி…”
“தினசரி வாழ்க்கையில் போர்னோகிராபியும்
ஒருஅங்கம்”
“இன்டர்னெட்டில் …சதைத் தேடல்” …
“நான் கூடி வாழும் இயல்புடையவன்”
இந்த ஆளுக்கு சீக்கிரம் அழுகிப் போய் விடும். வைத்தியமே கிடையாது. வெளியிலே சொல்லக்கூட முடியாது. திண்டாடப் போகிறார்.
சாச்சா, நேருவுக்கு ஆன மாதிரியா?
இந்தப் பொழைப்புக்கு நாக்கப் புடுங்கிகிட்டு சாகலாம். தூ.தூ.
he used Sujatha in his vikram itself.Bala kumaran himself mentioned in his literature about Kamal hassan’s geniusness ,he is having depth friendship with him and shared many experiences. includes a car journey with girl child attains puberty and Kamal’s humble approach towards to that girl and dealt with very intellectually.
ஒரே ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்
சிவாஜி
கமல்
இளையராஜா
தமிழ்நாட்டில் பிறந்ததால் அவர்களுக்குத் தான் நட்டம். எனக்கும் இந்த மூன்று பேர்கள் குறித்த மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. ஆனால்
வாழ்வில் சோர்ந்து நிற்கும் சமயத்தில், இவர்கள் மூன்று பேர்களின் வெற்றி தான் மனதில் வந்து போகின்றது.
இந்த மூவருமே பின்புலம் ஏதும் இல்லாமல், எவர் உதவியையும் எதிர்பார்க்காமல் அவரவர் துறையில் உச்சத்தை தொட்ட வித்தைகளுக்குப் பின்னால் உள்ளது அனைத்தும் நூறு சதவிகித அர்பணிப்பு உள்ள உழைப்பு மட்டுமே.
ஆனால் மூவருமே வெகுஜனத்தை தனிப்பட்ட முறையில் கவரமுடியாததற்கு முக்கிய காரணம் அவர்களின் தனிப்பட்ட குணாதிசியங்கள்.
அரசியலுக்கு வந்து போது சிவாஜி ஷுட்டிங்க்கு டாண் என்று வருவது போல குறிப்பிட்ட நேரத்தில் வந்து நிற்பார். அப்போது தான் மைக் செட் கட்டிக் கொண்டிருப்பார்கள். எம்.ஜி.ஆர் அப்படி அல்ல. எப்போது வருவார்? எப்போது வருவார் என்று எகிற வைத்து திடீரென்று தோன்றுவார். கூட்டத்தில் அப்ளாஸ் எகிறும். தமிழர்கள் எதிர்பார்க்கும் ரசவாத வித்தையை அறிந்து வைத்திருந்தார்.
இளையராஜா தன்னை தெய்வமாக காட்டிக் கொள்வதிலும், அப்படி சொல்ல வேண்டும் என்று சுற்றிலும் வைத்திருந்த கூட்டத்தையும், அது போன்ற பிராமணிய கூட்டங்களில் ஆர்வமாக பங்கெடுப்பதையும் இன்று வரையிலும் கடைபிடிப்பவர். ஆனால் இவற்றை உணர்ந்து குறைத்து ரகுமான் போல கால மாற்றத்தை உணர்ந்து செயல்பட்டு இருப்பாரேயானால் நிச்சயம் இன்னமும்சிகரம் தொட்டு இருப்பார். என்ன செய்வது? தமிழ்நாட்டில் தமிழர்களிடத்தில் இரண்டு பழக்கம் உண்டு என்று என் நெருங்கிய நண்பர் சிரித்துக் கொண்டே சொல்வார்.
ஒரு பிராமணர் படித்து உயர்ந்ததும் தான் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகளை விட்டு விட்டு சராசரி மனிதர்கள் அனுபவிக்க விரும்பும் சுகத்திற்கு திரும்பி விடுவது வாடிக்கை. பிராமணர் என்ற பெயர் மட்டுமே அவர்களிடம் இருக்கும். ஆனால் பிராமணியக் கொள்கைகள் எதுவும் அவர்களிடம் இருக்காது.
இதைப்போல அடித்தட்டு, நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள் எந்த பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் படித்து, பதவியைப் பெற்று, உயர்ந்த நிலைக்கு வந்ததும் தன்னை ஒரு ஆன்மீகவாதியாக காட்டிக் கொள்வதும் தான் இங்கே நடக்கின்றது.
இந்த இரண்டிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து, எவரைப் பற்றிலும் கவலைப்படாமல் எதார்த்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர் கமல். நமக்கு ஏற்றுக் கொள்ள கடினமாகத்தான் இருக்கும். ஆனால் திரைப்படத்தில் அவர் புகுத்த நினைக்கும் நவீனம் முதல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் நாம் கடைபிடிக்கும் பாவனைகள் வரைக்கும் அடித்து துவைத்து காயப் போட்டு பார்ப்பவர்களை கேட்பவர்களை கதறடிப்பதில் கமலுக்கு நிகர் வேறு எவருமே இல்லை.
உலகம் உருண்டை என்று சொன்னவரை கல்லடித்து வரவேற்ற உலகம் தானே இது.
ஜோதிஜி,
வருக. உங்களை அவ்வளவு சீக்கிரம் போக விடுவதாக
இல்லை நான். எனக்கு உங்களிடமிருந்து இன்னும்
கொஞ்சம் விவரம் வேண்டும் ..!
சிவாஜியையும், இளையராஜாவையும் இங்கு தொட
வேண்டாம். விட்டு விடுவோம்.
மற்றபடி நீங்கள் சொல்லி இருப்பது –
“திரைப்படத்தில் அவர் புகுத்த நினைக்கும் நவீனம் முதல்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் நாம்
கடைபிடிக்கும் பாவனைகள் வரைக்கும் அடித்து துவைத்து
காயப் போட்டு பார்ப்பவர்களை கேட்பவர்களை கதறடிப்பதில்
கமலுக்கு நிகர் வேறு எவருமே இல்லை”.
– சரி. நான் கமலின் படைப்புத் திறனைப் பற்றி
இந்த இடுகையில் எதாவது சொல்லி இருக்கிறேனா ?
எனவே அதிலும் இங்கு மாறுபாடு இல்லை
ஆக இறுதியில் –
நீங்கள் சொல்லி இருப்பவற்றில் எஞ்சி நிற்பது –
“உலகம் உருண்டை என்று சொன்னவரை கல்லடித்து
வரவேற்ற உலகம் தானே இது”.
அப்படியென்றால் உங்கள் கூற்றுப்படி –
கமல் கூறிய கருத்துக்கள் சரி.
அதை குறை கூறுபவர்கள் உலகம் உருண்டை என்று
கூறியவரை கல்லால் அடித்தவர்களுக்கு ஒப்பாவார்கள்.
அப்படித் தானே …?
சரி – பேட்டியில் கமல் கூறியுள்ள கீழ்க்காணும்
கருத்துக்களைப் பற்றி உங்கள் அபிப்பிராயம்
தான் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா ?
1) காந்திஜி சினிமாவிற்கு பெரும் அநீதி
இழைத்து விட்டார் ?
1948-லேயே மறைந்து விட்டகாந்திஜி
சினிமாவிற்கு எதிராகத்தான்
போராடிக்கொண்டிருந்தாரா ? அதுதான் அவரது
குறிக்கோளாக இருந்ததா ?
(அதன் கீழேயே “நான் சினிமாவைப்பற்றி
கருத்து சொல்ல தகுதியானவன் அல்ல”
என்று காந்திஜி சொன்னவற்றின்
தொடர்ச்சியையும் கொடுத்திருக்கிறேன் )
2) இன்டர்னெட் தேடுபொறிகள் வலுவடைந்ததற்கு
காரணம் அறிவியல் இல்லை – போர்னோகிராபி !
சரி தானா ?
3) (கி)வீரமணிக்கே கருத்து சுதந்திரம் கிடையாது !!!
சரி தானா ? இதை வீரமணியாவது ஒப்புக்கொள்வாரா ?
4) கமல் காப்பி அடிப்பதாக குற்றம் சாட்டுகிறீர்கள் –
இங்கு யார் தான் காப்பி அடிப்பதில்லை ?
(அத்தனை பேரும் காப்பி அடிப்பதாகச் சொல்லி
அவர் தப்பிக்கும் வாதம் சரியா ?)
5) தமிழ் சினிமாத் துறையில் படம் பண்ணுவது
முறையற்ற பாலுணர்வு புணர்ச்சியாக இருக்கிறது.. !!
(இந்த மாதிரி கருத்து சொல்வது முறையா ?
இவர் கருத்தைச் சொல்ல வேறு சரியான/முறையான
வார்த்தைகள் இல்லையா ?)
6)துவக்கமாக எல்லாரும் ஒழுங்காக வரி செலுத்த வேண்டும் !
நான் ஒழுங்காக வரி கட்டுகிறேன்.
கருப்புப் பணத்தை கையால் தொடுவதில்லை.
– நம்புகிறீர்களா ?
மன்னித்துக் கொள்ளுங்கள் ஜோதிஜி –
வாதம் என்று வந்து விட்டால் என்னால்
கேட்காமல் இருக்க முடியவில்லை.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
கருப்புப் பணத்தை கையால் தொடுவதில்லை.
முழுமையாக நம்பவில்லை. ஆனால் அதே சமயத்தில் தான் சம்பாரிக்கும் பணத்திற்கு முடிந்த அளவிற்கு கணக்கில் கொண்டு வந்து அதற்கு வரி கட்டி விடவும் தயங்குவதில்லை. இப்படித்தான் நான் யூகித்து வைத்துள்ளேன்.
தமிழிலில் படம் எடுப்பது முறையற்ற பாலுணர்வு புணர்ச்சியாக இருக்கிறது.. !!
இது என்னைப் பொறுத்தவரையிலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே. தான் நினைக்கும் ஒரு விசயத்தை இங்கே அத்தனை எளிதாக எடுத்து விட முடியாது. எனக்குத் தெரிந்த பெண் நண்பர்கள் கிண்டலாக அடிக்கடி ஒரு வார்த்தைகள் சொல்வார்கள். கமல் படம் பார்த்து தான் பசங்க பலரும் கெட்டுப் போயிட்டாங்க என்று. ஆனால் சொல்கின்ற அத்தனை பேர்களும் கமலின் தீவிர ரசிகைகளாக இருப்பார்கள். கமல் எடுக்கும் படங்கள், சொல்ல வரும் கருத்துக்கள் தவறாக அசிங்கமாக உள்ளது என்றால் தற்போது தொலைக்காட்சியில் குழுந்தைகளுடன் ஒரு மணி நேரம் உட்கார்ந்து பாருங்கள். மூடி விட்டு போய்விடுவீங்க. கமல் பேசுவது சில சமயம் எரிச்சலாகத் தான் இருக்கும். என்னடா சின்ன விசயத்தை இப்படி இலக்கியவாதிகள் கணக்கா நீட்டி முழுங்குகின்றாரே என்று? இயல்பான வார்த்தைகளில் பயன்படுத்தலாமே என்று யோசித்ததுண்டு. சரி இப்படியும் ஒரு ஆள் இருக்கட்டுமே என்று நான் யோசித்துக் கொள்வதுண்டு.
அத்தனை பேரும் காப்பி அடிப்பதாகச் சொல்லி
அவர் தப்பிக்கும் வாதம் சரியா ?
சரியே.
வீரமணிக்கே கருத்து சுதந்திரம் கிடையாது !!!
கிருஷ்ணரைப் பற்றி பேச ஓட ஓட விரட்டி அடித்தார்களே…………
இதை வீரமணியாவது ஒப்புக்கொள்வாரா ?
அவர் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை காக்க வேண்டிய அவசியம் இருப்பதால் அவர் எப்படி ஒத்துக் கொள்வார் என்று எப்படி நம்மால் எதிர்பார்க்க முடியும்?
இன்டர்னெட் தேடுபொறிகள் வலுவடைந்ததற்கு
காரணம் அறிவியல் இல்லை – போர்னோகிராபி !
சரி தானா ?
உண்மை தான். விரிவாக எழுதினால் தனியே பதிவாக எழுத வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட (உருப்படியான) குறி சொல் வைத்து தமிழிலில் (மட்டும்) தேடிப் பாருங்கள். பாலூணர்வு சம்மந்தப்பட்ட விசயங்கள் தான் முதன்மையாக அப்படி வந்து கொட்டுகின்றது.
முதல் கேள்வி குறித்து எனக்கு சரியாகத் தெரியவில்லை.
நண்பர் ஜோதிஜி..
எல்லாம் அறிந்த உங்களுக்கே கமலின் தாக்கம் இவ்வளவு என்றால் மற்றவர்களைப்பற்றி நான் என்ன சொல்வது?
வாயை திறக்காத வரை கமலை மிஞ்ச ஒரு நபர் கிடையாது..
ஆனால் திறந்தாலோ!!!
“உங்கள் பெயர் என்ன?” என்ற ஒரு அற்ப கேள்விக்கு,”ஜோதிஜி” என்று நீங்களும் “கண்பத்” என நானும் விடை அளிப்போம்.ஏன் சிவாஜியும் இளையராஜாவும் இதே போலதான் சொலவார்கள்..
ஆனால் இதையே கமலிடம் கேட்டுப்பாருங்கள்..
“வாயை திறந்து,நாக்கை சுழற்றி, உதட்டை அசைத்து,
‘கமல்’ என்ற ஒலி எழுப்பினால், இந்த குழந்தை,
ஒலி கேட்ட திசை நோக்கி திரும்பிப்பார்க்கும் ”
என ஒரு “எளிய” பதில் வரும்!
தான் பேசும் ஒவ்வொரு சொல்லும்,
தன்னை ஒரு
மேதையாக,
இலக்கியவாதியாக,
பகுத்தறிவுவாதியாக,
கனவு கண்ணனாக,
நேர்மையாளனாக,
பால்குடி மறவா பாலகனாக,
உலக நாயகனாக
காண்பிக்கவேண்டும் என்பது
என்பது இவரின் நோக்கம்.
(என்ன ஆசையோ?)
ஆனால் நேர்மாறாக
இவர் பேச பேச
இவர் திறமைகள்
நமக்கு முற்றிலும் மறந்து
இவர் நமக்கு ஒரு
குழப்பவாதியாக
அரைவேக்காடாக
ஸ்திரீலோலனாக
போலித்தனம் மிக்க
ஒரு இரண்டுங்கெட்டானாக
அல்லவா
காட்சியளிக்கிறார்.
தேவையா இது?
வாயை திறந்து,நாக்கை சுழற்றி, உதட்டை அசைத்து,
‘கமல்’ என்ற ஒலி எழுப்பினால், இந்த குழந்தை,
ஒலி கேட்ட திசை நோக்கி திரும்பிப்பார்க்கும் ”
என ஒரு “எளிய” பதில் வரும்!
சிரித்து தொண்டைவலிக்குதுங்கோ………………
//உண்மை தான். விரிவாக எழுதினால் தனியே பதிவாக எழுத வேண்டும். ஒரு குறிப்பிட்ட (உருப்படியான) குறி சொல் வைத்து தமிழிலில் (மட்டும்) தேடிப் பாருங்கள். பாலூணர்வு சம்மந்தப்பட்ட விசயங்கள் தான் முதன்மையாக அப்படி வந்து கொட்டுகின்றது.//
உங்கள் கருத்து/பதில் முற்றிலும் தவறானது. ஊர் முழுக்க மோசமான மனிதர்களே நிறைந்திருப்பதாகத் துரியோதனன் கூற, ‘‘எங்கு தேடினும் கெட்டவர்களே என் கண்ணில் தென்படவில்லை; எல்லோரும் நல்லவர்களே’’ என்றார் தருமர். இந்த கதைதான் நினைவிற்கு வருகிறது.
ஜோதிஜி,
கமலஹாசன் மீது உங்களுக்கு இருக்கும் அபிமானம்
புரிகிறது. அதற்கு மாறாக நான் என்ன சொன்னாலும்
உங்கள் மனம் அதை ஏற்றுக் கொள்ளாது. இருந்தாலும்,
ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உங்கள் உள்ளத்தில் ஒரு மூலையில்
பதிவு செய்து விட்டு வெளியேறி விடுகிறேன்.
என் பேத்தி – 5ஆம் வகுப்பில் படிக்கிறாள்.
கடந்த ஒரு வருடமாக அவள் பள்ளியில் வகுப்பில்
வாரம் ஒரு பீரியட் கம்ப்யூட்டர் கற்றுக் கொள்கிறாள்.
மாலை நேரங்களில், அவள் வரும் நேரங்களில்,
நான் கம்ப்யூட்டரில் வேலை செய்துக் கொண்டிருந்தால் –
கிட்ட வந்து “தாத்தா – பைவ் மினிட்ஸ் ப்ளீஸ் ?”
என்பாள். நான் என் இடத்தை அவளுக்கு கொடுத்து விட்டு,
பக்கத்தில் இன்னொரு இருக்கையில் அமர்ந்து – அவள்
என்ன செய்கிறாள் என்று பார்த்துக் கொண்டிருப்பேன்.
ஏற்கெனவே திறந்திருக்கும் நெட்வொர்க்கில், உடனடியாக
google -search க்கு போவாள். தனக்கு வேண்டியதை
தேடிப் படிப்பாள். சில சமயம் சிறிதாக குறிப்பும் எடுத்துக்
கொள்வாள்.
அவள் எதெதை தேடுகிறாள் தெரியுமா ?
sample க்கு-
kanjiranga national park,
wild life parks, planet for kids,
solar system, butterfly life cycle,
-ஆம். அன்றாடம் வகுப்புகளில் நடக்கும் பாடங்களில்,
மேற்கொண்டு தகவல்களைத் தேடுகிறாள். மறுநாள்
வகுப்பில் டீச்சரிடம் தனக்கு இது குறித்து மேற்கொண்டு
விவரங்கள் தெரியும் என்று சொல்வதற்காக …!
தமிழ் நாட்டில் மட்டும் 11,12 வது வகுப்புகளில்
சுமார் 14 லட்சம் சிறுவர், சிறுமிகள் படிக்கிறார்கள்.
எஞ்ஜினீரிங் காலேஜுகளில் சுமார் 6 லட்சம் பேர்
படிக்கிறார்கள். எஞ்ஜினீரிங் காலேஜுகளில் கம்ப்யூட்டர்
லேப் கள் 24 மணிநேரமும் இயங்குகின்றன. இளைஞர்கள்
தொடர்ந்து இதில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் “சதை”யை தேடுவதில்லை.
தங்கள் படிப்பிற்கு உதவியாக இருக்கக்கூடிய
விஷயங்களைத் தான் தேடுகிறார்கள்.
ஆமாம் – சொந்தமாக கம்ப்யூட்டர் வைத்திருக்கும்
நபர்களிடம் கூட எத்தனை பேருக்கு
“போர்னோகிராபி” பார்க்க தனிமையும், வசதியும்,
வாய்ப்பும் முக்கியமாக – விருப்பமும் இருக்கிறது ?
இன்டர்னெட் தேடுபொறிகள் வளர்ச்சியடைவதற்கு காரணம்
யார், எது என்பது உங்கள் மனதிற்கு மட்டுமாவது
புரிந்தால் சரி.
இன்னுமொரு விஷயம் –
இந்த பேட்டியில் கமலஹாசன் –
“சதை தேடுதல்”,
“முறையற்ற பாலுணர்வு புணர்ச்சி”,
“ஸ்பார்டகஸ் ஜெயித்திருந்தால் –
ஏசு கிறிஸ்துவுக்கும், கார்ல் மார்க்ஸுக்கும்
வேலை இருந்திருக்காது”
“ராமாயணம் சரித்திரமா ?”
“நான் ஒழுங்காக வரி கட்டுகிறேன் –
கருப்புப் பணத்தை கையால் தொடுவதில்லை”,
-என்கிற வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்த
எதாவது அவசியம் இருந்திருக்கிறதா ?
இந்த வார்த்தைகளை அவர் பயன்படுத்தியதற்கு,
“நான் ஒரு அறிவுஜீவி, நான் எதையெதை
எல்லாம் யோசிக்கிறேன் – எதையெல்லாம்
தெரிந்து வைத்திருக்கிறேன்
பாருங்கள்” என்று காட்டிக்கொள்வதையும்,
controversy யாக எதையாவது சொல்லி,
விவாதப் பொருளாக வேண்டும் என்பதையும் தவிர
வேறு எதாவது காரணம் இருக்க முடியுமா ?
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஜோதிஜி.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
மனுசனோட மனச அங்காடி நாய்ன்னு பட்டினத்தார் சொன்னாரு.
பாழ் மனமுன்னு பாரதியார் சொன்னாரு. மனமொரு குரங்குன்னு
சினிமா பாட்டு ஒன்னு இருக்கு. கரடின்னான் இன்னொருத்தன்.
வேற ஒருத்தன் மனச ஈன்னு சொன்னான். ஈயும் அங்காடி நாயும்
ஒரே வேலயத்தான் எப்பவும் செய்யும். காரணம் என்னன்னா
மனசு ஒரு எடத்துல நெல கொண்டு நிக்காம, செகண்டுக்கு ஒரு
இடமா போய் நிக்கும். ஒன்ன நெனச்ச கணமே இன்னொன்னு
என்னன்னு யோசன பண்ணும். மனச அடக்க வழி ஒன்னும் அறிகிலேன்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன்னு ஞானி ஒருத்தன் பாடிட்டு போயிருக்கான். தேவராம், திருவாசகம் பாடினவங்களும்,
மெளனகுருகிட்ட மெய்ஞான உபதேசம் வாங்குன தாயுமானவரும்
கூட மனம் பாழ்பட்டு அலயுதேன்னு தவிச்சிருக்கானுவ. கைலாயத்துல
சிவ தொண்டு செஞ்ச சுந்தரர், பூக்கொய்யும் நேரத்துல ஒருத்திய
பாத்து சலனப்பட்டதால, திருவெண்ணநல்லூரிலே பொறந்து ஒழண்டு
வஞ்சிக்களத்துல விமோசனம் அடஞ்சு, மீண்டும் கைலாசம் போனாரு.
இப்படி பல கதைங்க இருக்கு. மனச தேனி மாதிரி வெச்சுக்கணும்னு
சித்பவானந்தரு சொல்லியிருக்காரு. அதாவது, பூவை
வுட்ட தேன்கூடு. கூட்ட வுட்டா பூவுன்னு இருக்கணும்ன்னு. ஒருத்தனயும்
கொற சொல்ற ரைட்டு ஒனக்கு இல்ல. கொற சொல்லித் திரியாத.
ஒன்ன இவ்விதமா இருக்கவும் யோசிக்கவும் வெச்சிருக்கிற ஈசுவரந்தான்
அவன அந்தமாதிரி நடக்கவும் யோசிக்கவும் வெக்கிறான். ஒருத்தன
கொற சொல்றதுனால நீ ஈசுவரனேயே கொற சொல்ல துணியறன்னு
அயோத்தியா மண்டபத்துல ஒருத்தரு சொன்னாரு. அப்படில்லாம்
இருக்கிறது கஷ்டந்தான்னும் விருப்பம் இல்லாதத பாக்கவும், படிக்கவும்
கேடகவும் செய்யாமல் இருந்தா பாதி வேல முடிஞ்சுடும்னும்
சொன்னாரு.
கமலின் அறிவு அவரின் மவுனங்களில் மட்டுமே காணமுடியும் போலும்.(இவர்களையும் இவர்களது கருத்துக்களையும் புறம் தள்ளுவதே நமக்கு நல்லது.
கலைஞர்கள் எப்போது அரசியலிடம் தஞ்சம் புகுந்தார்களோ அப்போதே அவர்கள் கலையும் ஞானமும் காணமல் போய்விடுகிறது,
வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் பலி..
இந்த பூமியிலிருந்து தண்ணீரை மொத்தமாக எடுத்து விடலாம்..
மின்சாரம் தாக்கி ஒரு குடும்பமே பலி..
மின்சாரம் நமக்கு தேவையில்லை..
மாணவன் தீக்குளிப்பு..
யாரங்கே பெட்ரோல் கெரோசின் போன்ற தீய பொருட்களை அறவே ஒதுக்குங்கள்..
internet இல் என்போன்றவர்கள் (சினிமாக்கார்கள்) கதையையும் ஏனையோர் சதையையும் மட்டும் தேடுகிறார்கள்..
உடனே இண்டர்நெட்டை தடை செய்யங்கள்..
சுத்த்தம்…
IT IS AN INSULT FOR THE PEOPLE WHO ARE USING INTERNET.
KAMALA HASSAN CAN TALK ABOUT WHAT HE KNOWS OR DOES.
I STUDIED MY ENGG DEGREE ALMOST FORTY YEARS BEFORE.
WITHOUT INTERNET WE CAN NOT UPDATE OUR KNOWLEDGE,
KAMAL KNOWS TO EFFECTIVELY USE “MAKE UP”.
REGARDING ACTING, I REQUEST NETAJI TO COMPARE NAVARATHRI AND DASAVATHARAM.
THERE ARE ARE SO MANY INTELLECTUALS IN OUR SOCIETY. PLEASE DONT CALL KAMAL HASSAN AS AN INTELLECTUAL. ITDEGRADES REAL INTELLECTUALS.
சொல்றது நெசமாவே இருந்தாலும், நெசத்த தெரிஞ்சுக்க
விரும்பாதவங்கிட்ட போயி இதான் நெசம்னு சொன்னா
என்ன ஆவும்னு தெரிஞ்சு போச்சுங்க. எழுதுன நீங்களும் பதிலுனு
எத எழுதுனா நீங ரசிப்பீஙகனு தெரிஞ்சு
வெச்சுகிட்டு எழுதுனவுங்களும் மேதாவியின் ப்திலுக்கான
அர்த்தத்த புரிஞ்சு எழுதுனாதா பெரியலங்க. இங்க
சொதந்திரமில்லன்னு அவ்ரு சொன்னது, தமிழகத்துலன்னு.
எத வேனா எடுக்கலாமுங்க ஆனா வியாபாரம் பண்ண
முடியாதுங்க. வியாபாரமெல்லாம் பேசி முடிச்சா வெளிய
வரவிட மாட்டாங்க. திருட்டு விசிடி டிவிடி எல்லாம் வந்த
பொறவு படம் தியேட்டருக்கு வந்தா என்ன வராங்காட்டி
என்ன. இண்டர்னெட்டுல ஆபாசத்த நீங்க தேட வேணாங்க.
எதயாச்சும் தேடினா, பொன்னு கெடைக்கும், நடிகையின்
படம் கெடைக்கும்னு பிளாஷ் ஆவுதுங்க. என்னத்த செட்டிங்
போட்டாலும் வர்றத தடுக்க முடியற்தில்லீங்க. பள்ளிக்கொடத்திலயும்
காலேஜ்லயும் படிக்கிற புள்ளைங்க படிக்கறத விட பாக்கறது
அதிகமுங்க. இன்னய சூழ்னெலயில இங்க படம் எடுக்கறது தகாத
புணர்வு போலன்னு சொன்னா, என்னத்த புரிஞ்சுகிட்டிங்க்லோ
த்காத ஒறவுக்கு தயாராக இருக்க சொல்றாருன்னு எழுதரீங்க. சரியா
பண்ண முடியலன்ன்றது அவரு வாதம்.
இப்ப வர்ற படமெல்லாமே காப்பிதாங்க. யாருதா இருந்தாலும்.
வெளம்பரம் மட்டுந்தான் உணமை கதன்னு சொல்லும்.
ஒங்களுக்கும் யெனக்கும் என்ன புடிக்கும் எவ்வளவு புடிக்கும்
என்பத சரியா தெரிஞ்சு கொடுக்கறவன் படம் ஓடும். மத்தவன் படம்
நேரா எதுனா தொலக்காச்சிக்கு போகும். ஒப்பிட்டு பேச பாலுக்கும்
சுன்னாம்புக்கும் வெள்ளன்றத தவிர சம்பந்தம் என்ன இருக்கு.
கமலகாசன் கொறபாடுகள் நெறஞ்ச ம்னுசந்தான். அவருடைய
பலவீனத்த ஏன் கொற சொல்றீங்கன்னு புரியல.
எளயராசா பத்தி ஒருத்தர் சொல்றது பாதி உண்மைங்க. அவரு
மட்டுமில்லிங்க. அவர போல, யாருடைய ஆதரவும்
இல்லாம தன்னோட தெறமையால முன்னுக்கு வந்தவங்க பல
பேரு உண்டுங்க. உதாரனமா ரகுமானும், பார்த்திபனும், இப்ப கொஞ்சம்
பிரபலமா இருக்கற பாண்டிராசும். பார்த்திபன் கார்த்திக் ஈரோவா
கலக்குன காலத்துல, அவருக்கு எதிரா சின்ன வில்லன் ரோல்
பன்னினாரு. ரஜினியோட சின்ன ரோல் பன்னினாரு. பாண்டியும்
அப்படிதாங்க. அவரோட இவரோடன்னு இருந்து முகத்த
காட்டினதே சொல்ல மறந்த கதயிலங்க. இவங்கெல்லாம் பழச
மறக்காத ஆளுங்க. ஆனா எளயராசா அப்படியில்லீங்க. பொய்
முகம் போட்டுக்கிட்ட மனுசங்க அவரு. அவருகிட்ட கேட்கவே
கூடாத கேள்வி ஒன்னு இருக்குதுங்க. சிம்பெனி என்ன ஆச்சுங்க?
ஒலகத்துல ஒரு மூலைலயும் ஒருத்தனும் கேக்காததுங்க.
சிவாசிய போய் இந்த ஆளோட கூட்டி வச்சு பேசிட்டாருங்க.
மலையாளத்துல மட்டுமில்லீங்க. கன்னடத்துலயும் எலக்கியவாதியோட
கத படமா வருதுங்க. அனந்தமூர்த்தி மாதிரி ஆளுங்களோட் கத செலது
படமா வந்திருக்கு. அங்கல்லாம் படம் பண்றவனுக்கு எலக்கியம்
தெரியுங்க. இங்க எலக்கியம் படிச்சவன விட இங்கிலீசு தெரிஞ்சவன்
ஜாஸ்திங்க. காப்பியின் ரகசியம் தெரியுதுங்களா.
கமலுக்கு வசனம் எழுதறதுக்கு முன்னமே சுஜாதா கத படாம
வந்திருக்கலாமுங்க. ஆனா, அவரு ஸ்டுடியோவுக்குள்ள வர்றதுக்கு
கமலகாசந்தான் காரணம். பாலகொமாரனும் அப்படிதான், அத அவரே
இதுக்கு தானே ஆசப்பட்டாய்னு குமுதத்துல எழுதியிருக்காரு.
சுஜாதாவும் பாலகொமாரனும் எலக்கியவாதிதான். சுஜாதா
புதுமைப்பித்தனின் செராக்ஸ்னா இவரு ஜானகிராமனோட செராக்ஸ்.
சுஜாதா புபுவின் நடைய காப்பி பன்னினாருன்னா, பாகு ஜானகிராமனின்
கருப்பொருளயே காப்பி பன்னினவரு. அதாவது பொன்னுங்களோட
பாலுணர்ச்சி, உள்மன வேதனைகள எழுதினாரு. நல்லவேள
பாக்கியராசு கூட இவருக்கு ரெண்டாவது வாய்ப்ப தரல.
sorry,mr.kavirimainthan,please do not waste your time ,realy very sorry about this type article in your website ,KAMAL always talking this type of thinks , he is very narrow person ,he thinking he only knows all ,he is empty vessel ,we are expect from you , our NATION oriented writings,thanks
You have mentioned in your Write up that he is cunning, Selfish and exploiting others with others cost which is very very true. There is no point in discussing about since he is self centered & does anything for money. His statements is always rubbish.
Sir, I tried to post a comment but somehow it is neither publishing nor rejecting. Hence I’ve sent it to you by email.
Thanks and Regards
எழில்,
உங்கள் கடிதம் என் மெயிலில் வந்திருந்தது.
தொடர்புடைய பகுதிகளை கீழே தந்திருக்கிறேன்.
நண்பர் எழில் அவர்களின் பின்னூட்டத்திலிருந்து –
——————————
கா.மை ஐயா, கமலஹாசன் கூறியதாக வந்துள்ள செய்தியில் “இன்டர்னெட் தேடுபொறிகள்” சம்பந்தமாக மட்டும் கருத்து எழுதலாம் என்று எண்ணுகிறேன்…
ஆரம்ப காலங்களில், ‘யாகூ’, ‘லய்கோஸ்’ ‘அல்ட விஸ்ட’ போன்றவை கோலோச்சிய காலத்தில் கமலஹாசன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. அக்காலத்தில் ‘porn ‘ என்று தேடு தளத்தில் தட்டச்சுவீர்களானால் வரும் பதில்கள் யாவும் அது சம்பந்தமான வியாபர தளங்களே.
அப்போது நான் மத்தியகிழக்கில் வேலை பார்த்து கொண்டிருந்தேன். அவ்வேளையில் ‘Boyzone ‘ எனும் அயர்லாந்து நாட்டு பாடகர் குழுவினர் அங்கு சுற்று பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்களை பற்றி அறியலாம் என (அக்காலத்தில் நமக்கு தெரிந்ததெல்லாம் இளையராஜாவும், எம் எஸ் வீயும் தான்) யாகூவில் Boyzone என்று டைப் பண்ணி தேடினால் வந்த முதல் மூன்று தளங்களும் ஆண்களுக்கான ஓரினச் சேர்க்கை தளங்களே. நல்ல வேலையாக அப்போது என்னுடன் யாரும் இல்லை என்பதால் தர்மசங்கட நிலையில் இருந்து தப்பித்தேன்.
ஆனால் கூகுள் வந்தவுடன் தேடு தளங்களுக்கான வரை முறைகளும் மாற்றமடைந்தன. மேலும் சிறுவர்களை வலைதளங்களில் இருந்து பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையும், சந்தர்ப்பமும், சட்டங்களும் உருவானதால் தேடு பொறிகளும் தங்களை தானே சுத்தப்படுத்தி கொண்டன என்றே கூறவேண்டும்.
இருப்பினும், 2010 வரை உள்ள கணக்கெடுப்புகளின் படி, அந்த வருடம் வரை இன்டர்நெட் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும், இன்டர்நெட் மூலம் நடக்கும் பண பரிவர்த்தனைக்கும் மூல காரணமாக இருந்தது ‘போர்னோகிராபி’ தான் என்பது ஆச்சரியமான உண்மை. Chat, Video Streaming, e-commerce, Broadband போன்ற அனைத்தும் வளர்ச்சியடைய தூண்டுகோலாயிருந்தது ‘போர்னோகிராபி’ தான்.
குறிப்பு: ஒரு வேளை கமலஹாசன் இணையத்தையும், தேடு பொறியையும் போட்டு குழப்பிக்கொண்டிருக்கலாம் அல்லது இன்னும் update ஆகாமல் நான் கருத்தின் முதல் பகுதியில் குறிப்பிட்ட காலத்தை அடிப்படையாக கொண்டு கருத்து கூறியிருக்கலாம். கமலஹாசன் என்னும் மனிதரை விடுத்து, இணையத்தை இயக்குவது எது என்பதை உணர தலைப்பட்டதே இக்கருத்து எழுத முற்பட்டதின் நோக்கம்.
நன்றி!
எழில் .