கடற்கரை கூட்டத்தில் தலைவர் காமராஜரிடம்
நான் கேட்ட கேள்வியும், அவர் சொன்ன பதிலும் !
இன்று ஜூலை 15. பெருந்தலைவர் காமராஜ் அவர்களின்
பிறந்த நாள். சிறு வயதிலிருந்தே காமராஜ் அவர்களின்
மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும், ஒட்டுதலும்
உண்டு. எனக்கு மிகவும் பிடித்த வெகு சில அரசியல்
தலைவர்களில் காமராஜ் அவர்கள் மிக முக்கியமானவர்.
அவரது பிறந்த நாளான இன்று,
அவருடன் எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை இங்கு
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் –
நான் வடக்கே ஜபல்பூரில் பணிபுரிந்து வந்த நேரம் அது.
இருபதுகளில்- துடிப்பான இளைஞன்.சூடான இளம் ரத்தம்.
என் பெற்றோர் அப்போது பாண்டிச்சேரியில் இருந்தனர்.
அவர்களைப் பார்க்க –ஒரு வார லீவில் வந்திருந்தேன்.
என் நினைவில் இருப்பதை
வைத்துச் சொல்கிறேன் –
மாலையில் கடற்கரையில், டூப்ளே சிலையருகே
மீட்டிங். தலைவர் காமராஜ் பேசுகிறார் என்று தெரிந்தது.
ஆவலுடன் சென்றேன். என் அண்ணனும் என்னுடன்
வந்திருந்தார். அப்போதெல்லாம் கூட்டத்திற்கு
சேர் போடும் வழக்கம் கிடையாது. மணலில் தான்
கடலை நோக்கி, மேடையை நோக்கி – அமர்ந்திருந்தோம்.
அப்போது பிரதமர் இந்திரா காந்திக்கும்,
காமராஜ் -நிஜலிங்கப்பா போன்ற மூத்த காங்கிரஸ்
தலைவர்கள் அடங்கிய குழுவிற்கும் இடையே பிணக்கு
ஏற்பட்டிருந்தது. இந்திரா இவர்கள் யார் ஆலோசனையையும்
ஏற்பதாக இல்லை.
அதற்கு சில மாதங்கள் முன்னதாக,
(லால் பகதூர் சாஸ்திரியின் மறைவிற்குப் பின் )புதிய
பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை வந்தபோது,
காமராஜ் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக
இருந்தார். காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற கூட்டத்தில்
தலைவர்(பிரதமர்) பதவிக்கு மொரார்ஜி தேசாய்க்கும்
இந்திராவிற்கும் இடையே கடும் போட்டி இருந்தது.
காமராஜ் அவர்கள் தன் ஆதரவை இந்திராவிற்கு
தெரிவித்ததால் தான் இந்திரா அம்மையார்
சுலபமாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட முடிந்தது.
எனவே இந்திரா –
குறைந்த பட்சம் காமராஜ் அவர்களுக்காவது விசுவாசமாக
இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால்,
தான் பிரதமர் ஆவதற்கு முக்கிய காரணமாக இருந்த
காமராஜரைக்கூட திருமதி இந்திரா மதிக்கவில்லை.
காமராஜ் அவர்கள் கூட்டத்தில் பேசும்போது,
இந்திரா காந்தி மூத்த தலைவர்களை எல்லாம் புறக்கணித்து,
அவமானப்படுத்துவதைப் பற்றி வருத்தப்பட்டு
பேசிக் கொண்டிருந்தார்.
நான் உட்கார்ந்த இடத்திலிருந்தே, ஒரு ஆதங்கத்துடன்
பலமாகக் கூறினேன்.
“நீங்க தானே அவரைக் கொண்டு வந்தீங்க ?”
காமராஜ் ஒரு கணம் பேசுவதை நிறுத்தினார்.
கூட்டத்தைப் பார்த்து –
“யாரு -யாரு கூச்சல் போட்டது ? என்ன சொல்றீங்க?
புரியும்படியா சொல்லுங்க “ என்றார்.
கூட்டத்தின் நடுவே உட்கார்ந்திருந்த நான் எழுந்திருக்க
முயன்றேன். என் அண்ணன் என் கையைப் பிடித்து
அழுத்தினார் – எழுந்திருக்காதே என்கிற விதமாக.
அவரிடமிருந்து விடுவித்துக் கொண்டு எழுந்து
நின்றேன் நான்.
“சார் – நீங்க தானே அவங்களை ப்ரைம் மினிஸ்டரா
ரெகமண்ட் பண்ணினீங்க ?” என்று சத்தமாக இருந்த
இடத்திலிருந்தே சொன்னேன் நான்.
ஒரு கணம் கூட்டம் முழுவதும் அமைதி.
அடுத்த கணம், தயக்கமே இல்லாமல் தொடர்ந்தார் –
“ஆமாம் – யாரு இல்லேன்னாங்க ?
நேருஜியோட மகளாச்சே – நல்லது செய்வாங்கன்னு
நெனைச்சேன். தப்பாப் போச்சுங்கறேன். இப்படிப்
பண்ணுவாங்கன்னு யாருக்கு தெரியுங்கறேன்”
-என்றார்.
அவ்வளவு பெரிய கூட்டத்தில்,
அவ்வளவு பெரிய தலைவர் –
இடைமறித்து கேள்வி கேட்டவர் மீது கோபப்படாமல்,
கேட்டவரின் உணர்வுகளை மதித்து,
கொஞ்சம் கூட தயக்கமின்றி,
அடுத்த பிரதமரை அடையாளும் காணுவதில் தான்
செய்த தவறை ஒப்புக்கொண்டது எனக்கு பிரமிப்பை
ஏற்படுத்தியது.
இன்றைய தினத்தில் எந்த அரசியல்வாதியிடமாவது
இத்தகைய வெளிப்படையான அணுகுமுறையை
எதிர்பார்க்க முடியுமா ?
இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு –
இப்போது இருக்கும் அரசியல் தலைவர்களை எல்லாம்
பார்க்கும்போது அவர் மீது உள்ள மதிப்பு –
பலநூறு மடங்கு அதிகம் ஆகிறது.
இனி எங்கே, எப்போது – பார்க்கப்போகிறோம்
இத்தகைய தலைவர்களை ?
———————–
வரலாற்றைச் சொல்லும் புகைப்படங்கள் –
1) இந்திரா காந்தி காங்கிரஸ் பாராளுமன்ற
உறுப்பினர் கூட்டத்தில் தலைவராக/பிரதமராக
தேர்ந்தெடுக்கப்படுவதை, அதற்கு காரணமாக இருந்த,
அருகில் அமர்ந்திருக்கும் தலைவர் காமராஜர்
கைகுலுக்கி பாராட்டுகிறார்.
2) பிரதமராக ஒரு நிகழ்ச்சியில் இந்திராவும்,
காமராஜரும். இங்கு body language பேசுகிறது.
பிரதமர் ஆகி விட்டதால் அலட்சியமாக இந்திரா !
பிரதமருக்கு அருகிலேயே கம்பீரமாக கால் மீது கால்
போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் காமராஜர் !
3) இந்திராவுடன் பிணக்கு ஏற்பட்ட பிறகு –
கன்னியாகுமரியில் பிரதமரின் தலைமையில் ஒரு விழா.
தொகுதி M.P.யாக விழாவில் கலந்து கொண்ட காமராஜர்.
இருவருக்குமிடையே symbolic ஆக –
இருக்கும் இடைவெளியைப் பாருங்கள்.







தலைவர் காமராஜ் ஓர் அப்பழுக்கற்ற நேர்மையான
அரசியல்வாதி. எதற்கும் யாருக்கும் எப்போதும பணியாத
தன் நெஞ்சு சரியென அறிவதை செய்தவர். ஏனெனில்
அவருக்கு சுய தேவைகள் மிகவும் குறைவு. எனவே,
அண்ணே/தலைவரே என்றெல்லாம் விளித்து, அவரை
மறைத்து நிற்கும் “உடன்பிறப்புகளின்” கூட்டத்தைத்
தன்னோடு சேர்த்துக் கொள்ளாதவர்.(தமிழகத்தில்) முந்தைய
தலைமுறையினர் பல ஆயிரம் குடும்பங்கள் எழுதவும் படிக்கவும்
பள்ளிக் கதவுகளைத் திறந்து விட்டவர். எங்களது ஆயிரத்தில்
ஒன்று.
மாண்புகள் மிகுந்த தலைவரை, வேட்டி கட்டத் தெரிந்தவன்
எல்லாம் (துண்டை கழுத்தைச் சுற்றிப் போட தெரிந்தவன் என்றும்
சேர்த்துக் கொள்ளவும்) அரசியல்வாதியான பின்னர், எப்படி
துவேஷித்தார்கள் என்பதை நாடறியும். அவரது
ஒழுக்கத்தை, அவரது பெயரைக் கொண்டே, கொச்சையாக
விமர்சித்தவர், பின்னர் தான் நடாத்துவதே “காமராஜ் ஆட்சி”தான்
என்று சொல்லிக் கொண்டார்.
சட்டமன்றத்திலே இதுகாறும் பலமுறை, குறிப்பாக அம்மா
ஆட்சி நடக்கும் போதெல்லாம், மதிய உணவுக்கும் காமராஜருக்கும்
சம்மந்தமில்லை என்ற வாதம் நடந்திருக்கிறது. உண்மையில்
வாதத்தை ஆரம்பித்து வத்தவரோ அல்லது அவரது மூதாதையரோ
“அந்த” மதிய உணவை ருசித்தவராகவே இருந்திருக்க கூடும்.
உணவின் ருசி தொண்டைக் குழி வரை என்பதை போல, (அரசியலில்)
நன்றி விசுவாசம் எல்லாம் நாற்காலி கிடைக்கும் வரை தான்
போலிருக்கிறது.
நானும் கூட, எனது பதின் பருவத்தில் அரியாங்குப்பத்தில்,
அரசியல் ஏதுமறியாத வயதில் பார்த்து, கேட்டு கைத்தட்டி விட்டு
வந்திருக்கிறேன். “நல்ல” மனிதரை நினைவுக்கு கொண்டு வந்தமைக்கு
நன்றி.
தாங்கள் வெளியிட்டுள்ள படங்கள் சொல்லும் “பாடங்கள்”
வெகு அருமை.
பல வருடங்க்களுக்கு முன்னரே, டூயுப்ளே, நேருவுக்கு தன் இடத்தைக்
கொடுதுவிட்டு (சிலைக்குத் தான்), கடற்கரையின் தெற்கு மூலைக்கு,
இடம் பெயர்ந்து விட்டார். இப்போது, நேருவும் காந்தியும் எதிரெதிரே
நின்று கொண்டு இருக்கிறார்கள்.
நன்றி நண்பர் வெங்கட்ரமணி.
நான் பாண்டிச்சேரி சென்று வெகு நாட்கள்
(வருடங்கள் !) ஆகி விட்டது. இடையில்
நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று
நண்பர்கள் சொன்னார்கள்.
உங்கள் கருத்துக்கள் சத்தியமானவை.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
இந்திய மக்கள் போற்றும் தலைவர் காமராஜ் அவர்களை தேர்தலில் வெற்றி பெற செய்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்ற உரிமையில் கூறுகிறேன் அவரை போன்ற மக்கள் நலன் மட்டுமே கருத்தில் கொண்ட அரசியல்
தலைவர் இன்று வரையிலும் யாரும் இல்லை. கர்ம வீரர் காமராஜர் ஒரு சகாப்தம்.
Seniors,
நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள்
“காலா காந்தி”யின் காலத்தை அனுபவித்திருக்கிறீர்கள்.
நாங்கள் “சோனி காந்தி” காலத்தை அனுபவிக்கிறோம்.
வரப்போகும்”ராகு(ல்) காந்தி” காலத்தை நினைத்து
அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம் !
you were all lucky people !
நல்ல கேள்விகள்-பதில்கள்…
உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
பகிர்வுக்கு நன்றி… தொடர வாழ்த்துக்கள்…
thanks for your ever good post,and please refer me the ebook of Mr.Kamarajar
and lots thanks to annachi for his greatest efforts in his period
http://lakshmanaperumal.com/2012/06/22/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/
Kamaraj was the last statesman of the State. Leaders like Nehru, Rajaji, Kamaraj have left a great legacy. Even decades of their passing away, we could still be talking nostalgically about them. Similar to the incident you described, I too had an experience of attending a public meeting on the sands of Marina. The speaker was none other than Jawaharlal Nehru. He was then attacking Rajaji scathingly, saying that Rajaji was living in a bullock cart age! Rajaji had started his Swatantra Party then in which leaders like NG Ranga were members, and the party’s paper was “Swarajya”, which I used to read. However, I was a staunch admirer of Nehru. I was then practising shorthand, and even took some notes of Nehru’s speech. Vivid memories still!
அருமையான பதிவு.
அருமையான படங்கள்.
இந்த அருமையான பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.
Very nice msgs.. I nevert forget to read.. We need a good leader..
Thanks a lot for your sharing..
Words will exhast if one trys to expose his Greatness and they are the mould of Mahathma. Contemporary Politicians without exception, near total don’t have the rights even to spell his name.Especially the so called (self proclaimed) Protectionist of Tamil Race(?) Mr.Karunanidhi the great to whom words and deeds are in two poles and who made Politics is to earn Money. His party exploited the gullible publics by their eloquence.
Can we expect a rebirth of leaders like Kamaraj, Rajaji, Kakkan and so on?. Above all we should Pray God that the publics not to prey for external glamour and to identify one’s inner virtue and conviction and hearty service to People.