“எனக்குப் பொதுவாக வேலை செய்யப் பிடிக்காது.
முடிந்தவரை வேலையை நிராகரிக்கவோ தள்ளிப்
போடவோதான் விரும்புவேன்.”
“யாருமே கடினமாக உழைக்கவேண்டியதில்லை
என்பதே என் விருப்பம். கடின உழைப்பே
முன்னேற்றத்துக்கு வழி என்பது பொய்யான முழக்கம்.”
“எந்த மனிதருமே கடுமையான் உடல் உழைப்பில்
ஈடுபடவும் தேவையிருக்ககூடாது; கடுமையான
மூளை உழைப்பும் செய்ய வேண்டியிருக்கக்கூடாது
என்பதே என் கருத்து.”
“மனிதர்கள் யாரும் ஒரு நாளில் அதிக பட்சம்
ஓரிரு மணி நேரத்துக்கு மேல் பொருள் ஈட்டுவதற்கான
உழைப்பில் ஈடுபடும் தேவையே இருக்கக் கூடாது”
– முழு இடுகையும் கீழே பாருங்கள் –
———————–
எனக்குப் பொதுவாக வேலை செய்யப் பிடிக்காது.
முடிந்தவரை வேலையை நிராகரிக்கவோ தள்ளிப் போடவோ
தான் விரும்புவேன். இந்தக் கட்டுரையைக் கூடக் கடைசி
நிமிடத்தின் கடைசி நொடியில்தான் எழுதுகிறேன்.
எப்போதுமே எழுதும் விஷயம் பிடித்தமானது என்பதால்
எழுதுகிறேனே தவிர எழுதினால் இத்தனை பணம் கிடைக்கும்
என்பதற்காக எழுதுவதில்லை.எனக்கு பிடித்து எழுதியதற்கு
போதுமான பணம் வருவதில்லை என்ற பிரச்சினையையும்
எழுதிக் கொண்டே இருக்கிறேன்.
ஆனால் நான் சோம்பேறி அல்ல. எனக்குப் பிடித்த
வேலைகளை எந்த நிபந்தனையுமில்லாமல் என் விருப்பப்படி
செய்யும்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் சுறுசுறுப்பாக செய்வேன்.
மனிதருக்கு மிக அவசியமான உணவு, உடை, உறைவிடம்
ஆகியவற்றுக்குத் தேவைப்படும் பொருள் ஈட்டுவதற்காக வேலை
செய்தாகவேண்டும் என்பதுதான் மனித குலம் தன் மீது தானே
சுமத்திக் கொண்டிருக்கும் சாபம். மனிதர்கள் தமக்குள் பிரிந்து
ஏற்றத்தாழ்வுகளுடன் அமைத்துக் கொண்டிருக்கும் சமூக அரசியல்
அமைப்புமுறைகளின் விதி அது.
பட்டப்படிப்பை முடித்த உடனே நான் வேலைக்குப் போய்
எனக்காகவும் என்னை நம்பியிருந்த இருவருக்காகவும்
வேலை செய்து பொருள் ஈட்டியாக் வேண்டிய கட்டாயத்தில்
இருந்தேன். அதனால் நாடக மேதை பி.வி.காரந்த் எனக்கு
டெல்லி தேசிய நாடகப்பள்ளியில், (ஒற்றை ஆள் உயிரைத்
தக்கவைக்கக் கூடிய) உபகாரச் சம்பளத்துடன் இடம் கொடுத்தும்
நான் சேரமுடியவில்லை. சேர்ந்திருந்தால் என்னுடன் இருந்த
இருவரும் பட்டினியில் செத்திருப்பார்கள்.
நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உயிர் வாழ, வேலை
செய்து பொருள் ஈட்டிதான் ஆகவேண்டும் என்ற உலக விதியை
மீறமுடியாத நிலையில், எனக்குப் பிடித்த வேலையை
மட்டும்தான் செய்வது, பிடிக்காத எதையும் பணத்துக்காக என்று
செய்யப்போவதே இல்லை என்ற தீர்மானத்தை மேற்கொண்டு
இன்றளவும் மகிழ்ச்சியுடன் பின்பற்றிவருகிறேன்.
எனக்குத் தெரிந்த ஒருவருக்கு சுமார் 40 வயதாகியும் அவர் ஒரு வேலைக்கும் செல்லாமல் அவரது வயதான பெற்றோரின்
ஆதரவில் வாழ்ந்துவந்தபடி கலைத் துறையில் ஈடுபடுகிறேன்
என்று மிகச் சுமாரான கலைப் படைப்புகளை தயாரித்துக்
கொண்டிருந்தார். அந்த மாதிரி வசதி கிடைக்கும்போது
எத்தனை பெரிய விஷயங்களையெல்லாம் சாதித்திருக்கலாம்
என்று எனக்குத்தோன்றும். ஆனால் அது சரியான வழிமுறை
அல்ல. வேறு யாரோ வேலைக் கஷ்டத்தை அனுபவிக்க அந்த
சுகத்தில் குளிர் காய்ந்தபடி நாம் சும்மா இருப்பது நியாயமானதே
அல்ல.
யாருமே கடினமாக உழைக்கவேண்டியதில்லை என்பதே என்
விருப்பம். கடின உழைப்பே முன்னேற்றத்துக்கு வழி என்பது
பொய்யான முழக்கம். வீட்டு வேலை செய்பவர்களும், கூடையில் காய் சுமந்து வீடு வீடாக காய் விற்பவர்களும்,
சாலை போடுபவர்களும், துப்புரவுப்பணியாளர்களும் இன்னும்
இது போன்ற பல உதிரித் தொழிலாளர்களும் மிகக் கடுமையான்
வேலைகளில் பல மணி நேரங்கள் உழைத்துக் கொண்டுதான்
இருக்கிறார்கள். சொந்தமாக ஒரு ஒன் பெட்ரூம் பிளாட் கூட
அவர்களால் ஒருபோதும் வாங்கமுடியாது.
பொருள் தேவைக்கான மனித உழைப்பைப் படிப்படியாகக்
குறைத்துக் கொண்டே போவதுதான் நியாயம். ஏன் பலரும்
தனியார் நிறுவன வேலையை விட்டு விட்டு அரசாங்க வேலை
கிடைத்ததும் மகிழ்ச்சி அடைகிறார்கள் ? அதிக சம்பளம்
கிடைக்கும். குறைவான வேலை என்பதால்தான். இந்த வசதி
சமூகத்தில் எல்லாருக்கும் அமையவேண்டும்.
சிலர் குறைவான நேரமே வேலை பார்த்து நிறைய சம்பளம்
பெறுவதும், பலர் அதிக நேரம் வேலை பார்த்து குறைந்த
ஊதியம் அடைவதும் சமூக விதிகளில் இருக்கும்
அயோக்கியத்தனம். இதை நியாயப்படுத்த மூளை உழைப்பு,
உடல் உழைப்பு என்று பிரித்து வைத்திருக்கிறார்கள்.எந்த
மனிதருமே கடுமையான் உடல் உழைப்பில் ஈடுபடவும்
தேவையிருக்ககூடாது; கடுமையான மூளை உழைப்பும் செய்ய
வேண்டியிருக்கக்கூடாது என்பதே என் கருத்து.
கடினமான உடல் உழைப்பு வேலைகளை எல்லாம்
இயந்திரங்களை செய்யவைக்க வேண்டும். நாகரிக வளர்ச்சி
என்பதே அப்படித்தான். சக்கரம் கண்டு பிடித்ததால்தான்
சுமைகளை சுமந்துகொண்டு மனிதரே அலையும் கொடுமை
குறைந்தது. சக்கரம் போன்ற புதுப்புது கண்டுபிடிப்புகளைச்
செய்ய மூளை உழைப்பு செய்யவேண்டும். எல்லாருமே இதில்
ஈடுபடும் சூழல் அமைக்கப்பட்டவேண்டும்.
குறைந்த உழைப்பிலேயே வாழ்க்கைக்கான எல்லா
தேவைகளுக்குமான பொருள் எல்லாருக்கும் கிட்டவேண்டும்
என்ற அமைப்பை ஏற்படுத்துவதுதான் நமக்கான சரியான
லட்சியம். மனிதர்கள் யாரும் ஒரு நாளில் அதிக பட்சம்
ஓரிரு மணி நேரத்துக்கு மேல் பொருள் ஈட்டுவதற்கான
உழைப்பில் ஈடுபடும் தேவையே இருக்கக் கூடாது என்ற
நிலைதான் என் கனவு. மீதி நேரங்களை மனிதர்கள் இசை,
ஓவியம், சிற்பம், இலக்கியம், விளையாட்டு, கண்டுபிடிப்பு
என்று அவரவருக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் மட்டும்
செலவழிக்கும் வசதி வரவேண்டும்.
மனிதர்களை பண்டங்களை நுகரும் இயந்திரங்களாக
மாற்றி அதற்காக பெரும் பொருள் ஈட்டவேண்டிய கட்டாயத்தை
ஏற்படுத்தி பெரும்பாலோரை உழைப்பின் பெயரால் கஷ்டப்பட
வைத்து சிலர் மட்டும் செலவந்தர்களாக திரியும் அமைப்பு
முறைதான் இப்போது எங்கும் இருக்கிறது.
இது மாறவேண்டுமானால், முதலில் ஒருவர் விரும்பியதை
மட்டுமே படிப்பது. விரும்பிய துறையில் மட்டுமே வேலை
செய்வது, எல்லா வேலைகளுக்கும் சமமான மதிப்பு,
ஊதியம் என்று பல அம்சங்களைப் படிப்படியாகவாவது
நடைமுறைப்படுத்தும் சமூக அரசியல் கலாசாரச் சூழலை நாம்
ஏற்படுத்தவேண்டும். சம்பளத்துக்காக அடிமைகளாகும்
நிலையை விட்டு விடுதலையாகி நிற்போம் !
அந்திமழை நவம்பர் 1 2012
கவர்ஸ்டோரியுடன் வரும் பத்திக்காக கேட்டதற்கு எழுதப்பட்டது.
—————-
முழுவதும் படித்து விட்டீர்களா ?
– “ஞானி” அவர்களின் மேற்படி தத்துவங்கள் பற்றி நான்
எனக்குத் தோன்றிய சில கருத்துக்களைக் கூற விரும்புகிறேன்.
ஆனால், அதற்கு முன் நீங்களும் கொஞ்சம் சிரமப்பட
வேண்டுமென்று விரும்புகிறேன்!
ஞானியின் இந்த கருத்துக்களைப் பற்றி உங்களுக்கு என்ன
தோன்றுகிறது ?
யோசித்து உங்கள் கருத்தை எழுதுங்களேன் !!



அன்புடையீர், இந்தக் கருத்துகளை எனக்கு முன்னர் கார்ல் மார்க்சும், தமிழ்நாட்டில் அ.மார்க்சும் வேறு வடிவங்களில் எழுதியிருக்கிறார்கள். அவற்றையும் தேடிப்பிடித்துப் படிக்கும்படி பரிந்துரைக்கிறேன். அன்புடன் ஞாநி
பாரதியின் கவிதை ஒன்றும் இது தொடர்பாக் உள்ளது. அது அந்திமழை இதழில் வெளியாகியிருக்கிறது. அதையும் படியுங்கள். ஞாநி
இந்த நாலு கருத்தும் “இது தான் என் கருத்து” என்று உறுதியிட்டு கூற முடியாது… அவரவர் வயதிற்கேற்ப, அனுபவத்திற்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப மாறுபடும்… என்னைப் பொறுத்தவரை சுருக்கமாக : இந்த நிலை மாறும்… இதுவும் கடந்து போகும்…
பகிர்வுக்கு நன்றி…
ஞாநி அவர்கள் ’விட்டு விடுதலையாகி நிற்பாய் சிட்டுக்குருவியைப் போலே’ என்று பாரதி பாடியது போல் தளைகளற்ற வாழ்க்கை யாவர்க்கும் சாத்தியமாகுமா என்ற ஏக்கத்தில் வேறொரு தளத்தில் எழுதியுள்ளார். அதைப் புரியாமல் ஒரு பதிவு என்றால் ’இதுவும் கடந்துபோகும்’ என்று தனபாலன் என்பவரின் மொக்கைப் பின்னூட்டம் வேறு. கொடுமடா சாமி.
மிக உயர்ந்த கருத்து.ஆனால் இது சாத்தியப்பட திரு ஞாநி அகில உலக சர்வாதிகாரியாக வேண்டும்.(அதாவது அவர் நம்பாத கடவுளுக்கு அடுத்த நிலை)
தானும் பைத்தியமாகி அடுத்தவர்களையும் பைத்தியம் பிடிக்க வைத்துள்ளார் .
கடமை புரிவார் இன்புறுவார்
என்னும் பண்டைக் கதை பேணோம்
கடமை அறியோம்; தொழில் அறியோம்
கட்டென்பதனை வெட்டென்போம்
மடமை சிறுமை துன்பம் பொய்
வருத்தம் நோவு மற்றிவை போல்
கடமை நினைவும் தொலைத்திங்கு
களியுற்றென்றும் வாழ்குவமே
பசிக்கு சோறும்
மறைக்க உடையும்
தங்க வீடும் (தங்க என்பதற்கு தங்குவதற்காக என்றும் அர்த்தம் கொள்ளலாம் அல்லது தங்கத்திலான வீடு என்றும் அர்த்தம் கொள்ளலாம்!)
கிடைத்துவிட்டால் யார் வேண்டுமென்றாலும் தத்துவம் பேசலாம்.
இவைகளை பெற இயலாதவன் கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பான்!
…மீதி நேரங்களை மனிதர்கள் இசை,
ஓவியம், சிற்பம், இலக்கியம், விளையாட்டு, கண்டுபிடிப்பு
என்று அவரவருக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் மட்டும்
செலவழிக்கும்…
என்னுடைய “மகிழ்ச்சியை” இப்படி யாராலும் வரைமுறைப்படுத்திவிட முடியாது.
“சும்மா” உட்காருவதே பலருக்கு மகிழ்ச்சியாக இருக்கும்போது மேலே கூறியவை பலருக்கு கஷ்டமான காரியமாக இருக்கக்கூடும் அல்லவா?
அதேபோல “சும்மா” இருக்கும்போது எதையாவது கண்டுபிடிப்பது என்பது நம்பமுடியாததாக எனக்குப்படுகிறது.
”சும்மாயிருக்கும் சுகமறியேனே!” என்று சொன்ன தாயுமானவர் தான் நினைவுக்கு வருகிறார். எல்லா மனிதர்களும் இப்படி நினைத்தால் தான் இது சாத்தியம். அமெரிக்கவில் இப்படிச் சொன்னால் உங்களை கம்யூனிஸ்ட் என்று சொல்லி உள்ளே தள்ளிவிடுவார்கள். 99% மக்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் உழைத்தால் தான் 1% மக்கள் காலாட்டிக் கொண்டே சாப்பிட முடியும். கம்யூனிச கருத்துகள் சொல்வதற்கு கேட்பதற்கு எல்லாம் மிக அருமை. ஆனால் செயல்படுத்த முடியுமா? என்பதில் தான் அதன் பலன் அடங்கியுள்ளது.
“The road to hell is paved with good intentions” – இணையத்தில் தேடிப் பாருங்கள் இதற்கு என்ன அர்த்தம் என்று.
மிகவும் அருமையான கருத்துக்கள் ஞானி சார். ஆனால் இதை புரிந்து கொள்ளும் பக்குவம் பலருக்கும் இல்லை.
விரும்பி இரவு பகலாக உழைப்பதில் தப்பே இல்லை. ஆனால் பணத்துக்காக மட்டும் உழைக்க வேண்டியது என்பது கொடுமையான ஒன்று. மேலும் முன்னேற்றம் என்பது பணத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டுள்ளது. பணம் என்பது முன்னேற்றத்திற்கான சரியான அளவுகோல் இல்லை. என்னைப்பொருத்த வரை மனிதன் தன்னை தெய்வ நிலைக்கு உயர்த்திக்கொள்ள வேண்டும். குறைந்தது மிருக நிலையில் இருந்து மனித நிலைக்கு உயர்த்திக்கொள்ள வேண்டும். ஆன்மீக முன்னேற்றமே மனித பிறப்பின் இலக்கு.
அனைவரும் விரும்பும் வரிகள்!………….. இன்றும் பழங்குடி மக்கள் இப்படிதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களை முதலாளிகளின் மூலதன, லாப வெறிக்காக அரசும் ஏகாதிபத்தியங்களும் வளர்ச்சி என்ற பேரில் காடுகளில் இருந்தும் மலைகளில் இருந்தும் துரத்தி கொண்டு இருக்கிறார்கள் !
தங்கள் மறுமொழிக்கு நன்றி 🙂