தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி
விட்டால் போதுமா ?
தமிழ்நாடு சட்டமன்றம் அற்புதமான பணி ஒன்றினைச்
செய்திருக்கிறது இன்று. மிக மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒன்று மக்களின் உணர்வுகளைப்
புரிந்து கொண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
“நாங்கள் எல்லாம் உங்களுடன் இருக்கிறோம்” என்று
தமிழ் நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்
ஒரு அரசு தமிழ் ஈழ மக்களுக்கு முதல் தடவையாக
ஆதரவுக்கரம் நீட்டி இருக்கிறது.
“இலங்கையை இனியும் நட்பு நாடு என்று சொல்லாதே”
என்று உரிமையோடு மத்திய அரசை வற்புறுத்தி இருக்கிறது.
“இலங்கையோடு பொருளாதார ஒத்துழைப்பை நிறுத்தி வை”
என்றும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட
இனப் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து
சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை
நடத்திடவும்;
இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில்,
போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு
நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை
பெற்றுத் தந்திடவும்;
“தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும்,
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில்
வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும்
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில்
தீர்மானத்தினை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று –
தமிழகம் மத்திய அரசிடம் வலியுறுத்திக் கூறும் தீர்மானம்
ஒன்று தமிழக சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்
பட்டிருக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி
விட்டால் போதுமா ? வெளியுறவுக் கொள்கைக்கும்
மாநில அரசுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார்கள்
டெல்லியில் ஆட்சி புரிபவர்கள்.
எங்கிருந்து வந்தது மத்திய அரசு ?
சொந்தமாக 4 அடி மண் கூட இல்லாத மத்திய அரசு !
மாநிலங்களின் கூட்டமைப்பு தான் மத்திய அரசு. எனவே,
மத்திய அரசின் கொள்கைகள், மாநிலங்களின் நலன்களைச்
சார்ந்ததாகவே இருக்க முடியும் – இருக்க வேண்டும்.
ஒரு மாநிலத்தின் ஒட்டு மொத்த மக்களின் உணர்வுகளும்,
நலன்களும் முக்கியமா அல்லது வெளிநாடு ஒன்றின்
உறவு முக்கியமா என்றால் – சொந்த நாட்டின்
ஒருமைப்பாட்டிற்கும், உணர்வுக்கும் தான் ஒரு
மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
வெளியுறவுக் கொள்கைக்கும் மாநில அரசுக்கும் என்ன
சம்பந்தம் என்று காங்கிரஸ்காரர்கள் யாரேனும் இனியும்
சொல்வார்களேயானால் – தமிழ் நாட்டுக்கும் உங்களுக்கும்
என்ன சம்பந்தம் என்று கேட்க மக்கள் காத்திருக்கிறார்கள்.
இனியாவது மத்தியில் இருப்பவர்கள் -தங்கள் போக்கை
மாற்றிக்கொண்டு – தமிழக மக்களின் உணர்வுகளை உணர்ந்து
செயல்பட வேண்டும்.
பிரிட்டனிலும், கனடாவிலும், நார்வேயிலும் இருக்கும்
வெள்ளைக்காரர்களுக்கு புரியும் தமிழர்களின் வலியும்,
வேதனையும் –டெல்லியில் இருக்கும் காங்கிரஸ்காரர்களுக்குப்
புரியாமலா போகும் ? புரியும் தாராளமாகப் புரியும் – ஆனால்
அவர்கள் என்ன செய்வார்கள் – “இத்தாலி”யப் பாசம்
அவர்களின் கண்களை மறைக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி
விட்டால் போதுமா ?
போதாது தான் !
மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகள் மாற வேண்டும்.
நிச்சயம் தானாக மாறாது –
மாற்றப்பட வைக்கப்பட வேண்டும்.
அதற்கு –
ஆவன …அனைத்தையும் செய்ய வேண்டும் …..!



இந்திய அரசியலமைப்புக் குறித்து, ஆட்சியமைப்புக்
குறித்தெல்லாம் தெளிவாக தெரிந்து வைத்துக் கொண்டும்
தெரியப்படுத்திக் கொண்டும் வரும் தாங்கள், இந்த
தீரிமானம் “எல்லாவற்றையும் தலை கீழாக” புரட்டி போட்டுவிடும்
என்கிற மாதிரியான கருத்தை பதிவு செய்திருப்பது
உண்மையில் வியப்பாக இருக்கிறது.
கட்ந்த ஆண்டு “போட்ட” அல்லது “நிறைவேற்றப்பட்ட” தீர்மானம்
பயத்த நன்மைகள் என்ன என்பதை யாராவது விளக்குவார்களா?
தமிழ்மக்களின் உணர்வோடு விளையாடும் வித்தைகளில் ஒன்றே
இம்மாதிரி தீர்மானங்களும், TESO மாநாடுகளும், அதில் இயற்றப்படும்
தீர்மானங்களும் என்பதை அரசியல் கலப்பில்லாத “சாமன்ய” தமிழன்
தெரிந்துதான் வைத்திருக்கிறான்.
இந்த ரகசியம் ஆண்ட மற்றும் ஆளுகின்ற கட்சியினருக்கும் மிக
நன்றாகவே தெரியும். ஆனாலும் கூட, “எதுக்கும் இருக்கட்டும்”
என்கிற வகையில்தான் “நாங்கள் உங்களோடு” என்கிற மாதிரி
காட்டிக்கொள்கிறார்கள்.இதை புலம் பெயர்ந்த, பெயர இயலாத,
முகாம்களில் உள்ள (இலங்கைத்) தமிழர்களும் அறிவார்கள்.
(ஈழப்)போர் நடந்து வந்த காலத்திலே, விடுதலைப்புலிகளுக்கும்
இலங்கை ஆட்சியாளர்களுக்கும் நடந்த “நீயா நானா”வில், இந்தியா
தலையிடக் கூடாது என்றும் அவர்களுக்கான எதிர்காலத்தை அவர்களே
தீர்மானித்துக் கொள்வார்கள் என்றும் முழங்கியவர்கள்தான் இன்று
வேறு ராகத்திலே பாடுகிறார்கள் என்பதை அறியவில்லையா?
ராசபக்சே (ராஜ– தமிழ் அல்ல) தலைமைக்கு முன்னதாக, அதாவது
அவர் நடத்திய ALL OUT ASSAULT IS BEST DEFENCE க்கு முன்பாக நடந்த
“சமாதான பேச்சுவார்த்தைகளை” இந்தியாதான் முன்னின்று நடத்த
வேண்டும் என்று இவர்களில் யாரும் ஏன் குரல் கொடுக்கவில்லை?
தனி ஈழம் ஒன்றே தீர்வாக இருக்கலாம். ஆனால், இன்றைய உலக
அரசியல் சூழலில் சாத்தியாமா? தமிழக அரசியல்வாதிகள் மாணவர்களைத்
கூண்டிவிட்டு, தமிழ் மக்களின் உண்ர்வோடு விளையாடி வருவதாகவே
கருத வேண்டி உள்ளது.
அது சரி. ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் (பாண்டியனாரின் கம்யூனிஸ்டு
உட்பட) ஆறு தேமுதிக எம் எல் ஏக்கள் மீதான தண்டனையக் குறைந்தபட்ச
தண்டணையாக குறைக்க வேண்டும் என்று ஒருமித்த குரலில் கோரியும்,
ஆளும் அரசு செவிசாய்க்கவில்லையே. அம்மையார் தீர்மானத்தை மட்டும்
(மத்தியில்) ஆளும் பெரியண்ணன் கேட்டுவிடுவாரா என்ன?
நண்பர் வெங்கட்ரமணி,
தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதால்
ஈழம் கிடைக்கப்போகிறது என்று நான் சொல்லவில்லை.
ஒரு on going process -ல்
இது ஒரு திருப்புமுனை-
5,6 வருடங்களுக்கு முன்னர் – தனி ஈழம் வேண்டும் என்று
தமிழ்நாட்டில் சட்டபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட
ஒரு அரசு தீர்மானம் போடும் என்று யாரும் கனவு கூட
கண்டிருக்க முடியாதே !
விடுதலைப் போராட்டம் என்பது பல காலகட்டங்களில்
பலவித போராட்ட முறைகளினாலும், பல்வேறுபட்ட
போராளித் தலைவர்களாலும் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.
இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்து நீங்கள் அறியாததல்ல-
வ.உ.சி., சுப்ரமணிய சிவா, வாஞ்சி, ஆகியோர்
உடனடியாக வெள்ளைக்காரன் சுதந்திரத்தை தூக்கி கையில்
கொடுத்து விடப்போகிறான் என்று நினைத்தா போராடினார்கள்-
தியாகம் செய்தார்கள் ?
பாரதி எந்தப் பலனை எதிர்பார்த்து அத்தனை இன்னல்களை
எதிர்கொண்டான் ?
பகத் சிங் தூக்குமேடையில் ஏறியது மறுநாளே சுதந்திரம்
கிடைத்து விடும் என்று எதிர்பார்த்தா ?
ஜெர்மனியின் ஹிட்லரைக் கூட நம்பி தன் போராட்டத்தை
முன்னெடுத்துச் சென்றாரே
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் – எப்படி?
அந்த சாத்தியக்கூற்றைக் கூட பயன்படுத்த விரும்பினார் அவர்.
அது போல் –
இன்று தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் ஒருமித்த கருத்து –
அடுத்து மத்தியில் ஆள வரும் கட்சியை இந்தியாவின்
வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டிய
அவசியத்தைப் பற்றி யோசிக்க வைக்கும். மனதளவில்,
அகில இந்திய அரசியலிலும் ஒரு எதிர்பார்ப்பை –
தயார் நிலையை உருவாக்கும்.
மத்திய அரசு – விரும்பி முனைந்தால் – தமிழ் ஈழம்
சாத்தியமே. இது நாளையே நடக்கும் என்று நான் சொல்லவில்லை. 4 வருடம் ஆகலாம் – 10 வருடங்கள்
கூட ஆகலாம். ஆனால் நிச்சயம் நடக்கக்கூடிய ஒன்றே !
நம்புவோம் – இன்றில்லா விட்டாலும் நாளையாவது,
எதிர்காலத்தில் என்றாவது ஒரு நாள் – நிச்சயம் நடக்கும் என்று !
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
பின்குறிப்பு – மேலே உள்ள இடுகையில், கடைசியில் இன்னொரு
பத்தியை சேர்த்திருக்கிறேன்.(ஆனால் – அது உங்கள்
பின்னூட்டம் கிடைக்கும் முன்பே சேர்க்கப்பட்டு விட்டது !)