அழித்தது யார் … ?
(1882-ம் வருடத்திய
புகைப்படங்கள் கூறுகின்றன…)
அற்புதமான புகைப்படங்கள் சில கிடைத்தன.
இவற்றில் பெரும்பாலானவை சுமார்
150 வருடங்களுக்கு முன்னர் வெள்ளையர் காலத்தில்
Geological Survey of India
(ஜியோலோஜிகல் சர்வே )-வுக்காக கார்ல் க்ரிஸ்பேச்
என்கிற ஆங்கிலேயர் எடுத்த புகைப்படங்கள்.
(இந்த புகைப்படப் புதையலுக்கு செல்ல
எனக்கு வழி காட்டிய நண்பர் ஸ்ரீனி க்கு என்
மனமார்ந்த நன்றிகள் )
கேதார்நாத் கோவிலிலும், அதற்குச் செல்லும்
பாதையிலும் நிகழ்ந்த இயற்கையின் கோர தாண்டவத்தை
தினமும் இப்போதும் தொலைக்காட்சிகளில்
கண்டு கொண்டே இருக்கிறோம்.
இதற்குக் காரணம் யார் என்பதை விளக்கக்கூடியவை
இந்த புகைப்படங்கள்.
இந்த பழைய புகைப்படங்களையும், பின்னர் –
இன்றிலிருந்து 40, 20, 15,10 ஆண்டுகளுக்கு
முன்னர் எடுத்த புகைப்படங்களையும் –
கடைசியாக -சென்ற வாரம் நிகழ்ந்த சேதங்களுக்கு
முன்னர் எடுத்த படங்களையும் பார்த்தால் – இயற்கையை
மனிதன் எந்த அளவிற்கு ஆக்கிரமித்திருக்கிறான்/
வழிமறித்திருக்கிறான் என்பது
சொல்லாமலே விளங்குகிறது.
இந்த கேதார்நாத் கோயிலே ஒரு அற்புதம்.
நினைத்துப் பார்த்தால் இது எப்படி சாத்தியமானது
என்றே புரியவில்லை.
1500 ஆண்டுகளுக்கு முன்னர் –
சரியான சாலை வசதிகளோ,
நதிகளையும், மலைகளையும் விளக்கிக் காட்டும்
பூகோளப்படங்களோ,
எந்தவித போக்குவரத்து சாதனங்களோ,
பாதுகாப்போ – இல்லாத அக்காலத்தில் –
தெற்கே, இன்றைய கேரளத்தில் உள்ள “காலடி”
என்னும் சிறிய கிராமத்திலிருந்து –
கால்நடைப்பயணமாகவே இமயத்தின் உச்சி வரை
பயணம் சென்று, கடல்மட்டத்திலிருந்து 12,000 அடி
உயரத்தில் கங்கை பிறக்கும் இடத்தில் –
மந்தாகினி ஆற்றங்கரையில் இந்த கேதார்நாத்
கோவிலை ஸ்தாபிதம் செய்தவர் ஜெகத்குரு
ஆதிசங்கரர். (இந்த கோவிலுக்கு பின் பக்கத்திலேயே
அவரது சமாதியும், அதில் அவருக்கென ஒரு கோவிலும்
இருக்கிறது.)
இதையொட்டிய கட்டிடங்கள்
பிற்காலத்தில் உருவாகி இருக்கலாம் என்றாலும்,
குறைந்த பட்சம் யந்திர பிரதிஷ்டையும்,
சிவலிங்க பிரதிஷ்டையும் சங்கரரால் தான்
செய்விக்கப்பட்டன என்பதற்கு சரித்திர ஆதாரங்கள்
உள்ளன. இத்தகைய அற்புதமான இடத்தை
சிவன் கோயில் கட்ட அவர் தேர்ந்தெடுத்ததற்கு
காரணம் இல்லாமலா போகும் ? அதைப்
போற்றிப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு
இருக்கிறதல்லவா ? வருடத்தில் 5 மாதம் மட்டுமே
(மே முதல் செப்டம்பர் வரை ) இங்கு போய்வர
முடியும். மீதி நாட்கள் எல்லாம் இந்த இடங்களை
இமயத்தின் அடர்ந்தபனி மூடி இருக்கும்.
1960 வரை யாத்ரிகர்கள், ஹரித்வாரிலிருந்து –
கேதார்நாத் வரையிலான தூரத்தை மலைப்பாதையில்
நடந்தே கடந்தார்கள். தார், கான்க்ரீட் சாலைகள்
எதுவும் இல்லை. இன்றைக்கு 40 ஆண்டுகளுக்கு
முன் வரை கோவிலின் அருகே – நிரந்தர கட்டிடம்
எதுவும் இல்லை. அருகிலேயே ஓடிக்கொண்டிருந்த
மந்தாகினி ஆற்றை ஆக்கிரமித்து,
அதன் போக்கை திருப்பிவிட்டு,
கொஞ்சம் கொஞ்சமாக கட்டிடங்கள் வந்திருக்கின்றன.
10 ஆண்டுகள் முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படங்களில்
கூட அதிக கட்டிடங்கள் இல்லை.
அதன் பின்னர் தான் எல்லாம்.
மலைகளில், போக்குவரத்து வசதிகளுக்காக
சாலைகள் அமைப்பதையோ,
ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டுவதையோ –
நான் ஒட்டுமொத்தமாக குறை சொல்லவில்லை.
இவை சுற்றுப்புற சூழ்நிலைகளை கவனித்து,
தகுந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டபிறகு,
வல்லுனர்களின் ஆலோசனைப்படி –
மிக்க கவனத்துடன் செய்யப்பட வேண்டும்.
கண்டபடி மரங்களை வெட்டுவதும்,
காடுகளை அழிப்பதும்,
வெடிமருந்தைப் பயன்படுத்தி மலைப்பாறைகளைத்
தகர்ப்பதும், அபாயம் விளையக்கூடிய இடங்களில்
மிகப்பெரிய அணைகளை பொறுப்பில்லாமல் கட்டுவதும்,
மலைச்சரிவுகளை பலவீனப்படுத்துகின்றன.
மண் அரித்துச் செல்லப்படுவதால் பாறைகள்
பிடிப்பின்றி போகின்றன. ஆற்றை மிக ஒட்டி
அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டப்படுவதால் –
ஆறுகளின் போக்கு பாதிக்கப்படுகிறது.
கேதார்நாத் கோவிலைச் சுற்றி 3 புறமும் அற்புதமான
பனிச்சிகரங்கள். கோவிலுக்கு மேற்புறம் 3 கிலோமீட்டர்
தூரத்தில் காந்திசரோவர் என்கிற மிகப்பெரிய ஏரி
ஒன்று இருக்கிறது. அந்த ஏரியின் ஒரு பகுதி உடைந்து,
அதிலிருந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மந்தாகினி ஆற்றின்
பாதையிலேயே வந்து இத்தனை சேதங்களையும்
உண்டு பண்ணி இருக்கிறது. மந்தாகினி ஆற்றின்
போக்கில் குறுக்கிட்டு பல கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்ததால்,
ஆறு திசை திருப்பப்பட்டு – கிடைத்த இடங்களில் எல்லாம்
நுழைந்து சென்றிருக்கிறது. அதே வெள்ளம்
படுசீற்றத்துடன் ரிஷிகேஷ் வரை தொடர்ந்து,
வழியில் குறுக்கிட்ட சகலத்தையும் புரட்டிப் போட்டிருக்கிறது-
அடித்துச் சென்றிருக்கிறது.
அழிவின் கோரங்களை அன்றாடம்
பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.
இடையில் – இந்த அழகான பழைய புகைப்படங்களையும்
பார்த்து இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டியதன்
அவசியத்தை மீண்டும் தெரிந்து கொள்வோமே !
——————————————————–
1882-ல் எடுக்கப்பட்ட கேதார்நாத் புகைப்படங்கள் –
40 ஆண்டுகளுக்கு முன் வரை
கேதார்நாத் கோவிலுக்குச் செல்லும் பாதை இது தான் –
20 ஆண்டுகளுக்கு முன்னர் –
பனிக்காலத்தில் –
கௌரிகுண்ட் -லிருந்து கேதார்நாத்
செல்லும் அற்புதமான மலைப்பாதை !
இரவில் ஜொலிப்பு !
கோவிலின் பின்புறத் தோற்றம் !
பின்னால் பனிமலைச்சிகரங்கள் !
20 ஆண்டுகளுக்கு முன் –
மந்தாகினி ஆற்றை வளைத்து – குடியேற்றம் !
ஆதிசங்கரரின் சமாதி -கோவில்
ஜெகத்குருவின் பளிங்குச்சிலை !
அழிவுக்கு முன் – நேற்றைய தோற்றம் !
அழிந்த பின் – இன்றைய தோற்றம்!


























‘இன்றை’க்கு “நான்” வாழ்ந்தால் போதும் எனும் எண்ணம் ஏற்படுத்திய ரணம் இது. பாடம் கற்க வாய்ப்பு…
கற்பதற்குதான் யாருமில்லை!
உண்மை தான் அஜீஸ்.
ஆனால் இந்த ரணம் –
பொறுப்பில் உள்ளவர்களையே
தாக்கும் நிலை உருவாகும்போது
பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம்
தன்னால் உருவாகும் – சரி தானே.. !
நமக்குத்தான் பொறுமை இல்லையோ ..!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
இயற்கை தன்னைத் தானே ஒரு போதும் அழித்துக்
கொள்வத்தில்லை. மனிதனும் அவன் விரும்பும் வசதிகளும்
தான் இயற்கைக்கு முழு முதல் எதிரி.
பிரசித்தப் பெற்ற ஸ்தலங்களுக்கு யாத்திரை போன காலம்
” மலையேறி” விட்டது. இப்போதெல்லாம் “பக்தர்கள்” எங்கு
போனாலும், அவர்கள் வீட்டில் உள்ளதைக் காட்டிலும்
கூடுதல் வசதிகளை எதிர்பார்க்கிறார்கள். பக்தர்கள் வசதிக்காக
பாதுகாப்பான சாலைகள், குடிநீர், கழிப்பிடம், உணவகம்
என்பது வரை சரிதான். மலைகளுக்கு நிகராக பல அடுக்கு
“காங்கிரீட்” கட்டிடங்கள் எல்லாம் ஓவரோ ஓவர்.
இம்மாதிரியான புராண இதிகாச ஸ்தலங்கள்
உள்ள மாநில அரசாங்கமோ, “வருமானத்தைக்” கருத்தில்
கொண்டு எல்லாவற்றையும் அழித்து, எதுவும் செய்ய
தயாராகவுள்ளது.
திடீர் சாமியார்கள், ட்ரஸ்டுகள் எல்லாம்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை “கிளைகள்” வைத்துக்
கொள்ள விழைகின்றன.
பெரும் பணக்காரர்கள் எல்லா
இடங்களிலும் கோடை/குளிர்கால ” வாசஸ்தலங்களை
அமைத்துக் கொள்ள் ஆவல் அதிகம் கொண்டுள்ளனர்.
தென்னகத்தில் கேரளத்திலும் தமிழ் நாட்டில் ஊட்டியிலும்
பெரும் மழைக் காலங்களில் ஆண்டு தோறும் நிலச்சரிவுகள்
நிகழ்ந்த வண்ணம் உள்ளது. சபரிமலையில் கடந்த இருபது
ஆண்டுகளில் இரண்டு பெரிய நிலச்சரிவுகள் நடந்து உயிர்பலி
வாங்கியுள்ளது. STAMPEDE வேறு. ஆயினும் ஆண்டு
தோறும் “விஸ்தரிப்பு” வேலைகள் நடந்த வண்ணம் உள்ளது.
எத்தனை நடந்தும் கற்றுக் கொள்ள வேண்டியவர்கள்
பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை.
உங்கள் கவனத்திற்கு: இந்தியாடிவைனில் மேற்படி
படங்களும், மத நம்பிக்கை சார்ந்த தொடர்புகளும்
நங்கு விவரிக்கப் பட்டுள்ளது.
நண்பர் வெங்கட்ரமணி,
நீங்கள் கூறி இருப்பது
நூற்றுக்கு நூறு உண்மை.
நினைத்தால் எரிகிறது.
அந்த எரிச்சலை தணித்துக்கொள்ளத்தான்
இத்தகைய இடுகைகள் …
எரிச்சல் கொஞ்சமாவது குறையுமல்லவா… ?
யார் இந்த நிலையை மாற்றுவது … ?
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
BHAJA GOVINDHAM BHAJA GOVINDHAM, GOVINDHAM BHAJA MUDAMATHE—-