மாமியாரை மிஞ்சிய நவீன “மணிமேகலை” …?
ஏகப்பட்ட ஓட்டைகள், தகவல் மறைப்புகள் –
மத்திய அரசின் பதில் மனுவில் …
————-
கச்சத்தீவு தொடர்பாக மத்திய அரசு வெள்ளியன்று
தாக்கல் செய்துள்ள பதில் மனுவின் விவரங்கள்
ஓரளவு வெளி வந்துள்ளன.
தெரிந்தே, வேண்டுமென்றே பொய் சொல்வது
அப்பட்டமாகத் தெரிகிறது.
முதல் பொய் –
மீனவர்களின் பாதுகாப்பு எப்போதும் மத்திய அரசால்
உறுதி செய்யப்பட்டு வந்திருக்கிறது. மீனவர்கள்
கைது செய்யப்படும்போதெல்லாம் மத்திய அரசு
உடனடியாகத் தலையிட்டு, அவர்களை விடுவித்திட
வழி செய்திருக்கிறது –என்கிறது பதில் மனு.
இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட 30/08/2013
அன்று கூட சுமார் 120 இந்திய(தமிழக)மீனவர்கள்
இலங்கைச் சிறையில் வதங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களது மீன்பிடி படகுகள் இலங்கை ராணுவத்தால்
கைப்பற்றப்பட்டிருக்கின்றன. வலைகள் சேதப்படுத்தப்பட்டு
இருக்கின்றன.
இந்திய அரசு மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்ட பிறகும்,
இலங்கை அரசு அவர்களை இன்னும் விடுவிக்கவில்லை.
120 மீனவர்கள் இலங்கைச்சிறையில் இருக்கும்போது
கோர்ட்டுக்கே தவறான தகவலைக் கொடுக்கிறார்கள்.
-இது கைது செய்யப்பட்டவர்களைப் பற்றிய வாதம்.
கொல்லப்பட்டவர்களைப் பற்றிய பேச்சையே காணோம்.
இதுவரை 600 க்கும் மேற்பட்ட மீனவர்கள்
இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டிருக்கின்றார்களே –
அதற்கு மத்திய அரசு ஏன் விளக்கம் அளிக்கவில்லை ?
அடுத்தது –
பதில் மனுவிலேயே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்-
“பிரிட்டிஷ் இந்தியாவிற்கும், சிலோனுக்கும் இடையே
இந்தத் தீவின் உரிமையைப் பற்றிய சர்ச்சை இருந்தது.
இரண்டு நாடுகளுக்கும் இடையே எல்லை வரையறுக்கப்
படாமலே இருந்தது(இரண்டு நாடுகளும் சுதந்திரம் பெற்ற
நிலையிலும்). 1974 ஆண்டு இந்த தீவின்
உரிமையைப் பற்றிய பிரச்சினையைத் தீர்த்து வைக்கவே
இரண்டு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை செய்து கொண்டன”.
இங்கு அவர்களாகவே ஓட்டையை பெரிது படுத்தி
விட்டார்கள். இரண்டு நாடுகளுக்கும் இடையே எல்லை
வரையறுக்கப்படாமல் இருந்தது என்று இங்கு
சொல்லி விட்டு –
மற்றொரு பகுதியில், இலங்கைக்கு எதுவும் கொடுக்கப்பட
வில்லை என்று சொல்வது எப்படி சரி ? கச்சத்தீவு
பிரச்சினை காரணமாக எல்லை வரையறுக்கப்படாமல்
இருந்தது என்றால் என்ன அர்த்தம் ? இரண்டு நாடுகளும்
அந்தப் பகுதிக்கு சொந்தம் கொண்டாடின என்று தானே
அர்த்தம் ?
கச்சத்தீவு ஏற்கெனவே இலங்கைக்கு சொந்தமானது என்றால்,
பிரச்சினையே இல்லையே – பிறகு இல்லாத பிரச்சினைக்கு
ஒன்றுக்கு இரண்டாக ஒப்பந்தம் எதற்கு ?
பிரச்சினையை தீர்க்க இரண்டு நாடுகளுக்கிடையே
ஒப்பந்தம் என்றால் – இவர்கள் சில விஷயங்களில்
விட்டுக் கொடுப்பார்கள் – பதிலுக்கு அவர்கள் சில
விஷயங்களை விட்டுக் கொடுப்பார்கள்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவின் உரிமையை
இந்தியா, இலங்கைக்கு விட்டுக் கொடுக்கிறது.
பதிலுக்கு இலங்கை, இந்திய மீனவர்கள் தொடர்ந்து
அந்தப் பகுதியை பயன்படுத்த ஒப்புக்கொள்கிறது.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஒப்பந்தப் பகுதிகள்
அதைத்தானே சொல்கின்றன ?
Article 5
Subject to the foregoing, Indian
fishermen and pilgrims will enjoy
access to visit Kachchativu as hitherto,
and
will not be required by Sri Lanka
to obtain travel documents or visas
for these purposes.
Article 6
The vessels of Sri Lanka and India
will enjoy in each other’s waters
such rights as they have traditionally
enjoyed therein.
( தமிழில் -“பாரம்பரியமாக இரு நாட்டையும் சேர்ந்த
மீனவர்கள் அனுபவித்து வந்த எல்லா உரிமைகளையும்
அவர்கள் தொடர்ந்து, எந்தவித கட்டுப்பாடும் இன்றி
அனுபவிப்பார்கள். கச்சத்தீவு பகுதிக்கு அவர்களது
மீன்பிடி படகுகள் சென்று வர இலங்கை அரசிடமிருந்து
எந்தவித விசாவோ, அனுமதியோ தேவையிலை” )
கச்சத்தீவு பற்றிய அறிக்கையை இந்திய
பாராளுமன்றத்தில் வெளியிட்ட அப்போதைய வெளியுறவு
அமைச்சர் ஸ்வரண் சிங் கூட –
“மீனவர்கள் இதுவரை மீன்பிடித்து வந்த இடங்களில்
தொடர்ந்து தங்கள் தொழிலை செய்ய எந்த தடங்கலும்
இருக்காது” என்று உறுதி அளித்துள்ளார்.
(“I wish to remind the Hon’ble Members
that in concluding this agreement
on rights of fishing, pilgrimage and
navigation which both sides have enjoyed
in the past, have fully been
safeguarded for the future.”)
இரு நாடுகளின் மீனவர்களும் பாரம்பரியமாக
அனுபவித்து வந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம்
என்று முதலில் ஒப்புக்கொண்டு விட்டு, இப்போது
இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதை இலங்கை தடுப்பதும்,
கைது செய்வதும், சுட்டுக் கொல்வதும் ஒப்பந்தத்தை
மீறிய செயல் ஆகாதா ?
அடுத்தது –
இப்போது கோர்ட்டின் முன் வைத்திருக்கும் பதில் மனுவில்
இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க
உரிமை இல்லை என்று சொல்லும் இந்திய அரசு,
அப்படியானால் இந்த விஷயத்தை ஒப்பந்தத்தில் ஏன்
தெளிவாகக் கூறவில்லை ? பாராளுமன்றத்தில் வேறு
மாதிரி விளக்கம் கொடுத்தது எப்படி ?
அப்போது சொன்னது பொய்யா ? அல்லது
இப்போது சொல்வது பொய்யா ?
தமிழ் நாட்டு மீனவர்கள் கொல்லப்படுவதும்,
தாக்கப்படுவதும் சிந்துபாத் தொடர்கதையாகத் தொடர்ந்து
கொண்டே போவதைத் தான் மத்திய அரசு விரும்புகிறதா?
தமிழ் மக்கள் வதைபடுவதைப் பற்றி கவலைப்படாத-
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்
இந்த நாட்டில் யாராக இருக்க முடியும் –
கலைஞரின் நவீன “மணிமேகலை”யைத் தவிர ..?
டாக்டர் ராமதாஸ் அவர்கள் ஒரு கூடுதல் தகவலை
வெளியிட்டுள்ளார்.
“1966-ஆம் ஆண்டில் இலங்கை அமைச்சரவைச்
செயலாளர் பி.பி. பெரிஸ் வெளியிட்ட அறிக்கையில்,
கச்சத்தீவில் இலங்கைக்கு எந்த உரிமையும் இல்லை.
அது இராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமானது என்று
விக்டோரியா அரசி காலத்திலேயே ஆங்கிலேய அரசு
அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது
என்று கூறியுள்ளார்.”
இந்த ஒப்பந்தம் நிறைவேறிய கால கட்டத்தில்
வெளிவந்த இலங்கை செய்தித்தாள்களைப் பார்த்தாலே
நமக்கு அதிக அளவில் சான்றுகள் கிடைக்கும்.
மேலும், 1987-ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இராஜீவ்
காந்தியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தைப் பற்றி
சிறிதும் கவலைப்படாமல்,கொழும்பு உச்சநீதிமன்றத்தின்
துணையுடன், வடக்கு- கிழக்கு மாநிலங்கள் இணைப்பு
செல்லாது என்று இலங்கை அரசு அறிவித்தது எப்படி ?
இலங்கை இந்தியாவுடன் செய்துகொண்ட இந்த
ஒப்பந்தத்தை தன்னிச்சையாக, ஒருதலைப்பட்சமாக
மீற முடியும் என்றால், கச்சத்தீவு ஒப்பந்தத்தை
இந்தியா ஏன் ரத்து செய்ய முடியாது ?
செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறுவதில் இலங்கை
அரசுக்கு உள்ள துணிச்சல் கூட தன் மக்களை,
மீனவர்களை பாதுகாப்பதில் இந்திய அரசுக்கு
இல்லாதது எப்படி ?
வழக்கு உரிய முறையில் விசாரணைக்கு வந்து,
சான்றுகள் தாக்கல் செய்யப்பட்டு,
புத்திசாலித்தனமாக மேல் எடுத்துச்
செல்லப்படுமேயானால், நமக்கு நியாயம் கிடைக்கும்
என்கிற நம்பிக்கை இருக்கிறது.
ஆனால் – வழக்கு எந்த காலத்தில்
தொடர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு,
எத்தனை வருடங்கள் விசாரணையில் கழிந்து –
எப்போது தீர்ப்பு வரும் என்று காத்திருப்பது ?
அதுவரை இன்னும் எத்தனை தமிழ் மீனவர்கள் உயிர்
விடப்போகிறார்கள் – கல்லடி படப்போகிறார்கள் ?
தம் மக்களின் மீது அக்கரை இல்லாத – மக்கள்,
தேவையின்றி தவிப்பதைப் பற்றி கவலைப்படாத –
இந்த நாட்டு மீனவர்களின் உயிர்கள் அநியாயமாக
பறிக்கப்படுவதைக்கண்டு பதறித் துடிக்காத –
ஒரு மத்திய அரசு ! காங்கிரஸ் தலைமை !!
நாட்டுப்பற்று உள்ள ஒரு தலைமை இருந்தால் –
நம் மக்களின் மீது பிரியம் உள்ள ஒரு தலைமை
இருந்தால் – இந்த நிலை வருமா ? தொடருமா ?
இதை எல்லாம் பார்க்கும்போது –
நமது நடைமுறைகளின் மீது வெறுப்பும்,
ஆத்திரமும், கோபமும் வருவதைத்
தவிர்க்க முடியவில்லை.
பின்குறிப்பு –
அந்நிய இறக்குமதி தான் நம் நாட்டின்
அனைத்து பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும்
அடிப்படைக் காரணம் என்று நிதியமைச்சரும்,
பிரதமரும் மாறி மாறி கூறி வருகிறார்கள்.
அதை நாமும் உணரத்தான் செய்கிறோம் !
ஆனால் எப்போதோ நிகழ்ந்து விட்ட
இறக்குமதியால் வந்துள்ள விபரீதங்களை
சரி செய்வது எப்படி ?



நமது நடைமுறைகளின் மீது வெறுப்பும், ஆத்திரமும், கோபமும் வருவதைத்
தவிர்க்க முடியவில்லை. உண்மைதான். இது நமது கையாளாகாதனம். நாம் என்னதான் முட்டிக் கொண்டாலும், பிரியானிக்கும் குவாட்டருக்கும் விலை போகும் நம் மக்களை வைத்துக் கொண்டு என்ன செய்யமுடியும்?
இன்று படித்தவர்கள் கூட பெட்ரோல் பங்குகளை இரவு 8 டு காலை 8 வரை மூடும் சாதனையை கை தட்டி ஏற்றுக் கொள்கிறார்கள். யாருமே மந்திரிகள், பாராளுமன்ற, சட்டசபை உறுப்பினர்களின் அலவன்ஸ்களையும், சம்பளத்தையும், அவர்களுக்கு கொடுக்கப் படும் பிற சலுகைகளையும் பாதியாக குறைக்கவோ அல்லது முழுமையாக வெட்டவோ பேசுவதில்லை. நாம்தான் எப்போதும் tighten the belt என்ற வகையில் பேசிக் கொண்டிருக்கிறோம். வெளி நாட்டு பொருள்களை வாங்காதீர்கள், கார், ஸ்கூட்டர் எடுக்காதீர்கள். சைக்கிளில் போங்கள், நடந்து போங்கள் என்று அறிவுரைகள். ஆனால் இன்றைய இந்தியாவின் கீழான நிலைமைக்கு காரணமான இந்த அரசியல்வியாதிகள் எதற்கும் கவலைப் படாமல் தொடர்ந்து 100 கார்கள், வரிக் கட்டாமல் இறக்குமதி செய்த ஹம்மர்கள், ஆல்கஹால் கலக்காத அரபு நாட்டு செத்த பாடியின் ஸ்ப்ரே என்று என்றும் சுகம் மாறாமல் வாழ்பவர்கள். நாம் எப்போதும் நமது குடும்ப நிலைமையை உத்தேசித்து சிக்கனமாகத்தான் இருக்கிறோம். 1000 ரூபாய் சம்பாதித்தால் 10 ரூபாய் ஆடம்பரத்திற்கு செலவு செய்வது ஒன்றும் தவறில்லை. ஆனால் கொள்ளையடிக்கும் இந்த கொள்ளையர்கள் அப்படியா? அவர்கள் திருந்தினால் மட்டுமே இந்த நாடு உருப்புடும். நாம் ஏன் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு பரிந்து பேசவேண்டும்? திருடன்களும் குற்றம் புரிந்தோரும் ஆட்சியில் பங்கு கொள்ளக் கூடாது என்று உச்ச நீதி மன்றம் கூறிய பிறகும் அதை நாட்டு மக்களின் கருத்துகளைக் கூட கேட்காமல் கோர்ட்டில் எதிர்க்கும் இவர்களுக்கு, நமது நலனையும் எதிர்க்காலத்தையும் பாழாக்கும் இவர்களுக்கு நாம் ஏன் பரிந்து பேசவேண்டும்?
நான் இதனை முழுவதும் ஆதரிக்கிறேன். எனது எண்ண ஓட்டத்தை அப்படியே எழுதி உள்ளார்.
முதல்லே எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் இந்தக் கட்சத்தீவை ஏன் இந்தியா இலங்கைக்குக் கொடுத்தது? அதற்குக் காரணம் என்ன? யாரேனும் சொல்லுங்களேன்?
indra gandhi only know about this. Now she is no more.
நானும் கூட சிலவற்றை அறிந்து கொள்ள விழைகின்றேன்.
கச்சத்தீவு குறித்தான ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பு
மீனவர்கள் தாகப்பட்டனரா? அல்லது அப்போது இப்படித்தானா?
இப்போது நடைபெறும் தாக்குதல்களும் கைதுகளும் “இந்திய
கட எல்லையைத்” தாண்டுவதால் மட்டுமா? தெரிந்தவர்கள்
சொல்லவும்.
((தம் மக்களின் மீது அக்கரை இல்லாத – மக்கள்,
தேவையின்றி தவிப்பதைப் பற்றி கவலைப்படாத –
இந்த நாட்டு மீனவர்களின் உயிர்கள் அநியாயமாக
பறிக்கப்படுவதைக்கண்டு பதறித் துடிக்காத –
ஒரு மத்திய அரசு ! காங்கிரஸ் தலைமை !!))
அது மட்டும் அன்று. அச்சமயம் துணை போன கலைஞர்
இன்று அறிக்கை விட்டு கொண்டு இருக்கிறார். தமிழ் நாடு
பற்றிய கவலை இரு கட்சிக்குமே இல்லை போல.
தமிழக மக்களை என்ன சொல்ல.
ராஜீவின் (இலங்கை) வடக்கு கிழக்கு இணைப்பு ஒப்பந்தமும்,
இந்திராவின் கச்சத்தீவு உரிமை மாற்று ஒப்பந்தமும் அடிப்படையிலும்
நோக்கிலும் வெவ்வேறானவை. எனவே, ஒப்பீடு சரியல்ல.
ராஜீவ் ஒப்பந்தத்தை முறிந்து போனதற்கு இப்போது நிலவும்
சூழலும், வேறு பல அக-புறக் காரணிகளும் இருக்கிறது.
நண்பரே,
நான் ஒப்பிடுவதற்கான காரணம் –
இரு நாடுகளுக்கிடையேயான ஒரு ஒப்பந்தத்தை,
ஒரு நாடு தன்னிச்சையாக ரத்து செய்வது என்கிற
முன்னுதாரணத்தை இலங்கையே உருவாக்கி இருப்பது,
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்
என்று சொல்வதற்குண்டான காரணங்களில்,
தற்போது நிலவும் மாறுபட்ட சூழ்நிலையும் ஒன்று
என்பது.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
கச்சத்தீவு பற்றி பதிவர் வவ்வால் எழுதிய இடுகை.
http://vovalpaarvai.blogspot.in/2013/04/blog-post.html
இப்போது தான் பார்த்தேன் –
நிறைய தகவல்கள்.
மிக்க நன்றி நண்பரே.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்