“அரபு வசந்தம்”
-இங்கும் வர வேண்டுமா ?
(இ.யா.ப.3 )
உலகப் பணக்காரர்களின் வரிசையில் இருக்கும்
இந்திய முதலாளிகளுக்கும், அவர்களின்
ஒட்டிப் பிறவாத இரட்டைச் சகோதரர்களாக
உலவி வரும் அரசியல்வாதிகளுக்கும் –
கீதோபதேசத்தை
நினைவிலிருத்தி சில வார்த்தைகள் –
“எதை நீ கொண்டு வந்தாய் – இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதையும் நீ உருவாக்கவில்லை.
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ –
அது பிறரிடமிருந்து பறிக்கப்பட்டது.
நேற்று வேறொருவருடையதாக இருந்தது.
நாளை மற்றோருவருடையதாகப் போகிறது.
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
“ஊருணி நீர் நிறைந்தற்றே உலகுஅவாம்
பேரறிவாளன் திரு ” என்றார் வள்ளுவர்.
– அறிவும் கருணையும் நிறைந்த
ஒரு மனிதரிடம் சேரும் செல்வம் –
ஊருக்குப் பொதுவாக இருக்கும்
குடிநீர்க் குளத்தில் சேரும் தண்ணீரைப்போல் –
அனைவருக்கும்
உதவியாக இருக்கும் என்றார்.
நீங்கள் அத்தகைய பெரிய மனிதர்களாக,
பேரறிவாளராக – இருக்க
விரும்பவில்லையா ?
நீங்கள் இறுதியில் இந்த உலகை விட்டு
விடை பெற்றுப் போகும்போது உங்கள்
மனைவியோ,
பிள்ளைகளோ,
நண்பர்களோ, உறவினர்களோ –
யாரும் உங்களுடன் கூட வரப்போவதில்லை.
நீங்கள் என்ன கொடுத்தாலும்,
எப்படி வருந்தி அழைத்தாலும் – யாரும்
கூட வரத்தயாராக இருக்க மாட்டார்கள்.
அப்படி இருக்கையில், யாருக்காக இத்தனை
செல்வங்களையும் சேர்க்கிறீர்கள் ? நீங்கள் சேர்க்கும்
பணத்தில் சல்லிக்காசையாவது உங்களுடன் எடுத்துப்
போக முடியுமா ?
நீங்கள் வசதியாக வாழத் தேவையான அளவு
செல்வத்தை வைத்துக்கொண்டு மற்றதை பிறர்க்காக
செலவழியுங்களேன். மனதில் மகிழ்ச்சியும்,
நிம்மதியும் கூடவே வரும் !
உலகின் பல பகுதிகளிலும்
(நம் நாட்டிலும் கூடத்தான் )-
நல்ல மனம் உடைய மிகச்சில செல்வந்தர்கள்
ஏற்கெனவே இத்தகைய கொடைச்செயல்களில்
ஈடுபட்டுக்கொண்டு தான்
இருக்கிறார்கள்.அவர்களை யாரும் வற்புறுத்தவில்லை.
தாமே மனமுவந்து செய்கிறார்கள்.
மனசாட்சிப்படி செய்கிறார்கள்.
அமெரிக்காவின் பில்கேட்சும், வாரன் பஃபெட்டும்
அருமையான ஒரு இயக்கத்தை துவங்கி இருக்கிறார்கள்.
“உலகப் பணக்காரர்களே – உங்கள் செல்வத்தின்
பாதியை தர்ம காரியங்களுக்காக செலவழியுங்கள்”-என்று.
இந்தியாவின் முன்னணிப் பணக்காரர்கள் தங்கள்
செல்வத்தில் பாதியை அறக்கட்டளைகளுக்கு கொடுத்தால்
எவ்வளவு தேறும் ?
யாரோ ஒரு புண்ணியவான் வேலை மெனக்கெட்டு
தயாரித்த புள்ளி விவரங்கள் –
150 பில்லியன் அமெரிக்க டாலர் – அதாவது,
6,75,000 கோடி ரூபாய் ( ஆறு லட்சத்து,
எழுபத்தி ஐயாயிரம் கோடி )
அதை வைத்துக் கொண்டு என்னென்ன செய்யலாம் ?
1)தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான
(NREGA) செலவை 17 வருடங்களுக்கு இதிலிருந்து
பார்த்துக் கொள்ளலாம்.
2) துவக்கப்பள்ளிகளில் படிக்கும் 20 கோடி
இந்தியக்குழந்தைகள் ஒவ்வொருவர் பெயரிலும்
ரூ.33,750/- முதலீடு செய்யலாம்.
3) இந்திய அரசு ஒரு வருடத்திற்கு வாங்கும்
கடனை (ரூ.4.57 லட்சம் கோடி )
சரி செய்து விட்டு மிச்சமும் பார்க்கலாம்
4)இந்தியாவின் பாதுகாப்புக்கான பட்ஜெட்டை
4 வருடங்களுக்கு ஈடு செய்வதோடு,
நம் நாட்டிற்காக
127 போர் விமானங்களையும்,
7 நீர்மூழ்கிக் கப்பல்களையும் (சப்மரீன்)
வாங்கலாம்.
5)இந்திய நகரங்கள் 33-ல் மெட்ரோ ரெயில்
சேவையை துவங்கலாம்.
6) நம் நாட்டிற்கான மொத்த பெட்ரோல்
தேவையையும் இரண்டு வருடங்களுக்கு சமாளிக்கலாம்.
7) சுரேஷ் கல்மாடி நடத்திய “காமன்வெல்த்
விளையாட்டு போட்டி” களைப் போல்
30 போட்டிகளை நடத்தலாம் !
இவை எல்லாம் சும்மா ஒரு குத்து மதிப்பாக
புரிந்து கொள்ளத்தான் -இவை எதுவுமே வேண்டாம்.
ஆனால் –
தரமான இலவசக் கல்வியை அளிக்கும்
பள்ளிக்கூடங்கள் நாடு முழுவதும்
மிகுந்த எண்ணிக்கையில்
உருவாக்கப்பட வேண்டும்.
ஏழைச்சிறுவர், சிறுமிகள் தங்கி, உண்டு,
படிக்க -தரமான இலவச தங்கும் விடுதிகள் பல
-தேவைப்படும் இடங்களில் எல்லாம்
கட்டப்பட வேண்டும்.
நல்ல மருத்துவ உதவியை அளிக்கக்கூடிய
இலவச மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு
ஏழை நோயாளிகளை
நன்கு பராமரிக்க வேண்டும்.
ஆதரவற்ற முதியோர்களையும், பெண்களையும்,
குழந்தைகளையும் பாதுகாக்க ஆதரவற்றோர்
இல்லங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
தெருவில் அலைந்து கொண்டிருக்கும்
மனநோயாளிகளை
தங்கவைத்து தக்க சிகிச்சை அளிக்க தகுந்த
மனநோயாளிகள் இல்லங்கள் மாவட்டம்தோறும்
உருவாக்கப்பட வேண்டும்.
தொழில் பயிற்சி அளிக்கக்கூடிய தொழில்கூடங்களை
உருவாக்கி, வேலையற்ற, உழைக்கும் தகுதியுள்ள
நபர்களுக்கு பயிற்சி அளித்து அவர்க்ளுக்கான
வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
இவை அனைத்தும் இந்த சமுதாயத்தின்
கூட்டுப்பொறுப்பு.
யாரிடம் அதிகப் பணம் இருக்கிறதோ –
யாரிடம் செல்வம் குவிந்திருக்கிறதோ -அவர்கள்
தாமாகவே இத்தகைய சமுதாயக் கடமைகளை
நிறைவேற்ற முன் வர வேண்டும்.
வருவீர்களா ?
இல்லையேல், வரும் இங்கும்-
“அரபு வசந்தம்”
இங்கும் வரும் –
மாற்றம் காண –
‘புரட்சி மட்டுமே தீர்வு’ என்கிற
முழக்கம்.
எதிர் கொள்ளத் தயாரா ?







வாவ் சூப்பர்….
அன்புள்ள காவிரிமைந்தன் அவர்கட்கு,
நீங்கள் மறுமொழிகளை அப்படியே அனுமதிப்பதால்,
சிலர் விரும்பத்தகாத சுட்டிகளை
மறுமொழியில் கொடுத்து திசை திருப்புகிறார்களே –
நீங்கள் கவனிக்கவில்லையா ?
பொதுவாக –
அண்மைக் காலமாக சில நண்பர்கள்
தேவை இல்லாமல் சில லிங்க் களையும்(links)
ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்களை
உள்ளடக்கிய சில தளங்களுக்கான சுட்டிகளையும்
மறுமொழியில் இணைக்கிறார்கள்.
நான் இவற்றை வரவேற்கவில்லை.
எனவே அத்தகைய தொடர்புகள் இனி இங்கு
மறுமொழியில் இடம் பெறாது.
இந்த வலைத்தளத்தில் வெளியிடப்படும்
இடுகைகளில் கூறப்பட்டுள்ள
விஷயங்களைப் பற்றி தங்கள் கருத்துக்களை
யாரும் தாராளமாக மறுமொழியில் கூறலாம்.
மற்ற தளங்களுக்கு இட்டுச்செல்லக்கூடிய
சுட்டிகளை யாரும் இணைக்க வேண்டாம்
என்று கேட்டுக்கொள்கிறேன்.
வழக்கம் போல் –
நாகரீகமான கருத்துப் பறிமாற்றங்கள்
எப்போதுமே வரவேற்கப்படுகின்றன.
ஒத்துழைப்பை வேண்டுகிறேன்.
– வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்