புதிய தனியார் வங்கிகளை துவக்குவது
யார் லாபம் பெற …?
ஏற்கெனவே மத்திய அரசின் பொறுப்பில் 26 மிகப்பெரிய
பொதுத்துறை வங்கிகள் இயங்குகின்றன.இதைத்தவிர,
25 தனியார் துறை வங்கிகள் வேறு. நகரங்களில் நீங்கள்
ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தால் அதற்குள் குறைந்த பட்சம்
3 வங்கிக் கிளைகளை பார்க்க நேரிடும்.
இந்த நிலையில், இருக்கும் வங்கிகள் போதாதென்று
புதிதாக தனியார் வங்கிகள் சிலவற்றை துவக்க அனுமதி அளிக்கப்போவதாக மத்திய அரசு கொள்கை
முடிவை அறிவித்து, அதற்கான நடைமுறைகளை
மேற்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கியை பணித்துள்ளது.
ரிசர்வ் வங்கிக்கு இதில் ஒப்புதல் இல்லை !
தனக்கு இதில் ஒப்புதல் இல்லை என்பதை
மறைமுகமாக மத்திய அரசிடம் கூறியும் விட்டது
ரிசர்வ் வங்கி.
வங்கித்துறை அனுபவம் இல்லாத ,
நிதி நிறுவனங்கள் அல்லாத –
தொழில் துறையினரையும், வர்த்தக நிறுவனங்களையும் – வங்கித்துறையில் நுழைய அனுமதிப்பது
பெருங்கேட்டை உண்டு பண்ணும் என்பது
ரிசர்வ் வங்கியின் கருத்து.
1969-ல் முதன் முதலாக பெரிய வங்கிகளை
இந்திரா காந்தி அம்மையார்
நாட்டுடைமை (Nationalisation) ஆக்கும்போது
அதற்கான காரணங்களாக அவர் கூறியவை –
The objectives behind nationalisation –
To break the ownership and control of banks by a few business families,
To prevent the concentration of wealth and economic power,
To mobilize savings from masses from all parts of the country,
To cater to the needs of the priority sectors
ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால்,
வங்கிகள் சமுதாயத்தின்
வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும். அவற்றின் பலன்கள் சமுதாயத்திற்கு போய்ச்சேர வேண்டும்.
வங்கிகள் தனியார் வசம் இருப்பதால் -பொது மக்களுக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கான
திட்டங்களுக்கும் உதவுவதற்கு பதிலாக, குறிப்பிட்ட பெரும் தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் சுயவளர்ச்சிக்காகவே அவை உதவுகின்றன என்பதே !
கடந்த காலங்களில் மத்திய நிதியமைச்சர்
அடிக்கடி கூறி வந்தது என்ன ? –
ஏகப்பட்ட வங்கிகள் செயல்படுவதற்கு பதிலாக –
இந்திய வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டு,
உலக அளவிலான பெரிய வங்கிகளுடன் போட்டி போடும்
அளவிற்கு பெரிய வங்கிகளாக அவை உருவாக்கப்பட
வேண்டும் என்பதே.
இப்படி – இருக்கின்ற வங்கிகளே அதிகம் –
அவையே ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று பேசி
வந்த நிலையில் –
– அதற்கு நேர் மாறாக, இப்போது,
சிறிய அளவிலான, தனியார் வங்கிகள் துவங்கப்பட ஊக்குவிக்கப்படுகின்றன. இருக்கின்ற வங்கிகளுக்கு
பரந்த அளவில் கிளைகள் நிறைய துவக்குவது என்பது வேறு –
புதிய வங்கிகளையே துவக்குவது என்பது வேறு.
இது யாருடைய கொள்கை ?
காங்கிரஸ் கட்சியின் கொள்கை எப்போது, எப்படி மாறியது ?
மாமியார் கொள்கைக்கு நேர் விரோதமாக இருக்கிறதே
மருமகளின் புதிய கொள்கை !
புதிய வங்கிகளை துவக்க லைசென்சுக்கு
விண்ணப்பிக்க வரிசையில் நிற்பவர்கள்
யார் யார் என்று பார்த்தால் இதற்கான காரணம்
ஓரளவு விளங்கும் –
டாட்டா, ரிலையன்ஸ்,மகேந்திரா & மகேந்திரா, …
இப்படிப் போகிறது லிஸ்ட். அத்தனை பேரும் பெரிய பெரிய
தொழிலதிபர்கள்,(Industrialists) வர்த்தகர்கள்
(business magnets). வெளியில் தெரியும்
இவர்களின் முகங்களாவது தேவலை – ஆனால் இவர்கள்
பின்னே நுழையக் காத்திருக்கும் முகம் தெரியாத
பெரிய பெரிய ரியல் எஸ்டேட் புள்ளிகளின் நுழைவு
இதில் மறைந்திருக்கும் ஒரு மிகப்பெரிய ஆபத்து !
இவர்கள் உருவாக்கும் வங்கியில் சேரும்/புழங்கப் போகும், தொகை யாருக்கு உதவியாக இருக்கும் என்பதை யூகிப்பது
ஒன்றும் பெரிய காரியமில்லையே !
பெரிய அளவில் பொது மக்களின் சேமிப்புப் பணத்தை
முதலீடாகப் பெற்று, தங்கள் தனிப்பட்ட
நிறுவனங்கள் லாபம் பெறும் வகையிலேயே அவை பயன்படுத்தப்படும். கிங் பிஷர் ஏர்லைன்ஸ்
விஜய் மல்லையா என்கிற ஒரே உதாரணம் போதுமே நமக்கு ?
காங்கிரஸ் தலைமை இதில் இவ்வளவு தீவிரமாக இருப்பதன்
காரணம் என்னவாக இருக்க முடியும் ?
– பணம் ! ??
விரைவில் பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது.
இந்த பெரும் பணக்கார தொழிலதிபர்கள், வர்த்தகர்களின்
ஆதரவு, உதவி – ஆளும் கட்சிக்கும், அதன் தலைமைக்கும்
தாராளமாகக் கிடைக்கும். கிடைப்பதில் –
இவர்களுக்கு பங்கில்லாமல் போகுமா ?
அரசின் இந்த கொள்கை முடிவுகளை, தான்
விரும்பா விட்டாலும் ஏற்றாக வேண்டிய கட்டாயத்தில்
இருக்கும் ரிசர்வ் வங்கி –
தன்னால் இயன்ற வரை சில நடைமுறை கட்டுப்பாடுகளை விதிக்க முயன்று வருகிறது.
புதிய வங்கிகளைத் துவங்கும் நிறுவனங்களுக்கு
குறைந்த பட்சம் 10 ஆண்டுகளாவது நல்ல
பின்னணி /அனுபவம் இருக்க வேண்டும்.
புதிய வங்கிகள் 25% அளவிற்கு, கிராமங்களில் கிளைகளைத் துவக்க வேண்டும்.
குறைந்த பட்சம் 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய
வேண்டும் !
இப்படி எல்லாம் கண்டிஷன்கள் போட்டாலும் –
எதுவும் நடைமுறையில் வரப்போவதில்லை.
ஆரம்பத்தில் திட்டத்தை அறிவித்தபோது –
ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு விதிக்கப்பட்ட
தடை அதற்குள்ளாகவே விலக்கப்பட்டு விட்டது.
ஆளும்கட்சி கை காட்டுகிற நபர்களுக்குத் தான்
புதிய வங்கிகளுக்கான லைசென்சுகள் போய்ச்சேரப்
போகின்றன என்பதே நிதரிசனம்.
மிக அண்மையில், ஜனவரி 2013ல் International Monetary Fund இந்தியாவில் ப்ரைவேட் வங்கிகள்
துவங்குவது பற்றி ரிசர்வ் வங்கிக்கு கொடுத்த ஆலோசனையில் –
தொழில் துறையினர் வங்கிகளைத் துவக்க அனுமதிப்பது
நல்லதல்ல என்று கூறி இருக்கிறது.
ஏற்கெனவே பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன்களின்
நிலை (NPA – Non-Performing Assets) கவலை
தரக்கூடியதாக இருக்கிறது.
(கவலை நமக்குத்தான் – அரசாங்கத்திற்கு அல்ல !)
2011-12ல் ஐம்பது நிறுவனங்களின் மொத்த NPA
39,601 கோடியாக இருந்தது –
2012-13ல், (பிப்ரவரி 15ந்தேதி வரையுள்ள காலம்)
எழுபத்து மூன்று நிறுவனங்களின் NPA
62,176 கோடி என்கிற அளவிற்கு உயர்ந்திருக்கிறது.
இதைச் சரி செய்ய (CDR – corporate debt restructuring) – சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு
(கடங்காரர்களுக்கு !) பல சலுகைகள் காட்டப்பட்டிருக்கின்றன.
கடனை திரும்பச் செலுத்தும் காலத்தை நீட்டிப்பது,
வட்டி விகிதத்தைக் குறைத்து சலுகைகளைக் கூட்டுவது,
சில தவணைகளுக்கான வட்டியை கடனாக மாற்றுவது –
போன்றவை அவற்றில் சில.
இந்த பின்னணிகளை எல்லாம் பார்க்கும்போது தான் –
சில கேள்விகள் தோன்றுகின்றன –
கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் – கிழவியைத் தூக்கி
மணையில் வை என்பது போல் –
நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும்போது,
புதிய தனியார் வங்கிகள் இப்போது ஏன் ? யாருக்காக ?
என்ன அவசியம் ?



ஒரு கண்டீஷன் போடலாமே திரு காவிரி சார்!
அரசு மின்சாரம் அளிக்காது.
இவர்களே மின்சாரம் தயாரித்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கிளை குறைந்தது 10 கிராமங்களுக்கு மின்சாரம் சப்ளை செய்து (இலவசமாக) பராமரித்துக்கொள்ள வேண்டும்.
அதேபோல சிலபல சாலைகளை சொந்தச்செலவில் பராமரித்துக்கொள்ளவேண்டும்.
மேலும் ஒரு கிளைக்கு ஒரு பள்ளியை நிறுவி பராமரித்துக்கொள்ளவேண்டும்.
வருக நண்பர் அஜிஸ்,
அடிப்படையையே தகர்க்கிறீர்களே – இது நியாயமா !
தனியார் வங்கி ஆரம்பிப்பது காசு சம்பாதிக்கவா அல்லது
சமூக சேவை செய்யவா ?
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
புதிய வங்கிகள் 25% அளவிற்கு, கிராமங்களில் கிளைகளைத் துவக்க வேண்டும்.
செய்ய மாட்டார்கள். இது காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக செய்யப்படும் கொள்கை முடிவு & செயல்.
அருமையான பதிவு.