விஜய் மால்யா கூத்தடிக்க பணம் கொடுத்ததால் –
ஸ்டேட் பாங்க்/மற்ற வங்கிகளின் நஷ்டக்கணக்கு !
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் டிசம்பர் 2011
வரையிலான காலத்திற்கான வரவு செலவு விவரங்கள்
வெளியிடப்பட்டு உள்ளன.
சும்மாவே – இருக்கின்ற காரியத்தைப் பார்த்துக்
கொண்டிருந்தாலே
லாபம் கொட்டும் வங்கித் தொழிலில்,
தொழிலதிபர்கள், மற்றும் பெரும் வர்த்தகர்களுக்கு
வராத கடன்களைக் கொடுத்து, மக்களின் தலையில்
மிளகாய் அரைக்கின்றன
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்.
இந்திரா காந்தி அம்மையார், வங்கிகளை
தேசிய மயமாக்கும் போது சொன்ன காரணம் –
வங்கிப் பணம் ஒரு சில தனிப்பட்ட தொழிலதிபர்கள்,
வர்த்தகப் பிரமுகர்களின் கட்டுப்பாட்டிலேயே
இருப்பதை உடைத்து பொதுமக்களின்
பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும்
என்பது தான்.
இன்றைக்கு இருக்கும் 27 தேசிய மயமாக்கப்பட்ட
வங்கிகளில்
எத்தனை உண்மையிலேயே பொது மக்களுக்கு
உதவி செய்ய முன் வருகின்றன ?
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின்
தலைமைப் பொறுப்பில் இருக்கும் எஸ்பிஐ சேர்மன்
பிரதீப் சௌத்ரி நேற்று முன் தினம் வெளியிட்டிருக்கும்
விவரங்களின்படி –
எஸ்பிஐ யில் மட்டுமே வசூல் செய்ய முடியாத
நிலையில் இருக்கும் வாராக் கடன்களின்
மொத்த தொகை – ரூ.40,098 கோடி.
(நாற்பதாயிரத்து தொண்ணூற்று எட்டு கோடி )
கிட்டத்தட்ட ஸ்பெக்டரம் ராஜாவின் தொகையில்
4 ல் 1 பகுதி !
இப்படி கடன் பாக்கி வைத்திருக்கும்
புண்ணியவான்களின்
பெயர்களைத் தெரிந்து கொள்ள ஆர்டிஐ ஆர்வலர்கள்
தலைகீழாக நின்று பார்த்து விட்டார்கள்.
அது டாப் சீக்ரட் –
வெளியிட மறுக்கிறார்கள் !
எப்படியோ நமக்கு கிங்பிஷர்
விஜய் மால்யாவிற்கு (குடித்து, கூத்தாட )
தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகளால் –
கொடுக்கப்பட்ட கடன் விவரங்கள் மட்டும்
கிடைத்தது !
அவை உங்கள் பார்வைக்கு –
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா – 1,457.78 கோடி
ஐடிபிஐ – 727.63 கோடி
பஞ்சாப் நேஷனல் பேங்க் – 710.33 கோடி
பேங்க் ஆப் இந்தியா – 575.27 கோடி
பேங்க் ஆப் பரோடா – 537.51 கோடி
இவை எல்லாம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் –
அதாவது உங்கள் வங்கி – என் வங்கி.
நம் வங்கிகளின் நிலையை கொண்டாட விரும்புபவர்கள்
விஜய் மால்யாவின் உலகின் இரண்டாவது மிகப்பெரிய
சாராய உற்பத்தித் தொழிற்சாலை யான –
யுனைடட் ப்ரூவரீஸ் தயாரிக்கும் பீர் மற்றும் விஸ்கியை
அருந்தி மகிழ்வடையலாம் !




மஞ்சக் கடுதாசி கொடுத்துவிட்டு நாட்டில் மீண்டும் வளைய வரும் ஆள்தான் இந்த மல்லையா. கொஞ்சம் கூட கூச்ச நாச்சமில்லாத ஆள். வங்கிகள் இந்த ஆளை நம்பிக் கடன் கொடுப்பதுதான் ஆச்சரியம்! ஆக, அரசியல்வாதி – தொழிலதிபர் – வங்கி அதிகாரிகள் – இந்த மூன்று வர்க்கத்தினரும் சேர்ந்து திட்டமிட்டு அடித்த கொள்ளைதான் இந்த நாற்பதாயிரம் கோடி.
இது போன்ற செய்திகள் சாதாரண சராசரி இந்தியனின் மனநிலையை வழி மாற்றிவிடுகிறது
ரூ.பத்து கடன் பாக்கி வைத்திருந்தால்..
நீங்கள் ஒரு ஆண்டி
ரூ.ஆயிரம் கடன் பாக்கி வைத்திருந்தால்..
நீங்கள் ஒரு போண்டி
ரூ.பத்தாயிரம் கடன் பாக்கி வைத்திருந்தால்..
நீங்கள் ஒரு மத்திய வர்க்கம்
ரூ.ஒரு லட்சம் கடன் பாக்கி வைத்திருந்தால்..
நீங்கள் ஒரு மேல் வர்க்கம்
ரூ.ஒரு கோடி கடன் பாக்கி வைத்திருந்தால்..
நீங்கள் ஒரு சிறு தொழிலதிபர்
ரூ.பத்து கோடி கடன் பாக்கி வைத்திருந்தால்..
நீங்கள் ஒரு திரைப்பட தயாரிப்பாளர்
ரூ.நூறு கோடி கடன் பாக்கி வைத்திருந்தால்..
நீங்கள் ஒரு MLA
ரூ.ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்திருந்தால்..
நீங்கள் ஒரு பெரும் தொழிலதிபர்
ரூ.பத்தாயிரம் கோடி கடன் பாக்கி வைத்திருந்தால்..
நீங்கள் தான் அரசாங்கம்
அப்போ ஒரு ரூ. கூட கடன் பாக்கி இல்லாமல் மேற்கண்ட கடன்காரர்களைப்பற்றி கவலைப்பட்டுக்கொண்டிருந்தால்…
நீங்கள் ஒரு வலைப்பதிவாளர் (அல்லது ,ஹி,ஹி,ஹி பின்னூட்டம் இடுபவர்)
அநியாயத்துக்கு உண்மை பேசுகிறீர்கள் கண்பத்! 🙂
நண்பர் கண்பத் –
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு நிஜம் !
(கொஞ்சம் மிகைப்படுத்தல் இருக்கக்கூடும் -அவ்வளவு தான் ) –
ஆமாம் – நாம் எழுதும் இது போன்ற பதிவுகளையும்,
பின்னூட்டங்களையும் படிக்கும்போது – சம்பந்தப்பட்டவர்களுக்கு
எப்படி இருக்கும் ? – அதையும் கொஞ்சம் விவரியுங்களேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
Beautiful, It is heartening to note these Banks wont give small loans to farmers, but will do so to glamorous persons. I somehow recall P.Sainath’s Nero’s guests.
//– நாம் எழுதும் இது போன்ற பதிவுகளையும்,
பின்னூட்டங்களையும் படிக்கும்போது – சம்பந்தப்பட்டவர்களுக்கு
எப்படி இருக்கும் ? – அதையும் கொஞ்சம் விவரியுங்களேன்.//இருபத்தொன்பது வங்கிகள் நாட்டுடைமை; இப்போது அவற்றில் மூன்று இல்லை; அதாவது இருபத்து ஐந்து.
நாட்டுடைமை ஆகுமுன்னர் சிறு தொழில்களுக்கு, சிறு வணிக முயற்சிகளுக்கு, விவசாயத்துக்கு எவ்வளவு சதவீதம் கடன் அளிக்கப்பட்டது? சொத்து அடமானம் அல்லது மூன்றாம் நபர் கேரண்டீ இல்லாது எத்தனை ஆயிரம் கோடிகள் கடன்கள் வழங்கப்பட்டன? அந்த மாதிரி திட்டங்கள் இல்லாமல் இருந்தால் எவ்வளவு நிலங்களில்
கிணறு தோண்ட, பம்பு செட்டு வைக்க, டிராக்டர் வாங்க; முடிந்திருக்கும்? டீக்கடையிலிருந்து ஆட்டோ வாங்குவது வரை எத்துணை சாதாரண நபர்கள் இப்போது நடுத்தரத்திற்கு உயர்ந்து இருக்கின்றனர்? நூறு சதவீதம் அரசு நிறுவனமாக இருந்தபோதும் அரசு அலுவலகம் போன்ற கெடுபிடிகள், விதிமுறையின் படி வேலை, காலந்தவறாமை (punctuality ). அரசு வங்கியில் நுழையும் போது தாலுகா அலுவலகம் அல்லது பதிவு அலுவலகம் போன்ற எண்ணம் வருகிறதா? சுற்றி உள்ள எல்லா அலுவலகங்களும் “அரசு சின்னத்தை” தாங்கி நிற்கும் பொது, மிக நல்ல வழியில் தம் பணியை செய்தன ; செய்து கொண்டு இருக்கின்றன அரசு வங்கிகள்.
விஜய் மல்லையாவுக்கு வருவோம். வங்கிகள் கடன் வழங்கியது கிங் பிஷர் என்ற விமான நிறுவனத்துக்கு. அந்த நிறுவனம் அளித்த வணிக திட்டம் லாபகரமானதாகத் தோன்றியதால் கடன் வழங்கப்பட்டது. மல்லையாவின் சொந்த விருப்பு, வெறுப்புகள், அவர் பழக்க வழக்கங்கள், (அவர் ஒரு நாளைக்கு எவ்வளவு பெக் அருந்துகிறார் என்று பார்த்து அல்ல). நிறுவனத்துக்கு கொடுக்கும் கடனும், தனி நபருக்கு தரப்படும் கடனும் ஒன்றல்ல. வீட்டுக் கடன் வழங்கும் போது, கடன் வாங்குபவர் எவ்வளவு சம்பளம் அல்லது வருமானம் உள்ளவர் என்று பார்த்து கடன் வழங்கப்படுகிறது, எவ்வளவு சேமிக்க முடிந்தவர் என்று, எவ்வளவு உண்மையில் ஊதாரித்தனமாகச் செலவிடுகிறார் என்று அல்ல.
நிறுவனத்தின் பணம், தனி நபர் கணக்கு=வழக்கு இரண்டும் தனிதனி. ஆடிடர்கள் இதைத் தான் தணிக்கை செய்து, நிறுவனப் பணம் சொந்த செலவுகளுக்கு செலவு செய்யப் படாமல் இருக்கிறதா என்று பார்ப்பது தணிக்கை. சத்யம் / ராமலிங்க ராஜு நினைவுக்கு வரலாம். இது போன்ற நிகழ்வுகளில் வங்கிகளை குறை சொல்கிறோம், அந்த நிறுவன அதிகாரிகள், அரசு அதிகாரிகள், தணிக்கையாளர்கள் என்ன செய்தார்கள்/ செய்யத் தவறினார்கள் என்று சுட்டிக்காட்டுவதில்லை.
வங்கிகளைப் பற்றி மேலெழுந்தவாரியாக இந்த வலையில் எழுதவேண்டாம். பிற மிகவும் விஷயங்களில் அலசி ஆராய்ந்தும் எழுதும் தாங்கள் இது போன்ற கருத்துக்களைச் சொல்லி தவறான எண்ண ஓட்டம் பரவ ஏது செய்ய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர் விஞ்ஞானி அவர்களுக்கு –
சாதாரணமாக எந்குடிமகனுக்கு கடன் கொடுக்க
வேண்டும் என்றாலும், அவனுக்கு வருமானம்
எவ்வளவு, சேமிப்பு சக்தி என்ன, திரும்பக்
கொடுக்கும் சக்தி என்ன என்பதை கணக்கு
எடுத்துப் பார்த்து விட்டு தான் கொடுக்கிறார்கள்.
சில குறிப்பிட்ட விவசாய, கல்வி – கடன்களைத்
தவிர மற்ற எல்லா வகைக் கடன்களுக்கும் செக்யூரிடி
பெற்றுக் கொண்டு தான் கொடுக்கிறார்கள்.
இந்த கிங்பிஷர் நிறுவனத்தின் சரித்திரம் உங்களுக்கு
தெரிந்தே இதை எழுதுகிறீர்களா என்பது எனக்குத்
தெரியவில்லை. உங்களுக்காக சில விவரங்கள் –
இந்த விஜய் மால்ய்யா 7 ஆண்டுகளாக தொழில்
நடத்தி கிங் பிஷருக்கு சேர்த்து வைத்திருக்கும்
மொத்தக் கடன் சுமார் 7000 கோடி ரூபாய்.
மொத்த நஷ்டம் இது வரை சுமார் 4000
கோடி ரூபாய்.
எண்ணை நிறுவனங்கள் அனைத்துக்கும்
விமான எரிபொருள் வாங்கிய வகையில்
கொடுக்க வேண்டிய பணத்தைத் –
(பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு 250 கோடி
இந்துஸ்தான் பெட்ரோலியம்
நிறுவனத்துக்கு 600 கோடி.
இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு 200 கோடி )
கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டே போனதாலும்,
கொடுத்த காசோலைகள் திரும்பி விட்டதாலும்,
மேற்கொண்டு எரிபொருள் கொடுக்க முடியாது
என்று மறுத்து விட்டன.
எரிபொருள் வாங்க காசு இல்லாமல் தினமும் பல
விமான சர்வீஸ்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கு முன்பாக கடன் கொடுத்திருந்த
13 வங்கிகளும்(எஸ்பிஐயும் சேர்த்து தான் ),
கடன்கள் திரும்ப வராது என்கிற
நிலையில், தங்கள் கடனை – பங்குகளாக
மாற்றிக்கொண்டு விட்டன.கிங் பிஷரின்
பங்கு விலை பங்கு மார்க்கெட்டில் 40 ரூபாயாக
இருந்தபோது, இவர்கள் 63 ரூபாய் கொடுத்து
பங்கை வாங்கி கொண்டார்கள்.
(இவர்கள் வாரிக் கொடுத்தது யார் பணம் ?)
இன்றைய தினத்தில் கிங் பிஷர் பங்கு அதல
பாதாளத்திற்கு சரிந்து நிற்கிறது.இதனால்,
கடனை பங்குகளாக மாற்றிக்கொண்ட வங்கிகளுக்கு
லாபமா – நஷ்டமா ? நஷ்டம் என்றால் அந்த
நஷ்டம் இறுதியில் யார் தலையில்
போய் விழுகிறது ?
இந்த நிறுவனத்தில் விஜய் மால்யாவின் பங்கு
58.61 %. வங்கிகள், நிதி -இன்சூரன்ஸ்
நிறுவனங்கள், தனியார் எல்லாரும் சேர்ந்து
மீதி 41.39 % பங்கு.
கிங் பிஷர் விஜய் மால்யாவின் முழு
கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.கம்பெனி லாபம்
அடைந்தாலும், நஷ்டம் அடைந்தாலும்
முழு பொறுப்பும் இவருடையது மட்டுமே.
கம்பெனி சரியக் காரணம் –
நிர்வாகம் சரி இல்லாததே.
நிர்வாகம் சரி இல்லாததற்கு காரணம் இவரது
பல்வேறு பட்ட நடவடிக்கைகள்.
இவர் போட்ட ஆட்டங்களால் கம்பெனி திவால்
ஆனால் – அதை மீட்க நாட்டுடைமை ஆக்கப்பட்ட
வங்கிகள் ஏன் பணம் கொடுக்க வேண்டும் ?
வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதன்
நோக்கம் இவர்களைப் போன்ற தொழிலதிபர்களை
வளர்த்து விடுவது தானா என்பது தான் என் கேள்வி .
நீங்கள் அக்கரை எடுத்துக் கொண்டு கேட்டதற்கு
நன்றி. ஆனால் – நான் எதையும் மேலோட்டமாக
தெரிந்து கொண்டு எழுதுவதில்லை, நான் நிச்சயம்
கன்வின்ஸ் ஆனால் ஒழிய எழுதுவதில்லை
என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளவும்.
எல்லாரையும் கன்வின்ஸ் செய்ய என்னால் இயலாது.
என் நோக்கில், என்னிடம் உள்ள தகவல்களையும்,
அனுபவத்தையும் வைத்துக் கொண்டு, எழுதுகிறேன்.
தவறு நிகழ்கிறது என்று எனக்குத் தோன்றுவதால்
தான் எழுதுகிறேன்.
இனியும் நீங்கள் கன்வின்ஸ் ஆகவில்லை என்றால் –
நான் ஒன்றும் செய்வதற்கில்லை.
ஆனால், என்னால் முடிந்த வரை,
நான் எடுத்துக் கொண்ட விஷயத்தை
விளக்கி விட்டேன் என்கிற திருப்தி எனக்கு இருக்கும்.
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
நண்பர் விஞ்ஞானி அவர்களுக்கு –
இன்னொரு முக்கியமான விஷயத்தை
மறந்து விட்டேன்.
எஸ்பிஐ யில் மட்டுமே வசூல் செய்ய முடியாத
நிலையில் இருக்கும் வாராக் கடன்களின்
(Non performing assets )
மொத்த தொகை – ரூ.40,098 கோடி.
(நாற்பதாயிரத்து தொண்ணூற்று எட்டு கோடி )
என்பதைக் குறித்திருந்தேனே.
அது பற்றி உங்கள் கருத்து என்ன ?
5 லட்சம், 6 லட்சம் -கடன் வாங்கி விட்டு
திரும்பக் கொடுக்காமல் இருக்கும்
குடும்பப் பெண்களின்
படத்தைப் போட்டு விளம்பரம் செய்யும்
செய்யும் இந்த வங்கிகள், வாராக்கடன் நிலையில்
பாக்கி வைத்திருக்கும் பெரிய பெரிய தொழில்
அதிபர்கள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகளின்
பெயர்களை வெளியிட மாட்டோம் என்று
பத்திரமாகப் போற்றிப் பாதுகாப்பதன்
காரணம் என்ன – யோசித்தீர்களா ?
படிப்பவர்கள் அனைவரும் யோசிக்க வேண்டும்,
சூழ்நிலை மாற வேண்டும்
என்பதற்காகத் தான் இதை எல்லாம் எழுதுகிறேன்.
மற்றபடி, தனிப்பட்ட முறையில் எனக்கு
யார் மீதும் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை.
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
அன்பின் கா.மை.
உங்கள் கேள்வி:
//நாம் எழுதும் இது போன்ற பதிவுகளையும்,
பின்னூட்டங்களையும் படிக்கும்போது – சம்பந்தப்பட்டவர்களுக்கு
எப்படி இருக்கும் ? //
என் கருத்து:
இது போன்ற பதிவுகளையும்,
பின்னூட்டங்களையும் சம்பந்தப்பட்டவர்கள் எங்கே படிக்கிறார்கள்?
அப்படியே படித்தாலும் அதை உதாசீனப்படுத்துவது முதல் நிலை
அந்த பதிவுகள் பலரால் படிக்கப்படுகின்றன என அறியவரும்போது பதிவாளர்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பது,பிறகு அவர்களை “கவனித்துக்கொள்வது” இரண்டாம் நிலை.
இந்த இரண்டாம் நிலையில் சில இடை நிலைகள்.
2.1 செல்லமாக மிரட்டுவது
2.1.1 போலீசார் மூலம்
2.1.2 அடியாட்கள் மூலம்
2.2 வாங்கப்பார்ப்பது
2.2.1 பணம் கொடுத்து
2.2.2 சில உதவிகள் செய்து
2.3 தட்டுவது
2.3.1 செல்லமாக ..கால்,கை,
2.3.2 ஓங்கி …முதுகு
2.3.3 ஒரேயடியாக ..தலை,மார்பு
மேற்கண்ட செயல்களை கண்டு இந்திய குடிமகன்கள் செய்வது என்ன?
2.1 நிகழும்போது …..உதாசீனம் செய்வது
2.2 நிகழும்போது ….. பதிவாளர்களை விமரிசனம் செய்வது
2.3.1 நிகழும்போது …..இதைப்பற்றி e-mail லில் செய்தி பரிமாற்றம் செய்வது
2.3.2 நிகழும்போது …..இதைப்பற்றிe-mail,facebook twitter இவைகளில் செய்தி பரிமாற்றம் செய்வது
2.3.3 நிகழும்போது …..இதைப்பற்றி e-mail,facebook twitter இவைகளில் செய்தி பரிமாற்றம் செய்வது,ஒரு ஞாயிறு மாலை ஐந்துமணிக்கு காந்தி சிலைக்கு பின் கூடி மெழுகுவர்த்தி ஏற்றுதல்.பெசன்ட் நகர் பீச் ஓரம் மனித சங்கிலி அமைப்பது.
இதற்கெல்லாம் பிறகு அடுத்து வரும் தேர்தலில்…
ஓட்டுப்போட போகாமல் இருப்பது
அல்லது
மேற்கண்ட அனைத்திற்கும் காரணமான அதே கட்சிக்கு வாக்களிப்பது.
சுபம்.
விஞ்ஞானி அவர்களுக்கு காவிரி மைந்தன் அளித்த பதில் மிக ஏற்புடையது. விஞ்ஞானி அவர்கள் சுய விமரிசனம் செய்து கொள்ளவேண்டும்.
கண்பத்,
உங்கள் புதிய புத்தகத்தின் இண்டெக்ஸ் அருமை. நூலைப் படிக்கத் தூண்டுகிறது. விரைவில் முழுப்பதிப்பையும் எதிர்பார்க்கிறேன் 🙂
இதில் கிளைமாக்ஸாக மெழுகுவர்த்தி ஏற்றுதலைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மிக அருமை. ஞாயிறு மாலை அனைவருமே ஃபிரியாகத் தான் இருப்பர். அதனால் மெழுகுவர்த்தி ஏந்துதல் பெரிய விஷயமில்லை. 🙂
ஒரு இளைஞன் கவலை தோய்ந்த முகத்தோடு,ஆள் நடமாட்டமற்ற சாலையில் இரவு வேளையில் நடந்து சென்றுகொண்டிருக்கிறான்.
அப்பொழுது
“இளைஞனே என்னைப் பார்”
என ஒரு குரல் கேட்டு சுற்றும் முற்றும் பார்க்க,
அங்கு ஒரு புதரின் ஊடே அறுபது வயதை கடந்த குரூபியான ஒரு முதியவள் தென்படுகிறாள்.
அருகே சென்ற இளைஞனைப்பார்த்து அவள் மேலும் சொல்கிறாள்..
“நீ ஏதோ ஒரு கவலையுடன் இருப்பது போலத்தெரிகிறது.நான் ஒரு சூனியக்காரி; மந்திரவாதி! உன் கஷ்டம் என்ன என என்னிடம் சொன்னால் அதை தீர்த்து வைக்கப்பார்க்கிறேன்” ,
அந்த இளைஞனும்
” எனக்கு வயது முப்பது ஆகப்போகிறது இன்னும் ஒரு வேலை கிடைக்கவில்லை.மேலும் என் அம்மா ஒரு தீராத சீக்காளி மருந்து செலவு வேறு மென்னியை பிடிக்கிறது எனப்பரிதாபமாக சொல்ல,
“ப்பூ இவ்வளவுதானா,நாளையே உனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும்படி செய்கிறேன்.மேலும் உனக்கு ஒரு மருந்தும் தருகிறேன் அதை உன் அன்னைக்கு கொடுத்தால் அவள் நோய்கள முற்றிலும் தீர்ந்து சுகப்படுவாள்”
என அவள் சொல்ல
“மிகவும் நன்றி” என்று அங்கிருந்து செல்ல யத்தனித்த அவனைப்பார்த்து,
அவள் மேலும் சொல்வாள்,
“இத்தனை நல்லது செய்யப்போகும் எனக்கு பிரதிபலனாக நீ ஒன்றும் செய்ய மாட்டாயா?”
அவனும் “சொல்லுங்கள்! என்னால் முடிந்தது எதுவும் செய்கிறேன்” என்கிறான்.
“என் குரூப ரூபத்தின் காரணமாக நான் ஒரு ஆணுடன் சுகித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன நீ அதற்கு உதவினால் போதும்” என சொல்ல,முதலில் திடுக்கிட்ட அவன், மனதை தேற்றிக்கொண்டு இவ்வளவு நல்லது நமக்கு நடக்கப்போகும் போது நாம் இதை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என அதற்கு இசைகிறான்.
இருவரும் அருகில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஒதுங்க, சற்று நேரத்திற்குப்பிறகு அந்தபெண்மணி திருப்தியும் மந்தஹாசமும் ததும்பும் முகத்துடன் அங்கிருந்து செல்லத்தொடங்குகிறாள்.
பின்னாலேயே வரும் அந்த இளைஞன்,
“இருங்கள்! நாளை எனக்கு வேலை கிடைத்து விடும் அல்லவா?” என வினவ,
அவள் கேட்கிறாள்…
“உன் வயது என்ன என்று சொன்னாய், இளைஞனே?”
“முப்பது!”
“முப்பது வயது ஆகியும் இன்னும் நீ சூனியக்காரி மந்திரவாதி இவற்றையெல்லாம் நம்புகிறாயா என்ன?
எனக்கு அதிசயமாக உள்ளது!”
என ஒரு குறும்பு சிரிப்புடன் சொல்லி விட்டு அங்கிருந்து செல்கிறாள்.
=====================================================
சுதந்திரம் கிடைத்து ஆண்டுகள் 65 ஆகி,நம்மை ஆண்ட, ,ஆளுகின்ற,அரசுகளின்,அமைச்சர்களின் ,அதிகாரிகளின்
நேர்மையை,திறமையை, லட்சணத்தைப்பார்த்து விட்டு கூட
அரசு நிறுவனங்கள் விதிப்படி ஒழுங்காக இயங்குகின்றன என சொல்பவர்களைப்பார்த்து எனக்கும் அதிசயமாகத்தான் இருக்கிறது.
Sorry vignaani,my faith on the inefficiencies,corrupt nature and callousness of the rulers outweigh the faith on the honesty,efficiency and hardwork of the ruled viz the NATIONALISED BANKS
அன்பு கவேரிமைந்தா சரியாய் சொன்னீர்கள். தேசியமயமாக்கபட்ட வங்கிகள் படிக்கும் மாணவர்களுக்கு மேல்படிப்புக்கு பணம் கொடுப்பதில்லை, சண்டையிட்டு கேட்டல் எதையாவது அடமானம் வைக்க சொல்லுகிறார்கள். இவர்களுக்கு காகிதம் இன்றி தொலைபேசியில் தொடர்பு கொண்டாலே உடனடியாக கிரெடிட் லிமிட் கோடிக்கணக்கில் கொடுத்து விட்டு அந்த வங்கியின் வட்டரார மேலாளரில் இருந்து, மேலாளர் வரையில் இரவு மல்லையா சொல்லும் இடத்தில கூடி குடி பாட்டிலுடன், கூட பெண்கள் வேறு சேர்ந்து கொள்ளுகிறார்கள். இது ஒரு பக்கம், இன்று இளைய சமுதாயம் நல்ல படிப்பு படித்து விட்டு திடீர் பணக்காரர்கள் அக வேண்டும் என்று கொலை, கொள்ளை, ஆள் கடத்துதல் போன்றவற்றில் இறங்கி விடுகிறார்கள். காரணம் இந்த பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் சம்பலதைபார்த்து, ஏன் எனில் சமுக சேவை என்று கூறிக்கொண்டு நாட்டு மக்களுக்கு, ஓடளிதவர்க்களுக்கு ஒரு உதாரணம் நாமே அறிந்தது வேலை வெட்டி கிடையாது நம்முடன் டி கடையில் டி குடித்துவிட்டு சுற்றிக்கொண்டு எதோ ஒரு கட்சியில் இருந்து கொண்டு, காவல் நிலையம், மற்றும பொது இடங்களில் கட்ட பஞ்சயத்து செய்து கொண்டு காலம் ஓட்டுபவர் ஒரு சின்ன சந்தர்பம் கட்சி கொடுத்து அவர் ஒரு மாநகராட்சி உறுப்பினர் ஆகிவிட்டால், ஆறே மதத்தில் டாட்டா சுமோவில் வலம் வருகிறார் எப்படி?. வங்கியில் வேலை செய்வரோ, அல்லது நல்ல சம்பளத்தில் வேலை செய்வரோ கூட யோசிக்கிறார்கள். ஜனநாயக ஆட்சி என்று இன்று நாடு முழுவதும் அரச ஆட்சி ஒழிக்கப்பட்டு விட்டது என்று கூறிக்கொண்டு குடும்ப ஆட்சி (அரச ஆட்சி) தான் நடந்து கொண்டுள்ளது. இன்னும் நமது காலத்திற்கு பிறகு நம் நாடு எப்படி இருக்கும் என்று நினைத்தாள் கூட பயமாக இருக்கிறது. அரசாங்க உத்தியோகம் பார்பவர்கள் 59-60 வயதில் ஓய்வு பெற்று வீடிற்கு சென்று விட வேண்டுமாம், காரணம் அந்த வயதுக்கு மேல் மூளை அதிக அளவில் வேலை செய்யாதாம். ஓய்வூதியம் கொடுத்து விடுகிறார்கள். அனால் ஒரு MP, MLA, MC, Minister, Governor,
PA to PM முன்னால் மதிய வங்கி ஆளுநர் இவர்களுக்கெல்லாம் வயது ஆகவில்லையா? சர்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே முதல்வராகவும், ஆளுநராகவும், பாராளுமன்றத்திலும் உள்ளார்களே அவர்கள் எல்லாம் நல்ல மூளையுடன் செயல்படுவார்கள? கேட்டால் INDIAN CONSTITUTION என்று கூறி பொது மக்களின் வாயை அடைத்து விடுகிறார்கள். சட்டத்திற்கு purambagaவும், யார் மனதை புண்படுத்தவும் இதை எழுதவில்லை, சொல்கிறேன், மக்கள் சிந்திக்க.
நீங்கள் ஒருவர் விஜய் மல்லையா கூத்தடிக்க இந்திய பாரத வங்கி கொடுத்த கணக்கையும் மற்ற மூன்று வங்கிகளின் அராஜக போக்கையும் கண்டித்து எழுதி உள்ளீர்கள், ரொம்ப சந்தோசம். ஒரு பக்கம் மிசாரம் கிடையாது, உற்பத்தி செய்ய மின்சாரம் கிடையாது ஆனால் ஒரு அணு மின் நிலையம் கூடங்குளத்தில் அமைக்க யாரோ ஒருவர் மக்கள் சேர்த்து கொண்டு சிறு அளவில் ஒரு நாடகம் நடத்திக்கொண்டு உள்ளார். மதிய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்து கொண்டு கூட்டம் கூட்டமாக அணு விஞ்ஞானிகளை அனுப்பி கொண்டுள்ளது. இது எப்படி இருக்கிறது என்றால், கல்யாணமே ஆகவில்லை பிள்ளை பெயர் முனுசாமி என்பது போல் உள்ளது. வேலை கிடையாது, மக்கள் தொகை பெருக்க, சாலைகள் அதே அளவில் உள்ளது (எவ்வளவு மேம்பாலம் கட்டியும்) வாகன நிரிசலை குறைக்க முடியவில்லை, இப்போது பறக்கும், பாதாள ரயில் வேலை நடந்து கொண்டுள்ளது. விவசாய நிலங்கள் எல்லாம் பலமாடி கட்டிடங்களாக மாறி வருகிறது. விவசாயத்திற்கு என்ன செய்யப்போகிறோம். என்ன வளம் இல்லைஇந்த திருநாட்டில், ஏன் கையை எந்த வேண்டும் அயல் நாட்டில், ஒழுங்காய் பாடுபடு வயக்காட்டில் என்று பாட்டு எழுதியவரும், நடித்தவரும் இன்று என்ன நினைப்பார்களோ? தெரியாது. நாமலும் ஒட்டு போட்டு கொண்டு தான் இருக்கிறோம். நாம் எங்கே பொய் கொண்டு உள்ளோம் என்று நமக்கே தெரியாது. தினசரி அந்த வங்கி துப்பாக்கி முனையில் கொள்ளை, இந்த வங்கி, இந்த நகை கடை என்று எல்லாம் வருவது ஏன்? யோசியுங்கள், யோசியுங்கள், யோசித்துக்கொண்டே இருங்கள். பதில் கண்டிப்பாக கிடைக்காது நமது மரணம் thazhuvum வரையில்.
—
yes you are true