“வட்டிக் கடை” தொழிலுக்கே போயிருக்கலாம் !!
நாடு தப்பி இருக்கும் …
நண்பர் ஒருவருடன் தொலைபேசியில்
பேசிக்கொண்டிருந்தேன்.
நண்பர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்.
குறைந்த பட்சம் மாதம் 2-3 முறை தன் தொகுதிக்கு
வருகிறாராம் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர்.
மக்கள் வருகிறார்களோ இல்லையோ –
கூட்டங்கள், நிகழ்ச்சிகள்
அடிக்கடி ஏற்பாடு செய்யப்படுகின்றனவாம்.
ஆனால், பத்திரிகை கவரேஜுக்கு
ஏற்பாடு செய்யப்படுவதில்லை !
நிகழ்ச்சிகள் எல்லாமே சுற்றிச் சுற்றி எம்.பி.தொகுதியை
மட்டுமே குறி வைத்து தான் !
நான் கீழே தரும் செய்தியும் தமிழ் செய்தித்தாள்களில்
வரவில்லை !
கடந்த சனியன்று, புதுக்கோட்டையில்,
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த விழா நிகழ்ச்சியில்
பேசி இருக்கிறார்.
“என் பெற்றோர்களின் தொலைநோக்குப் பார்வை
காரணமாகவே நான் இத்தகைய உயர்ந்த கல்வியையும்,
பதவியையும், புகழையும் வாழ்க்கையில்
பெற முடிந்தது.
என் சிறு வயதில் எங்கள் கிராமமான கண்டனூரில்,
நான் பள்ளிப்படிப்பை முடித்தவுடன்
அவர்கள் மட்டும் என்னை கட்டாயப்படுத்தி,
வெளியூருக்கு அனுப்பி, மேற்படிப்பு படிக்க
வைத்திருக்கவில்லை என்றால் –
அந்த நாளைய வழக்கப்படி, வாய்ப்புகளைத் தேடி
எங்களைச் சேர்ந்த மற்றவர்களைப் போல் நானும்
இளம் வயதிலேயே மலேசியா போயிருப்பேன்.
சில வருடங்களுக்குப் பிறகு திரும்ப வந்து,
மற்றவர்களைப் போல் வட்டிக்கடை வைத்திருப்பேன்”.
– பேசுவது பெருந்தலைவர் காமராஜ் பிறந்த நாள்
விழாவில. கல்வியை வலியுறுத்திப் பேசி இருக்கிறார்.
இவர் இத்தனை படிப்பு படித்தது
இவருக்கு பயன்பட்டிருக்கிறது. உண்மை.
ஆனால் அதனால் சமூகத்திற்கு எதாவது பலன் உண்டா ?
5ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த
தலைவர் காமராஜ் இன்றும் மக்கள் இதயத்தில்
குடியிருப்பது எப்படி ? இவர் படிப்பால்,பதவியால்,
செல்வாக்கால், செல்வத்தால் –
தமிழ் மக்களுக்கு, தமிழ் நாட்டிற்கு
எந்த பயனாவது உண்டா ?
தமிழ் நாட்டிற்கு இது இதைச் செய்தேன் என்று இவரால்
பட்டியலிட முடியுமா ?
அதிகாரத்தில் தவழ்ந்து,அலையில் மிதந்து,
கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்கத் தானே
அத்தனை படிப்பும், அறிவும் பயன்படுகிறது ?
– இவர் வட்டிக்கடை வைக்கப் போயிருந்தால்,
வேறு எவராவது இந்த இடத்திற்கு வந்திருப்பார்கள் .
அவர்கள் மூலமாவது எதாவது பயன் கிடைத்திருக்கும்
என்று தமிழ்ச் சமுதாயம் கருதினால்
அதில் தவறு எதாவது காண முடியுமா ?
அடுத்ததாக இவர் எடுத்துக் கொண்ட தலைப்பு –
“தமிழ்நாட்டில் சாராயக்கடைகள் !”
“பெண்கள் கையில் காசு கிடைக்க வேண்டும்
என்பதற்காகத் தான் மத்திய அரசு MGNREGS திட்டத்தை –
அதாவது, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை
வாய்ப்புத் திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டத்தின்
முக்கிய நோக்கமே, பெண்களுக்கு வேலை வாய்ப்பும்,
கையில் பணமும் கிட்டச்செய்யத் தான்.
ஏனென்றால், ஆண்கள் கையில் பணம் கிடைத்தால்
அவர்கள் நேராக டாஸ்மாக் கடைக்குத் தானே
செல்லுவார்கள் !”
“பள்ளிகளிலும், மருத்துவமனைகளிலும்
ஏன் – டாய்லெட்டிலும் கூட நவீன வசதிகள்
செய்வதை வரவேற்கலாம். ஆனால் தமிழ் நாட்டில்,
டாஸ்மாக் கடைகளில் வசதிகள் செய்து கொடுப்பதை
எப்படி ஏற்க முடியும் ?”
– நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தைகள்.
அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை தான்.
சாராயக்கடைகள் ஒழிக்கப்பட வேண்டியவையே.
ஆனால், நமக்கு – கூடவே சில கேள்விகளும்
எழுகின்றன.
சாராயக்கடைகளை மூட இது வரை மத்திய அரசு
எதாவது துரும்பைக் கிள்ளிப் போட்டிருக்கிறதா ?
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்
(Constitution of India ) பகுதி-4-ல்
Directive Principles of
State Policy அதாவது அரசின் கொள்கைகள்
எவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்
என்று வழிகாட்டும் – முக்கியமான கோட்பாடுகள்
வலியுறுத்தப்பட்டுள்ளன.
அதாவது மத்திய, மாநில அரசுகள் பின்பற்ற
வேண்டிய சில முக்கிய கோட்பாடுகள் இந்த பகுதியில்
கூறப்படுகின்றன. இதில் பிரிவு 47 கூறுவதாவது –
——————————————–——
47. ஊட்டச்சத்து, வாழ்க்கைத்தரம், உடல்நல
மேம்பாட்டை உயர்த்துவதற்கான அரசின் கடமை:
….அதிலும் குறிப்பாக போதையூட்டும்
மதுபானங்கள்,
போதைமருந்துகள் ஆகியன
மருந்துக்காக பயன்படுத்துவதைத் தவிர
வேறுவிதமாக பயன்படுத்துவதை தவிர்க்கும்
வகையில் மதுவிலக்கை
அமல்படுத்த வேண்டும்.
——————————————-———
அதாவது நமது அரசியல் சட்டமே மதுவிலக்கை
அமல்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின்
முக்கிய கொள்கையாக இருக்க வேண்டும் என்று
கூறுகிறது.
சுதந்திர போராட்ட காலத்தில் –
வெள்ளைக்காரர் ஆட்சியில் கள்ளுக்கடைகளை
மூட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி
நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தியது.
இன்று நாம் இருப்பது சுதந்திர இந்தியாவில்.
சாராயக்கடைகளை இந்தியா முழுவதும் ஒழிக்க,
மதுவிலக்கை அமுலுக்குக் கொண்டு வர,
மத்திய அரசுக்கு அரசியல் சட்டத்தின்படி
உரிமையும் உள்ளது – கடமையும் உள்ளது.
ஆனால் இது விஷயத்தில் மத்திய அரசோ,
காங்கிரஸ் கட்சி ஆளுகின்ற மாநிலங்களோ –
இது வரை எதாவது நடவடிக்கை எடுத்திருக்கின்றனவா ?
எல்லாவற்றிற்கும் வக்கணையாக வியாக்கியானம்
செய்கிற இந்த மூத்த காங்கிரஸ் தலைவர்
இதற்கு கொடுக்கப்போகிற விளக்கம் என்ன ?




நச் என்று செருப்பில் அடித்தது போன்ற கேள்வி.இவர் இப்பவாது வட்டிக்கடை வைக்க போவாரா?அந்த நல்ல காலம் இப்பவெல்லாம் இந்தியாவுக்கு இல்லை.
காவிரிமைந்தன் அருமையான, மிக மிக தேவையான
இடுகை.
இது லேடஸ்ட் –
இன்று கண்டனூர்காரர் சொல்லுகிறார் –
“நம் நாட்டு நடுத்தர வர்க்க மக்கள்
ஐஸ்க்ரீம் வாங்க 20 ரூபா கொடுக்கறாங்க..
தண்ணி பாட்டில் வாங்க 15 ரூபா செலவழிக்கறாங்க..
அரிசி விலையோ, கோதுமை விலையோ ஒரு ரூபா
ஏறினா அய்யோ அய்யோன்னு கத்தறாங்க ….
இவரை என்னவென்று சொல்லுவது ?
நாட்டில் புகையிலையை உபயோகிக்க கூடாது என பிரச்சாரம் நடக்கிறதே . இது போதாதா?
சமூகத்தின் சந்துகளை தேடி நுழைந்திருக்கிறீர்கள் நன்றி…
அன்புச் சகோதரன்…
ம.தி.சுதா
தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்
நீங்கள் இப்படி எல்லாம் எழுதுவது அவசியமா ?
பெரிய பெரிய தலைவர்களைப் பற்றி இப்படி எழுதுவதால் உங்களுக்கு அநாவசியமான பிரச்சினைகள் உண்டாகக்கூடும்.அவற்றை தவிர்ப்பதே
புத்திசாலித்தனம்.
நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள். அரசியலைத் தவிர்த்து விட்டு கலை, இலக்கியம், சினிமா, மொழி, பண்பாடு பற்றி எல்லாம் எழுதலாமே. உங்கள் நல்லதிற்காக சொல்கிறேன். இப்படி எல்லாம் எழுதுவதை விட்டு விடுங்கள்.
எப்படி இருந்தாலும் காங்கிரஸ் மதுவிலக்கை ஆதரிக்கிறதா? அதனை தைரியமாக வெளியில் கூறுமா