துக்ளக் ஆசிரியர் சோ -“பாரதிக்குப் பிறகு கண்ணதாசன் தான்”

துக்ளக் ஆசிரியர் சோ -“பாரதிக்குப் பிறகு கண்ணதாசன் தான்”

kannadasan -1

எனக்கு புரட்சிக்கவி பாரதியை ரொம்பப் பிடிக்கும்.
அதே போல் தான் கவிஞர் கண்ணதாசனையும்…!

அந்தக் காலத்தில், மகாகவி சுப்ரமணிய பாரதியுடன் “சுதேசமித்திரன்” நாளிதழ் அலுவலகத்தில்,
ஒன்றாக ஒரே அறையில் ,அமர்ந்து பணிபுரியக்கூடிய
வாய்ப்பு என் தந்தைக்கு கிடைத்திருந்தது.(அப்போதெல்லாம், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு ‘சுதேசமித்திரன்’ ஒரு புகலிடமாக இருந்தது !)

என் சிறு வயதில்,பாரதியாரைப் பற்றி
என் தந்தை கூறும்போதெல்லாம் எனக்கு பிரமிப்பாகவே இருக்கும். இளைஞனான பிறகு,
முழு ஈடுபாட்டுடன் பாரதியின் எழுத்துக்களை எல்லாம் படித்தபோது மேலும் மேலும் அவர் மீதான பிரமிப்பு அதிகரித்தது.

அதே போல், தொலைவில் இருந்து பார்த்த நமக்கு கவிஞர் கண்ணதாசன் ஒரு பிரமிப்பாக இருந்ததில் ஒரு ஆச்சரியமுமில்லை.

ஆனால் அவருடன் மிகவும் நெருங்கிப் பழகும்
வாய்ப்பைப் பெற்ற துக்ளக் ஆசிரியர் சோவும்
அதே பிரமிப்புடன் இருப்பது கண்ணதாசனை விரும்பும் உள்ளங்களுக்கு மிகவும் மகிழ்வைக் கொடுக்கும்.

அண்மையில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள்
ஒரு பேட்டியில் கவிஞர் கண்ணதாசனுடனான
தன் நினைவுகளைப் பரிமாறிக்கொள்ளும்போது,
“பாரதியாருக்குப் பிறகு சிறந்த கவிஞர் கண்ணதாசன் தான்” என்று கூறுகிறார்.

மிகவும் சுவையான பேட்டி என்பதாலும், நிறைய பேர் இதைப்படித்திருக்கக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதாலும், நண்பர்கள் ரசிக்க – ஆசிரியர் சோவின் பேட்டியிலிருந்து
சில பகுதிகளை கீழே தந்திருக்கிறேன்

– ———
கவிஞருடன் நெருங்கிப் பழகுகிற வாய்ப்பு
எனக்கு சினிமாவாலும், துக்ளக்கினாலும் கிடைத்தது. சினிமாவில் சீக்கிரமாகவே அவர் நெருக்கமாகி விட்டார்.
நான் சந்தித்த மனிதர்களில் கண்ணதாசன் ஒரு மேதாவி.
அவர் கடும் முயற்சி செய்து கவிதைகளை
எல்லாம் எழுதினார் என்று நான் சொல்ல மாட்டேன்.
எந்த முயற்சியும் எடுக்காமல் கவிதை அவருக்கு
மிக இயல்பாகவே வந்தது.
பாடல் எழுத வந்து உட்கார்ந்தாரென்றால் –
பாடல் வரிகள் அருவி மாதிரி கொட்டும்.
எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இல்லாமல்,
மனதில் தோன்றியதை, அற்புதமான மொழி நடையில்

எழுதக்கூடிய கவிஞர் அவர்.
சில சமயம் எரிமலை மாதிரி இருக்கும்.
சில சமயம் புயல் மாதிரி இருக்கும்.
சில சமயம் தென்றலைப்போல இருக்கும்.
அத்தனை பல்லவிகளும் சரளமாக வந்து விழும்.
அது அவருக்கு கிடைத்த வரம் !

எதையும் மிகவும் ‘லைட்’டாக எடுத்துக்
கொள்ளும் இயல்பு அவருடையது.

இந்திரா காந்தி ஆட்சியின்போது சுப்ரீம்கோர்ட்டில்
நீதிபதிகளை சீனியாரிட்டி எல்லாம் பார்க்காமல் தனக்கு வேண்டியவர் என்பதற்காக ஒருவரைத்
தலைமைப் பொறுப்பில் நியமித்தார்கள்.
அதைப்பற்றி விமர்சித்து நான் எழுதிக்கொண்டிருந்தேன்.

“நீங்க எழுதற கருத்துக்களை எல்லாம் படிச்சுக்கிட்டிருக்கேன். எனக்கு அதில் மாற்றுக் கருத்து இருக்கு. அதை உங்க பத்திரிகையிலேயே எழுதலாமா?”
என்று கேட்டார் கண்ணதாசன்.

“சார், இது சட்டம் சம்பந்தப்பட்ட விஷயமாச்சே?”

“அதைப்பற்றி உங்களுக்கென்ன? நான் எழுதறேன்.”

சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதிகள் நியமனத்தில்
தலையீடு இருப்பதை நியாயப்படுத்தி அவர்
எழுதினார் பாருங்கள்.
அவ்வளவு அருமையான கட்டுரை.
சுப்ரீம் கோர்ட்டில் பிராக்டீஸ் பண்ணுகிற
வழக்கறிஞர்கள் கூட அந்த மாதிரி திறமையாக
தன்னுடைய வாதத்தை எடுத்து வைத்திருக்க
மாட்டார்கள். அந்த அளவுக்கு அருமையாக
எழுதி இருந்தார் கவிஞர்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் இந்திரா காங்கிரசில்
இருந்து கவிஞர் விலகிய நேரம்.

“ஏன் சார் மாறினீங்க?” அவரிடம் கேட்டேன்.
“அதை விளக்கி உனக்கு ஒரு கட்டுரை அனுப்பறேன்”
என்றவர் உடனே எழுதி அனுப்பி வைத்தார்.

அந்த கட்டுரை இப்படித் துவங்கி இருக்கும் –
“காலி மைதானங்களிடம் பேசிப் பேசி
எனக்கு அலுத்து விட்டது”

காங்கிரஸ் கூட்டம் போட்டால், கூட்டமே வருவதில்லை.
இதில் போய்ப்பேசி என்ன பிரயோஜனம் ?
என்று நினைத்து அதை வெளிப்படையாகப் பேசவும்,
எழுதவும் செய்தார். மற்றவர்களைப் போல்
‘கொள்கையில் வித்தியாசம்’ என்றெல்லாம்
போலித்தனமாகப் பேசத் தெரியாதவர்.

கவிஞர் நடத்தி வந்த பத்திரிகையில் ஒரு முறை
என்னைப்பற்றி ‘கன்னாபின்னா’வென்று ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதைப்பார்த்து விட்டு
அவருக்கு நான் போன் பண்ணினேன்.
“என்ன சார்.. இப்படி எழுதியிருக்கீங்க. என்னை ‘கிரிட்டிசைஸ்’ பண்ணுங்க. ஆனால் அதில் ஒரு
நாகரிகம் இருக்க வேண்டாமா?”

அவர் வேறு எதையும் பேசவில்லை.
“நாளைக்குப் பாருங்க..பத்திரிகையை.. “ என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார்.

மறுநாள் அதே பத்திரிகையில்’அந்தக் கட்டுரையை
எழுதியது ஒரு பைத்தியக்காரன்’ என்று தன்னைத்தானே மட்டம்தட்டி ஒரு செய்தியையும் மறுநாளே அவரால்
வெளியிட முடிந்தது.
அதை எழுதிவிட்டு “பார்த்தீங்களா.. இப்போ என்ன சொல்றீங்க?” என்று அவரே போன் பண்ணினார்.
எதையும் லைட்டாக எடுத்துக் கொள்கிற சுபாவம்
அவருக்கு இருப்பதை திரும்பவும் அப்போது
நான் உணர்ந்தேன்.
இவரும், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனும்
சேர்ந்து தமிழ் சினிமாவுக்கு செய்திருக்கிற பணி அசாத்தியமானது. தன்னைத் தானே பாராட்டிப் பெருமை பேசுகிற வழக்கம் அவரிடம் இல்லை.

காலாகாலத்திற்கு நிலைத்து நிற்கிற மாதிரியான காவியம் ஒன்றைப் படைக்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இருந்தது. ஆனால் அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை.

தான் சில கட்சிகளுக்குப் போய் வந்ததைப்பற்றி
ஒருசமயம் இப்படிச் சொன்னார்.
“நான் சில கட்சிகளுக்கு மாறியதைச் சிலர்
விமர்சனம் பண்ணி இருக்காங்க.
நான் மாறத்தான் செய்வேன்.
மாறாமல் இருக்க நான் என்ன மரமா ? மட்டையா ?”

ஒரு தடவை ஒரு பத்திரிக்கையில் என்னைப் புகழ்ந்து
பேசி இருந்தார். என்னைப்பற்றி அவர் எழுதியதை
ஒருமுறை படித்து விட்டு அவருக்கு ஒரு பேப்பரில்
எழுதி அனுப்பி இருந்தேன்.

“வீடு வரை விஸ்கி.
வீதி வரை பஞ்சு (அருணாசலம்)
காடு வரை கவிதை
கடைசி வரை ‘சோ'” –

என்று எழுதி அனுப்பியிருந்தேன்.
அப்போதைக்கு அதைப்படித்து விட்டு”என்னைக் காப்பி
அடிச்சு நல்லா எழுதியிருக்கீங்க” என்று ஜாலியாகச்
சொன்னார்.

ஆனால் – அவர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு
ஆனந்த விகடனில் கவிஞருடைய வாரிசு ஒருவர் –
“கவிஞர் இதைப் பாதுகாத்து வைச்சிருந்தார்”
என்று சொல்லி நான் எழுதிய இந்த வரிகளை வெளியிட்டிருந்தார்கள்.

மனசில் வெகுளித்தனம் நிறைந்த கவிஞர் எழுதிய
“அர்த்தமுள்ள இந்துமதத்”தைப் படித்து
பிரமித்திருக்கிறேன்.
குழந்தைத்தனமான மனம், அற்புதமான படைப்பாற்றல் – இரண்டும் இணைந்த அற்புதமான மனிதர் கண்ணதாசன். தன்னைப்பற்றியே வெளிப்படையாக எழுதிய மனிதர் அவர்.

இப்படி பல விஷயங்களில் மிகவும் வெளிப்படைத்
தன்மையுடன் இருந்ததால், அரசியலில் அவர்
முக்கியமான இடத்தைப்பெற முடியவில்லை.
தனிப்பட்ட முறையிலும் சரி –
பொதுக்கூட்டத்திலும் சரி – தான் நினைத்ததைப் பேசக்கூடியவராக இருந்ததால் எந்தக் கட்சியிலும்
அவரால் நிலைத்து இருக்க முடியவில்லை.

பாரதிக்குப் பிறகு சிறந்த கவிஞர் கண்ணதாசன் தான்.
கல்லூரிப் படிப்பு, புலவர் படிப்பு எதுவும் இல்லாமல்
தமிழில் அவர் அளவுக்கு சொல்வளத்துடன்,
எளிமையாகவும், வேகத்துடனும் இயங்கிய
வேறு ஒரு கவிஞரைப் பார்க்க முடியாது.

————————————————

பின்குறிப்பு – இவ்வளவு தூரம் வந்து விட்டு ஒரு பாட்டு கேட்காமல் போனால் எப்படி ?

எனக்குப் பிடித்த ஒரு பாரதி பாட்டும் – ஒரு கண்ணதாசன் பாடலும்…

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to துக்ளக் ஆசிரியர் சோ -“பாரதிக்குப் பிறகு கண்ணதாசன் தான்”

  1. Rajagopalan .R.'s avatar Rajagopalan .R. சொல்கிறார்:

    Mr.Kavirimainthan,

    Wonderful. I am surprised how u are able to
    maintain this blog so interesting and
    also so useful, informative…..

    It will be a pleasure for us to hear more and more
    from you. So your Father was so lucky to be
    with Bharathi … vow …Great .

    Please write more about the past …

  2. johan paris's avatar johan paris சொல்கிறார்:

    அருமையான,பேட்டியை படிக்கத் தந்ததற்கு நன்றி!
    கவிஞரை மிகப் பிடிக்கும், துக்ளக் ஆசிரியர் கருத்துக்கள் முழுதையும் ஏற்காத போதும், நான் அவர் தொடர் வாசகன்(40 வருடங்களுக்கு மேல்), அவர் மேதாவித்தனத்தை அண்ணாந்து பார்ப்பவன் என்பதில் பெருமை.

  3. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    //தான் நினைத்ததைப் பேசக்கூடியவராக//
    கடைசி வரை கண்ணதாசன் அப்படியே இருந்தார்.
    ஆனால் “சோ” அவ்வாறின்றி இன்றுவரை குழப்பிக்கொண்டே இருக்கிறார். நன்றாக தேடிப்பாருங்கள், கண்ணதாசனைப் பற்றியும் கன்னாபின்னாவென்று எதையாவது உளறியும் இருப்பார் இந்த அதிமேதாவி!
    என்ன இருந்தாலும் இந்த கட்டுரையில் மிகவும் உண்மையானதையே அவர் கூறியிருக்கிறார்.

  4. இரா.வெங்கட்டரமணி's avatar இரா.வெங்கட்டரமணி சொல்கிறார்:

    காலம் என்கிற உன்னதமான கருவியை நம் அனைவரிடமும் ஒரே
    விதமாய் செயல்படும் வண்ணம் இயற்கை படைத்திருக்கிறது. புறச்சூழல்
    வேண்டுமாயின் மனிதனுக்கு மனிதன் மாறுபட்டும் வேறுபட்டும்
    இருக்கலாமே அன்றி காலம் அனைவருக்கும் ஒன்றே.
    நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
    வாளது உணர்வார்ப் பெறின். (குறள் 34.4) விளக்கம் வேண்டுவோர்
    பரிமேலழகர் உரையைப் படிக்கவும்.
    காலம் எல்லோரையும், யாவற்றையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது.
    ஆனால், மேதைகள் காலத்தின் கட்டுக்குள் இருப்பதில்லை. மாறாக
    காலத்தை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். அதர்வண வேதத்தில்
    வரும் காலஸூக்தம் இதை விரிவாக சொல்லுகிறது.
    ரத்தத்திலகம் படத்தில் “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு…” என்ற
    பாடலில், “படைப்பதினால் நான் இறைவன் எந்த நிலையிலும் எனக்கு
    மரணமில்லை…” என்று வரும் கண்ணதாசனின் பாடலை முற்றிலும் உண்மை
    என்பதை எந்த கலப்பும் இல்லாத மனிதரால் உணர்ந்து கொள்ள முடியும்.
    காலங்களைக் கடந்து நிற்கும் பல விஷயங்களை மிக சாதாரணமாக திரைப்
    பாடல்களில் எழுதிவிட்டுப் போயிருக்கிறார் இந்த மனிதர். அம்மாதிரியான
    அசாதாரணமான வரிகளை “அதிலிருந்து எடுத்தார்; இதிலிருந்து எடுத்தார்”
    என்கிற ஆசாமிகளும் இந்த தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள்.
    அம்மாதிரியான விமர்சனங்களையெல்லாம் தாண்டி அவரது படைப்புகள்
    நின்றிருக்கிறது. நிற்கும்.
    அவரது வனவாசத்தில் கருணாநிதியின் குண இயல்புகளைத்தான் பெரிதாக
    விமர்சித்திருக்கிறார் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதில்,
    எம்ஜிஆரின் குண இயல்பும் சொல்லப்பட்டிருக்கிறது. இன்ன பிற தலைவர்களின்
    நடவடிக்கைகள் உடைத்தெரியப்பட்டிருக்கிறது. எல்லோரும் வாழ்ந்த
    காலத்தில்தான் அந்த புத்தகம் வெளிவந்தது. யாரும் அதன் உள்ளடக்கத்தை
    மறுக்கவோ, மாற்றுரைத்தோ சொன்னதாக தெரியவில்லை. அடுத்தடுத்து வந்த
    மறுபதிப்புகளிலும் எந்த மாற்றமும் இல்லை. கொண்ட கருத்தை தைரியமாக
    சொல்லக்கூடியவர் என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்.
    கண்ணதாசன் காலத்தை வென்ற மேதைதான். சந்தேகமில்லாமல்.

  5. Kulasekaran's avatar Kulasekaran சொல்கிறார்:

    வெகுளித்தனம் என்ற தமிழ்ச்சொல்லிற்கு என்ன பொருள் என்று எனக்குத் தெரியவில்லை. குழந்தைகளுக்குத்தான் அஃதுண்டு என்பது நானறிந்தது. பெரியவ்ர் ஒருவருக்கு இருந்தால் ஒன்று அவன் பைத்தியக்காரன் (உண்மையில்) அல்லது நடிக்கிறான் அப்படி என்றுதான் வ்ரும்.

    சொல்வதை எவர் என்ன நினைப்பார் என்று கணிக்காமல் வெளிப்படையாகச் சொல்வது வெகுளித்தனமென்கிறார் சோ. என்ன வியப்பு? அஃது எப்படி வெகுளித்தனமாகும்?

    கண்ணதாசன் பல படிவ நிலைகளில் வளர்ந்தார். எல்லாரும் அப்படித்தான்/. Popularity is decided by popularity என்பது ஒரு பேருண்மை. அதன்படி வாலிபப்பிராயத்தில் அபார்ப்ப்னர்களிடையே திராவிட இயக்கம் பேச்சாக இருந்தது. அக்கால கட்டத்தில் இவரும் சாய்ந்தார், சுய சிந்தனை வளர்ந்த போது தன்னை உணர்ந்தார் எனச்சொல்லலாம். அதாவது நாத்திகம் தனக்கு உண்மையிலேயே ஒத்துவராதொன்று. தான் ஒரு ஆத்திகனாக மட்டுமே வாழமுடியும் என்று கண்டு, பிற மதங்களை பரீச்சித்து பார்க்காமல் தன் ஜாதியினர் பரம்பரைபரம்பரையாக அளித்த மதமான வைதீக இந்துமத்ததை மறுபேச்சு பேசாமல் படித்துக்கரைத்து அதுவே தன் மதம் என முடிவெடுத்த வாழ்ந்தார். His love of Hindu religion is infatuation only. But he mastered it.

    எனவேதான் திராவிட இயக்கம் அல்லது தி மு கவிலிருந்து விலகினார். இதெல்லாம் உண்மையா பொயயா? இதற்கும் அவர் கவிபுனையுமாற்றலுக்கும் தொடர்பேயில்லை.

    கவிபுனைதல் பலருக்கும் வரும். பாரதியாரும் வரகவிதான். இவர்க்ளைப்போலவே பலரும் இருக்கிறார்கள். நம் நாட்டில் கிரிக்கெட் வீரர்களைப்போல. நன்றாக விளையாடத்தெரிந்தாலும் வாய்ப்பு வசதிகள் இருந்தால்தான் மேலே போக முடியும்.

    பாரதிக்கு இல்லை. ஆனால் அவர்காலத்துக்கப்புறம் பலர் அவரைப்பற்றிப் பேச அவர் பாப்புலரானார். கண்ணதாசன் எப்படி எழுதினால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள என நன்கு தெரிந்து அச்சொற்களைப்போட்டு எழுதியதால் அவர் பாப்புலர். இஃதொரு வியாபாரியின் குணம். ஜாதிக்குணம். காந்திக்கும் இப்படித்தான் என்று ஆர்வல் காந்திக்கட்டுரையில் சொல்வார்.

    திறமையிருந்தால் போதாது. அதை விற்கத்தெரிய வேண்டும் எனபது வாழ்க்கையுண்மையாகும். அவ்வுண்மையை நன்குணர்ந்தவர். .

  6. Kulasekaran's avatar Kulasekaran சொல்கிறார்:

    “பாரதிக்குப் பிறகு கண்ணதாசன் தான்” என்று ஒருவர் சொல்வதற்கு, அவருக்கு வேண்டிய தகுதிகள்:

    1. இலக்கியவாதியாகவோ, அல்லது இலக்கிய ஆர்வலனாகவோ இருக்கவேண்டும். குறிப்பாக கவிதைகளை இரசிப்போர்; தமிழாசான்கள், இப்படி இவர்களுள் பாமரர்கள் உண்டு.

    2. பாரதியாருக்குப்பின்னர் தோன்றிய அனைத்துக்கவிஞர்களையும் படித்திருக்க வேண்டும்.

    3. அப்படி படிக்கும்போது அக்கவிஞர்கள் எத்தனை பேர் என் ஜாதியை விமர்சனம் பண்ணினார்கள் என்று பார்க்கக்கூடாது.

    4. என் மதத்தை விமர்சனம் பண்ணினார்களா என்று பார்க்கக்கூடாது>

    அதாவது அவரின் தனிநபர் கொள்கைகள், தனிநபர் வாழ்க்கையைப்பார்க்கக்கூடாது.

    5. அவர்களின் கவிதைகள் மட்டுமே பார்க்கப்படவேண்டும் கணிப்பதற்கு.

    இவை திரு சோ இராமசாமிக்கு உண்டா? உண்டெனில் நீங்கள் போட்ட அவரின் பேச்சைப்பற்றிய பதிவுக்கு மரியாதை கண்டிப்பாக உண்டு.

    My enemy’s enemy is my friend – comes to my mind when I read any praise on Kannadasan by persons like Cho Ramasamy and others. There is clear politics behind his estimate.

    • இரா.வெங்கட்டரமணி's avatar இரா.வெங்கட்டரமணி சொல்கிறார்:

      தமிழ்நாட்டில் கவி புனைவோருக்கு பஞ்சமில்லை. புனைவதற்காகவே
      புனைப்பெயர் கொண்டோருக்கும் பஞ்சமில்லை. எத்தனையோ
      தாசர்களும் வேந்தர்களும் இங்கு இருக்கவே செய்கிறார்கள். இவர்களில்
      அரசியல் ஆசி பெற்ற சிலரின் “புனைவுகள்” பள்ளி மற்றும் பல்கலைக்
      கழகங்களில் பாடமாகவும் கூட வந்திருக்கிறது. ஆனால், இவர்களின்
      பரவல் எந்த அளவு அல்லது எவ்வளவு தூரம் சென்றிருக்கிறது என்பது
      மிகப் பெரிய “?”
      அது சரி. முத்தமிழ் வித்தகர் என்று மிகப் பெரிய அளவில் “விளம்பரப்
      படுத்தப்படும்” திரு.கலைஞரின் படைப்புகள் இதுகாறும் ”தகுதியான” தமிழ்
      அறிஞர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறதா? அவருடைய
      இலக்கிய தகுதி சான்றளிக்கப்பட்டுள்ளதா? பாப்பையாவாவது செய்து
      இருக்கிறாரா?
      கண்ணதாசனுக்கு வியாபாரியின் குணம். அது அவருடைய ஜாதியின்
      குணம் என்கிறீர்களே. ஊருக்கு ஊர் “தொல்காப்பிய பூங்காவை”க்
      கொண்டு போய் காசு பார்த்தது எந்த வகை?
      கண்ணதாசனின் சொத்து விவரம் தெரியுமா உங்களுக்கு? அவர் இருந்த
      காலத்தில் “கடனாளியாக”த் தானிருந்தார். அதனால் தனக்கு
      கடன் கொடுத்தோரின் மன ஓட்டத்தை அளவிடும் பொருட்டு, தான்
      இறந்து போய்விட்டதாக அனைவருக்கும் அறிவித்துவிட்டு வீட்டில்
      காத்திருந்தார். கல்யாண மண்டபமும், மலை வாச ஸ்தலங்களில்
      பங்களாக்களும் கொண்டிருக்கவில்லை. அரசியல் தொடர்புகளைக்
      கொண்டு “பரிசுகளை”ப் பெறவில்லை. என் பிள்ளைக்கு வேலை கொடு
      என்றோ அவனும் பாட்டெழுதுவான் வாய்ப்புக் கொடு என்றோ
      (ரகு)மான்களைத் தேடிப் போகவில்லை. எல்லாவற்றுக்கும் மேல் நான்
      இப்படியெல்லாம் இருந்தேன் அல்லலுற்றேன் தெளிந்தேன் “அமைதி
      கண்டேன் என்று அவரே எழுதிவிட்டுப் போயிருக்கிறார்.
      விமர்சனம் செய்ய இலக்கியவாதியாக அல்லது ஆர்வலனாக இருக்க
      வேண்டியது வாஸ்தவம்தான். திரு.சோவுக்கு இலக்கிய ஆர்வமோ ரசனையோ
      இல்லையென்கிற வாதம் எதன் அடிப்படையில் அமைந்தது? அவர் எதையும்
      படித்ததில்லை என்பதற்கு சான்று இருக்கிறதா?
      ஜோஸ்யக்காரர்கள் இருப்பதேழு நக்ஷத்திரங்கள் இருப்பதாகவும், அதில்
      சிறப்பு மிகுந்ததென இரண்டொரு நக்ஷத்திரங்களைக் கூறுவார்கள்.
      அப்படியானால் மிகுதியெல்லாம் பாழ் என்றா பொருள்?

    • Rajagopalan .R.'s avatar Rajagopalan .R. சொல்கிறார்:

      அய்யா குலசேகரனாரே,

      //“பாரதிக்குப் பிறகு கண்ணதாசன் தான்” என்று ஒருவர் சொல்வதற்கு, அவருக்கு வேண்டிய தகுதிகள்:”//

      இந்த தகுதிகளை நிர்ணயிக்க உமக்கு என்ன தகுதி
      இருக்கிறது என்பதை கொஞ்சம் விளக்குவீரா ?

      ராஜகோபாலன்.ர.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.