ஈஷாவில் தொடங்கியது ……
————————
4-5 நாட்களுக்கு முன்னர் ஈஷா யோகா பயிற்சியில் கலந்து கொண்டீர்களா என்கிற தலைப்பில் ஒரு இடுகையை எழுதினேன். கலந்து கொண்டவர்களின் அனுபவத்தை விவரிக்கும்படியும் கேட்டுக் கொண்டேன்.
அதன் பின்னூட்டங்களில் பல தகவல்கள் கிடைத்தன. அவற்றை இன்னும் படிக்க இயலாதவர்கள் இப்போது கூட – செப்டம்பர் 25 தேதியிட்ட “ஈஷா யோகா பயிற்சியில் கலந்து கொண்டீர்களா ..? உங்கள் அனுபவத்தைக் கூற முடியுமா ?” என்கிற இடுகையின் கீழ் அவற்றைக் காணலாம்;
அந்த பின்னூட்டங்களிடையே நான் என் அனுபவத்தைப் பற்றியும் கூறியபோது ஒரு நண்பர் -என் கருத்துக்களை தனியே ஒரு இடுகையாகப் போடும்படி ஆலோசனை கூறினார். ஒரு விதத்தில், மேற்கொண்டு சில கருத்துப் பரிமாற்றங்களுக்கு இது ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் என்பதால் இந்த தலைப்பில் என் கருத்தை கீழே சொல்கிறேன் –
—————————————–
நானும் – ஆன்மிகம்-யோகா துறைகளில்
பல்வேறு அமைப்புகள் நிகழ்த்தும் நிகழ்வுகளில்
(ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஈஷா,
வேதாத்ரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை,
“மனசே ரிலாக்ஸ்” – சுகபோதாநந்தா –
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை,
சின்மயா மிஷன் நடத்தும் “வேதாந்தம்” உள்பட )
கலந்து கொண்டு இந்த இந்த அமைப்புகள் அடிப்படையில் எப்படி வித்தியாசப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள முயன்றேன் !!
என் கருத்து என்னவென்றால் –
இவர்களில் பெரும்பாலானோர் யோகாவையும், ஆன்மிகத்தையும் சேர்த்து தருவதாலும், வெகு குறுகிய காலத்திற்கே அவர்களது வழிகாட்டுதல்கள் கிடைக்கின்றன என்பதாலும் – உருப்படியான பலன்கள் கிடைப்பதில்லை.
எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை என்பதை அவர்களிடம் வெளிப்படையாகக் கூற முடிவதில்லை. அப்படியே கூறினாலும், அவர்கள் மேற்கொண்டு இன்னும் ஒரு பயிற்சி முகாமில் சேர்த்து விடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஒரு நண்பர் சுட்டிக் காட்டியது போல் – இறுதியில் அந்தந்த அமைப்புகளின் தீவிர ஆதரவாளர்களாக நம்மை மாற்றும் செயல் தான் நிகழ்கிறது.
நான் எல்லா அமைப்புகளையும் இப்படிச் சொல்ல மாட்டேன். வேதாத்ரி மகரிஷி அவர்களின் “மன வளக்கலை” நிகழ்ச்சிகள் காசு- பணத்திற்காக நடத்தப்படுபவை அல்ல.
ஆனால் – அவர்களது பயிற்சி முறைகள் எல்லாராலும், முழுமையாகச் செய்யக்கூடியவனவாக இல்லை. தீவிரமாக புருவமத்தியில் கவனத்தைச் செலுத்தி தியானம் செய்யும் முயற்சி -தீராத தலைவலியில் கொண்டு போய் விடுகிறது.
இன்னொரு நண்பர் கூறியது போல் – இதிலிருந்து – இந்த தலைவலியிலிருந்து – வெளியே வருவதே பெரிய பாடாகி விடுகிறது.
மேற்கூறிய அமைப்புகளைத் தவிர மேற்கொண்டு பல அமைப்புகளும் இருக்கவே செய்கின்றன. ஆனால் என் அனுபவத்திலும், இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்ட மற்ற சில நண்பர்களின் அனுபவத்தைக் கேட்டறிந்ததிலும் என்னைப் பொறுத்த வரை சில முடிவுகளுக்கு வர முடிந்தது.
“யோகா” கற்றுக் கொள்வதும், தொடர்ந்து செய்வதும், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது . இதில் எந்தவித சந்தேகமும் இல்லை..
இதைச் செய்வதற்கு, ஜாதி-மத வேறுபாடோ, ஆண்-பெண் வித்தியாசமோ இல்லை. இதற்கு எந்தவித ஆன்மிக அடிப்படையும் தேவை இல்லை.
ஆனால் மிக முக்கியமான விஷயம் – –
யோகா கற்றுக் கொள்ள நமக்கு- புகழ்பெற்ற ஆன்மிகத் தலைவர்களோ, 3 நாள், 6 நாள் முகாம்களோ தேவை இல்லை. முறைப்படி யோகாசனம் கற்றுத்தேர்ந்த ‘யோகா மாஸ்டர்’ களின் தொடர்ந்த வழிகாட்டுதலின்படி இதைச் செய்வதே சரியான பலன் கிட்ட உருப்படியான வழி.
. அவரவர் வயது, உடல்நிலை, ஏற்கெனவே இருக்கும் உடற்கோளாறுகள், ஆசனம் செய்யத் தேவைப்படும் உடல் சக்தி – ஆகியவற்றை புரிந்து கொண்டு யோகா மாஸ்டர்கள் கொடுக்கும் அறிவுரைகளின்படி யோகாசனம் செய்வதே சரி. இது நமக்கு ஏற்கெனவே இருக்கும் சில நோய்களின் வீரியம்/ தாக்கம் குறையவும், மேற்கொண்டு நல்ல ஆரோக்கியத்தை தக்க வைத்துக்கொள்ளவும் நிச்சயம் உதவும்.
ஆனால் -யோகாசனம் என்பது தொடர்ந்து செய்யப்பட வேண்டிய விஷயம். அதிகாலையில் பயிற்சி செய்ய வேண்டி இருக்கும். அதற்காக தினமும் தனியே நேரம் ஒதுக்க வேண்டும் – வெறும் வயிற்றில் தான் யோகாசனம் செய்ய வேண்டும். அந்த அளவிற்கு அதில் ஆர்வமும், ஈடுபாடும் – உள்ளவர்கள் மட்டும் இதைத் துவக்கினால் போதும்.
இத்தகைய பின்னணி இல்லாதவர்கள் இதில் ஈடுபட நினைப்பது நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கும் செயலே.
இதில் ஈடுபடும் முன்னர் சுவாமி விவேகாநந்தரின் “ராஜயோகம்” என்கிற புத்தகத்தைப் படிப்பது ஒரு அடிப்படை உருவாக துணை புரியும். (இந்த நூல் இதே தலைப்பில் தமிழில் ராமகிருஷ்ணா மடத்தில் கிடைக்கும் )
யோகாசனம் செய்ய முடியாதவர்கள் அதனால் எந்தவித வருத்தமோ, தாழ்வு மனப்பான்மையோ கொள்ளத் தேவையேயில்லை.இது ஒன்று தானா வழி .?
உள்ளத்தில், உடலில் – ஆரோக்கியத்தை உருவாக்கி பாதுகாத்துக்கொள்ள-
அவர்களால் இயன்ற நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, சில நிமிட அமைதியான தியானம் – ஆகியவை கூட போதுமானவையே !
மற்றபடி – “ஆன்மிகம்” – என்பது தனி விஷயம்.இது அவரவர் அனுபவம், ஆர்வம், வயது, தேடுதலில் உள்ள தீவிரம் – ஆகியவற்றைப் பொறுத்தது.
முதலில் – நல்ல புத்தகங்கள், பிறகு ஒத்த ஆர்வம் உடைய நண்பர்களுடன் தேடல் – இப்படி – போய்க்கொண்டே இருந்தால் – நமக்குள்ளேயே ஒரு தெளிவு ஏற்படும் – நமக்கு எது தேவை என்பதை நாமே புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சூழல் நமக்கு ஏற்படும்.
இவை எல்லாம் சில தகுதிகளுடனும் முயற்சிகளுடனும் மேற்கொள்ளப்பட வேண்டியவை.
ஒரு நல்ல சமுதாயம் உருவாக – நல்ல மனிதர்கள் உருவாக வேண்டும்.
அதற்கு – ஒவ்வொருவருக்குள்ளும் –
” நான் நல்லவனாக இருக்க வேண்டும்” என்கிற மன உறுதியை உருவாக்கிக்கொண்டு அதன்படி செயல்பட்டால் போதும் –
ஒருவனுக்கு “நல்ல மனிதன்” என்பதைத் தவிர வேறு என்ன தகுதி வேண்டும் ..?
வாருங்கள் -தொடர்ந்து பயணிப்போம். தெரிந்ததை, நமக்குப் புரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
-வாழ்த்துக்களுடன், காவிரிமைந்தன் –



யோகாவையும் ஆன்மீகத்தையும் சேர்த்துத் தருகிறார்கள்
என்பது எனக்கு ஏற்புடையதல்ல (எனக்கு). குறிப்பாக,
மனவளக்கலை மற்றும் ஈஷாவிலும் ஓரிடத்திலும் நீங்கள்
ஆன்மீகம் பற்றி கேட்டறிய முடியாது. வேதாத்ரி வகுப்புகள்
மனம் செம்மையாதல் குறித்தே இருப்பதாக நினைக்கிறேன்.
பொள்ளாச்சி ஆனைமலையில் (ஆழியாறு) உள்ள “அறிவு
திருக்கோவிலில்” கூட மந்திரம் ஜபம் என்பது பற்றியெல்லாம்
இல்லை.
வெள்ளியங்கிரி அடிவாரத்தில் உள்ள ஈஷா மையத்தில்
இருப்பது “லிங்கத் திருமேனி” ஆனாலும் கூட, பரமேஸ்வரனைப்
பற்றிய விவரணங்கள் சொல்லப்படுவதில்லை. சுற்றியமைக்கப்
பட்டுள்ள “தியான” கூடுகளில் அமர்ந்த வண்ணம் தியானிக்க
மட்டுமே அனுமதி. மற்ற்படி அபிஷேக ஆராதனைகள் எதுவும்
நடப்பதில்லை. ஆண்டு தோறும் நடக்கும் மஹா சிவராத்திரி
விழாவில் கூட அப்படித்தான்.
இவர்கள் சொல்லித்தரும் பயிற்சி முழுமையாக
பிராணாயாமத்தை அடிபடையாகக் கொண்ட போதும், வேறு
வேறு உத்திகளையும் உள்ளடக்கியிருக்கிறது. வேதாத்ரி முன்னர்
இருந்ததை எளிமைப்ப்டுத்தி, பரவல் படுத்தியதாக சொல்லி
இருக்கிறார்.
ஸ்ரீ ஸ்ரீ, சின்மயா, சுகபோதாநந்தா மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா
மிஷன் வகுப்புகளில் கூட ஆன்மீகம் சொல்லித் தரப்படுவதாக
யாரும் சொல்லவில்லை.
அக்கால பிராம்ணர்கள் உபநயனம் ஆன நாள் தொட்டு, மூன்று
வேளை சந்தி செய்து (காலை, நன்பகல் மற்றும் மாலை),
பிராணாயாம பயிற்சிக்குப் பின் கயத்ரி ஜபம் செய்து வந்தார்கள்.
ஒவ்வொர்ரு பிராணாயாமத்தின் போதும், சுமார் ஒரு நிமிட
நேரத்திற்கு மூச்சை உள்ளிருத்தவும், வெளியிடவும் மந்திர
ப்ரயோகம் வேறு இருக்கிறது. இவர்கள் காசின் பின்னால் ஓட
ஆரம்பித்த நேரம், எல்லாவற்றையும் விட்டுவிட்டார்கள். கால
தேச வர்த்தமானம் என்கிறார்கள் இதை.
—-
ஒழுக்கத்தைக் கடைப் பிடிக்க இயலாவிட்டால் எல்லா
க்தையும் சொல்வார்கள்.
சூப்பர் சிங்கர் எபிசோடு ஒன்று ரீடெல்காஸ்ட் ஆனதைக் காண
நேர்ந்தது. இசையமைப்பாளர் இமான் சிறப்பு விருந்தினர். அதில்
ஒரு பையன், ஐயா! என் வாழ்க்கையே ஃபைலியர் என
நினைத்தேன். நல்ல நேரத்தில், ஒரு வாய்ப்பைக்
கொடுத்து ஒளி ஏற்றி வைத்தித்தீர்கள்” என்று கண் கலங்கினான்.
பையன் சாஸ்த்ராவில் பி.டெக் படித்து காம்பஸில் பணி
கிடைத்து, நல்ல உத்தியோகத்தில் இருக்கிறான். அதெல்லாம்
அவனுக்குப் பெரிதாக்ப் படவில்லை. சூப்பர் சிங்கர்
ஏற்படுத்தி வரும் hype என்ஜினீயரிங் படித்த ஒருவனையே
இப்படி பாதிக்கும் என்றால்… மற்றவர் நிலை குறித்து
எண்ணவே அச்சமாக இருக்கிறது.
—-
அந்த பையன் பாடிய அர்த்தமுள்ள சாகித்தியம்:
….ஊதா கலர் ரிப்பன் யாரு ஒனக்கு அப்பன்….?
—
எப்போதோ படித்த அசோகமித்திரன் கதையொன்று என்
நினைவுக்கு வருகிறது.
காச நோயினால் பாதிக்கப்பட்ட தாய்க்கு மருந்து வாங்கவும்,
குடும்ப வறுமையை விரட்டவும், மகளின் சங்கீத அறிவு துணை
புரியும் என நினைத்து, மகளை அழைத்துக் கொண்டு
ஸ்டுடியோக்களை வலம் வருகிறார். தினம் அவர்களைக்
காணும் ஸ்டுடியோ வாட்ச்மேன், விவரம் கேட்டு விட்டு,
”அதுக்கு நீ ஏன் சாமி கூட வ்ர்றே” என்பார்.
இசை நிகழ்ச்சிகள் பப்புலாரிட்டுக்கு விலை போகும்
வித்தையை பங்கேற்போருக்கு மட்டுமல்ல; அவர்களின்
பெற்றோருக்கும் சொல்லித் தருகிறது போலிருக்கிறது.
திரு வெங்கட் ரமணி,
நீங்கள் வேறு வலைத்தளம் எதிலாவது பின்னூட்டம்
போடுவது உண்டா ? – எதில் என்று சொல்ல முடியுமா ?
தனியாக வலைத்தளம் எதாவது வைத்திருக்கிறீர்களா ?
தயவுசெய்து தெரிவிக்கவும்.
நன்றி. WP மற்றும் blogs பலவற்றில்
பின்னூட்டம் போட்டு வருகிறேன்.
தனியாக வ்லைத்தளம் வைத்துக்
கொள்ளவும் அதனை நிர்வகிக்கவும்
இப்போதைக்கு அவகாசமில்லை.
கோவையிலிருந்து வந்து இரண்டாண்டு
முடிவதற்கு முன்னரே, பெட்டியைத்
தூக்கிக் கொண்டிருக்கிறேன். இன்னமும்
பணிக்காலம் இருக்கிறது. எங்கெங்கு
நிழலும் தண்ணீரும் என்பது
தெரியவில்லை.
-Manithan Maamanithanaka vendum. follow swami vivekananda