என்கவுண்டர்கள் தேவையா ? அத்து மீறல்கள் அனுமதிக்கப்பட வேண்டுமா ?

என்கவுண்டர்கள் தேவையா ?
அத்து மீறல்கள் அனுமதிக்கப்பட வேண்டுமா ?

வேளச்சேரியில் வியாழன் அதிகாலையில்
நிகழ்ந்த என்கவுண்டரில் 5 பேர் கொல்லப்பட்டது
பற்றி அறிவுஜீவிகள் பலர்  
கேள்விக்கணைகளை அள்ளி வீசுகின்றனர்.

இது சரியா ?
விசாரணை இல்லாமல் தண்டனை
கொடுக்க போலீசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ?
மனித உயிருக்கு மதிப்பே இல்லையா ?
எது பெரிய குற்றம்?
கொள்ளையா? கொலையா ?

இந்து போன்ற பத்திரிகைகள் புத்திசாலிதனமான
கேள்விகளை – சாமர்த்தியமாக அடுத்தவர் முதுகில்
ஏறிக்கொண்டு கேட்கின்றன.
தொலைக்காட்சிகள் -சந்து கிடைத்தது என்று
உள்ளே புகுந்து  கடுகை எல்லாம் பூசணியாக்கி,
விஷயத்தை பூதாகாரமாக்கி, வதந்தித் தீனி
சமைத்துக் கொண்டிருக்கின்றன.

உடனடியாக சிபிஐ விசாரணை தேவை –

போலீஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு
விசாரணை நடத்தப்பட வேண்டும் ..

இப்படி எல்லாம் குரல் கொடுப்பது  யார் ?

மனித உரிமைக் காவலர்கள் –
human rights organisations –

எனப்படும்  அமைப்புகள் !

எங்கே இருக்கிறார்கள் இவர்கள் எல்லாம் ?

இவ்வளவு நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்
இவர்கள் எல்லாம் ?

யாராவது, எங்கேயாவது,  பார்த்தது உண்டா
இவர்களை எல்லாம் ?

தனித்திருக்கும் வயதானவர்களை கழுத்தை அறுத்து
கொலை செய்து விட்டு கொள்ளைகள்
நிகழ்த்தப்படும்போது –

பள்ளி செல்லும் குழந்தைகளை கடத்திச்சென்று
பணம் பறிக்க முயற்சிகள் நடக்கும்போது –

பள்ளிச் சிறுமிகளைக் கடத்திச்சென்று வடக்கே
விபச்சார விடுதிகளில் விற்கும் செயல்கள் நிகழும்போது –

தெருவில் நடந்து செல்லும் பெண்களின் கழுத்தில்
செயினை பறித்துக்கொண்டு செல்லும் நிகழ்வுகளின்போது –

அரசியல்வாதிகளின் துணையுடன் பொறுக்கிகள்
அடாவடி செய்யும்போது –

அப்போதெல்லாம் இத்தகைய அமைப்புகள்
எங்கே போகின்றன ? ஏன் குரல் கொடுப்பதில்லை ?

சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்ன ஒன்றும்
அறியாத அப்பாவிப் பொது மக்களா ?

அத்தனை பேரும் கொள்ளைக்காரர்கள் தான்
என்பது எல்லாருக்கும் தெரியும். வங்கிகளில்
கொள்ளை அடிக்கும்போது –
எதிர்ப்பு இருந்திருந்தால் – கொலையும்
செய்திருப்பார்கள் என்பதும் தெரியும்.

7 துப்பாக்கிகள் இருந்தன என்றால் –
அதில் 3 டாய் துப்பாக்கியாமே என்கிறார்கள்.
ஏன் – ஒரு துப்பாக்கி இருந்தாலே போதாதா ?

எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு என்பது அபத்தம்.

காவல்துறையினர்
அத்துமீறியதாகவே இருக்கட்டுமே.
சில சமயங்களில் –
அத்துமீறல்களும் அவசியமாகின்றன.

அத்துமீறல் எதற்காக நடந்திருக்கிறது ?
பொது நலனுக்காகத் தானே ?
இத்தனை கேள்விகள் எழும் –
இத்தனை எதிர்ப்புகளையும்
எதிர்நோக்க வேன்டி இருக்கும் என்று தெரிந்தும்
காவல் துறை ஏன் அதைச் செய்தது ?

குற்ற நடைமுறை சட்டங்களின்
குறிக்கோள் என்ன ?

ஒன்று – குற்றம் செய்தவர்களை கண்டு பிடித்து,
வழக்கு தொடர்ந்து,
அவர்கள் செய்த குற்றத்திற்கான தண்டனையை
அனுபவிக்கச் செய்வது.

இரண்டு – மிகக்கடுமையான தண்டனைகளை
விதிப்பதன் மூலம் குற்றம் செய்யத் துணியும்
மற்றவர்களின் மனதில் அச்ச உணர்வை
உண்டு பண்ணி அவர்கள் குற்றச் செயல்களில்
ஈடுபடாமல் தடுப்பது.

இந்த என்கவுண்டர்களின் பின்னணி என்ன ?
எதிர்வரும் காலங்களில் எவரும் இத்தகைய
செயல்களில் ஈடுபட அஞ்ச வேண்டும்
என்பது தானே ?

சகட்டு மேனிக்கு கண்டன அறிக்கை விடுவதற்கு
முன்னால் இந்த அமைப்புகள் எல்லாம்
கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

இன்று நியாயமான காரணத்திற்காக அத்துமீறல்
நடந்திருந்தாலும்,  எதிர்காலத்தில் தவறான
காரணங்களுக்காகவும் இந்த அத்துமீறல்கள்
நிகழக்கூடுமே என்று அச்சப்பட்டால் – அது நியாயம்.

அதை வெளிப்படுத்த வேண்டிய விதத்தில்
வெளிப்படுத்த வேண்டும்.

அயோக்கியர்களுக்கு துணிச்சல் ஏற்படுவது எப்படி ?

எதற்கெடுத்தாலும், குறுக்கே சால்
போடும் அமைப்புகள் –
வழக்குகளை விரைவாக நடத்த முடியாமல்
வருடக்கணக்கில் இழுத்தடிக்கும் நடைமுறைகள் –
நீதிமன்றங்களால் தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் கூட,
அதை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பது.

மும்பை தீவிரவாத தாக்குதலில் பிடிபட்ட கசாப்
இயந்திரத் துப்பாக்கியுடன்  வெறிகொண்டு
அலைந்த காட்சியை வீடியோக்களில் பார்த்த
பின்னரும் அவன் கொலைகாரன் என்பதில்
யாருக்கு சந்தேகம் வரும் ?

இருந்தாலும், இன்னமும் மனித உரிமை
என்றும், சட்டவிதி முறைகள் என்றும் –
வருடக்கணக்காக அவனை உட்கார வைத்து,
மட்டன் பிரியானி போட்டு,
அவனைப் பாதுகாக்க கோடிக்கணக்கில்
தண்டச் செலவு செய்து கொண்டிருக்கிறோமே –

பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குருவுக்கு
சுப்ரீம் கோர்ட் தூக்கு தண்டனை விதித்து இத்தனை
ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னமும் நிறைவேற்றாமல்
வைத்திருக்கிறோமே –

ஏன் – சுதந்திர இந்தியாவில் -ஊழல் புரிந்த
அரசியல்வாதிகள் எத்தனை பேரைப் பார்க்கிறோம்.
யாருடைய வழக்காவது முடிந்து –
சிறை சென்றிருக்கிறார்களா ?
15 வருடம் 20 வருடம் ஆனாலும் வழக்குகள்
முடிவடைகின்றனவா ?

இதற்கெல்லாம் காரணம் என்ன ?

குற்றம் செய்பவரை  விரைவாக கண்டு பிடித்து,
வழக்கு தொடர காவல்துறைக்கு சுதந்திரமில்லை.

எப்படியாவது பிடித்து விட்டாலும்,
யாரை வைத்தாவது வெளியில் வந்து விடுகிறார்கள் !

நீதிமன்றங்களில்  வழக்குகளை விரைவாக நடத்தி,
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க
சட்டங்கள் இல்லை.

தப்பித்தவறி நீதிமன்றங்கள் தீர்ப்பு கொடுத்தாலும்,
அதை நிறைவேற்றாமல், அரசியல்வாதிகள்
குறுக்கிடுகிறார்கள்.

இந்த என்கவுண்டர் நிகழ்ந்த பிறகு நான்
பொதுமக்கள்  பலரிடம் பேசினேன்.
பொதுவாக அனைவரும் இதை வரவேற்கிறார்கள்.

என்ன –சிலருக்கு லேசான ஒரு உறுத்தல் இருக்கிறது.
ஒருவனையாவது உயிரோடு பிடித்து,
விவரங்களை, பின்னணியை அறிந்திருக்கலாமே என்று.
இந்தக் கோணத்தில் காவல்துறையினரும்
ஏற்கெனவே யோசித்திருப்பார்கள்,
அதற்கு வழி செய்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

என்னைப் பொறுத்த வரையில் –
சென்னை போலீஸ்  கமிஷனர் J.K.திரிபாதி அவர்களின்
தலைமையிலான இந்த team க்கு என் மனமார்ந்த
வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்
தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த வலைத்தள நண்பர்களும்  இதையே  
விரும்புவார்கள் என்று
நம்புகிறேன். சரி தானே  நண்பர்களே ?

Congratulations to Chennai Police
Commissioner Mr.J.K.Tripathy
and his Team.

பின்குறிப்பு –  ஒரு வேடிக்கை – என்கவுண்டர் நடந்து
ஏறக்குறைய 48 மணி நேரம் ஆகி விட்டது.  ஆனால் –
தமிழகத்தின் அரசியல் கட்சித்தலைவர்கள் யாருமே –
I repeat – யாருமே இது பற்றி வாயே திறக்கவில்லை!
காரணம் என்னவாக இருக்கும்  ?-
கொஞ்சம் யோசித்து – எனக்கும் சொல்லுங்களேன்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to என்கவுண்டர்கள் தேவையா ? அத்து மீறல்கள் அனுமதிக்கப்பட வேண்டுமா ?

  1. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    Mr.KM, I think,there must be a strong nexus between some of the VIP politicians in TN with any one or two of the accused or with all of the accused. That is why they never opened their mouth either in favour or against the encounter. In fact, they might be feeling that they are much relieved. But they are wrong.

  2. ravikumar's avatar ravikumar சொல்கிறார்:

    Good writeup & as u said it is to be done

  3. Kalidas Selvaraj's avatar Kalidas Selvaraj சொல்கிறார்:

    sorry Km sir, i couldnt agree with you. if a single person in the room (among 5) is an innocent then it is a serious misjustice. and there is some wrong information from police side. kindly read savukku.net on this issue.
    What ever is the crime, human dont have the rights to justify killing with human made LAW.

  4. kannan's avatar kannan சொல்கிறார்:

    Hi,
    You view is completly wrong.
    1. None of the human right activist say anything against punishing the culprits. They oppose the way police did.
    2. In chennai like metropolitan cities bachelors live together without knowing much about each other. You cannot say all the guys in the room are culprit without enquiring properly.
    3. Important thing is, If Police is always behaving in correct manner most of the robbers and thieves will change thier profession.
    4. Finally, kannal kanbathum Poi, Kathal ketpathum Poi, theera visaripathe mei. Please understand

  5. Gandhi's avatar Gandhi சொல்கிறார்:

    உங்கள் கருத்தை வரவேற்கிறேன். மேலே கருத்து சொன்னவர்கள் எல்லோரும் உங்கள் கருத்தை ஆதரிப்பதுபோல தெரியவில்லை. அவர்கள் கேட்கிறார்கள் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை கொல்வது நியாயம் என்றும், அவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டுமென்றும் கேட்கிறார்கள். கடந்த பத்து வருடங்களில் எத்தனையோ கொலைகள் கொள்ளைகள் அரங்கேறியுள்ளன. அவர்களில் எத்தனையோ பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களில் யாருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரணத்திற்கு மரணம் ஈடாகாது என்றால் ஒன்னுமே செய்யாத அப்பாவியை கழுத்தறுத்துவிட்டு அவர்களின் நகையை பிடுங்கி செல்கிறார்களே, எந்த தப்பும் செய்யாமல் அந்த அப்பாவி குடும்பம்பமே நடுத்தெருவில் நிற்கிறதே அதற்கு என்ன சொல்ல போகிறீர்கள். உங்கள் குடும்பத்தில் ஒரு சம்பவம் நிகழாமல் இருக்கும் வரை அதன் பாதிப்பு உங்களுக்கு தெரியாது.

  6. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    இது மிகவும் சிக்கலான பிரச்சினை.அவ்வளவு எளிதில் ஒரு தீர்ர்ப்பு சொல்லிவிட முடியாது.ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது.

    கடந்த அறுபது ஆண்டுகளாக நம்மை ஆண்ட
    அரசியல்வாதிகள் மற்றும்,அரசு இயந்திரங்களின் நேர்மையற்ற,திறமையற்ற,சுயநலம் மிகுந்த
    செயல்பாடுகள் நம் எண்ணங்களையும்,
    நம்பிக்கைகளையும் பெருமளவு பாதித்துள்ளது..

    “நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிட கூடாது”

    எனும் உயரிய கொள்கையிலிருந்து,

    “நூறு நிரபராதிகள் தண்டிக்கப்படலாம் ஆனால் ஒரு குற்றவாளி தப்பித்துவிட கூடாது”

    எனும் அளவிற்கு நாம் தாழ்ந்து விட்டோம்..

  7. smtvkendra's avatar smtvkendra சொல்கிறார்:

    காவல்துறையின் என்கவுண்டர் சரியான நடவடிக்கைதான். தற்போதைய சூழ்நிலையில் நன்மை செய்யும் ஹிட்லர்தான் நாட்டிற்கு தேவை. தங்களது கருத்து மிக சரியானதே.

  8. jayadev's avatar jayadev சொல்கிறார்:

    As the opposition is raising voices that saying that law and order sitution has gone bad, ruling govt would have taken this step.
    Blaming police is not correct. Many times they act as per govt. instructions or as per the instruction of powerful politicians. If police disobey them and land in trouble will the human rights activists come to their help. We can blame plice men who intentionally do mistakes for getting benefits. Not all. our country defenitly requires the “Fear Is The Key” policy.

  9. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    வருக நண்பர்களே,

    மேலே இதுவரை வந்த 8 மறுமொழிகள்
    இருக்கின்றன.
    2 நண்பர்கள் மட்டும் மாறுபட்டிருக்கிறார்கள்.

    நண்பர்கள் காளிதாஸ் செல்வராஜ்
    மற்றும் கண்ணன் ஆகியோரின்
    கருத்துக்களுக்கு ஒரு விளக்கம் –

    காவல் துறை தங்களுக்கு கிடைத்திருக்கும் அனைத்து
    தகவல்களையும் உடனடியாக வெளியிடும் என்றோ,
    மீடியாவுடன் விவாதம் நடத்தும் என்றோ –
    இந்த நேரத்தில் எதிர்பார்க்க முடியாது.

    இன்னும் விசாரணை தொடர்வதாலும்,
    முழு விவரங்களும் ஆதாரங்களுடன் சேகரிக்கப்பட
    வேண்டும் என்பதாலும், மீதிப் பணமும்
    கைப்பற்றப்பட வேண்டும் என்பதாலும் –

    சில தகவல்களை நிறுத்தி வைத்துக்கொள்ள வேண்டிய
    அவசியம் அவர்களுக்கு இருக்கிறது. நான் சில காவல்
    துறை அதிகாரிகளிடம் பேசினேன். அவர்களுக்கு
    நிச்சயமான தகவல் கிடைத்து தான் என்கவுண்டர்
    நிகழ்ந்திருக்கிறது. 5 பேரும் குற்றத்தில்
    சம்பந்தப்பட்டவர்கள் தான்.
    சவுக்கு சொல்வது சில விஷயங்களில் சரி.
    அனைத்தையும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?
    நீங்கள் அவர் சொல்வதை 100 % ஏற்கிறீர்களா ?

    கடைசியில் சொன்னீர்களே –
    அது தான் சரியான கருத்து.
    தீர விசாரித்தறிவதே மெய். முழு விவரங்களும்
    வெளிவரும் வரை காத்திருப்போம்.

    அதற்குள்ளாக சில “மனித உரிமை ஆர்வலர்கள்”
    அளவிற்கு மீறி சப்தம் எழுப்புவதாலும்,
    அவசரம் அவசரமாக உயர்நீதி மன்றத்திற்கும்,
    உச்சநீதி மன்றத்திற்கும் பெடிஷன் போடுவதாலும்
    மீடியாக்களும் அவர்களுக்கு விளம்பரம் கொடுப்பதாலும்
    நான் இதை எழுத வேண்டி இருந்தது.

    நான் முக்கியமாக சொல்ல வந்தது –
    “குற்றவாளிகளின் மனதில் பயம் உண்டாக வேண்டும்”
    -அதை மட்டும் தான் மீண்டும் வலியுறுத்திக்
    கூறுவேன்.

    ஆரோக்கியமான விவாதத்தில் கலந்து கொள்ளும்
    உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    -அன்புடன்
    காவிரிமைந்தன்

  10. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    காவிரிமைந்தன்
    இவையெல்லாம் நாம் காவல்துறையின் மீது வைத்துள்ள நம் எண்ணங்களை பிரதிபலிக்கின்றன.
    காவல்துறை துறை ரீதியான செயல்பாடுகளிலிருந்து பிறழ்ந்து பல ஆண்டுகளாகிவிட்டன. அந்த துறை அரசியல்வாதிகளின் கைப்பாவையாகிவிட்டதாகவே அனைவரும் எண்ணுகின்றன.
    இன்றைய தினம் போடப்படும் அனைத்து கேஸ்களும் பழிவாங்கும் விதத்திலேயே உள்ளன.
    எனவே காவல்துறை மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. அவர்கள் என்ன விதத்தில் நடவடிக்கை எடுத்தாலும் அதிருப்தி ஏற்படுவது சகஜமே!
    இந்த நிகழ்வு காவல்துறைக்கே ஒரு சுயபரிசோதனையாக கருதி தங்களின் தனித்திறமையை மெய்ப்பித்து குற்றங்களை தடுத்தால்….
    HATS OFF TO YOU, TN POLICE.
    உண்மையில் காவல்துறையை நம் நண்பனாக கொண்டாடுவோம்!!!

  11. Kalidas Selvaraj's avatar Kalidas Selvaraj சொல்கிறார்:

    நன்றி.

  12. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    அன்பின் கா.மை..

    உங்கள் விளக்கம் சம்பந்தமாக….

    என்கெளன்டரை மையப்படுத்தி சமீபத்தில் வந்த இரு தமிழ் திரைப்படங்களைப்பற்றி சில விவரங்கள்..

    முதல் படம் என்கெளன்டரை மிகவும் நியாயப்படுத்தி போலீசாரை மிக நல்லவர்களாகவும்,திறமைசாலிகளாகவும்,
    பொது மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்களாகவும் சித்தரித்தது.

    இரண்டாவது படமோ போலீசாரை மிகவும் கேவலப்படுத்தி அவர்கள் சுய லாபத்திற்கு அப்பாவி பொது மக்களை போட்டுத்தள்ள என்கெளன்டரை பயன்படுத்திக்கொள்வதாக
    சித்தரித்தது.

    இதில் இரு மிகப்பெரிய நகை முரணகள் என்னவென்றால்…

    இவ்விரண்டு படங்களும் வசூலில் பெரும் வெற்றியைப்பெற்றன
    (அதாவது மக்கள் போலீசை புகழ்வதையும் ஆதரிப்பர்.இகழ்வதையும் ஆதரிப்பர்)

    முதல் படத்தை தயாரித்தவர் ஒரு வட இந்தியா தயாரிப்பாளர்.
    சராசரி இந்திய குடிமகன். (இவர் போலீசை புகழ்ந்திருந்தார்..இது ஊகத்தின் அடிப்படையில்?.)

    இரண்டாவது படத்தையோ தமிழ்நாட்டை ஆறு முறை ஆண்டவரும்,ஆறு முறையும் போலீஸ்மந்திரியாக இருந்தவருமான ஒரு அதிமுக்கிய இந்திய குடிமகனின். புதல்வர் எடுத்திருந்தார் !!((இவர் போலீசை கேவலப்படுத்தியிருந்தார்..இது யதார்தத்தின் அடிப்படையில்? )

    இப்பொழுது சொல்லுங்கள்..யார் சொல்வது நிஜமாக இருக்க வாய்ப்பு அதிகம்?

    ஜெய் ஹிந்த்

  13. shivan's avatar shivan சொல்கிறார்:

    WHY DONT THESE POLICE KILL THOSE WHO HAVE DONE MORE CORRUPTION.

    IS THIS KILLING OF 5 PEOPLE JUST FOR FEW LACKS ROBBERY.

    I DONT THINK THIS ENCOUNTER IS HIDING SOME BIG NEWS , POLICE KILLED THE TRUTH ALONG WITH 5 PEOPLES

  14. seenu's avatar seenu சொல்கிறார்:

    உங்கள் கருத்தை முழுமையாக ஏற்று கொள்கின்றேன்.சில நேரம் இவை தேவைபடுகின்றது.

    நன்றி .சீனு

  15. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    முதலில் encounter என்று நாம் குறிப்பிடுவது எனக்கு சரியானதாக படவில்லை. extrajudicial killing என்று சொல்வதே பொருத்தம். இரண்டாவதாக இவ்வாறான கொலைகளில் கருத்து மாறுபாடுகளை தவிர்க்க இயலாது. காரணம் பல. ஒருவருக்கு ஒரு குற்றத்துக்கு இதுவே சரியான தண்டனை என்று சட்டத்தால் கூட சில சமயம் அறுதியிட்டு கூற முடிவதில்லை. அதற்க்கு தான் ஜூரிகளை பயன் படுத்துகிறார்கள். தற்போது நடந்தது போன்று காவல் துறை சுட்டு தள்ளும் நிகழ்வில், அந்த நிகழ்வின் பின்னணியை மக்களிடம் விளக்க வேண்டிய கட்டாயம் காவல் துறைக்கு உண்டு. அதை வைத்தே அவர்கள் செய்தது சரியா என்பதை முடிவு செய்யலாம் என்று நான் நம்புகிறேன். கண்மூடி தனமாக காவல் துறையை ஆதரிப்பது தவறான மேலும் பல கொலைகளுக்கு வழி வகுத்து விடுமோ என்ற பயம் எனக்கு நிறைய உண்டு. காரணம் நமது காவல் துறை அப்படி!

  16. நித்தில்'s avatar நித்தில் சொல்கிறார்:

    தங்களின் பதிவுகள் அனைத்தையும் படித்து வருகின்றேன். பலவற்றோடு ஒத்து போகின்றேன். மறுமொழியும் இடுகின்றேன். 1) மனித உரிமை ஆர்வளர்கள் (ம.உ.ஆ)அரசாங்கமோ அல்லது காவல் துறையினரோ அத்து மீறும் போதுதான் குரல் கொடுக்க முடியும். கசாப் மாதிரி சமுக விரோதிகளின் மற்றும் தீவிரவாதிகளின் குற்றங்களுக்கெதிராக குரல் கொடுக்க முடியுமா? அப்படி குரல் கொடுக்காத தனால் அவர்கள் அச்செய்கைகளை ஆதரிப்பவர் என்று அர்த்தமா?
    2) சுடப்பட்டு இறந்தவர்கள் அனைவருமே வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று எதன் அடிப்படையில் கூறுகின்றீர்கள்? 3) உங்கள் வாத த்திற்கு வலு சேர்ப்பதற்காக மூதாட்டி கழுத்து அறுத்து கொலையையும், சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை புரிந்து கொலை செய்த தையும் ம.உ.ஆ ஆதரிப்பது போல் எழுதிஉள்ளார்கள். (அப்ப குரல் கொடுக்காமல் இப்ப ஏன் குரல் கொடுக்கறீங்க என்ற உங்கள் வாதம் அப்படிதான் உள்ளது) 4) குற்றங்கள் அதிகமாவதற்கான காரணங்களை ஆராய்ந்து காவல்துறையினர் அதனை தடுப்பதற்கான தங்கள் தகுதியை உயர்த்திக் கொண்டு குற்றங்களை தடுக்க முயற்சிக்க வேண்டுமே தவிர என்கௌன்டர்கள் தீர்வாகாது.5) நினைத்து பார்க்கவே வேதனை அளிக்கின்றது, இதே போன்ற என்கௌன்டரை இந்தி ஆசிரியரை கொண்ற 9ம் வகுப்பு மாணவனுக்கு காவல் துறை நடத்தியிருக்குமேயானால் 6) இந்த என்கௌன்டர் விடயத்தில் தாங்கள் கண்மூடித்தனமாக காவல் துறையை ஆதரிப்பதோடல்லாமல் வாழ்த்தையும் தெரிவிப்பதற்கு என்னுடைய எதிர்ப்பை இங்கு பதிவுசெய்கிறேன். தங்களுடைய பல பதிவுகளோடு ஒத்து போனதாலும், தங்கள் மீது மரியாதையும் உள்ளதாலும் தங்களுடைய இந்த பதிவை, கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.நித்தில்

  17. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் எழில் மற்றும் நிதில் –

    என் அனுபவத்தில்,
    என் பார்வையில், எனக்கு சரி என்று
    தோன்றுவதை நான் எழுதி வருகிறேன்.

    அதை எல்லாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று
    நான் எதிர்பார்க்க முடியாது. மாறுபடுபவர்களின்
    மீது எனக்கு எந்த வருத்தமும் கிடையாது.

    உங்கள் கோணத்தில் நீங்கள் சிந்திக்கிறீர்கள்.

    என் எண்ணங்களை, பார்வையை – வெளியிடுவது
    இடுகையின் ஒரு பகுதி.
    படிப்பவர் அதை ஏற்றுக் கொள்வதும், மறுப்பதும்,
    மாறுபட்ட கருத்துக்களைக் கூறுவதும்
    அதன் அடுத்த பகுதி.
    இடுகைக்கு இரண்டு பகுதிகளும் அவசியம் தேவை.

    நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி.

    தொடர்ந்து வருகை தாருங்கள். உங்கள் கருத்துக்கள்
    எதுவாக இருந்தாலும் அவற்றை இங்கு
    தாராளமாகக் கூறலாம்.

    -வாழ்த்துக்களுடன்
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.