சர்வாதிகாரம் வந்தால் இந்தியா ஜெயித்து விடுமா …? (கொ.த.கொ.வி. Part-6)

சர்வாதிகாரம் வந்தால்  இந்தியா ஜெயித்து விடுமா …?

(கொ.த.கொ.வி. Part-6)

MorningMtclouds
65 ஆண்டுகளுக்கு முன்னர் சீனா இருந்த நிலை என்ன,
இன்று அதன் நிலை என்ன ?

இதே காலத்தில்
நம் நாடு எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது ?
எதில் வளர்ந்திருக்கிறது ?

இந்த இடுகையின் முதல் 4 பகுதிகளில், சீனாவின்
வளர்ச்சியைப் பற்றிய விவரங்களை,
புகைப்படங்களுடனும்,
புள்ளி விவரங்களுடனும், ஓரளவு விவரமாக
எடுத்துக் காட்டி இருக்கிறேன்.

இன்னொரு பக்கம் – நம் நாட்டின் வளர்ச்சியைப் பற்றி –
நான் சொல்வதை விட,
அவரவர் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கும்
அனுபவமே நன்கு சாட்சி சொல்லும்.
அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டு உற்சாகமாக
ஈடுபட வேண்டிய துறைகள் எல்லாம்
தனியார் துறைக்கு தாரைவார்க்கப்பட்டிருக்கிறது.

மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வியும்,
சுகாதாரமும் தனிப்பட்ட முதலாளிகளின் பணம்
கொட்டும் தொழிலாக மாறி விட்டது.

எங்கு நோக்கினும் தனியார் பள்ளிகள்,
மழலைப் பள்ளிகளில் துவங்கி –
CBSE, Matric என்று வகை வகையாக
அடுக்கடுக்காக வெவ்வேறு status-ல்
தனியார் பள்ளிகள்

புற்றீசல் போல தனியார் பொறியியல் கல்லூரிகள் –
அரசியல்வாதிகள் முக்கால்வாசி பேருக்கு
தனித்தனியே பொறியியல் கல்லூரிகள் –

வசதி படைத்தோர்க்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள்,
பெரிய பெரிய மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவ மனைகள் –
இத்யாதி இத்யாதி….

பிழைக்கத் தெரிந்த அரசியல்வாதிகளுக்கு –
தொலைக்காட்சி சேனல்கள், நாளிதழ்கள் ….
ரியல் எஸ்டேட் பிஸினஸ் ….
சிலருக்கு சினிமா -தயாரிப்பு, விநியோகம் வேறு –

அரசு – மக்கள் நலத்திட்டங்களுக்காக செலவழிக்கும்
கோடிக்கணக்கான ரூபாயில் பெரும்பகுதி –
ஆளும் கட்சி ஆட்களுக்கே காண்ட்ராக்ட் மூலமும்,
கமிஷன் மூலமும் போய்ச்சேருவதும் ….

மக்களுக்கு உதவக்க்கூடிய திட்டங்களைப்
போடுவதை விட, அரசியல்வாதிகளுக்கு காசு
சம்பாதிக்க உதவும் திட்டங்களுக்கே
முன்னுரிமை கொடுப்பதும்…

ரெயிலில் கூட்டம், பஸ்ஸில் கூட்டம் –
எதிலும் கூட்டம் – காசு கொடுத்தாலும்,
மணிக்கணக்காக -தொத்திக் கொண்டே
பயணம் செய்ய வேண்டிய கொடுமை..

தனியார் பஸ்களில் கொள்ளை வசூல்…

சுதந்திரம் கிடைத்து 65 ஆண்டுகள் ஆன பின்பும்,
மக்களுக்கு குடிக்க சுத்தமான தண்ணீர் கொடுக்க
வக்கில்லாத அரசாங்கங்கள். தாகத்திற்கு தண்ணீர்
குடிக்கக் கூட காசு தேவைப்படும் ஒரு நாடு….

வெளியே போனால் – சிறுநீர் கழிக்கக் கூட காசு
தேவைப்படும் ஒரு நாடு …

அடிக்கல் நாட்டி, ஆண்டுகள் பலவாகினும், மேலே
தொடராத திட்டங்கள் எத்தனை ….

தொடங்கப்பட்டு, அல்லது பெயருக்கு துவக்கி
வைக்கப்பட்டு, போதுமான நிதி ஒதுக்கப்படாமல் –
அப்படியே ஊஞ்சலாடும் திட்டங்கள் எத்தனை ….

திட்டம் போட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் –
போதுமான அக்கரையின்மை காரணமாக ஆண்டுக்
கணக்கில் முடிவடையாமல் இருக்கும் திட்டங்கள்
எத்தனை ….

நாட்டின் முக்கியமான தேவை மின்சக்தி.
இதற்குத் தேவையான நிலக்கரி – 70 சதவீதம்
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
நம் நாட்டிலேயே நிலக்கரி வளம் இருந்தாலும் –
அதைத் தோண்டி எடுப்பதில் சிக்கல் ….

(மலேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதியில்
கிடைக்கும் கமிஷன்
கவர்ச்சிகரமாக இருக்கும் வரை – உள்நாட்டு
உற்பத்தியில் எப்படி கவனம் போகும் ?)

அதையும் மீறி – அவசியமாகத் தேவைப்படும்
நிலக்கரியை தோண்டி எடுத்து வியாபாரம் செய்யும்
உரிமையையும் அரசாங்கம் தங்களுக்கு வேண்டிய
அரசியல் தரகர்களுக்கே தாரை வார்க்கும் அவலம் –

லைசென்சு கிடைத்து 10 ஆண்டுகள் ஆனாலும்
அந்த முதலாளிகள், நிலக்கரியைத் தோண்டி
எடுக்காமலே இருக்கும் மர்மம் ….

நாட்டின் முக்கிய கனிம வளங்கள் அனைத்தின்
சுரங்க உரிமையும் –
தனிப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு
பண முதலைகளுக்கு தாரை வார்க்கப்படும் அநியாயம் …

காடுகளிலும், மலைகளிலும் காணப்படும்
கனிம வளங்களை இந்த ஏகபோக முதலாளிகள்
சுரண்டிச் சாப்பிட,
அங்கு ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும்
பழங்குடி மக்களை விரட்டி அடிக்கும் அநியாயம் ….

புதிதாக தொழிற்சாலைகளை, கட்டமைப்பு வசதிகளை,
உணவு உற்பத்தியை – அதிகரிக்கவோ, ஊக்கப்படுத்தவோ
திறனில்லாத அரசியல்வாதிகள் –

எதற்கெடுத்தாலும் அந்நிய முதலீட்டை நம்பி இருக்கும்
அவலம் –
தொடர்ந்து அடுக்கடுக்காக ஊழல் புகார்கள் வந்தாலும்,
கோடிக்கணக்கில் கொள்ளையடிப்பது கண்ணெதிரே
தெரிந்தாலும் –

ஊழல் வழக்குகளில் விசாரணையை விரைவாக
நடத்தி முடிக்கவோ, கடுமையான தண்டனைகளை
விதிக்கவோ – விரும்பாத அரசாங்கம்.
(தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்துக் கொள்ள
யார் தயாராக இருப்பார்கள் !)

இத்தனை ஆண்டுகளில் எந்தவொரு அரசியல் –
ஊழல்வாதியின் சொத்தாவது இந்தியாவில்
பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறதா ?
இந்த நாட்டின் சீர்கேட்டிற்கு காரணம் ஜனநாயகம்
தான் என்று பலபேர் நினைக்கிறார்கள்.
உங்களில் சிலருக்கு கூட அதுபோல் தோன்றலாம்.
பல சமயங்களில் நான் கூட அது போல் நினைப்பேன் !
ஆனால் இது என் தீர்மானமான எண்ணம் அல்ல –
சில சமயங்களில் மட்டும் வந்து போகும் கடுப்பு …!!!

கொஞ்சம் யோசித்தால் …
-இப்போது மட்டும் நாம் என்ன
ஜனநாயகத்திலா வாழ்கிறோம் ?
சுதந்திரம் – வந்த பிறகு அல்ல
வருவதற்கு முன்னரே
பிரதமர் பதவிக்கு நம் நாட்டில் போட்டி வந்து விட்டிருந்தது.
முதலில் ஜின்னாவிற்கும் நேருவிற்கும் –
பிறகு நேருவுக்கும் படேலுக்கும் …

காந்திஜியின் விருப்பம் –
வல்லபாய் படேல் ஒதுங்கினார் ..
ஜவஹர்லால் நேரு பிரதமராக வந்தார்.

அதன் பிறகு ? வரிசையாக –
நேருவின் மகள் இந்திரா,
இந்திராவின் மகன் ராஜீவ்,
ராஜீவின் மனைவி சோனியா
(defacto பிரதமராக), இப்போது அவரது
மகன் ராகுல் – காத்திருப்பு பிரதமராக !
( prime minister in the waiting )

(நடுவில் கொஞ்சம் மறந்த பக்கமாக அற்ப, சொற்ப
காலங்களுக்கு பிரதமராக இருந்த மற்றவர்களை
விட்டு விடுவோம் )
அதன் பிறகும் வரிசையில் காத்திருப்பது
ராகுலின் சகோதரி
ப்ரியங்கா வாத்ரா(காந்தி-நேரு) !!

நேரு குடும்பத்தினரைத் தவிர வேறு யாராவது
காங்கிரஸ் கட்சியில் – தலைமையில் –
நீடித்து அதிகாரம் செலுத்த முடியுமா?
காங்கிரசில், எவ்வளவு கெட்டிக்காரராக, புத்திசாலியாக
இருந்தாலும் தலைமையை மறுத்து எதாவது பேசி விட
முடியுமா ?

ஜனநாயகம் என்று சொன்னாலும் –
இந்த நாட்டில்
எத்தனை தேர்தல்கள் வந்தாலும் ஜெயிப்பது
ஊழலும், பொறுக்கித்தனமும், கேடித்தனமும்,
மோசடியும் தானே ?

(தொடர்வோம் …)

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to சர்வாதிகாரம் வந்தால் இந்தியா ஜெயித்து விடுமா …? (கொ.த.கொ.வி. Part-6)

  1. PSGURUCHANDRAN's avatar PSGURUCHANDRAN சொல்கிறார்:

    tever you say is 100% correct.
    But where is the solution?
    Instead of only pointing a finger, possible solutions to the problems posed have to be worked out.

  2. ravikumar's avatar ravikumar சொல்கிறார்:

    I read an article in a Magazine called The Economist five years back. The article was abou Comparison of China & India. One statement was crisp in the ” In china the Project moves, whereas in India Paper moves”.

  3. c.venkatasubramanian's avatar c.venkatasubramanian சொல்கிறார்:

    SYSTEM Should change, Effect military rule,solution for India..We donot understand the real
    meaning of FREEDOM

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.