பிடிக்கிறதோ இல்லையோ – இங்கே அவசியம் தேவைப்படுகிறார் ஒரு சுப்ரமணியன் சுவாமி ….!!

பிடிக்கிறதோ இல்லையோ – இங்கே அவசியம்
தேவைப்படுகிறார் ஒரு சுப்ரமணியன் சுவாமி ….!!

எப்படியாவது ஜனாதிபதி பதவியைப் பிடிக்க வேண்டும் என்று
திட்டம் போட்டு  பல  “தகிடு தித்தங்கள்”  செய்திருக்கும்
பிரனாப் முகர்ஜியைப் பற்றி மேலும் சில தகவல்கள்
கிடைத்திருக்கின்றன –

நிலுவையில் இருக்கும் சிபிஐ வழக்குகளை முன் வைத்து
மாயாவதி, முலாயம், லாலு ஆகியோரை பிடித்துப்
போட்டது போல் எதிரணியில் இருந்து இன்னும் யாரையாவது
வளைக்கலாமா என்று பார்த்தவர் வலையில் நிதிஷ்குமார்
வசமாகச் சிக்கி இருக்கிறார். நிதிஷ்குமாரை வசப்படுத்த
பிரனாப் செய்திருப்பவை –

மத்திய அரசின் ஒதுக்கீடு என்கிற பெயரில்2012-13ஆம்
ஆண்டிற்கான நிதியாக பீகாருக்கு அளிக்கப்பட்டிருப்பது
28,000 கோடி ரூபாய். கடந்த ஆண்டை விட இது
31 % அதிகமாம் !

இதைத்தவிர –  2012 முதல் 2017 வரை மத்திய அரசின்
“சிறப்பு நிதி”யாக ஆண்டுதோறும் 4000 கோடி ரூபாய்
வழங்கப்படும் !

இதைத்தவிர –  ஜார்கண்டு மாநிலம் பிரிக்கப்பட்டபோது,
தனியே -சமரச நிதியாக  11வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ்
மத்திய அரசு பீகாருக்கு 10,000 கோடி ரூபாய் வழங்க
முடிவு செய்யப்பட்டு, அதன்படி கொடுக்கப்பட்டும் விட்டது.

இப்போது புதிதாக – 12வது ஐந்தாண்டு திட்டத்திலும்
இந்த  நிதி உதவி தொடரும் என்றும், ஏற்கெனவே
வழங்கப்பட்ட 10,000 கோடி உயர்த்தப்பட்டு 20,000
கோடியாக கொடுக்கப்படவும் மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது !

இதைத்தவிர –  நிதிஷ்குமாரின் தொகுதியில் புதிய
விமான நிலையம் ஒன்று கட்ட அனுமதி
கொடுக்கப்பட்டுள்ளது !

இதைத்தவிர – பாட்னாவில் “மெட்ரோ” ரயில்
போக்குவரத்து அமைக்கவும் மத்திய அரசு ஒப்புதல்
கொடுத்துள்ளது !

இந்த ஒதுக்கீடுகள் அனைத்தும், ஐக்கிய முற்போக்கு
கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகும்,
நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு
பிரனாப் எடுத்த முடிவுகள் !

இதைத்தவிர, உத்திரப் பிரதேசத்திற்காக, தங்கள்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு
கேட்டு, முலாயம் சிங்கும் அவரது மகன் அகிலேஷ்
யாதவும்  முன்வைத்த கோரிக்கைகளுக்கு நிதியமைச்சர்
பதவியில் இருந்து விலகும் முன்னர் “ஆவன”
செய்யப்பட்டிருக்கிறதாம் !

நாடு முழுவதும் மாநில அரசுகள் மூலம் வசூலிக்கப்பட்டு
மத்திய அரசின் கஜானாவில் நிரம்பியுள்ள நிதியை
தங்கள் வசதிக்காக,
தங்கள் இஷ்டம் போல் –
தாங்கள் விரும்பியவர்களுக்கு,
தங்களுக்கு ஆதரவு தர ஒப்புக்கொள்ளும் மாநிலங்களுக்கு,
அதுவும் தேர்தல் ஆதாயம் கருதி
அள்ளித் தரப்படுகிறது.
( மம்தாவிற்கு கொடுத்தால் – அதை வெளியே போட்டு
உடைத்து விடுவார் என்கிற அச்சம் காரணமாக
தற்போது கொடுக்கப்படாமல்  இருக்கலாம் ! )

இது பிரனாப் முகர்ஜியின் பாட்டன், முப்பாட்டன் சொத்து
அல்ல – தனக்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கு எல்லாம்
இஷ்டம் போல வெட்ட … !!

பொதுவாக தேர்தல் சமயத்தில் வேட்பாளர்களின் செலவுக்கு
உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி தேர்தலில்
இத்தகைய விதிமுறைகள் ஏதும் இல்லை.

தற்சமயம்  எந்த வித பதவியிலும் இல்லாத முகர்ஜி
மாநிலம் மாநிலமாக தனி விமானத்தில் பயணம் செய்வது
எப்படி ? இது யார் பணம் ?

அவரது விமானப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யும்
பண முதலைகள், பெரும் முதலாளிகள் யார் –

என்று யார் கேட்பது ?

அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் இத்தகைய
விபரீதங்கள் எதிர்காலத்தில் நிகழக்கூடும் என்று
எதிர்பார்க்கவில்லை போலும். 1940-களில் இப்படி
ஒரு பிரனாபையோ, ப.சி.யையோ, லாலுவையோ,
முலாயமையோ, அரசியல் வாழ்வில்
யாராவது நினைத்துக் கூட பார்த்திருக்க முடியுமா ?

பிரனாப் அளித்துள்ள ஒதுக்கீடுகள்
அப்பட்டமான “லஞ்சம்”
என்று ஒரிஸ்ஸா முதல்வர் பிஜூ பட்நாயக்
வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகிறார்.

வேட்பாளர் மனு தாக்கல் செய்யும் நேரத்தில் பிரனாப்
இன்னும் இரண்டு ஆதாயம் பெறும் பதவிகளில் இருந்தார்
என்று டாக்டர் சுப்ரமணியன் சுவாமி நேற்று மாலை குற்றம்
சாட்டி இருந்தார்.

உடனடியாக – இரண்டு மணி நேரத்திற்கு உள்ளாக,  
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அவற்றிற்கு
“மறுப்பு” தெரிவிக்க “ஏற்பாடு” செய்யப்பட்டு
விட்டது.

உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று
ஜம்பமாக மார் தட்டி சொல்லிக் கொள்கிறோம்.

இதையெல்லாம் பார்த்தால் ……………..
காரி உமிழ வேண்டும் போல இருக்கிறது !

நான் சென்ற முறை ஒரு தடவை டாக்டர் சுப்ரமணியன்
சுவாமியை அவரது விடாமுயற்சிக்காகப் பாராட்டி
எழுதிய போது அதற்காக சிலர் வருத்தப்பட்டிருந்தார்கள்.

டாக்டர் சுவாமி ஒரு முற்றிலும் மாறுபட்ட கேரக்டர்.
அவரை சிலருக்கு ரொம்ப பிடிக்கும்.
சிலருக்கு பிடிக்கவே பிடிக்காது.

எனக்கு இப்படியும் இல்லை -அப்படியும் இல்லை.
அவரிடம் சில விஷயங்கள் பிடிக்கும்.
சில விஷயங்களில் பிடிக்காது.

சென்னையில் செய்தியாளர்கள்
பிரனாப் முகர்ஜியிடம் அவரது வெற்றி வாய்ப்பைப்பற்றி
கேட்டபோது, இது வெறும் நம்பர் கணக்கு தான், எனவே
தான் வெற்றி பெறுவது உறுதி  என்றும்
ஜனாதிபதி தேர்தலில் “மிராகிள்”களை எதிர்பார்க்க
வேண்டாம் என்றும் என்றும் கூறி இருந்தார்.

ஆனால் ஒரு வேளை அந்த – “மிராகிள்” நிகழந்தாலும்
நிகழக்கூடும் என்று நமக்கு இலேசாக ஒரு நம்பிக்கை
ஊட்டக்கூடிய   நபர் ஒருவர் இருக்கிறார்  !

நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ –
இங்கே, இந்த இடத்தில், அவசியம் தேவைப்படுகிறார் –
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி ….!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to பிடிக்கிறதோ இல்லையோ – இங்கே அவசியம் தேவைப்படுகிறார் ஒரு சுப்ரமணியன் சுவாமி ….!!

  1. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    //மம்தாவிற்கு கொடுத்தால் – அதை வெளியே போட்டு உடைத்து விடுவார் என்கிற அச்சம் காரணமாக தற்போது கொடுக்கப்படாமல் இருக்கலாம் ! //

    பேரத்தில் இருக்கும் இமாலய வித்தியாசம் கூடக் காரணமாக இருக்கலாம்!!!! யாரையும் நம்பாதீங்ங்ங்கோஓஓஓ!!!

    //நிதிஷ்குமாரை வசப்படுத்த பிரனாப் செய்திருப்பவை -//

    இந்த மாஃபியா நெட்வொர்க்கின் கடைக்கோடி கிளைகள்தான் மக்கள். அவர்களுடைய எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் தேர்தல் சமயத்தில் 200லிருந்து ஆயிரம் வரை பணமாகவும், தேர்தலுக்குபின் மிக்ஸி ஃபேன் போன்ற ‘சிறு’ இலவசங்களும் வழங்கப்படுகின்றன. ‘மக்களின் ஆதரவு’ என்பது அரசியல் கொள்ளையர்களுக்கு ஒரு மூலதனம். ஒரு வியாபாரப் பொருள். அந்த மூலதனத்தின் வலிமையை இறுக்கிக் கொள்ள அவ்வப்போது பிச்சைக் காசுகளை விட்டெறிவது வழக்கம்!

    அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மூக்குப் பிடிக்க முக்கியது போகக் கிடைப்பவைதான் மக்கள் நலத் திட்டங்கள்!

    மக்களும் லேசுப்பட்டவர்கள் இல்லை! வாய்ப்புக் கிடைக்காதவரைக்கும்தான் யோக்கியனாக இருப்பார்கள். அரசியல்வியாதிகள், தனியார் பெரு முதலாளிகள் எப்படி ஒட்டு மொத்த மக்களை சுரண்டுகிறார்களோ, அப்படி மக்களே தம் சக மக்களையும் சுரண்டிக்கொள்கிறார்கள்.

    இங்கு சுரண்டாமல் ரொம்ம்ம்ப நல்லவனாக இருப்பவன்தான் ஏமாளி.

  2. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    டாக்டர் சுப்ரமணியம் சுவாமி ஒரு மாறுபட்ட கேரக்டர் என தாங்களே கூறியுள்ளீர்கள். மேலும் அவரை பிடிக்கும் ஆனால் பிடிக்காது என்ற பாணியில் தெரிவிக்கிறீர்கள். நான் ஏற்கனவே டாக்டர் சுவாமி அவர்கள் ஒரு ஒன் மேன் ஆர்மி என கூறியிருந்தேன் . நல்லதை கண்டால் பாராட்டவும் தீமையை கண்டால் தயங்காமல் எடுத்துக்காட்டி நீதிமன்றம் சென்று நீதிக்காக அவரே வாதாடவும் செய்பவர். மேலும் மற்றவர்களை பொறுத்தவரை சிலர் சுய லாபத்துக்காக வாலை ஆட்டுவதும் சிலர் பொதுநலத்துக்காக வாலை ஆட்டவும் செய்பவர்கள். மனசாட்சி உள்ளவர்கள் சுயமாக சிந்திப்பவர்கள் யாருக்கு வோட்டு போடவேண்டும் என தீர்மானித்திருப்பார்கள். ஏனென்றால் ஊழல்வாதி பிரணாப் அல்லது சங்க்மா சுயேச்சையாகத்தான் போட்டியிடுகிறார்கள்.

  3. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    தனி மனிதனுக்கு நல்ல லாபம்(?) வேண்டுமானால் சட்டசபை இடைத்தேர்தலும்
    தனி மாநிலத்துக்கு நல்ல பயன்(?) ஏற்படவேண்டுமானால் ஜனாதிபதி தேர்தலும் நடந்தால்தான் உள்ளது இன்றைய நிலை!
    வாழ்க உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு.
    i am very proud to be a citizen of indipendent india
    ஹி … ஹீ… ஹீ…. ஹீ ….

    • ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

      //தனி மாநிலத்துக்கு நல்ல பயன்(?) ஏற்படவேண்டுமானால் ஜனாதிபதி தேர்தலும் நடந்தால்தான் உள்ளது இன்றைய நிலை!//

      அஜீஸ்,
      தனி மாநிலப் பெரும் (மு)தலைகளுக்கு என்று குறிப்பிட்டுச் சொல்லுங்கள்.

      நிதிசு மாநிலத்துக்கு இருபதாயிரம் கோடி கிடைக்கிறதென்றால் அதை ஆளும் வர்க்க கும்பலும், அதிகார வர்க்க கும்பலும் ஆக சில நூறு பேர் மேய்ந்தது போக சிதறி கீழே விழும் சில கோடிகள் நலத்திட்டங்கள்தான் மொத்த மக்களுக்கு!!

  4. சேக்காளி's avatar சேக்காளி சொல்கிறார்:

    வழி மொழிகிறேன்

  5. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    டாக்டர் சுப்ரமண்யம் ஸ்வாமி மாதிரியான நபர்கள்
    இல்லையென்றால், இந்திய அரசியல்வாதிகளின்
    அழுக்கான இன்னொரு முகம் யாருக்கும் தெரியாமலே
    போயிருக்கும்.

    தனது தொடர்புகளைக் கொண்டு ஆட்சி ஆதிகாரத்தில்
    உள்ள நபர்களின் நிழலான காரியங்ககளைக் கண்காணித்து
    “தக்க” சமயத்தில் வெளிப்படுத்தும் ஸ்வாமி நமக்கு
    தேவையென்பதை யாரும் பறுக்க இயலாது.

  6. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    நான் நகர பேருந்திற்காக ஒரு நிறுத்தத்தில் காத்திருக்கிறேன்.ஒரே கூட்டம்..

    திடீரென்று என் பின்பக்கத்தை வருடியதுபோல ஓர் உணர்வு.
    பார்த்தால் அருகில் இருக்கும் ஆஜானுபாகுவான ஒரு ரவுடி கையில் என் பணப்பை.

    “திருடன் திருடன்” எனக்கத்துகிறேன்.அவனுடைய உருவத்தைப்பார்த்து யாரும் உதவ முன்வரவில்லை.
    அவன் இடத்தைவிட்டு நகர்ந்துகொண்டிருக்கிறான்.
    திடீரென ஒரு ஒல்லியான மனிதர் அவனை நிறுத்தி, அவன் கையிலுள்ள என் பணப்பையை பறிக்க முயல்கிறார்.அவனோ அவருடன் ண்டையிடுகிறான்.
    நானும் மற்ற கூட்டத்தினரும் இச்சண்டையை வேடிக்கை பார்க்கிறோம்.
    அப்பொழுது நான் சொல்கிறேன்..
    “இந்த ஒல்லி மனிதனுக்கு சற்றும் அறிவில்லை அந்த ரவுடி எவ்வளவு பலசாலியாக இருக்கிறான்.அவனை வெல்ல யாரால் முடியும்!! நிச்சயம் இந்த ஒல்லிபிச்சு நன்கு அடிபட்டு ஒடப்போகிறான்! ”

    நான் நடந்துகொண்டது போலத்தான் இப்போ சு.சுவாமியையும்,அன்னா ஹசாரேயையும்,சோ போன்றவர்கள் நையாண்டி செய்வதும்,அவமதிப்பதும் இருக்கிறது.

    மோசடி செய்யும் ஆட்சியாளர்களையே.நாம் மீண்டும் மீண்டும் தேர்வுசெய்வது, நாம் முட்டாள்கள் என்பதையும்,

    அவர்களை நாம் தைரியமாக எதிர்க்காமல் இருப்பது, நாம் கோழைகள் என்பதையும்,

    அதை எதிர்க்கும் ஓரிரண்டு நபர்களையும் நாம் விமர்சித்து நையாண்டி செய்வது நாம் வடிகட்டிய அசடுகள் என்பதையும்,

    அந்த மோசடியாளர்களுக்கு தெள்ளத்தெளிவே புரியவைக்கிறது!

  7. saravanan's avatar saravanan சொல்கிறார்:

    nichayamaga swamikku o podunkal

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.