கனக சுப்ரமணி என்கிற …..

கனக சுப்ரமணி என்கிற  …..

10 ஆண்டுகளுக்கு முன்னர் பயணி ஒருவர் எழுப்பிய
கேள்வி தான் அடிப்படையான தூண்டுதல்
எல்.கனக சுப்ரமணி என்கிற அந்த கண்டக்டருக்கு.

அப்படி என்ன கேட்டார்  அந்த பயணி ?

“எல்லா பேருந்துகளிலும்  திருக்குறள்
எழுதப்பட்டிருக்கிறதே – நீங்கள்
எத்தனை ஒட்டுநர், நடத்துனர்கள்
இவற்றைப் படிக்கிறீர்கள் ?”

அது எப்படி மாற்றியது கனக சுப்ரமணியை ?

அவரது தினசரி நடவடிக்கைகளைப் பாருங்கள் –

காலையில் எழுந்ததும் திருக்குறள் புத்தகத்திலிருந்து
ஒரு குறளையும் அதன் பொருளையும் படித்து
நினைவில் கொள்கிறார்.

அவரது ரூட் -மேட்டுப்பாளையம் -ஊட்டி.
காலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து வண்டி கிளம்பி,
ஊருக்கு வெளியே, நீலகிரி மலையடிவாரத்தில்,
கல்லாறு திருப்பம் வந்ததும் நிற்கிறது. டிக்கெட் பையை
ஒரு பக்கம் வைத்து விட்டு, ஒரு திருக்குறள் புத்தகத்தை
கையில் எடுத்துக் கொள்கிறார். துவங்குகிறார் –

“பயணிகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
எனக்காக தயவு செய்து 2 நிமிடங்களை ஒதுக்குங்களேன்.”

புத்தகத்திலிருந்து ஒரு குறளைச் சொல்லி, அதன்
பொருளையும் விளக்குகிறார். பின்னர் பயணிகளிடம்,
சுற்றுப் புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதன்
அவசியம் பற்றியும், சாலைப் பாதுகாப்பு பற்றியும்,
மரம்-செடிகள் வளர்த்தலின் அவசியம் பற்றியும்,
ரத்த தானம் கொடுப்பது பற்றியும் தான் படித்திருந்த
சிறிய குறிப்புகளைச் சொல்கிறார்.

“பயணிகள் அனைவருக்கும் அவர்களது பயணம்
இனிதே  அமைய வாழ்த்துக்கள்” என்று கூறி
வணக்கத்துடன் முடிக்கிறார்.

அதன் பின்னர், அன்று பயணம் செய்பவர்கள்
யாராவது  அன்றைய தினம் பிறந்த நாள்,
திருமண நாள் கொண்டாடுகிறார்களா என்று
கேட்டு அறிகிறார்.
இருந்தால் – அவர்களுக்கு பயணிகள் அனைவரின்
சார்பிலும் வாழ்த்துக் கூறி திருக்குறள் புத்தக பிரதி
ஒன்றை பரிசளிக்கிறார்.
அப்படி யாரும் இல்லையென்றால், தகுதியான
ஒருவரை தானே தேர்ந்தெடுத்து அவருக்கு
கொடுக்கிறார்.

(கனக சுப்ரமணி சொல்லும் எந்த விஷயமும் –
அநேகம் பேருக்கு ஏற்கெனவே தெரிந்தவையாக
இருக்கக்கூடும். இருந்தாலும், பயணத்தை
இனிமையாக, சுறுசுறுப்பாக, கலகலப்பாக ஒரு  
நல்ல துவக்கம் அமைந்தது என்கிற திருப்தியுடன்
தொடர இது உதவுகிறது அல்லவா !)

கடந்த 10 வருடங்களாக இந்த சேவையைத்
தொடர்ந்து செய்து வரும் இந்த நண்பரின்
மற்ற சில பணிகள் –

சில நண்பர்களுடன் சேர்ந்து கொன்டு, “செந்தமிழ்
அறக்கட்டளை” என்கிற அமைப்பினை உருவாக்கி,
அதன் சார்பில், கோவை மத்திய சிறைச்சாலையில்
உள்ள கைதிகளுக்காக சில இலக்கிய, இசை,
பேச்சுப் போட்டி போன்ற நிகழ்வுகளை நடத்தி –
சிறு சிறு பரிசுகளை  வழங்கி,
அவர்களிடையே ஒரு ஈடுபாட்டை உண்டாக்குகிறார்.

கர்நாடக இசை ஆசிரியர் ஒருவரைக் கொண்டு
சிறையில் – விரும்புவோர்க்கு இசை கற்றுக்
கொடுக்கச் செய்கிறார்.
(இசையும், இலக்கியமும் -முரட்டுக் கைதிகளின்
மனதில் ஒரு இளக்கத்தை உண்டு பண்ணுமல்லவா ?)
அவ்வப்போது தானும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு –
அந்த நாளைய -பழைய- புகழ்பெற்ற திரைப்பட
பாடல்களை பாடுகிறார்.

கண்ணில் படும் ஆதரவற்ற முதியோர்களை –
தகுந்த முதியோர் பாதுகாப்பு இல்லங்களில் சேர்க்க
உதவுகிறார்.

கனக சுப்ரமணி போன்ற மனிதர்கள்,சமுதாயத்திற்கு
மிகவும் தேவையானவர்கள்.
மற்ற சக மனிதர்களைப் பற்றியோ,
தன்னைச் சுற்றி இருக்கும் சமுதாயத்தைப்
பற்றியோ -எந்தவித பிரக்ஞையும் இல்லாமல்,
இயந்திரம் போல் தங்கள்  தேவையை மட்டும் பார்த்துக்
கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும்
இன்றைய பெரும்பாலான மனிதர்களிடையே –
இவரைப் போன்றவர்கள் விதிவிலக்கானவர்கள் !

55 வயதான ஒரு  பஸ் கண்டக்டரால் இவ்வளவு
உற்சாகமாக சமூகப் பணி ஆற்ற முடியும் என்றால் –
இன்றைய இளைஞர்கள்  எந்த அளவு செய்யலாம் ?

உற்சாகத்திற்கும், சக்திக்கும் இன்றைய இளைஞர்களிடம்
எந்த குறைச்சலும் இல்லை. நான் போகும் இடங்களில்
எல்லாம் நிறைய சுறுசுறுப்பான, வீர்யமான
இளைஞர்களை பார்க்கிறேன்.

ஆனால் என் வருத்தம் என்னவென்றால், அவர்களில்
ஒரு சிலரைத் தவிர –

பெரும்பாலானவர்களின் சக்தியும், ஆற்றலும் –
வீண் அரட்டைகளிலும், சினிமா அரங்கங்களிலும்,
ஷாப்பிங் மால்களிலும் வீணடிக்கப்படுவது தான்.
எப்போதும் கிரிக்கெட் பற்றியே பேசிக்கொண்டு
அல்லது சினிமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றம்
நடத்திக் கொண்டு தங்கள் நேரத்தையும், சக்தியையும்
வீணாக்கும் இளைஞர்கள் நிறைய பேரைப் பார்க்கிறேன்.

இளைஞர்கள் மட்டுமல்ல  நடுத்தர வயதினர் கூட,
பலர் தங்கள் வழக்கமான வாழ்க்கைத் தேவைகளை
நிறைவேற்றிக் கொள்வதைத் தவிர வேறு எதைப்பற்றியும்
யோசிக்கவே மாட்டேன் என்கிறார்கள்.

இந்த உலகில் -பிறந்தவர் யாரும் தானாகவே
வளர்ந்து விட முடியாது.
ஒவ்வொருவரது வளர்ச்சியிலும், நேரிடையாகவோ –
மறைமுகமாகவோ – இந்த சமூகத்தில் பலரது பங்குபணி
அடங்கி இருக்கிறது. எனவே,  தன்னை உருவாக்கிய
இந்த சமூகத்திற்கு ஒவ்வொரு மனிதனும்
கடன் பட்டிருக்கிறான்.

பதிலுக்கு இந்த சமுதாயத்திற்கு கடமை ஆற்றுவதன்
மூலமே அவன் அந்த கடனை சரி செய்ய முடியும்.

இப்போது இருக்கும் அரசியல்வாதிகளால் இந்த நாடு
உருப்படப்போவதாகத் தெரியவில்லை.
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் “லீ குவான் யூ”
போன்ற ஒருவர் இங்கு அதிகாரத்திற்கு
வரும் நாள் வரை நமக்கு அரசியல் ரீதியாக
விமோசனம் இல்லை.

எனவே, நம்மை நாமே கவனித்துக் கொண்டால்
தான் உண்டு. நம்மைப் பற்றி மட்டும் கவலைப்படாமல்,
நம்மைச் சுற்றி வாழும் மனிதர்களைப் பற்றியும்
கவலைப்படும் பண்பை வளர்த்துக் கொள்வோம்
வாருங்கள் என்று இன்றைய இளைஞர்களை,
குடும்பஸ்தர்களை அழைக்கிறேன்.

இதற்காக பெரிய அமைப்பு எல்லாம்
எதுவும் தேவை இல்லை.
உங்களைச் சுற்றி இருப்பவர்களை சற்று அக்கரையோடு,
மனிதாபிமான கண்ணோட்டத்தோடு – பாருங்கள்.
எப்படி உதவலாம்,
எந்த விதத்தில் உபயோகமாக இருக்கலாம்
என்பது உங்களுக்கே தோன்றும்.

நம் நாட்டில் நிறைய “கனக சுப்ரமணி”கள்
உருவாக வேண்டும் என்று வேண்டுகிறேன்.

———————————————————

Feel, my children, feel;
feel for the poor,
the ignorant, the downtrodden;
feel till the heart stops and
the brain reels and you think
you will go mad —

and then will come power, help,
and indomitable energy.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to கனக சுப்ரமணி என்கிற …..

  1. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    ஒரு நல்ல மனிதரைப் பற்றிய அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

  2. shanker's avatar shanker சொல்கிறார்:

    // இப்போது இருக்கும் அரசியல்வாதிகளால் இந்த நாடு
    உருப்படப்போவதாகத் தெரியவில்லை.
    சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் “லீ குவான் யூ”
    போன்ற ஒருவர் இங்கு அதிகாரத்திற்கு
    வரும் நாள் வரை நமக்கு அரசியல் ரீதியாக
    விமோசனம் இல்லை.//

    லீ குவான் யு மட்டும் போதாது நண்பரே. தமிழ் நாடு தனி நாடாக ஆனால் அது சாத்தியம் என்று நான் நம்புகிறேன்.

    வளைவுகள் நிறைய இருக்கும் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் திருக்குறளும் அதன் விளக்கமும் கேட்பதற்கு மிக அற்புதமாக இருக்கும் என்று தோன்றுகிறது. அடுத்த முறை நான் ஊருக்குச் செல்லும் போது இவரை தேடி கண்டுபிடிக்கிறேன் 🙂

    தகவலுக்கு நன்றி!

  3. V.MATHIVANAN's avatar V.MATHIVANAN சொல்கிறார்:

    NAMMIL THODANGUVOM. NAAM OVVORUVARUM KANAGUSUBBRAMNI YAGA MAARUVOM.
    KANAGASUBBRAMANIKKU VAAZTHUKKAL

  4. லால்குடி நாராயணன்'s avatar லால்குடி நாராயணன் சொல்கிறார்:

    இந்த தகவலை நான் கூட ஒரு ஆங்கில செய்தித்
    தாளில் பார்த்தேன்.ஆனால் ஒரு சாதாரண செய்தியை
    இவ்வளவு அற்புதமான,
    மிகவும் பயனுள்ள பதிவாக உருவாக்கி
    போட்டு விட்டீர்களே !பிரமாதம்.

    மிகவும் பயனுள்ள பதிவு. நம்மில்
    பல பேருக்கு அவ்வப்போது தோன்றினாலும்,
    செயல்படுத்தத் தான் தவறி விடுகிறோம்.

    இங்கு படித்தது இனி நினைவில் இருந்து கொண்டே
    இருக்கும். உங்கள் பணி இதே போல் தொடர
    வாழ்த்துக்கள்.நன்றி.

  5. smtvkendra's avatar smtvkendra சொல்கிறார்:

    எல்லா கண்டக்டர்களுக்கும் இதுபோல் சாத்தியப்படுமா என தெரியவில்லை இருப்பினும் இன்றைய கால கட்டத்தில்
    இளைஞ்சர்கள் மட்டுமல்ல பள்ளி மாணவர்களையும் உரிய நடவடிக்கை மூலம் கவனிக்க வேண்டிய கட்டயத்திலிருக்கிறோம். ஆசிரியர்களையே கொலை செய்யுமளவுக்கு நிலைமை மோசமாக போய்கொண்டிருக்கிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.