மறுபிறப்பு நிஜந்தானா ? ( பகுதி – 4 – இறுதிப்பகுதி )
பொதுவாக மனிதருக்கு முந்தைய பிறவிகள் பற்றி எதுவுமே
நினைவிற்கு வருவதில்லை.
(அப்படி வந்து விட்டால் தான் மறுபிறவியைப்பற்றிய சந்தேகமே
எழுந்திருக்காதே )
ஏன் இப்படி ?
ஒன்றை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்த பிறவியில் நிகழ்ந்தவற்றையே – பழையவை அனைத்தையும்
நினைவில் வைத்திருந்தால் பைத்தியம் பிடித்து விடும்
நிலையில் தான் நாம் இருக்கிறோம்.
கடந்த கால கவலைகளையும், துன்பங்களையும் –
மறந்து விடவே நாம் விரும்புகிறோம்.
மறதி என்று ஒன்று இருப்பதால் தான் – நாம் மன நலத்துடன் இருக்கிறோம்.
நம் வாழ்வில் நிகழ்ந்த கடந்தகால சோக நிகழ்வுகளை பெரும்பாலும்
மறந்திருப்பதாலேயே – நிகழ்காலத்தில் – நிம்மதியாக இருக்கிறோம்.
மேலும் -ஒரு பிறவியில் நடந்ததையே நம்மால் தாங்க முடியாத போது
இதற்கு முன்னால் நிகழ்ந்த –
நூற்றுக்கணக்கான பிறப்புக்கள் அனைத்தும்,
அவற்றைச் சார்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நம் நினைவிலேயேஇருந்தால் ?
எத்தனை எத்தனை நிகழ்வுகள் ?
எத்தனை எத்தனை உறவுகள் ?
அத்தனையையும் நினைவில் வைத்துக்கொண்டு நாம் நிம்மதியாக வாழ முடியுமா ?
ஆனால் -அபூர்வமாக ஒரு சிலருக்கு முந்தைய பிறவிகள் பற்றிய நினைவுகள்
தோன்றி இருக்கின்றன.
இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி –
இதைப்பற்றிய ஆராய்ச்சிகள் நிறைய செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் செய்யப்படுகின்றன.
அமெரிக்காவில் வெர்ஜினியா
பல்கலைக்கழகப் பேராசிரியர் அயன் ஸ்டீவன்சன்,
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும்
ஜானிஸ் மினர் ஹோல்டன் ( எ நியர் டெத் ஆப் எக்ஸ்பீரியன்ஸ்” )
டொரண்டோவில் பேராசிரியராகப்
பணி புரியும் ஆலன் கால்டு
Chairman of Emeritus of Psychiatry at the Mount Sinai Medical Center in Miami,
டாக்டர் ப்ரியான் வெய்ஸ் (Dr.Brian L. Weiss M.D.)
-ஆகியோர் முன்பிறவியைப்
பற்றிய அறிதல் உள்ள பல ஆண்களையும், பெண்களையும் ஆராய்ந்து –
தங்கள் அனுபவங்களை புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த இடுகையின் முந்திய பகுதிகளில் இடப்பட்டிருக்கும் பின்னூட்டங்களில்,
சில நண்பர்கள் மேலும் பல ஆராய்ச்சியாளர்களைப் பற்றியும்,
அவர்கள் எழுதியுள்ள புத்தகங்களைப்பற்றியும் விவரங்களைத்
தந்திருக்கிறார்கள்.
இதில் – டாக்டர் ப்ரியான் வெய்ஸ் (Dr.Brian L. Weiss M.D.)
மிகவும் பாபுலரான ஆராய்ச்சியாளராகத் தெரிகிறார். இந்த டாக்டர் தனது
நோயாளிகள் சிலரின் தீராத பிரச்சினைகளை ஹிப்னாடிசத்தைப் பயன்பற்றி தீர்த்து வைக்க முயன்றிருக்கிறார்.
எதேச்சையாக ஹிப்னாடிச உறக்கத்தில் இருந்த ஒரு பெண்மணியை
பரிசோதிக்கும்போது, அவரது நோய்க்கான காரணம் அவரது
முற்பிறவியில் உண்டானது என்று தெரிந்து கொண்டு, அதைப்பயன்படுத்திப் பார்த்ததில் வெற்றியும் கண்டிருக்கிறார். இதில் ஆச்சரியம் அடைந்த அவர்,
மறுபிறவி பற்றி தீவிரமாக ஆராய்ச்சியைத் துவங்கி இருக்கிறார்.
ஆயிரக்கணக்கான அவரது நோயாளிகளில், சிலருக்கு முற்பிறவி பற்றிய நினைவு அவர்களையும் அறியாமலே அவர்களிடம் இன்னும் இருக்கிறது
என்று ஹிப்னாடிச உறக்கத்தில் கண்டிருக்கிறார்.
தன் அனுபவங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ள பல புத்தகங்கள்
எழுதி இருக்கிறார் – இன்றும் அவர் பல செமினார்களை நடத்திக்கொண்டிருக்கிறார்.
அவரது புத்தகங்களில் சில –
இந்த உளவியல் ஆராய்ச்சியாளர்கள் முற்பிறப்பு பற்றிய நினைவுகளின்
பாதிப்பு உள்ள பல பேரை ஆராய்ந்திருக்கிறார்கள். இவர்கள் நூற்றுக்
கணக்கானவர்களைப் பற்றி எழுதி இருந்தாலும், உதாரணத்திற்கு
இரண்டே இரண்டு மட்டும் –
அமெரிக்க பெண்மணி ஒருவர் – 100 வருடங்களுக்கு முந்தைய
தன் அயர்லாந்து முன்பிறப்பையும், அது சம்பந்தப்பட்ட ஊர்களையும் –
இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்.
பிறந்தது முதல் அமெரிக்காவை விட்டு வெளியே போகாத அவர்
அயர்லாந்து ஊர்களைப்பற்றி பிட்டு பிட்டு வைத்திருக்கிறார்..
இத்தனைக்கும் அவர் இதுவரை
வேறு எந்த நாட்டிற்கும் சென்றதே இல்லையாம்.
இந்தியாவில் மத்தியப் பிரதேசம், போபால் நகரைச் சேர்ந்த
சுவர்ணலதா திவாரி என்கிற பெண்மணி –
முதல் பிறப்பில், கம்லேஷ் என்கிற
பெயருடன் 6 வயது வரை அஸ்ஸாமில் வாழ்ந்ததும்,
அதற்கு அடுத்த பிறப்பில் பியா பாதக் என்கிற பெயருடன்
கட்னி நகரில் வாழ்ந்து 39 வயதில் இருதயக்கோளாறினால்
இறந்ததும் இன்னும் அவர் நினைவை விட்டு அகலவில்லை.
பொதுவாக இத்தகைய ஆராய்ச்சியாளர்கள் தங்களின் அனுபவங்களின்
அடிப்படையில், இன்னும் சில
கருத்துக்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.
i) சராசரியாக ஒரு இறப்பிற்கும் அடுத்த பிறப்பிற்கும் இடையே
சுமார் 18-20 மாத இடைவெளி இருப்பதாகவும் –
ii) பொதுவாக இத்தகைய முன்பிறப்பு பற்றிய நினைவுகளைப் பெற்றவர்கள் – முன்பிறவியில் அகால மரணம் அல்லது விபத்தில் மரணம்
அடைந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்றும் –
iii) இத்தகைய நினைவுகளைப் பெறுபவர்கள், சிறு வயதில் இவற்றை
நினைவில் பெறுவதும், வயதாக வயதாக இவற்றைப் பற்றிய நினைவுகளை இழந்து விடுவதாகவும் ஆராய்ந்து கண்டிருக்கிறார்கள்.
இத்தனை இருந்தாலும், நம்மைப் பொருத்த வரையில்
நமக்கு நம்ம ஊர் குப்புசாமி, ராமசாமி, மூக்காயி, மீனாட்சி
போன்றவர்கள் யாரைப்பற்றியாவது தெரிந்தால் தான்
நம்பத்தோன்றும் -இல்லையா ?
இத்தனை இருந்தாலும், இவற்றை எல்லாம் நம்பும் பலர் கூட
இதை அரை மனதோடு தான் நம்புகிறார்கள்.
ஆனால் – மறுபிறப்பு உண்டு என்கிற லாஜிக் ஒன்றே முழுமையானதாகத்
தெரிகிறது. மனிதனுக்கு நிரந்தரத் தன்மை என்ற ஒன்று அவசியம்
தேவைப்படுகிறது.
தான் வாழ்நாள் முழுவதும் சேமிக்கும் அறிவும், அனுபவமும்,
செய்யும் நற்செயல்களின் பயன்களும், வீணாவதில்லை
என்கிற என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையை
அர்த்தமுள்ளதாக்குகிறது. அதே போன்றது தான் – தவறு செய்பவர்கள்-
எவ்வளவு நாட்கள் ஆனாலும், தண்டிக்கப்பட்டே தீருவார்கள் என்கிற
நம்பிக்கையும் !
இப்போதைக்கு இந்த தலைப்பில் எழுதுவதை இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.
புதிதாக மேற்கொண்டு எதாவது தகவல் கிடைக்கும்போது நாம் இதை
மீண்டும் தொடரலாம் !
((நண்பர்கள் இந்த தலைப்பில் உள்ள இடுகைகளைப் பற்றியோ,
மேற்கொண்டு தகவல்களையோ கூற விரும்பினால், பின்னூட்டத்தில்
எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன் )







காவிரி மைந்தன் சார்..
மிக நல்ல முயற்சி. நல்ல, தெளிவான கருத்துக்கள். நிறைய உழைத்து, நேரம் ஒதுக்கி, ஆய்வுகள் செய்து கட்டுரை எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
என்னுடைய தளத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட கட்டுரைகளை முற்பிறவி, மறுபிறவி குறித்தது எழுதுயுள்ளேன். அன்னை, அரவிந்தர் போன்றோரது கருத்துக்களையும் தெரிவித்துள்ளேன்.
நீதிபதி கிருஷ்ணய்யர், மகான் அரவிந்தர், அன்னை போன்றோரது ஆவியுலக ஆய்வுகள் குறித்தும் எழுதியுள்ளேன். நேரமிருப்பின் படியுங்கள். நன்றி.
காவிரிமைந்தன் அவர்களுக்கு,
மிக அருமையான பதிவு.
தெரிந்த subject தான் என்றாலும் தெரியாத பல விஷயங்களை
இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.
உண்மை என்று நிரூபிக்கப்பட முடியாவிட்டாலும்,
நிஜமா இல்லையா என்பது சரியாகத் தெரியாவிட்டாலும்,
சில கருத்துக்களை ஏற்றுக் கொள்வது சமுதாயநலத்திற்கு நல்லது.
நல்ல செயல்களில் ஈடுபடுவது நன்மை பயக்கும். நாமும் நம் குடும்பமும்
மகிழ்வுடன் வாழ அது துணை நிற்கும் என்றும் நியாயத்திற்கு புறம்பாக
செயல்படுபவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்றும்
மறுபிறப்பு தத்துவம் சொல்கிறது. இந்த தத்துவம் தவறாக
இருந்தாலும் கூட, இந்த நம்பிக்கையை சமுதாயம் ஏற்று நடப்பது தான்
எல்லாருக்கும் நன்மை பயக்கும்.
நன்றியும், உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தண்டனை.. தண்டனை என்று சொல்வது என் மனதிற்கேனோ ஒப்பவில்லை. உலகில் நல்லது எது கெட்டது எது? எனக்கு நல்லதாகப் படுவது பக்கத்து வீட்டுக்காரனுக்கு கெட்டதாகப் படுகிறது. எல்லைக்கோடுகள் மங்கலாகவே உள்ளன. அல்லது தெரிவதே இல்லை.
ஆயினும், தொடரின் இறுதிப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இவ்விஷயங்களை முழுமையாக ஏற்கிறேன். எனக்கும் பிறவிகளில் நம்பிக்கை உண்டு.
////ஆனால் – மறுபிறப்பு உண்டு என்கிற லாஜிக் ஒன்றே முழுமையானதாகத்
தெரிகிறது. மனிதனுக்கு நிரந்தரத் தன்மை என்ற ஒன்று அவசியம்
தேவைப்படுகிறது.
தான் வாழ்நாள் முழுவதும் சேமிக்கும் அறிவும், அனுபவமும்,
செய்யும் நற்செயல்களின் பயன்களும், வீணாவதில்லை
என்கிற என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையை
அர்த்தமுள்ளதாக்குகிறது. /////
இது உண்மை. வாழ்நாளில் நாம் கைக்கொள்ளும் குணங்களும், விரிந்த அறிவும் அடுத்தடுத்த பிறவிகளிலும் தொடரும். ஆகவே………………………..