பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !!
நானும் படிப்பு முடிந்து, பணியில் சேர்ந்து,
நினைவு தெரிந்து, 40 ஆண்டுக்காலம் -இந்தியாவின்
பல்வேறு பகுதிகளில்,
ஆயிரக்கணக்கான மனிதர்களிடம் பழகி விட்டேன்.
எத்தனை எத்தனை குணச்சித்திரங்கள் (கேரக்டர்கள் ) !
எவ்வளவு ஆயிரம் மனிதர்களிடம் பழகினாலும்
எவ்வளவு அனுபவம் பெற்றிருந்தாலும் –
இப்போது கூட சில சமயம், சிலரை,
சரியாக எடை போடமுடிவதில்லை.
மிக நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்று
நினைக்கும் மனிதர்கள் கூட சில சமயம் முற்றிலும்
எதிர்பாராதபடி நடந்து கொள்கிறார்கள்.
மனிதர்களைப் படிப்பது எனக்கு மிகவும்
பிடித்தமான ஒரு பழக்கம். புதிய மனிதர்களிடம்
பழகுவதில், அவர்களைப் புரிந்து கொள்வதில் –
இன்னும் அதிக விருப்பம் உடையவனாக இருப்பேன்.
பழகியவர்களையே சரியாகப் புரிந்து கொள்ள
முடியாத நிலையில் – பொதுவாக சமூகத்தைப் பற்றி
நாம் எடை போடுவது எந்த அளவிற்கு சரியாக
இருக்கும் ?
நான் இந்த வலைப்பக்கத்தில் எழுதுவது –
பெரும்பாலும், சமூக நலம் தொடர்புடையதாகவே
இருக்கும்.
என் இடுகைகளைப் படிக்கும், நிறைய நண்பர்கள்
நான் எழுதுவது அவர்கள் கொண்டிருக்கும்
கருத்துக்களையே பிரதிபலிப்பதாக எழுதுகிறார்கள்.
அவர்கள் நினைப்பதையே நான் எழுத்தில் கொடுத்து
இருப்பதாக பல நண்பர்கள் எழுதி இருக்கிறார்கள்.
நான் உணர்ந்த சில விஷயங்களைப் பற்றி –
என் உள்ளத்தில் எழுந்த சில கருத்துக்களை,
நான் எழுத நினைத்ததை,
100க்கு 100 அப்படியே எழுதி இருக்கிறார்
ஒரு நண்பர். இந்த வார விகடனில் “வட்டியும் முதலும்”
என்கிற தலைப்பில் நண்பர் ராஜூ முருகன்
எழுதியதிலிருந்து ஒரு பகுதி –
“இந்திய மக்களை படிப்பது அதி பயங்கரமான
அனுபவங்களைத் தருகிறது.
ஒரு பக்கம் ப்ளாட்பாமில் குடும்பம் நடத்தி,
பிள்ளை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் –
இன்னொரு பக்கம் எக்ஸ்பிரஸ் அவெனியூவில்
பக்கெட் சிக்கன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஓட்டுக்கு காசு வாங்குகிறார்கள்.
இலவசத்துக்கு முட்டி மோதுகிறார்கள்.
ஈழப் பிரச்சினை உச்சத்தில் இருக்கும்போது –
வைகோவைத் தோற்கடிக்கிறார்கள்.
வடிவேலுவிலிருந்து, குண்டு ஆர்த்தி வரை
யார் வந்தாலும் கூட்டம் காட்டுகிறார்கள்.
கருத்து கணிப்புகளை, அடித்து நொறுக்கி –
வாக்குகளை மாத்தி குத்துகிறார்கள்.
அன்பே சிவத்தையும், ஆரண்ய காண்டத்தையும்
காலி பண்ணுகிறார்கள்- திருப்பாச்சியை
“ஹிட்”டாக்குகிறார்கள்.
அதே டெம்போவில்”திருப்பதி” எடுத்தால் –
மொட்டை அடிக்கிறார்கள்.
ஈழப்பிரச்சினைக்கு உச்சு கொட்டிக்கொண்டே
ஐ.பி.எல். பார்க்கிறார்கள்.
அண்ணா ஹஜாரே போராட்டத்திற்கு
மெழுகுவத்தி ஏற்றி விட்டு –
ஆர்டி ஓ ஆபீசில் லஞ்சம் கொடுக்கிறார்கள்.
தன் குழந்தையை ப்ரீகேஜியில் சேர்க்க
ஒரு லட்சம் டொனேஷன் கொடுக்கிறார்கள்.
உணவகங்களில் மேஜை துடைக்கும்
சிறார்களை திட்டி மிரட்டுகிறார்கள்.
மதுக்கடைகளிலும் கூட்டம் –
தியான மையங்களிலும் கூட்டம் –
நகைக்கடைகள் எங்கும் கூட்டம். ஆனால் –
யாரை, எப்போது கேட்டாலும் ,
“ஒரே பணக்கஷ்டம் பாஸ்” என்கிறார்கள்.
நேர்மை, நியாயம், கோபம், அன்பு,
பேசும் எழுத்துக்கும், சினிமாவுக்கும், பேச்சுக்கும்
கொந்தளிக்கிறார்கள் – அழுகிறார்கள்.
ஆனால் எதிர் ப்ளாட்டில் நடக்கும்
வெட்டுக் குத்தை மொபைல் பேசியபடி
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தெருவில் ஒரு சத்தம் கேட்டால் – கதவை
சாத்திக் கொள்கிறார்கள்.
திருட்டு விசிடி பார்க்கிறார்கள் !
நித்யானந்தா சிடிக்கு அலைகிறார்கள்.
யாருக்கும், எதுவும் செய்யாமல்-
வாழ்நாள் முழுவதும் சேர்த்த காசை
மருத்துவமனைக்கு கொண்டு போய்
அழுகிறார்கள்.
சமூகத்தின் பெரும் அவலங்களையும்,
அபத்தங்களையும் நொடியில் கடந்து
சென்று விடுகிறார்கள்.
நண்பர் எழுதாத –
ஆனால் நான் எழுத நினைத்த இன்னொரு கருத்து –
“இத்தனை விசித்திரமாக, சுயநலக்கூட்டமாகத்
தோன்றும் இதே மக்கள் – அவசியம் ஏற்படும்போது,
பொங்கி எழுந்து, உணர்ச்சிப் பிரவாகமாகி
இதே சமுதாயத்தை தலைகீழாக புரட்டிப்
போட்டும் காட்டி இருக்கிறார்கள்.”



Dear Kavirimainthan,
About us (Indians)what Raju Murugan has described are all facts and what you have concluded is your wish & expectation.My view is that we Indians are the biggest Hypocrites in the world.
Regards,
2009ல் எங்கள் பாராளுமன்ற தொகுதியில் வைகோ தோற்கடிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் தேமுதிக வேட்பாளர் பாண்டியராஜன் பிரித்த 1.30 லட்சம் ஓட்டுகளே! வெறும் 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்தான் வைகோ தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் காங்கிரஸ் மாணிக்தாகூரின் பணம் உள்ளே விளையாடியது என்பதையும் மறுக்க முடியாது.