கூடன்குளம் –
தீவிரம் குறைந்ததன் பின்னணி ….
கூடன்குளம் போராட்டம் பற்றி, இந்த தளத்தில்
எழுதிய இடுகைக்கு மக்களிடையே பரவலான
ஆதரவு இருந்தாலும்,
அந்த போராட்டத்தில் நேரடியாகவும்,
மறைமுகமாகவும் ஈடுபட்டிருந்த சிலர் மட்டும்
தங்கள் மறுமொழிகளின் மூலம் அதற்கு
கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.
நண்பர் “இந்தியன்” இருதயம் பெருமுயற்சி
எடுத்துக்கொண்டு என் இடுகைக்கு ஆதரவாக
பல புள்ளிவிவரங்களைத் தேடித் தந்தார்.
இருந்தாலும் கட்டுரையின் தலைப்பின்படியே –
வாதம் பிடிவாதமாகி, பின்னர் அதுவே
விதண்டாவாதமாகப் போக ஆரம்பித்ததால்
விவாதத்தை முடிவுக்கு
கொண்டு வர வேண்டியதாகி விட்டது.
இன்று கிடைத்துள்ள சில செய்திகள் எனக்கு
மீண்டும் நம்பிக்கை கொடுப்பதால் -இந்த
இடுகையை எழுதுகிறேன்.
இதற்கு மறுமொழி இட விரும்புபவர்களும்,
மறுப்பு தெரிவிக்க விரும்புபவர்களும் –
தயவுசெய்து, விவாதத்தின் தரம் குறையாமல்
பார்த்துக்கொள்ளுமாறு
வேண்டுகிறேன்.
இனி இன்றைய தலைப்பிற்கு வருவோம் –
என் இடுகையில் இரண்டு முக்கியமான
விஷயங்களை கூறி இருந்தேன்.
கட்டுரையிலிருந்து –
———————————-
மக்களின் அச்சம் இரு வகைப்பட்டது.
ஒன்று – கதிர் வீச்சால் தங்கள் ஆரோக்கியம்,
உடல் நலம் – பாதிக்கப்படுமோ என்பது.
இரண்டாவது – அவர்கள் வாழ்வாதாரங்கள்
பாதிக்கப்படுவது.
1) அங்கு வசிக்கும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள
அச்சங்களை போக்க அனைத்து பாதுகாப்பு
நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொண்டு
அந்த விவரங்களை மக்களுக்கு விளக்கிக் கூறி
அவர்களது அச்சத்தை போக்குங்கள்
என்று சொன்னால் அது நியாயம்.
2) அங்கு மீன் வளம் குறையுமோ, வாழ்வாதாரம்
பறி போய் விடுமோ என்று பயப்படும் மக்களுக்கு
ஆதரவாகப் பேசி,
அரசாங்கத்துடன் போராடி, அந்த மக்களுக்கு
மேலும் சலுகைகளையும், இழப்பீட்டுத்
தொகைகளையும்,மாற்று வேலை வாய்ப்புகளையும்
பெற்றுத் தந்தால் அது நியாயம்.
——————————–
இப்போது -காலம் தாழ்ந்தாவது –
நான் எழுதி இருந்த மேற்கண்ட
இரு நடவடிக்கைகளையும்
மத்திய அரசு மேற்கொள்ளத் துவங்கி இருப்பதாக
தகவல்கள் கிடைத்துள்ளன.
1) போராட்டக் குழுவினருக்கு ஆதரவாக,
கத்தோலிக்க பிஷப்கள் மற்றும் பாதிரியார்கள்
சிலர் செயல்படுகிறார்கள் என்கிற செய்தியை ஒட்டி,
மும்பையில் உள்ள – அகில இந்திய கத்தோலிக்க
பிஷப்கள் கூட்டமைப்பின் தலைவர் கார்டினல்
ஆஸ்வேல்டு கிரேசியஸ் என்பவர், டில்லியில்
உள்ள பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்திற்கு
வரவழைக்கப்பட்டு இருவரும் ரகசியமாக
உரையாடி இருக்கிறார்கள். கூடன்குளம் அணுமின்
நிலையத்தினால் ஏற்படக்கூடிய நன்மைகள்
பற்றி பிரதமர் அவரிடம் விளக்கமாகப் பேசி
இருக்கிறார். அவரும் இது விஷயத்தில்
ஒத்துழைப்பதாகக் உறுதி அளித்திருக்கிறார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதியும்,
அணு விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம்
அவர்களின் தலைமையில் ஒரு குழு
அமைக்கப்பட்டு அது அணுமின் உலைகளின்
பாதுகாப்பு அம்சங்களை விவரமாக ஆராய்ந்து
பொது மக்களுக்கு அது பற்றி விளக்கும் என்றும்
பிரதமர் கூறி இருக்கிறார்.
இந்த செய்தியை டாக்டர் அப்துல் கலாம்
அவர்களும் இன்று உறுதி செய்திருக்கிறார்.
2) கூடன்குளத்தில் வாழ்வாதாரங்களை இழந்து
விடுவோமோ என்று அச்சப்படும் மீனவர்களுக்கு –
அவர்கள் அச்சத்தைப் போக்கும் வகையில் –
பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றவும்
மத்திய அரசு முன் வரப்போவதாகத் தெரிகிறது.
கூடன்குளத்தில் ஒரு தனி மீன்பிடி துறைமுகம்,
மீன்பிடி படகுகளை நிறுத்தி வைக்க
வசதியாக நவீன கூடம்,
மீன்களை பாதுகாக்க குளிர் சாதன வசதிகளைக்
கொண்ட கூடம் ஒன்று,
மீனவர்களின் பிள்ளைகள் படிக்க – லேபரேட்டரி
வசதிகளுடன் கூடிய தரமான பள்ளிக்கூடம்,
சகல வசதிகளுடன் கூடிய இலவச
மருத்துவமனை,
அங்குள்ள மக்கள் அனைவருக்கும் இலவசமாக
இன்சூரன்ஸ் பாதுகாப்பு திட்டம்,
அங்குள்ள மக்களுக்கு நல்ல உள்கட்டமைப்பு வசதிகள்,
மார்க்கெட்,தெருவிளக்கு, சாலை வசதிகள்.
இந்த நடவடிக்கைகள் கூடன்குளம் மக்களின்
அச்சத்தைப் போக்க உதவும் என்று
மத்திய அரசு நினைக்கிறது.
உண்மையில் பிராக்டிகலாக – நடைமுறையில்
அரசு செய்யக் கூடியது எதுவோ –
அதற்காகத் தான் தலைவர்கள் போராட
வேண்டும் என்று தான் நானும் எழுதி இருந்தேன்.
கூடன்குளத்து போராட்டத்திற்கு அதன்
சுற்று வட்டாரத்தில் பலத்த ஆதரவு இருந்தாலும்,
தமிழ் நாட்டில் பொதுவாக அதற்கு ஆதரவு இல்லை
என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள
வேண்டும். 15,000 கோடி ரூபாய் முதலீடு
செய்து ஒரு மின் உலையை உருவாக்கி விட்டு,
அதற்கு சமாதி கட்டச்சொன்னால் – அதை
நடைமுறையில் ஜீரணிப்பது கடினம் தான்.
முக்கியமாக – கல்பாக்கம் அணு மின் உலைக்கு
அருகிலேயே ஒரு கோடி மக்களைக் கொண்ட
சென்னை நகரம் 45 ஆண்டுகளாக
எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கும்போது,
சென்னை மக்கள்
எப்படி இந்த வாதத்தை ஏற்றுக்கொள்வார்கள் ?
போராட்டக் குழுவால் இன்று சில முடிவுகள்
அறிவிக்கப்பட்டு உள்ளன –
1)இன்றுடன் தற்போதைய போராட்டங்கள்
அனைத்தையும் விலக்கிக் கொள்வது.
2)நாளை உள்ளாட்சித் தேர்தல்களை முன்னிட்டு
எந்த வித போராட்டமும் இல்லை.
3)நாளை மறுநாள் 18ந்தேதி முதல்,
இடிந்தகரையில் – தினம் ஒரு குழுவாக –
தொடர் உண்ணாவிரதம்.
இதில் அவர்கள்-
சொல்லாமலே சொல்லி இருக்கும்
சில முடிவுகள் –
1)அணு உலை முன்பாக இப்போது நடக்கும்
முற்றுகை போராட்டம் முற்றிலுமாக
கைவிடப்படுகிறது.
2)சாலைகளில் ஏற்படுத்தப்பட்ட தடைகள்
விலக்கிக் கொள்ளப்படுகின்றன.
3)ஒரே குழுவினரால் காலவரை அற்ற
உண்ணாவிரதம் என்கிற முறை
கைவிடப்படுகிறது.(அதற்கு பதிலாக
தீவிரம் குறைந்த தினம் ஒரு குழு
உண்ணாவிரதம் என்கிற புதிய முறை )
அவர்கள் வெளிப்படையாகச் சொல்ல
மறுத்தாலும் – போராட்டத்தின் தீவிரம்
குறைத்துக் கொள்ளப்படுகிறது என்பது வெளிப்பாடு.
அநேகமாக, பிரதமர் மன்மோகன் சிங்,
அகில இந்திய கத்தோலிக்க
பிஷப்கள் கூட்டமைப்பின் தலைவர் கார்டினல்
ஆஸ்வேல்டு கிரேசியஸ் -உடன் நடத்திய
பேச்சுவார்த்தைகளின் விளைவாக இது
இருக்கலாம்.
எப்படி இருந்தாலும் – போராட்டக் குழுவினர்
இப்போதாவது தரை நிலையை (ground
realities ) புரிந்து கொண்டால் சரி.



அப்படியானால்,
ரிமோட் கண்ட்ரோல் மும்பையில்
தான் இருக்கிறதோ ?
எவர் சொன்னாலும் போராட்டக்குழு
தலைவர் எஸ்.பி.உதயகுமார்
பின் வாங்க மாட்டார்.
அவரது தலைமையும் வேறு
திட்டங்களும் வேறு.
இதெல்லாம் மக்களைப் பயமுறுத்தி ஆடுகளைத் திசை மாற்றும் முறை. முன்பு 5 மே 2002 அன்று ஒன்பது கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வருகின்றன, அழிவு நிச்சயம் என்று சொல்லியே பல ஆடுகளை வழிமாற்றி அழைத்துச் சென்றனர். இன்று அணுஉலையைக் காரணம் காட்டி ஆடுகளை வழிமாற்றி அழைத்துச் செல்கின்றனர்.
அன்பன்
தமராக்கியான்
மத்திய அரசு தானாகவே முன்வந்து,
முன்பாகவே இதனைச் செய்திருந்தால் –
பிரச்சினை இவ்வளவு வளர்ந்திருக்காது.
எல்லாவற்றிலும் தூக்கம். விஷயம்
முற்றிப் போன பிறகு தான் விழித்துக்
கொள்கிறார்கள்
thanda kulam