கூட்டுக்கொள்ளை அடித்த சிமெண்ட் கம்பெனிகளுக்கு எதிரான வழக்கில் 6200 கோடி ரூபாய் அபராதம் ………

கூட்டுக்கொள்ளை அடித்த சிமெண்ட் கம்பெனிகளுக்கு 
எதிரான  வழக்கில் 6200 கோடி ரூபாய் அபராதம்  ………

சில ஆண்டுகளுக்கு முன்னர், எந்தவித  காரணங்களும் இல்லாமலே,
சிமெண்ட் விலை ஆகாயத்தில் பறந்தது. சிமெண்ட் கம்பெனிகளால் செயற்கையான பற்றாக்குறை ஏற்படுத்தப்பட்டது.

வேண்டுமென்றே உற்பத்தி குறைக்கப்பட்டு,
அதன் விளைவாக சப்ளை குறைக்கப்பட்டு, கடைகளில் சிமெண்ட் கிடைக்காத நிலை ஏற்பட்டது. பல மாதங்கள் இந்த நிலை நீடித்தது.  கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்தோர் வேறு வழியே இல்லாமல்  அதிக விலை கொடுத்து சிமெண்ட் வாங்க வேண்டியதாகி
விட்டது. 250 ரூபாய் மூட்டை 400 ரூபாய்க்கு கூட விற்கப்பட்டது.

பல மாதங்கள் நீடித்த இந்த நிலை காரணமாக  உபயோகிப்பாளர்கள்
பலத்த நஷ்டத்திற்கு உள்ளானார்கள்.

தனிப்பட்ட மனிதர்கள், குமுறிக்கொண்டே, வயிறு எரிந்து கொண்டே –
வேறு வழி இல்லாமல்  இந்த கொள்ளையை சகித்துக் கொண்டனர். ஆனால்,  அகில இந்திய பில்டர்ஸ் அசோசியேஷன் இதை எதிர்த்து காம்பெடிஷன் கமிஷன்  முன்னர் ஒரு வழக்கு தொடர்ந்தது.

COMPETITION  ACT (காம்பெடிஷன் ஆக்ட்), 2002 என்று ஒரு சட்டம்.
இதன் கீழ் காம்பெடிஷன் கமிஷனர்என்று ஒரு அதிகார அமைப்பு.
முறையற்ற தொழில் பழக்கங்களை கடைப்பிடித்து,
பயனாளிகளுக்கு – கஷ்டமும், நஷ்டமும் ஏற்படுத்தும் விதத்தில்  தொழில்/  வர்த்தகங்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தும் அமைப்பு இது.

இந்த வழக்கு விவரமாக விசாரிக்கப்பட்டு,
இரு தரப்புகளின் சார்பிலும்
புகழ்பெற்ற வழக்குரைஞர்களால் விவாதிக்கப்பட்டு,
இறுதியாக  தீர்ப்பும் அளிக்கப்பட்டது.

கமிஷன் தனது தீர்ப்பில்  –
பெரிய அளவில் சிமெண்ட் உற்பத்தி செய்யும் சில கம்பெனிகள், தங்களுக்குள் கூட்டாக ஒரு சட்டவிரோத உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு –

தங்களிடம் போதுமான உற்பத்தித்திறன் இருந்தாலும்,
வேண்டுமென்றே சிமெண்ட் உற்பத்தியை குறைத்து –
அதன் மூலம்  மார்க்கெட்டில் சப்ளையையும் குறைத்து –
செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்தி – 
சிமெண்டின் விலையை
ஏற்றக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தினார்கள்.  இதனால்
சிமெண்ட் உபயோகிப்பாளர்கள்  கடும்  மன உளைச்சலுக்கும், பொருளாதார
இழப்பிற்கும் ஆளாக நேரிட்டது.

இந்த கம்பெனிகள் –
சட்டவிரோதமான ஒரு உடன்படிக்கையை தங்களுக்குள்
ஏற்படுத்திக்கொண்டு,
கட்டுமானத்தில் ஈடுபட்டிருக்கும் தொழில் துறைக்கும்,
இந்த நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும்
கடும் பாதிப்பை ஏற்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளது –

என்று கூறி,  இதில் சம்பந்தப்பட்ட சிமெண்ட் நிறுவனங்கள்  அனைத்திற்கும்
சேர்த்து மொத்தமாக 6200 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

(இது 2009-2010ஆம்   ஆண்டுகளில் இந்த கம்பெனிகள்  சம்பாதித்த
லாபத்தில்  ஐம்பது சதவிகிதம் ! )
இதில்  ஈடுபட்ட 11 முக்கியமான பெரிய  கம்பெனிகள் –

ACC, Ambuja Cements, Ultratech and Jaypee Cements,  Grasim Cements
now merged with Ultratech Cements,
Lafarge India, JK Cement, India Cements, Madras Cements, Century Cements and
Binani Cements.

இதை எதிர்த்து இந்த கம்பெனிகள் கூட்டாக COMPETITION APPELLATE TRIBUNAL  என்னும் உயர் அமைப்பிற்கு அப்பீல்  செய்தன.  COMPETITION COMMISSIONER-ன் தீர்ப்புக்கு இடைக்காலத்தடையும்  கோரின.

சென்ற வாரம், அப்பெல்லேட் ட்ரிப்யூன்  இந்த கோரிக்கையின் மீது தன்
முடிவை அளித்துள்ளது. அபராதத் தொகையான 6200 கோடியில் பத்து சதவீதமான 620 கோடியை இந்த கம்பெனிகள் கூட்டாகச் சேர்ந்து முதலில் டெபாசிட் செய்தால் மட்டுமே  அப்பீல் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும்  இதை 4 வார காலத்திற்குள் செய்யவில்லையென்றால், அப்பீல் தள்ளுபடி
செய்யப்பட்டு விட்டதாகக் கொள்ளப்படும்என்றும் கூறி இருக்கிறது.

இந்த தீர்ப்பு அப்பீலிலும் உறுதி செய்யப்பட்டால், இந்த கூட்டுக் கொள்ளை
கம்பெனிகளுக்கு  ஓரளவு தண்டனை அளிக்கப்பட்டதாகக் கொள்ளலாம்.

ஆனால் மிக முக்கியமான கேள்வி ஒன்று எழுகிறது.
சிமெண்ட் கம்பெனிகள் அபராதம் கட்டினால், அந்தப் பணம் மத்திய அரசின்
கஜானாவிற்கு போய்ச் சேர்ந்து விடும்.

இந்த கம்பெனிகள்  கூட்டாகச் சேர்ந்து வேண்டுமென்றே,
கொள்ளை லாபம் அடிப்பதற்காக, செயற்கையாக –
விலையைத் தொடர்ந்து ஏற்றியதால் –
நஷ்டப்பட்டது யார் ?   அந்த கால கட்டங்களில் கட்டுமான வேலைகளை
மேற்கொண்டிருந்த, வேறு வழி இல்லாமல் அதிக விலை கொடுத்து
சிமெண்ட் வாங்கிய பொது மக்கள் அல்லவா ?

இந்த தீர்ப்பின் மூலம் – சம்பந்தப்பட்ட
பொது மக்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும்,
அவர்களுக்கு ஏற்பட்ட
பண நஷ்டத்திற்கும் என்ன நியாயம் கிடைக்கிறது ?

பி.கு. –

மட்டையடி தலைவர் கம்பெனியின் 2011-12 க்கான
லாப விவரம் மட்டும் தெரியக் கிடைத்தது.
(2009-10 க்கு கிடைக்கவில்லை )
அந்த ஆண்டுக்கான நிகர லாபம் ரூபாய் 292 கோடி  !!!
இந்த கம்பெனிக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை
ரூபாய் 25.86 கோடிகள் … !!
அடித்த கொள்ளையுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் – இது
ஒன்றும் பெரிய தொகையாகத் தெரியவில்லையே !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to கூட்டுக்கொள்ளை அடித்த சிமெண்ட் கம்பெனிகளுக்கு எதிரான வழக்கில் 6200 கோடி ரூபாய் அபராதம் ………

  1. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    //இந்த தீர்ப்பின் மூலம் – சம்பந்தப்பட்ட
    பொது மக்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும்,
    அவர்களுக்கு ஏற்பட்ட
    பண நஷ்டத்திற்கும் என்ன நியாயம் கிடைக்கிறது ?//

    நல்ல கேள்வி. இங்கே பாதிப்பு ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை எனும் பெயரில் ஒரு சிறு அசௌகரியம்தான் நேருகிறதே தவிர, பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நிவாரணமும் இல்லை. இதற்குப் பெயர்தான் நீதித்துறையாம்.

    நீதித்துறையை மட்டும் குறை சொல்லியும் ஒதுங்க முடியாது. சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தில் வலுத்தவர்கள் கூட்டு சேர்ந்தால் இப்படித்தான்.

  2. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    நண்பர் அடிக்கடி ஒன்றைச் சொல்லிக் கொண்டிருப்பார்.

    முக்கியமான பத்து பதினைந்து (ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பணிபுரியும்) தணிக்கையாளர்களை (ஆடிட்டர்) பிடித்து நொங்கெடுத்தால் இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்களின் உண்மையான நிதி நிலவரம் தெரியும்.

    சென்ற வாரங்களில் சிமெண்ட் பார்ட்டி படித்த செய்திகளில் என் மனதில் தோன்றியது.

    அப்பா நிறுவனத்தை உருவாக்கினார்
    மகன் விரிவாக்கினார்.
    இன்று நிறுவனம் மகள் வளர காரணமாக இருக்கின்றார்.

    ஆனால் இன்று மகன் ஒரு கே என்கிற அளவுக்கு புக்ழ் வெளிச்சம் ஊரெங்கும்.
    மருமகன் ஜெயிலில்.
    இன்று குடும்ப காதல் கோல்ப்ஃ மைதான்ம் என்று புலனாய்வு கட்டுரைகள் சுற்றி சுற்றி கிடைத்த வரைக்கும் லாபம் என்று நோண்டிக் கொண்டேயிருக்கின்றார்கள்.

    ஆமாம் ஒரு தப்பான விமர்சனம் வந்தாலே தூங்க முடியாத அளவுக்கு நாம் வாழும் வாழ்க்கை என்ன?

    இவர்களின் வாழ்க்கை என்ன?

    தூக்கம் வருமென்றா நினைக்குறீங்க.

  3. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    பசி என்றால் பத்தும் பறந்துபோகும் என்றது அந்தக்காலம்!
    பணம் என்றால் பந்தமும் பறந்துபோகும் என்பது இந்தகாலம், ஜோதிஜி!!
    (பணமும் பதவியையும் தக்கவைத்துக்கொண்டால் போதும்… மகனாவது மருமகனாவது)
    ஸப்ஸே படா ருபையா

  4. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    நாய் விற்ற காசு குறைக்குமா? மீன் விற்ற காசு நாறுமா?
    என்றெல்லாம் பழைய மொழி இருப்பது நினைவுக்கு வர
    வில்லையா?

    இம்மாதிரியான விளையாட்டிலும் சன்களுக்கு பணமும்
    சொத்து வந்து சேர்ந்திருக்கிறது. அந்த ஆரம்பத்தின் விளைச்சலில்
    தான் சன் உயர்ந்திருக்கிறது!!!

    பணமும் அதனால் வரும் அந்தஸ்த்தும் தான் பிரதானம்
    என்றாகி விட்டால், நியாய தர்மங்க்களுக்கெல்லாம் இடமில்லை.
    பணத்தால் வளர்ந்துவிட்டால், இந்த சமுதாயம் அது வந்த
    வழி பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காது.

    கொன்றால் பாபம் திண்றால் போச்சு.

    லாபத்தில் கொஞ்சத்தை ஏதேனும் கோயில் உண்டியலில்
    போட்டால் “எல்லாம்” சரியாகி விடும்.

  5. Asokaraj's avatar Asokaraj சொல்கிறார்:

    இங்கே நீதித் துறையை குற்றம் சொல்லி என்றும் பயனில்லை. இந்தச் சட்டங்களை ஒரு தொலை நோக்குப் பார்வை இல்லாமல் உருவாக்கினார்களே அவன்தான் மடையன். பல சட்டங்கள் இன்று மறு பரிசீலனைக்கு உட்படுத்தப் பட வேண்டும் ஆனால் இன்றும் புதிதாக உருவாக்கப் படும் சட்டங்களே இன்னும் அதே ஓட்டைகளுடன் தான் வருகின்றன. அன்று எந்த லாபமும் கருதாமல் சட்டமியற்றிய வல்லுனர்களே இன்றைக்கு விமர்சனத்திற்கு ஆளாகும் போது இன்றைய பொறுக்கி அரசியல்வியாதிகள் இயற்றும் சட்டங்கள் எப்படி இருக்கும் என்பது தெரிந்ததுதானே?

  6. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    பிரச்சினைகளை எப்படி அலசினாலும் செக்கு மாடு போல சுற்றி சுற்றி அதே இடத்தில தான் இருப்போம்.இன்று நம்முடைய ஒரே பிரச்சினை நம்மை காக்கவேண்டிய அரசே நமக்கு துரோகம் செய்கிறது.இது நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாகவும் இருப்பதால் குழப்பம் பல மடங்கு ஆகிறது.பல விஷயங்களில் பிரதான எதிக்கட்சியான பா.ஜ.க.வும் மௌனம் சாதிப்பது வியப்பையும் அதிர்ச்சியையும் தருகிறது.சோனியும்,மண்ணும் ஆச்சி செய்வது தொழிலதிபர்கள்,ஊடகங்கள்,அரசு அதிகாரிகள் போன்றோர்களுக்கு மிக சௌகரியமாக இருப்பதால் மாற்று ஆட்சி அமைவது மிக கடினம்.
    மிக அவசியமான சட்ட திருத்தங்கள்:
    =சிவில் அல்லது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள்,அவர்கள் வழக்கு முடியும் வரை தேர்தலில் போட்டியிட தடை.
    =அவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு வந்தால் அவர்கள் ஆயுள் முடியும் வரை தேர்தலில் போட்டியிட தடை.மற்றும் குடியுரிமை ரத்து.
    =வாக்கு சீட்டுகளில் “இந்த வேட்பாளர் வருவதை நான் விரும்பவில்லை” என அறிவிக்க ஒரு பகுதி.”ஆளுனர் ஆட்சிக்கு நான் ஓட்டளிக்கிறேன்”என அறிவிக்க ஒரு பகுதி சேர்க்கப்படவேண்டும்.அதாவது ஒரு வாக்காளர் X ஐ ஆதரித்து ஒரு ஓட்டும் Yஐ நிராகரித்து ஒரு ஓட்டும் போடலாம்.அல்லது அவர் ஆளுனர் ஆட்சிக்கு
    ஓட்டளிக்கலாம்.
    =கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் கூட்டணி கட்சிகள் ஆளும் கட்சிக்கு குறைந்தது மூன்று ஆண்டுகள் கட்டாய ஆதரவு அளிக்க சட்டம்.
    =ஓட்டளிப்பது கட்டாயமாக்கப்படவேண்டும்.
    ம்ம்ம் எலிகளெல்லாம் சேர்ந்து பூனைக்கு மணி கட்ட வேண்டும்.அதுவும் அந்த பூனை மணியை தானே கட்டிக்கொள்ள வேண்டும்..பேராசைதான்!!

  7. AAR's avatar AAR சொல்கிறார்:

    One year old news.
    I will give you another old news – DLF was fined 600crore Rs by same CCI.
    Other cases pending with CCI – Tyre cos cartel, Airlines cartel and even BCCI monopoly in cricket.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Dear friend,

      order of the appellete tribune was issued only last week and this article
      comes out of that –
      your attention is drawn to this sentence in the above article –

      சென்ற வாரம், அப்பெல்லேட் ட்ரிப்யூன் இந்த கோரிக்கையின் மீது தன்
      முடிவை அளித்துள்ளது.

      thank you for the initiative taken.

      -with all best wishes,
      Kavirimainthan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.