கமலஹாசன் போன்றவர்களை
பயமுறுத்தக்கூடிய ஒரு தீர்ப்பு …..
செய்தித்தாள்கள் இந்த செய்திக்கு வைத்துள்ள
தலைப்பு “உடலுறவே திருமணமா?” என்பது தான்.
எனவே அதைவிட சிறிது நாகரீகமாகவும்,
அதே சமயம் பொருத்தமானதாகவும் இருக்கும் என்று
கருதியே இந்த தலைப்பை வைத்தேன்.
இருபத்தியோரு வயதிற்கு மேற்பட்ட ஆணும்,
பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட பெண்ணும் –
உடலுறவு கொண்டால் அவர்கள் திருமணமானவர்களாக
கருதப்படுவர் என ஒரு தீர்ப்பு அண்மையில் –
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் கர்ணன்,
அவர்களால் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த தீர்ப்பு தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது
அகில இந்திய அளவிலும்
சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
கோவைப்பகுதியைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண்,
தான் தன் கணவரால் கைவிடப்பட்டுவிட்டதாகக்கூறி
பராமரிப்புத் தொகை கேட்டு நீதிமன்றம் சென்றிருக்கிறார்.
அந்த பெண்ணிடமிருந்து பிரிந்து சென்றவர்,
அவர்களது இரு குழந்தைகளுக்கும் தானே தகப்பன் என்று
ஏற்றுக்கொண்டதால், அந்த குழந்தைகளின்
பராமரிப்புக்காக மட்டும் மாதம் தலா 500 ரூபாய்
வழங்கினால் போதும்; மற்றபடி அவர்களுக்கு
திருமணமானதாக சான்றுகள் எதுவும் இல்லாத நிலையில்,
அந்த பெண் குடும்பப் பராமரிப்புத்தொகை
எதையும் கோரமுடியாது என்று முதலில் –
குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த பெண், சென்னை
உயர்நீதிமன்றத்தில் செய்த மேல் முறையீட்டு
மனுவின் மீது தீர்ப்பளிக்கையிலேயே
நீதிபதி கர்ணன் இந்த கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதையொட்டி 3 வித வாதங்கள் கிளம்பியிருக்கின்றன.
திருமணம் செய்துகொள்வதாகக் கூறி
உடலுறவு கொண்டு பின்னர் ஏமாற்றும் ஆண்களுக்கு
இந்தத் தீர்ப்பு ஒரு எச்சரிக்கை என்பது ஒரு வாதம்.
இளம்வயதினரை –திருமணத்திற்கு முன்னரே
உடலுறவு கொள்ள இந்த தீர்ப்பு தூண்டக்கூடும்
என்பது இன்னுமொரு வாதம்.
உடலுறவையே திருமணமாக்குவது என்பது
தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்பது
மற்றுமொரு வாதம்.
இதையெல்லாம் தாண்டி,நான் விவாதிக்க நினக்கும்
மேலும் பல விஷயங்கள்
இந்த தீர்ப்பில் அடங்கி இருக்கின்றன.
இந்த குறிப்பிட்ட வழக்கைப் பொறுத்த வரை –
அந்தப் பெண்ணும் – அந்த ஆணும் கிட்டத்தட்ட
20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள்.
2 குழந்தைகளையும் பெற்றிருக்கிறார்கள்.
அவர்கள் சட்டப்படியோ, வேறேந்த முறையிலுமோ
திருமணம் செய்து கொண்டதாக எந்தவித
ஆதாரமுமில்லை.பெண் இஸ்லாமிய மதத்தையும்
ஆண் இந்து மதத்தையும் சேர்ந்தவர்கள்.
பிடித்திருக்கிறது – திருமணத்தைப் பற்றி
கவலைப்படாமல் -சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள்.
திருமணம் என்கிற சடங்கை
செய்து கொள்ளவிட்டாலும், 2வது குழந்தை
பிறந்தபோது, அந்தப் பெண்ணுக்கு மருத்துவமனையில்
சிசேரியன் ஆபரேஷன் செய்ய வேண்டி இருந்தபோது,
கணவனின் ஒப்புதல் தேவைப்பட்டபோது,
ஒப்புதல் கொடுத்து கணவர் என்கிற முறையில்
அந்த ஆண் கையெழுத்து போட்டிருக்கிறார்.
எனவே -இந்த வழக்கைப் பொறுத்த வரையில் –
நிர்க்கதியாக விடப்பட்ட அந்த பெண்ணுக்கு
சட்டத்தின் மூலம் உரிய நியாயம் கிடைத்திருக்கிறது.
இது பாராட்டப்பட வேண்டிய விஷயம் –
இத்துடன் நின்றிருந்தால்…!
ஆனால் – தீர்ப்பு இத்துடன் நிற்கவில்லை.
போகிற போக்கில் மேலும் சில பொதுவான தீர்ப்புகளும்
அறிவார்ந்த நீதிபதி அவர்களால் கூறப்பட்டிருக்கின்றன.
ஆணும் பெண்ணும் மாலை மாற்றிக் கொள்ளுதல்,
மோதிரம் அணிவித்துக் கொள்ளுதல்,
பெண்ணுக்கு தாலி அணிவித்தல்,
ஹோம குண்டத்தை வலம் வருதல்,
திருமணப்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தல்
-ஆகிய அனைத்து சம்பிரதாயங்களும்,
வெறும் மதம் சம்பந்தப்பட்ட அல்லது
சமுதாயத்தின் திருப்திக்காகவே .. !
இவை எதுவுமே அவசியமில்லை …!
இத்தகைய எந்தவித சம்பிரதாயத்தையும்
கடைப்பிடிக்கா விட்டாலும் –
இருபத்தியோரு வயதிற்கு மேற்பட்ட ஆணும்,
பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட பெண்ணும் –
உடலுறவு கொண்டால் அவர்கள் திருமணமானவர்களாகவே
கருதப்படுவர் ..!!
இத்தோடு நிற்கவில்லை.
அடுத்தது இன்னும் அதிர்ச்சி தரும் விஷயம் ..!
இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே
சேர்ந்து வாழ்ந்தாலும், அவர்களுக்கு குழந்தை
பிறந்தாலும் – பிறக்கா விட்டாலும்,
எதிர்காலத்தில் இருவரில் ஒருவர் பிரிந்து போக
நினைத்தாலோ – மறுமணம் செய்து கொள்ள
நினைத்தாலோ –
நீதிமன்றத்தை அணுகி –
விவாகரத்திற்கு சட்டபூர்வமான அனுமதி பெற்ற
பிறகே செய்ய முடியும்… !
அதாவது -நடக்காத ஒரு விவாகத்தை
ரத்து செய்ய நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு
தொடுக்க வேண்டும்…!!
இங்கு சில கேள்விகள் எழுகின்றன.
இந்த கருத்து திருமணம் என்பதை வெறும் உடல்
இச்சை சம்பந்தப்பட்டது என்று கொச்சைப்படுத்துவதாக
இருக்கிறது.இது தவறான அணுகுமுறை அல்லவா ?
எந்த மத சம்பிரதாயப்படி இருந்தாலும் சரி –
நாலு பேருக்கு பளிச்சென்று தெரிகிறமாதிரி,
அறிவித்து விட்டு ஆணும் பெண்ணும் இல்லறத்தைத்
துவக்குவது தானே கௌரவமாக இருக்கும் ?
குடும்பத்தினரின் எதிர்ப்பு போன்ற காரணங்கள்
இருந்தால் வெளியூரில் சென்று பதிவுத் திருமணம்
செய்வது அல்லது நண்பர்கள் துணையுடன்
கோவில்களில் அல்லது சுயமரியாதைத் திருமணம்
நடப்பதும் கௌரவமான முறை தான்.
எந்தவித சம்பிரதாயமும், சடங்கும் அவசியம் இல்லை
என்று கூறுவது எப்படி ?
முக்கியமாக – பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தவும்,
உறுதி செய்யவும் தான் திருமணப் பதிவு முறை சட்டமே
கொண்டு வரப்பட்டது. இப்போது திருமணத்தை பதிவு
செய்வது கூட அவசியம் இல்லை என்கிற முறையில்
தீர்ப்பு வருவது – பெண்களுக்கே எதிராக அமையாதா ?
மேலும், இது சம்பந்தப்பட்ட ஆண், பெண் இருவருடனும்
முடியும் பிரச்சினை இல்லை. பிறக்கப் போகும்
குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும் ?
திருமணம் ஆகாமல் பிறக்கும் குழந்தைகள் சமுதாயத்தால்
illegitimate children (முறை தவறிப் பிறந்த
குழந்தைகள் ) என்று முத்திரை குத்தப்படும் அபாயமும்
இருக்கிறது. எதிர்காலத்தில் அந்த குழந்தைகளின்
சொத்துரிமையும் பாதிக்கப்படலாம்.
மேலும், உடலுறவு என்பதே தனிமையில் நிகழ்வது தான்.
இதை நீதிமன்றத்தில், அதுவும் பல வருடங்கள்
கழித்து எப்படி ஒரு பெண் (அல்லது ஆண் )நிரூபித்து
கணவன் மனைவி உறவை சட்டப்படி உறுதி செய்வது ?
ஆணுக்கு கற்பு கிடையாது என்று நம்பும்
நம் சமூகத்தில், ஒரு ஆண் – ஒன்றுக்கு மேற்பட்ட
பெண்களுடன் உடல்ரீதியாக சம்பந்தம் வைத்திருக்க
வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அப்படிப்பட்ட
சூழ்நிலையில், எந்த பெண்ணை சட்டம் மனைவியாக
ஏற்கும் ?
சட்டங்களும், சம்பிரதாயங்களும் மக்களின்
நிம்மதியான, பாதுகாப்பான வாழ்வை
உறுதிப்படுத்துவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாற்றங்கள் தேவைப்படும்போது, அதை சமுதாயமே
முன் நின்று செய்து விடும். தனிப்பட்ட ஒரு நபரால்-
அவர் உயர்நீதி மன்ற நீதிபதியாகவே இருந்தாலும் கூட –
இதைச் செய்ய முடியுமா ?
தீர்ப்பை விமரிசிப்பது – அவமதிப்பு ஆகாது.
இது சமுதாயத்தால் விவாதிக்கப்பட வேண்டிய
ஒரு விஷயம் –
என்கிற நம்பிக்கையில் தான் நான் இதை எழுதுகிறேன்.
வழக்கைத் தொடுத்த அந்த பெண்மணிக்கு நியாயம்
கிடைத்தது வரை சரியே.
ஆனால் அதற்குப் பின்னாலும் கூறப்படும் தீர்வுகள்
சரியான தீர்வுகளா ?
பி.கு.-
இந்த தளத்தில் பின்னூட்டம் எழுதுபவர்கள்
அனைவரும் எப்போதுமே மிகவும் பொறுப்புணர்வுடன்
எழுதுபவர்கள் தான்.
இருந்தாலும் –
இது கொஞ்சம் ரெண்டுங்கெட்டான் subject.
உயர்நீதி மன்ற தீர்ப்பு வேறு சம்பந்தப்பட்டிருக்கிறது.
எனவே அதற்குத் தகுந்தாற்போல் –
எச்சரிக்கை உணர்வுடன் தங்கள் கருத்துக்களை
வெளிப்படுத்தும்படி வேண்டுகிறேன்.



அகில உலக சோலார் ஸ்டார் பட்டம் நம் தேவயானி ராஜகுமாரனை விட இந்த நீதிபதிக்கு மிகப் பொருந்தும் எனக் கருதுகிறேன். படு சீரியஸான விஷயத்தில் அபத்தமாய் காமெடி களி கிண்டியிருக்கிறார். இதற்குமேல் என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை.
உயர்நீதி மன்ற தீர்ப்பு வேறு சம்பந்தப்பட்டிருக்கிறது.
இப்டியெல்லாம் நீங்க பயங்காட்டினா நான் உங்களோட கா………….
நீதிபதியின் தீர்ப்பில் திருப்தி இல்லையென்றால்தானே அப்பீல் போவது. பிறகு அதுவும் நீதிமன்ற அவமதிப்பாகுமா?
இங்கு குருடர்கள் வாழும் நாட்டில் ஒற்றைக்கண்ணன் ராஜாவாம் என்பதுபோல இருக்கு நடப்பவை.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே,
இருட்டினில் நீதி மறையட்டுமே…
இத்தீர்ப்பை முழுமையாக எதிர்க்கவோ ஆதரிக்கவோ முடியவில்லை. சடங்கு, சம்பிரதாயங்கள் மணத்தை தீர்மானிக்கத் தேவையில்லை. ஆண், பெண் கணவன், மனைவி என்ற நிலையை ஒன்றாக வாழத் தொடங்கும் போது பெற்று விடுவர் என்பதே உலக வழக்காக உள்ளது. ஆனால் உறவு கொண்டாலே மணமாகி விடுமா என்பதில் குழப்பம் எழுகின்றது. இது ஒன்றாக வசிக்காமல் உறவு கொள்வோருக்கும், பாலியல் தொழில் நிமித்தமாய் உறவுக் கொள்வோருக்கும், பலவந்தமாய் உறவுக் கொள்ளும் நிலையிலும், சட்டப் படி திருமணமான பின் புறத்தில் வேறு நபரோடு உறவாடும் நிலையிலும் பொருந்துமா, இது சில சமயங்களில் பெண்களின் வாழ்வை புரட்டியும் போடலாம், சந்தர்ப்ப நிலையில் உறவு கொண்டு பிரிந்து விட்ட பின்னர் அப் பெண்/ ஆண் தம் வாழ்க்கைத் துணை என எவராது வந்து இடைஞ்சல் செய்யலாம். அல்லது உறவாடியமைக்கு ஆதாரமில்லா நிலையில் குழப்பங்கள் தரலாம். வேறு நாடுகளில் உள்ளது போல, ஒன்றாக வசித்து, வீட்டுச் செலவுகளை பகிர்ந்துக் கொண்டால் அவர்கள் தம்பதிகளாக கருதப்படுவர், ஆனால் பிரியும் போது மணமானோருக்கான சட்ட பாதுகாப்புக் கிட்டும், விவாகரத்து அவசியமில்லை. இவ்வாறான வரையறைகளை ஏற்படுத்தாமல் ஒரு தீர்ப்பை தந்தமை குழப்பி விட்டது. உறவு மட்டுமில்லாமல் ஒன்றாக வசிக்கவும் வேண்டும் என்று கூறியிருக்கலாம்.
தனி மனித ஒழுக்கம் எத்துனை முக்கியம் என்பது
இத்தீர்ப்பின் மூலம் வெளிப்பட்டுள்ளது..
துரதிர்ஷ்ட வசமாக ஒழுக்கம் தவறி நடக்கும் நபர்கள்
தங்களை பகுத்தறிவுவாதிகளாக படம் பிடித்துக்
காட்டி கொள்கிறார்கள்.
என் இஷ்டம். எனக்கு பிடித்ததை செய்கிறேன்.
உனகெகென்ன வந்தது? என்பதா பகுத்தறிவு மிக்க
வாதம்.
இருவருக்கும் பிடித்திருந்த ஒரு விஷயம், ஒரிடத்தில்
ஆணுக்கு பிடிக்காது போகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட
பெண்ணுக்கு “இன்னமும்” பிடித்தே இருக்கிறது.
போனி வர்மாக்களும், கௌதமிகளும் தங்களுக்குள்ள
பொருளாதாரத்தைக் கொண்டு “எதிர்காலத்தை”
எதிர்கொள்ள முடியும். ஆனால், இனிக்கிறது என சுவைத்த
நபர் கசக்கிறது என்று சொன்னால், பாதிக்கப்பட்ட
சாதரண பெண்களால் என்ன தான் செய்ய முடியும்.
சாட்சியங்கள் இல்லாத வழக்கில், தன் மனசாட்சியின்
துணைக் கொண்டு “நல்லதொரு” தீர்ப்பைத்
தந்துள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.
ஹாசன்களும் ராஜ்களும் தன் ஒழுக்கக் கேட்டை
நியாயப் படுத்த சொல்லும் அபத்தத்தைக் கேட்டு,
இளைஞர்கள் தடம் மாறாது இருக்க வேண்டும்.
இவர்களைப் போன்ற நபர்களை இளைய சமுதாயம்
எதிலும் முன் உதாரணமாக கொள்வதைத் தவிர்க்க
வேண்டும். அதற்கு ஆண்டவன்தான் அருள
வேண்டும்.
அருமையான தீர்ப்பை தந்த நீதிபதி அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டுமாய் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
உச்ச நீதிமன்றத்திலும் இது உறுதிபடுத்தபட்டால் மிக சிறப்பாக இருக்கும்…
இதை எல்லா மக்களிடமும் கொண்டுசெல்வது மீடியாக்கள் கையில் உள்ளது…
இதை விரும்பி பார்க்கும் படி , படிக்கும்படியான தலைப்புகள் கொடுத்து பரப்பினால்…. மிக சிறப்பான வரவேற்பு இதற்கு கிடைகும் என்பதில் ஐய்யம் இல்லை.
//வழக்கைத் தொடுத்த அந்த பெண்மணிக்கு நியாயம்
கிடைத்தது வரை சரியே.
ஆனால் அதற்குப் பின்னாலும் கூறப்படும் தீர்வுகள்
சரியான தீர்வுகளா ?//
தீர்ப்பு நகலை வாங்கி படிக்காமல் விமரிசனம் செய்யகூடாது
(முக்கியமாக – பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தவும்,
உறுதி செய்யவும் தான் திருமணப் பதிவு முறை சட்டமே
கொண்டு வரப்பட்டது. இப்போது திருமணத்தை பதிவு
செய்வது கூட அவசியம் இல்லை என்கிற முறையில்
தீர்ப்பு வருவது – பெண்களுக்கே எதிராக அமையாதா ?
மேலும், இது சம்பந்தப்பட்ட ஆண், பெண் இருவருடனும்
முடியும் பிரச்சினை இல்லை. பிறக்கப் போகும்
குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும் ?
திருமணம் ஆகாமல் பிறக்கும் குழந்தைகள் சமுதாயத்தால்
illegitimate children (முறை தவறிப் பிறந்த
குழந்தைகள் ) என்று முத்திரை குத்தப்படும் அபாயமும்
இருக்கிறது. எதிர்காலத்தில் அந்த குழந்தைகளின்
சொத்துரிமையும் பாதிக்கப்படலாம்.)
இந்த வாக்கியங்கள் சரியா? இத்தீர்ப்பு பெண்ணுக்கு பாதுகாப்பை அதிகரித்திருக்கிறது.பொதுவாகவே ஏமாறுவது பெண் ஏமாற்றுவது ஆண்.அதனால் இத்தீர்ப்பு சரி.அவ்வளவு அச்சம் இருந்தால் பெண்களை ஏமாற்றும் எண்ணம் வராது.மேலும் உடலுறவு கொண்டால் பாதிப்பது பெண் இனம் தானே.
அய்யா அட்வகேட் தங்கவேலு அவர்களே,
(இலட்சியக்குடும்பம் )
//தீர்ப்பு நகலை வாங்கி படிக்காமல்
விமரிசனம் செய்யக்கூடாது//
தீர்ப்பை (வாங்காமலே)- ஆனால் நன்கு படித்த
பின்னர் தான் இந்த இடுகையை எழுதினேன்.
இருந்தாலும் உங்கள் திருப்திக்காகவும் –
நீங்கள் படிப்பதற்காகவும் – தீர்ப்பின்
பிரச்சினைக்குரிய சில பகுதிகள் கீழே –
“trial Court judge has concluded that
the second and third petitioners are illegitimate children of the respondent”
(முன்னதாக அந்தப் பெண்மணியின் – பராமரிப்புத் தொகை
கோரிக்கையை விசாரித்த குடும்ப நல கோர்ட் –
குழந்தைகள் இரண்டும் முறை தவறிப் பிறந்தவை
என்று முடிவெடுத்துள்ளது.)
“Marriage solemnization is only a customary right and obligation, but not a mandatory one.”
“the marriage formalities as per respective religious customs viz., tying of thali, exchange of garlands, exchanging of finger rings, circling around the matrimonial fire pit or registering of marriage at a Government Registration Office is only to comply with each one’s respective religious customs for the satisfaction of the society.”
(மாலை மாற்றிக் கொள்வது, மோதிரம் அணிவது
போன்ற சடங்குகளை விடுங்கள். ரெஜிஸ்டிரார்
அலுவலகத்தில் பதிவு செய்வது கூட அவசியமில்லை
என்கிறது இந்தப் பகுதி. இது சரியா ?
Registrar of Marriages -ஒரு தண்டமா ?
திருமணப்பதிவு குறித்து இயற்றப்பட்ட சட்டங்கள்
எல்லாம் இந்த தீர்ப்பால்
இல்லாமல் போய் விடுமா ? )
“either party may approach the Family Court for declaration to the effect of marital status by supplementing documentary proof of evidence in order to prove the sexual relationship.”
(தங்களுக்குள் பாலுறவு இருந்தது என்பதை –
த கு ந் த ஆ தா ர ங் க ளு ட ன் -( ??????? )
குடும்ப நல நீதிமன்றத்தில் நிரூபித்து ( எப்படி ???? )
தாங்கள் கணவன்-மனைவி என்பதை அறிவிக்க
அணுகலாம் !!
– இது பெண்களுக்கு ஆதரவான நிலையா ?)
பொத்தாம் பொதுவாக – பெண்களுக்கு ஆதரவான தீர்ப்பு
என்று இதை நிச்சயம் கூற முடியாது. வழக்கைச் தொடர்ந்த
பெண்மணிக்கு நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது.
அதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் –
தேவையே இல்லாமல்,
சடங்குகள் அநாவசியம்,
பதிவு செய்வது கூட அநாவசியம் என்றெல்லாம் –
கூறி இருப்பது தான் அநாவசியமானது.
(சம்மன் இல்லாமல் ஆஜர் ஆவது போல் ? )
தாங்கள் தங்கள் தொழிலில்
சிறந்து பிரகாசிக்க
நிறைந்த வாழ்த்துக்களுடன்,
-காவிரிமைந்தன்
// “either party may approach the Family Court for declaration to the effect of marital status by supplementing documentary proof of evidence in order to prove the sexual relationship.” //
By telling so he wants such unwed couples to make a
video record of their nuptial….and produce it to the court
when necessity comes …?
Utter foolishness….
சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி
திரு.சந்துரு அவர்கள் இந்த தீர்ப்பு குறித்து கூறியுள்ள
கருத்து இன்றைய நாளிதழில் வெளியாகியுள்ளது –
“ஒரு தீர்ப்பு அளிக்கும்போது, வழக்கு சார்ந்த
கருத்துக்கள் மட்டும் இடம் பெற்றால், அந்த
தீர்ப்பு மிகவும் வலுவாக இருக்கும். வழக்கு சாராத
கருத்துக்களை தீர்ப்பில் கூறும்போது, தேவையற்ற
விவாதங்கள் எழும். இந்த தீர்ப்பிலும், இது போன்ற
நிலை ஏற்பட்டுள்ளது.
திருமணங்களை ஏற்கவும், உறுதி செய்யவும்,
பல வழிமுறைகள் ஒவ்வொரு சமுதாயத்திலும் உள்ளன.
இந்து திருமண சட்டம், இந்து சமய சடங்குகளுக்கு
அப்பாற்பட்டு நடக்கும் சுயமரியாதை திருமணங்கள்,
மற்றும் மதம் மாறி நடக்கும் திருமணங்களுக்கு,
சிறப்பு திருமண சட்டம் ஆகியன உள்ளன.
திருமண சட்டங்களை கோர்ட் தீர்ப்புகள் திருத்தி விட
முடியாது. பார்லிமென்டில் தான் சட்டங்களை
உருவாக்க முடியும்.”
– இந்த கருத்துக்கள் நமது இடுகையில்
கூறப்பட்டுள்ள கருத்துக்களை வலுப்படுத்துகின்றன
என்பதில் நான் மகிழ்வடைகிறேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
In recent times, the lobbying power of women’s organization has increased. Most of the laws are biased against Male.
498a is one such draconian law.
Equal share in ancestor property to girl child is another (Law is silent on many things like responsibility of girl child to parents in old age, about dowry given to girl child at the time of marriage, will girl child share parents debt?)
Now this judgement. Sex could have happened for many reasons – cash transactions, casual fun, curiosity, mutual physical satisfaction,…. Another useless decree for women advocates to harass males.