அரசியல் கட்சிகளுக்கு RTI சட்டம் வேண்டாமாமே …. !!

அரசியல் கட்சிகளுக்கு RTI சட்டம் வேண்டாமாமே …. !!

எல்லா கட்சிகளுமே – இந்த விஷயத்தில் மட்டும்
சொல்லி வைத்தது போல், ஒரே
ஸ்ருதி, லயம்  -தாளத்தில் குரல் கொடுக்கின்றன!

அண்மையில், மத்திய தகவல் ஆணையம்,
தகவல் அறியும் உரிமை சட்டம் அங்கீகரிக்கப்பட்ட தேசிய
கட்சிகளுக்கும் செல்லுபடியாகும் என்று தீர்ப்பு அளித்ததை
யொட்டி காங்கிரஸ், பிஜேபி, வலது -இடது கம்யூனிஸ்ட்
போன்ற அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் திரண்டு –
தகவல் ஆணையத்திற்கு எதிராக போர் தொடுக்கின்றன.

ஏன் இப்படி ?

2005ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட –
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் – மத்திய.மாநில
அரசுகள் மற்றும் பொதுத்துறை அரசு நிறுவனங்கள்
சம்பந்தப்பட்ட விவரங்களை பொது மக்கள் யார்
வேண்டுமானாலும் முறைப்படி கோரிப்பெறலாம்.

அரசின் உதவி – மான்யம் பெறும் மற்ற தனியார்
நிறுவனங்களையும், தொண்டு நிறுவனங்களையும் கூட
இதன் கீழ் கொண்டு வர அண்மையில் மத்திய அரசு
முயற்சிகளை மேற்கொண்டது.

சில அரசியல் கட்சிகளிடம் அவை பெற்ற நன்கொடை,
வரவு, செலவு போன்ற  விவரங்களை – சில சமூக
ஆர்வலர்கள் கோரிப்  பெற முயற்சித்த போது, அவை
தகவல் அறியும் உரிமை சட்டம் தங்களைக் கட்டுப்படுத்தாது
என்று கூறி விவரங்களை கொடுக்க மறுத்து விட்டன.

அந்த சமூக ஆர்வலர்கள், மத்திய தகவல் ஆணையத்திடம்
முறையீடு செய்த போது, இந்த சட்டம் அரசியல் கட்சிகளுக்கும்
பொருந்தும் என்று தகவல் ஆணையத்தால் தீர்ப்பு தரப்பட்டுள்ளது.

அதற்கு  எதிராக, ஆளும் காங்கிரசும் சரி, பிஜேபி,
கம்யூனிஸ்ட் போன்ற முக்கிய எதிர்க்கட்சிகளும்  சரி –
எல்லாம் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு
வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும்,
அங்கீகரிக்கப்பட்ட அரசியல்களுக்கு – பாராளுமன்றத்திலும்,
சட்டமன்றங்களிலும்  சில சிறப்பு அலுவலக வசதிகள் செய்து
தரப்படுகின்றன. தேர்தல் சமயங்களில், தேர்தல் கமிஷன்
மூலம் பல வசதிகள் இலவசமாக செய்து தரப்படுகின்றன.
எனவே அரசியல் கட்சிகளும் இந்த சட்டத்திற்கு கட்டுப்பட்டு,
கோரும் விவரங்களைத் தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்
வாதிக்கின்றனர்.

தேர்தலை எதிர்கொள்ள வகுக்கப்படும் உள்கட்சிதிட்டங்கள்,
வழிமுறைகள், குறிப்பிட்ட வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும்
முறை, காரணம் ஆகியவை குறித்து
கேள்வி கேட்க முடியாது என்றே எனக்கும் தோன்றுகிறது.  

வேட்பாளர் பட்டியலை கட்சிகள்
முடிவு செய்யும் விதம் – பல நேரங்களில் வெளியில்
சொல்லிக்கொள்ளத்தக்கதாக இல்லை ! ஜாதி, மதம்,
பண வசதி, தலைவர்களுடனான நெருக்கம் – ஆகியவை
பற்றி எல்லாம் விவரமாக வெளியில் கூற முடியுமா?

ஆனால் கட்சிகளின் வரவு-செலவு, பெற்ற
நன்கொடைகள், அவற்றை கொடுத்தவர்களின் விவரங்கள்
போன்றவற்றைத் தெரிந்து கொள்ள நிச்சயமாக பொது மக்களுக்கு
உரிமை உண்டு. இந்த விவரங்களை நாங்கள் தேர்தல்
கமிஷனுக்கும், வருமான வரி அதிகாரிகளுக்கும் –
ஏற்கெனவே  தெரியப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.
மற்றபடி கேட்பவர்களுக்கெல்லாம் கொடுக்க வேண்டிய
அவசியம் இல்லை என்று அரசியல் கட்சிகள் கூறுகின்றன.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விஷயம் இது.
வருமான வரி இலாகா, மற்றும் தேர்தல் கமிஷன்
ஆகியவற்றிடம் முழு விவரங்கள் அளிக்கப்படுவதில்லை.
சுருக்கமான ஆண்டு அறிக்கை மட்டுமே அளிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின்படியே, 20,000 ரூபாய்க்கு
மேல் நன்கொடை கொடுப்பவர்களின் விவரங்களை
அரசியல் கட்சிகள் தெரிவித்தால் போதுமானது.
எனவே முழு விவரங்கள் கொடுக்கப்படுவதில்லை.

மேலும், பெரும் வர்த்தகர்கள் – தொழிலதிபர்களிடமிருந்து
தேர்தல் சமயங்களில் –
கணக்கில் வராத கறுப்பு பணம் சர்வசகஜமாக,
லட்சக்கணக்கில் அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கின்றன.
இவை  எந்த கணக்கிலும் வருவதில்லை.

வெளிப்படையாக, ஒவ்வொரு கட்சியையும் –
அதன் மொத்த ஆண்டு வருமானம் எவ்வளவு,
அவை யார் யாரிடம் இருந்தெல்லாம் பெறப்பட்டன –

எந்தெந்த வகையில் அவை செலவழிக்கப்பட்டன –
என்கிற விவரங்களை எல்லாம் வெளியிடச்சொன்னால் –
தேர்தல்களின்போது – கட்சிகள் எந்த கணக்கிலும் வராத
கோடிக்கணக்கான பணத்தை எப்படி
செலவு செய்ய முடியும் ?
எனவே அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக்கான
முக்கிய காரணம் இதுவாகவே இருக்க முடியும் !

ஆனால் நம் உள்ளூர் கட்சிகள் -திமுக, அதிமுக, பாமக,
மதிமுக, தேமுதிக – எதுவுமே இதுவரை இது குறித்து
வாயே திறக்கவில்லை …!

இப்போதைக்கு தீர்ப்பு வந்திருப்பது 6 தேசிய கட்சிகளுக்கு
மட்டும் தான். எனவே விஷயம் மாநில அளவில்
வருவதற்குள் – தேசீய அண்ணன்கள் பார்த்து ஒரு வழி
பார்த்து விடுவார்கள்  என்கிற நம்பிக்கை தான் ..!!

வாழ்க ஜனநாயகம் …..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to அரசியல் கட்சிகளுக்கு RTI சட்டம் வேண்டாமாமே …. !!

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    என்ன காவிரிமைந்தன் சார், சொந்தமாகவே ஆப்பு அடித்துக்கொள்ள சொல்றீங்க!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் அஜீஸ்,

      இந்த தீர்ப்பை எதிர்க்கும் கட்சிகள் –
      அதற்கான காரணங்களை எப்படி எல்லாம்
      தேடுகின்றன பாருங்களேன் !

      இதில் மட்டும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி
      என்கிற வித்தியாசங்களையே காணோம்.. !

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  2. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    வேண்டாம் தான்.

    SOURCE FUNDING, QUANTUM OF FUNDING மற்றும்
    SPENDING OF FUNDS பற்றியெல்லம் தெரிந்து கொண்டு
    என்ன ஆகப் போகிறது?

    வேறு வேலை இருந்தால் பார்க்கவும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் வெங்கட்ரமணி,

      இதற்கே நொந்து விட்டால் எப்படி … ?
      ஜீரண சக்தியை வளர்த்துக்கொள்ளுங்கள் …

      இதோ -இன்னும் கொஞ்சம் தகவல் கிடைத்தது –

      2006 முதல் 2009 வரையான 3 ஆண்டுகளில்
      காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள வரிவிலக்கு
      சுமார் 300 கோடி ரூபாய்.

      பிஜேபி பெற்றுள்ள வரிவிலக்கு சுமார் 141 கோடி
      ரூபாய்.

      கட்சி அலுவலகங்கள் நடத்துவதற்காக காங்கிரசுக்கு
      ஒதுக்கப்பட்ட இடங்களின் மொத்த மார்க்கெட்
      ரேட் – 1036 கோடி ரூபாய்.

      பிஜேபிக்கான இடங்களின் மார்க்கெட் ரேட்
      – 557 கோடி ரூபாய்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  3. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    பெருச்சாளியை வைத்துக் கொண்டு யாரேனும்
    கட்டுச் சோற்றை அவிழ்ப்பார்களா?

  4. knvijayan's avatar knvijayan சொல்கிறார்:

    தங்களைவிட பரிசுத்தமானவர்கள் யாருமே கிடையாது என்று தங்கள் கால்களை தாங்களே தொட்டு கும்பிட்டுகொள்ளும் இடதுசாரிகள் இனிமேல் தங்கள் நவ துவாரத்தையும் மூடிக்கொண்டு இருக்கவேண்டும் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.