“மதம்” “பிடித்த” அரசியல்வாதிகளும், பரபரப்புக்கு அலையும் தொலைக்காட்சிகளும்…

“சீ – நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு”
என்று ஒரு வசனம் வரும். அதுபோல் தான் ஆகி விட்டது
நம் செய்தி தொலைக்காட்சிகளும், பொறுப்பற்ற
அரசியல்வாதிகளும் படுத்தும் பாடு.

சூடான, பரபரப்பான செய்திகள் எப்படியாவது
கிடைக்காதா என்று அலைகின்றன டெல்லி
தொலைக்காட்சிகள். எங்காவது தீ பற்றினால்,
அடுக்குமாடி கட்டிடங்கள் விழுந்தால், கற்பழிப்பு
சம்பவம் நடந்தால், பிணங்கள் விழுந்தால் –
இவர்களுக்கு பரம சந்தோஷம். ரிஷிகேஷ்,
கேதார்நாத் – உத்தரா காண்ட் செய்திகள் ஒருவழியாக
முடிவுக்கு வந்து விட்டன.

அடுத்து எதாவது கிடைக்காதா என்று
அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு கிடைத்து விட்டது
“பப்பி” விவகாரம். வம்பு வளர்க்கவே காத்திருக்கும்
அரசியல்வாதிகளுக்கு – போதாதா இந்த தீனி
அடுத்த சில நாட்களுக்கு.. ? ஒரு முறை கற்பழிப்பு
நடந்தாலே – நாள் முழுவதும் 100 முறை அதை
திரும்ப திரும்ப காட்டிக்கொண்டிருக்கும் டிவி க்கள்
இதை எந்த அளவு பெரிது படுத்த முடியுமோ –
அந்த அளவு முயல்கின்றன.

தொலைக்காட்சிகளில் பரபரப்பான விவாத மேடை –

2002-ல் கோத்ராவில் நடந்ததை விலாவாரியாக
ஒரு குரூப் விவரிக்கவும்,
ஏன் 1984-ல் டெல்லியில் நடந்தது யாருக்கும்
நினைவில்லையா என்று இன்னொறு க்ரூப்பும்,
ஏன் 2012-ல் வடகிழக்கே மணிப்பூரில் உங்கள்
ஆட்சியில் நடந்தது எந்தவிதத்தில் குறைவு என்று
இன்னொரு க்ருப்பும் மாற்றி மாற்றி கேட்க –

போலி என்கவுண்டரில் இதுவரை அதிகம்
உயிர் இழந்தவர்கள் இந்த மதத்தினரா –
அந்த மதத்தினரா என்று விலாவாரியாக
எண்ணிக்கைகளை அடுக்க –

-நிகழ்ச்சித்தொகுப்பாளர்
தன்னால் முடிந்தவரை சூடேற்றி தூண்டி விட
இதைத்தான் மேலே சொன்னேன் –
“சீ நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு” என்று.

முதலில் மத விஷயங்களை அரசியல்வாதிகளோ,
தொலைக்காட்சிகளோ இவ்வாறு விவாதம் செய்வதை
ஒரு முடிவிற்கு கொண்டு வர வேண்டும்.

சிறுபான்மை மதத்தினரின் காவலர்கள் தாங்கள்
தான் என்று கூறிக்கொண்டே, அதே சமயத்தில் –
எங்காவது மத மோதல்கள் நிகழாதா, சிறுபான்மையினர்
தாக்கப்பட மாட்டார்களா, தங்களை முன் நிறுத்திக் கொள்ள
இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்று அலைகிறது
காங்கிரஸ் கட்சி. தங்களுக்கு ஓட்டு வாய்ப்பு கிடைக்க
வேண்டும் என்பதற்காகவே தாங்கள் அதிகாரத்தில் இல்லா
விட்டால், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கிடைக்காது
என்கிற அச்சத்தை உண்டு பண்ணுகிறார்கள் காங்கிரஸ்
கட்சியின் சில தலைவர்கள்.
இந்த நாடு, இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது.
அவரவர் தங்கள் மத நம்பிக்கையின்படி சுதந்திரமாகவும்,
பாதுகாப்பாகவும் வாழ நமது அரசியல் சட்டம் உரிமை
கொடுக்கிறது.

நடைமுறையில் நம் அன்றாட வாழ்க்கையில் –
இந்துவாகட்டும், இஸ்லாமியராகட்டும், கிறிஸ்தவராகட்டும் –
மக்களிடையே பொதுவாக எந்த விரோதமும் இல்லை.
நாம் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து தான் வாழ்கிறோம்.
ஒன்றாகத்தான் தொழில் செய்கிறோம்.
சகஜமாகத்தான் பழகுகிறோம்.

இவ்வளவு பெரிய நாட்டில் எங்காவது, எப்போதாவது –
சிறிய அளவில் மோதல்கள் ஏற்படக்கூடும்.
மதம் என்றில்லை –
இரண்டு வேறுபட்ட மொழி பேசுபவரிடையே –
இரண்டு அண்டை மாநிலத்தவரிடையே,
ஏன் ஒரே மாநிலத்தில் கூட இரண்டு ஊர்களைச்
சேர்ந்தவரிடையே,
இரண்டு வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவரிடையே –
இத்தகைய மோதல்கள் அவ்வப்போது நிகழத்தான்
செய்கின்றன.

பொறுப்புள்ள தலைவர்கள்,
அரசியல்வாதிகள்,
மதப் பெரியவர்கள் -இத்தகைய மோதல்கள் மேற்கொண்டு
உருவாகாமல், பரவாமல், தொடராமல் –
தவிர்க்கும் வழியை மேற்கொள்ள வேண்டுமேயன்றி,
இவை மேலும் மேலும் பெரிய அளவில் பரவ
எந்தவிதத்திலும் துணை போகக்கூடாது.

ஆனால் தரம் தாழ்ந்த சுயநல அரசியல்வாதிகளும்,
மதவெறியர்களும், எதிலும் காசு பார்க்க எண்ணும்
மீடியாக்களும் – இவற்றை ஊதி வளர்ப்பதிலேயே
குறியாக இருக்கின்றனர்.

சில நாட்கள் முன்பு –
வேறு அவசரத் தலைப்புகள் இல்லாத நேரத்தில்
நிதானமாக வெளியிடலாம் என்று நான் எழுதி
வைத்திருந்த ஒரு இடுகையை, இப்போதே
வெளியிடுவது தான் பொருத்தமாக இருக்கும் என்று
நினைக்கிறேன். அந்த இடுகை கீழே –

————————

“மத நம்பிக்கையும் – மத வெறியும்”

உலகின் முக்கியமான மதங்கள் நான்கு.

இந்த மதங்களை பின் பற்றும் மக்கள் தொகையின்
அடிப்படையில் வரிசைப்படுத்தினால் –

1) கிறிஸ்தவ மதம் –
உலக மக்கள் தொகையில் 33.32 %
தோன்றிய காலம் 1வது நூற்றாண்டு.
இடம் மத்திய கிழக்கு.

2) இஸ்லாமிய மதம் –
உலக மக்கள் தொகையில் 21.01 %
தோன்றிய காலம் 7-ம் நூற்றாண்டு.
தோன்றிய இடம் அரேபியா.
3) இந்து மதம் –
உலக மக்கள் தொகையில் 13.26 %
உலகின் மிகப் பழைய மதமாகிய இது
தோன்றிய காலம் – உறுதி செய்யப்பட முடியவில்லை.
6500 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதாரங்கள்
கிடைத்திருப்பதால் – அதற்கு முந்தையது என்று கொள்ளலாம்.
தோன்றிய இடம் – பாரதம்.

4) புத்த மதம் –
உலக மக்கள் தொகையில் 5.84 %
தோன்றிய காலம் கி.மு.5ஆம் நூற்றாண்டு.
தோன்றிய இடம் – பாரதம்.
இரக்கமுள்ள மனிதனாக இரு.

நோயுற்றவருக்கு உதவு.

சம்பாதிப்பதில் ஒரு பகுதியை தானமாகக் கொடு.
கொடுப்பதில் மகிழ்ச்சி கொள்.

மற்றவர் துன்பத்தில் மகிழ்ச்சி கொள்ளாதே.

மன்னிக்கப் பழகு. மற்றவர் செய்த கேடுகளை
மறக்கப் பழகு.

துன்பம் நேர்கையிலும், மற்ற
எந்த சூழ்நிலையிலும் அமைதியாக இருக்கப் பழகு.

ஒழுக்கமுடன் வாழ்.
மற்றவர் வெறுக்கும்படி நடக்காதே.

தவறு செய்வது இயற்கை . அதை உணர்ந்து,
திருந்துபவனே
உண்மையான மனிதன் ஆகிறான் !
உண்மை, நேர்மை,
இரக்கம், அன்பு, பணிவு,
கருணை, எளிமை –
ஆகிய குணங்களை அனைவரும் பெற்றிட வேண்டும்.
– அனைத்து மதங்களும் போதிக்கும் பொதுவான
விஷயங்கள் இவை . அத்தனை மதங்களும்
அதையே தான் சொல்கின்றன என்றால் – பின்னர்
இத்தனை மதங்களுக்கான அவசியமென்ன ?

வெவ்வேறு கால கட்டங்களில்,
ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத சமுதாயங்கள்
உலகின் பல்வேறு நிலப்பகுதிகளில் வாழ்ந்து வந்ததால் –

அவரவர் பழக்க வழக்கங்களின் அடிப்படையிலும்,
நம்பிக்கையின் அடிப்படையிலும் –
அந்தந்த இடங்களில் தோன்றிய
சமுதாயப் பெரியவர்களின் தாக்கத்திலும் –
வெவ்வேறு மதங்கள் உருவாகியது – புரிகிறது.
(இதில், இருப்பவற்றுக்குள் மிகப்பழமையான மதமாகிய
இந்து மதம் -குறிப்பிட்ட எவராலும் –
தோற்றுவிக்கப்படவில்லை)

இந்த மதங்கள் அனைத்திலும் – ஏகப்பட்ட பிரிவுகள்.
அந்த பிரிவுகளுக்குள் பற்பல உட்பிரிவுகள்.

உலகில் எவ்வளவோ மொழிகள் புழக்கத்தில் இருக்கின்றன.
ஆனால் இவை அனைத்தின் நோக்கமும், தேவையும்,
பயனும் ஒன்றே தானே ? அதற்காக ஒரே மொழி போதும்
என்று சொல்லி விடுவோமா ?

எத்தனை மதங்கள் இருந்தாலும்,
எத்தனை கடவுள்களின் பெயரைச் சொன்னாலும் –
அவற்றின் லட்சியம் -குறிக்கோள் ஒன்றே தானே ?

அனைத்து மதங்களும் மனித சமுதாயத்திற்கு
தேவையான, நல்ல விஷயங்களை சொல்லத் தானே
உருவாயின ?

எத்தனை நதிகள் இருந்தாலும், அவை அனைத்தும்
இறுதியில் சென்று சேரும் இடம் கடல் தானே ?

மதங்கள் எத்தனை இருந்தாலும், அவை
அனைத்தும் படைத்தவன் என்னும் ஒரு சக்தியையே
நோக்கித் தானே செல்கின்றன ?

எந்த பெயரைச் சொல்லி அழைத்தால் என்ன ?
எந்த மொழியில் அழைத்தாலென்ன ?
படைத்தவனுக்கு புரியாமலா  போய் விடும் ?

அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.
மற்றவர்களுக்குத் தொல்லை ஏற்படாத வகையில்,
அவரவர் நம்பிக்கையின்படி வாழ்வதில் என்ன தவறு ?

அப்படி இருக்கையில்,
அவனை வழிபடும் பல்வேறு சமூகத்தினரிடையே
மோதல்கள் ஏன் ?

மத நம்பிக்கைக்கும், மத வெறிக்கும் உள்ள
வித்தியாசம் தான் இத்தனை மோதல்களுக்கும்,
கலவரங்களுக்கும் காரணம்.

அவரவர், தான் நம்பும் வழியில், தான் விரும்பும்
விதத்தில் போய்க்கொண்டிருக்கும் வரையில்
எந்த பிரச்சினையும் இல்லை.

நம் சமூகத்தைச் சேராதவர்கள் நம் விரோதிகள் –
என்று பக்குவம் இல்லாத மிகச்சிலர்
தவறாக நினைப்பதாலேயும் ,
(இத்தகையோர் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள் )

மத வெறியர்களும், மதத்தை வைத்து பயன் பெற
முயலும் அரசியல்வாதிகளும், பரபரப்பு செய்திகளை
வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும்
தொலைக்காட்சிகளும் –

இத்தகைய எண்ணங்களை ஊக்குவித்து,
தங்கள் பலத்தாலும், செல்வத்தாலும்,செல்வாக்காலும்
பிரச்சினைகளை செயற்கையாக உருவாக்குவதே
மதக் கலவரங்களும், மோதல்களும் நிகழக் காரணம்
ஆகின்றன.

இறைவன் படைப்பில் மனிதர் அனைவரும் சமம்.
ஜாதியாலோ, மதத்தாலோ –
யாரும் உயர்ந்தவரும் இல்லை –
யாரும் தாழ்ந்தவரும் இல்லை.

அவரவர் உயர்வு பெறுவது தமது பண்பினாலும்,
நடத்தையாலும், செய்கையினாலும் மட்டும் தான்
என்பதை உணரும் பக்குவத்தை அனைவரும் பெற்றால் –
அப்பாவி மக்களைப் பயன்படுத்தி,
லாபம் பெற நினைக்கும்
சுயநலவாதிகள் காணாமல் போய் விடுவர்.
சமூக ஆர்வலர்களும், மதப் பெரியவர்களும்
இத்தகைய எண்ணங்களை, கருத்துக்களை –
திரும்பத் திரும்ப மக்களிடம் கொண்டு செல்ல
வேண்டும். இறை நம்பிக்கையை ஏற்படுத்துவதை விட,
வளர்ப்பதை விட, சகிப்புத் தன்மையை போதிப்பது தான்
மதபோதகர்களின் முக்கிய பணியாக இருக்க வேண்டும்.
நான் இந்த இடுகையை ஓரளவு எழுதிய பின் –
இதற்குத் துணையாக பலமான ஆன்மிக அடித்தளம்
எதாவது கிடைக்குமா என்று தேடினேன்.

அற்புதமான உரைக்கோவை ஒன்று கிடைத்தது.
அனைத்து சமயத்தினரும் மதிக்கும் –
சமூகத்தின் மீது உண்மையான அக்கரை உடைய –
துறவி ஒருவரின் உரை அது. சுமார் 70 ஆண்டுகளுக்கு
முன் அவர் ஆற்றிய உரை இது. என்ன சொல்கிறார் –
நீங்களே பாருங்களேன் –

—————
“எல்லா சமயங்களும் கடவுளை வழிபட ஏற்பட்டவையே.
எல்லா சமயங்களும் கடவுள் ஒன்றே என்றே சொல்கின்றன.
ஒருவரேயான அந்தக் கடவுள் எந்த சமயத்தின் மூலம்
வழிபட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார்.
எனவே –

எவருமே தாங்கள் பிறந்த சமயத்தை விட்டு வேறோரு
சமயத்தை தழுவ வேண்டியது இல்லை.

கோயில், சர்ச், மசூதி, விஹாரம் முதலிய கட்டிடங்கள்
ஒன்றுக்கொன்று வித்தியாசப்படலாம். உள்ளே இருக்கிற
மூர்த்தி அல்லது சின்னம் மாறுபடலாம். ஆனால் –
அநுக்ரஹம் செய்கிற பரமாத்மா மாறவில்லை. ஒவ்வொரு
தேச ஆச்சாரத்தையும், ஒவ்வொரு ஜனக்கூட்டத்தின்
மனப்பான்மையையும் பொறுத்துப் பல்வேறு சமயங்கள்
ஏற்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் ஒரே பரமாத்மாவை
அவரவர் மனோபாவத்தின்படி பக்தி செய்து, அவரோடு
சேர்வதற்கு வழி செய்பவையே ஆகும்.

எனவே, எவரும், தங்கள் சமயத்தை விட்டு விட்டு
இன்னொன்றுக்கு மாற வேண்டிய அவசியம் இல்லை.
இப்படி சமயம் மாறுகிறவர்கள் – தாங்கள் பிறந்த
சமயத்தையும் குறைபடுத்துவது மட்டுமன்றி,
தாங்கள் சேருகிற சமயத்தையும் குறைவு படுத்துகிறார்கள்.

கடவுள் எல்லா சமயங்களுக்கும் பொதுவானவர் என்ற
எண்ணம் இல்லாமல், அவரைக் குறுக்குவதால் தானே
ஒரு சமயத்தை விட்டு இன்னொன்றில் சேருகிறார்கள் ?

தங்கள் சமயத்து கடவுள் பிரயோஜனமில்லாதவர் என்று
நினைத்து இன்னொரு சமயத்திற்கு தாவுகிறார்கள்.

மாறுகிற புதுசமயக் கடவுளாவது எல்லாரையும்
காப்பாற்றுபவராக நினைக்கிறார்களா ? இல்லை –
அப்படி நினைத்தால் தான் மாறவே வேண்டாமே !

இவர்கள், தாங்கள் பிறந்த சமயத்திலேயே இருந்து
வழிபட்டாலும், இவர்கள் மாறுகிற சமயத்தின் கடவுள்
இவர்களுக்கு அநுக்கிரஹம் செய்வார் என்கிற நம்பிக்கை
இல்லாததால் தானே சமய மாற்றத்துக்கே அவசியம்
ஏற்படுகிறது.

அதாவது தாங்கள் மாறுகிற புது சமயத்துக்கும்,
அதன் கடவுளுக்கும் கூட –
இவர்கள் குறுகலான எல்லையை காட்டி விடுகின்றனர் !

ஒரு சமயத்தில் கௌரவபுத்தி இருப்பதாக நினைத்து
அதற்கு மாறும்போதே, அதை வாஸ்தவத்தில்
அகௌரவப்படுத்தி விடுகிறார்கள்.

இந்து சமயம் “இது ஒன்றே மோட்ச மார்க்கம்” என்று
சொல்லாமல் இருக்கிறது. இந்து சமயத்தில் –
பிறரைத் தன் சமயத்துக்கு மாற்றுவது என்பது கிடையாது.
ஏனென்றால் – ஒரு பரமாத்மாவை அடைவதற்கான
பல மார்க்கங்களே பல சமயங்களும் என்று
நம் முன்னோர்கள் உணர்ந்திருக்கின்றனர்.
வேதம் – ஒரே சத்தியத்தை தான் ஞானிகள்
பல பெயர்களில் சொல்கிறார்கள் என்கிறது”.

யாருடைய உரை இது ?
இன்றைக்கு அப்படியே பொருந்தக்கூடிய இந்த
உரையை 70 ஆண்டுகளுக்கு முன்னர் ஆற்றிய
அந்த துறவி யாராக இருக்க முடியும் ?

periyavar-1

 

periyavar-12

 

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to “மதம்” “பிடித்த” அரசியல்வாதிகளும், பரபரப்புக்கு அலையும் தொலைக்காட்சிகளும்…

  1. ஜோதிஜி's avatar ஜோதிஜி சொல்கிறார்:

    உலகில் அதிக மக்கள் பின்பற்றும் கிறிஸ்வமதம் என்றால் இனியும் ஏன் இவர்கள் மதமாற்றத்தில் தீவிரவாக ஈடுபடடுக் கொண்டிருக்கின்றார்கள்?

  2. ஜோதிஜி's avatar ஜோதிஜி சொல்கிறார்:

    மதமாற்றம் — விளிம்பு நிலை மனிதர்கள்.
    http://deviyar-illam.blogspot.in/2012/08/blog-post_31.html

    உங்கள் கருத்தை எதிர்பார்க்கின்றேன்

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி ஜோதிஜி.

      மதங்கள் உருவானது – மனிதரை நல்வழிப்படுத்தவே.

      ஆனால் மத மாற்றங்கள் நிகழ்வது –

      சிலரின் அறியாமை காரணமாகவும்,
      சிலரின் நியாயமில்லாத ஆசைகள் காரணமாகவும்,
      சிலரின் சுயநலம் காரணமாகவும்,
      சிலரின் பொருளீட்டும் தொழிலாக அது ஆகி விட்டதாலும்.

      – சட்டம் போட்டு இதைத் தடுக்க முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. பொதுவாக –
      சமூகத்தின் தாழ்நிலையில் இருப்பவர்களிடையே –
      கல்வி மற்றும் பொருளாதார
      முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாலும்,

      மதம் குறித்த மக்களின் சிந்தனையை நேர்மையான
      விதத்தில் விசாலப்படுத்துவதன் மூலமுமே –
      மக்களை (ஏ)மாற்றத்திலிருந்து,
      விடுவிக்க முடியும் –

      என்பது என் கருத்து.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  3. நிரஞ்சன் தம்பி's avatar நிரஞ்சன் தம்பி சொல்கிறார்:

    அரசியல்வாதிகள், மதவாதிகள், முதலாளித்துவவாதிகள் அவர்களுக்கு கொடைப் பிடிக்கும் ஊடகங்கள் இவை யாவும் சமூகத்தினைப் பற்றிக் கொண்ட புற்றுநோய்கள், தொடக்கத்திலே வைத்தியம் பார்க்கா விட்டால் மக்களை, அவர் தம் வாழ்வியலை, தேசத்தை கரையான் அரிப்பது போல அழித்து உழுத்துவிடச் செய்து விடுவர், விழித்துக் கொள்ள வேண்டும் நாம்.

  4. BC's avatar BC சொல்கிறார்:

    இலங்கை தமிழர்களிடையேயும் அதிக அளவில் கிறிஸ்தவமத மதமாற்றம் நடை பெற்று கொண்டிருக்கிறது. அதை பற்றி கேட்டால் அவர்கள் தங்கள் மன நிம்மதிக்கு மாறுகிறார்கள் உங்களுக்கு என்ன பிரச்சனை என்பார்கள்.

    //மத மாற்றங்கள் நிகழ்வது –

    சிலரின் அறியாமை காரணமாகவும்
    சிலரின் நியாயமில்லாத ஆசைகள் காரணமாகவும்
    சிலரின் சுயநலம் காரணமாகவும்
    சிலரின் பொருளீட்டும் தொழிலாக அது ஆகி விட்டதாலும்.//

    சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

  5. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    “வெறும்” மதமாற்றத்தால் பயனேதுமில்லை. ஒருவன் மனம்
    மாறி மதம் மாறினால் மட்டுமே “மாற்றமாக” கொள்ள வேண்டும்.

    தூக்குத் தணடணனை கைதியான, சுப்பிரமனிய பிள்ளை,
    சிறைக்கு பிரார்த்தனைக்கு வரும் “ஊழியக்காரர்களின்”
    பொய்யுரையை நம்பி, உயிருக்கு ஆசைப்பட்டு “கிறித்தவனாக”
    மாறிவிடுகிறார். தினமும் “கர்த்தரை” நம்பி தொழுகிறார்.
    ஆனால், அவர் விரும்பிய பலன் கிட்டவில்லை. தூக்கு கயிறு
    துரத்திய வண்ணமே இருக்கிறது. இறுதியில் கழுத்தில்
    விழுந்தும் விடுகிறது. அந்த நொடியில், கழுத்தில் தூக்கு
    கயிறு விழுந்த நொடியில், அவரது வாயிலிருந்து வந்த
    வார்த்தைகள் “முருகா நல்ல கதி கொடுப்பா”

    மேற்படி சம்பவத்தை திரு.தியாகு (அவரும் தூக்கு தண்டனை
    கைதியாக இருந்தவர்தான்) விவரித்து எழுதியிருக்கிறார்.

    ஊழியக்காரர்கள், ஏழ்மையிலும் வறுமையிலும் பிரச்சனைகலிலும்
    உழன்று கொண்டு இருப்பவர்களைத் தான் “குறி” வைக்கிறார்கள்.
    பல நேரங்களில் குறி இலக்கை அடைந்தாலும், வெகு சில
    நேரங்களில் “தவறி” விடுவதுமுண்டு.

    கோடம்பாக்கம் லிபர்டி நிறுத்தத்தில், இரவு பணியை முடித்து
    விட்டு, பேருந்துக்காக நின்று கொண்டிருக்கிறேன். ஒரு ஞாயிறு
    காலை நேரம். அங்கு ஒரு பாட்டியம்மா, உதிர்ந்த பழங்களை
    விற்று வருகிறாள். அவளுக்கும் customers உண்டு. கையில்
    பைபிளோடு வெள்ளை உடை அணிந்த இளைஞர் ஒருவர்
    அவளைத் தாண்டி போகிறார். சிறு நொடிப் பொழுதில், திரும்பி
    அவளைப் பார்த்து, “ஆயா நல்லா இருக்கியா” என்கிறார். பதில்
    ஏதுமில்லை. “போ ஆயா. எங்க கோயிலுக்கு வந்தா தான்
    பேசுவேன்” என்கிறார். “போ போ. வேலயப் பாரு” என்றள் அந்த
    பாட்டி.

    ஆசைக்கு ஆட்பட்டு “மதம்” மாறிப் போன இரண்டு பிள்ளைகள்
    தாயாரின் பிணத்துக்குக் “காரியம்” செய்ய மறுத்ததையும்
    கண்டிருக்கிறேன். இந்து தாயாருக்கு, கிறித்தவ பிள்ளை(கள்)
    எவ்விதம் காரியம் செய்ய முடியும்? எந்த விதத்தில் செய்வது
    என்பது விவாதம். வீட்டுக்”குள்” நடக்கும் பிரச்சனை, நாம் என்ன
    செய்ய முடியும் என்று, துக்கத்திற்கு வந்தவர்கள் இருக்க, ஒரு
    பெரியவர் (உறவினரும் தான்) பிள்ளைகளின் யோக்கியதையை
    விமர்சிக்க, காரியம் “நடந்தது”.

    வைராக்கியம் உள்ளவர்களை, எந்த ஆசை வார்த்தையும்,
    அசைத்து விடாது.

  6. appannaswamy's avatar appannaswamy சொல்கிறார்:

    was that saint swami chidbhavananda?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.