சட்டம் ஒரு இருட்டறை – வக்கீல்களின் வாதம் ஒரு கொள்ளிக்கட்டை ! படிக்கவும் செய்யலாம் – கொளுத்தவும் செய்யலாம் !!

சட்டம் ஒரு இருட்டறை –
வக்கீல்களின் வாதம் ஒரு கொள்ளிக்கட்டை !
படிக்கவும் செய்யலாம் – கொளுத்தவும் செய்யலாம் !!

டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சுப்ரீம் கோர்ட்டில்,
2ஜி வழக்கில் – ராஜாவோடு, உள்துறை அமைச்சர்
ப.சிதம்பரம் அவர்களையும் சேர்த்து விசாரிக்க
வேண்டும் என்று மனு கொடுத்து இருந்தார். தனது
கோரிக்கைக்கு ஆதாரமாக தற்போதைய நிதியமைச்சர்
பிரனாப் முகர்ஜி தரப்பிலிருந்து, பிரதமர் அலுவலகத்திற்கு
அனுப்பட்ட 25 மார்ச்சு 2011 தேதியிட்ட
கடிதத்தையும் ஆவணமாக  சேர்த்திருந்தார்.
இந்த கடிதத்தில், அப்போதைய நிதியமைச்சரான
ப.சிதம்பரம் முனைந்து செயல்பட்டிருந்தால், இந்த 2ஜி ஊழலே நடக்காமல் செய்திருக்க முடியும்  என்று
குறை சொல்லி எழுதப்பட்டிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக எழுந்த மீடியா விளம்பரங்கள்
அனைவருக்கும் தெரியும்.

கடந்த திங்கள் அன்று சோனியா காந்தி, ப.சிதம்பரத்தை  அழைத்துப்பேசி இருக்கிறார்.
அதையொட்டி காங்கிரஸ் அலுவலகத்திலிருந்தே
கசிய விடப்பட்ட செய்தியில் -ப.சி. ராஜினாமா செய்வதாக சோனியாவிடம் கூறியதாகவும், அதற்கு சோனியா
தான் தனியே இது பற்றி விசாரணை நடத்தி
விஷயங்களின் பின்னணியை ஆராய்ந்து விட்டதாகவும்,  
தனக்கு கிடைத்த தகவல்களின்படி, பிரனாப் முகர்ஜி
இந்த கடிதத்தின் பின்னணியில் இல்லை என்றும்
எனவே ப.சி. ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம்
இல்லை என்றும் கூறியுள்ளதாக – கூறப்பட்டு உள்ளது.

பின்னர் பிரனாப் முகர்ஜியிடமும்
சோனியா தனியே பேசி இருக்கிறார். பின் ம.மோ.
சிங்கிடம் இருவரையும் பேசச்சொல்லி இருக்கிறார்.

இந்த சமாதான முயற்சிகளின் முடிவாக –
நேற்று மாலை மீடியா எதிரில் பிரனாப் முகர்ஜி,
2ஜி கடிதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள்
தம்முடையவை அல்ல என்று கூறி இருக்கிறார்.
ப.சிதம்பரமும் தான்  இதை ஏற்றுக் கொள்வதாகவும்,
விஷயம் இத்துடன் முற்றுப்பெறுகிறது என்றும்
கூறி இருக்கிறார்.

மீடியா எதிரிலேயே இருவரும் பேசிய
தோரணையிலேயே(body language) நன்றாகத் தெரிந்தது.
இருவரும் முறுக்கிக்கொண்டு நின்றதும்,
முறைத்துக்கொண்டு பேசியதும் !

காங்கிரஸ் தலைமையின் கட்டாயம்  காரணமாகவே
இந்த முடிவிற்கு இணங்கி இருக்கிறார்கள் என்பது
நன்றாகவே தெரிகிறது.
ப.சிதம்பரத்தை பாதுகாக்க காங்கிரஸ் தலைமை  
இவ்வளவு அக்கரை காட்டும் என்று பிரனாப் முகர்ஜி , எதிர்பார்க்கவில்லை.

இந்த நிகழ்வின் விளைவாக –  ப.சிதம்பரத்திற்கும்
சோனியா காந்திக்கும் உள்ள நெருக்கமான
பின்னணி வெளிப்பட்டிருக்கிறது. ப.சிதம்பரம்
காங்கிரஸ் தலைமைக்கு தவிர்க்க முடியாதவர்
என்பது வெளிப்பட்டு இருக்கிறது. தான் அநாவசியமாக
முகர்ஜியால் அவமானப்படுத்தப்பட்டுவிட்டதாக
ஒரு இமேஜை ஏற்படுத்த ப.சிதம்பரம் முயற்சிக்கிறார்.
ஏற்கெனவே
ராஜீவ் காந்தி அறக்கட்டளையில் (raajiv gandhi
foundation)  முக்கிய பங்கு வகிப்பதன் மூலம்  ப.சி.
ராஜீவ் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பது
குறிப்பிடத்தக்கது.

வெளியில் இப்போதைக்கு சரியாகி விட்டதாகக்
காட்டிக்கொள்ளப்பட்டாலும்,  கட்சிக்குள்ளும்,
அரசின் நடவடிக்கைகளிலும் இதன் தொடர்ச்சி
இருக்கவே செய்யும்.

பிரனாப் முகர்ஜி,  ப.சிதம்பரம்  இருவருமே
மன்மோகன் சிங்கிற்கு பதிலாக பிரதமர் வேட்பாளராக
தயாராகிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் விலக்கப்பட்டால்
அடுத்தவருக்கு வாய்ப்பு பிரகாசம் என்கிற நிலையில்,
இருவருமே  அதற்கான முயற்சியில்
ஈடுபட்டிருந்திருக்கிறார்கள்.

பிரனாப் முகர்ஜியின்  2ஜி கடிதம் சாமர்த்தியமாக வெளிப்படுத்தப்பட்டதன் மூலம், ப.சிதம்பரம் அவர்களின்
இமேஜை சரித்து, அவரை போட்டியிலிருந்து விலக்கும்
முயற்சியில் பிரனாப் முகர்ஜி ஜெயித்து விட்டார். எனவே
இப்போதைக்கு ப.சிதம்பரம்  பிரதமர் பதவிக்கான ரேசில்
இருக்க முடியாது. ஆனால் காங்கிரஸ் தலைமையுடன்
அவரது நெருக்கம் வலுப்பட்டிருக்கிறது.

அதே சமயம் காங்கிரஸ் மேலிடம் பிரனாப்
முகர்ஜியின் மீது நம்பிக்கை இழந்து விட்டதால் –
அவரும் பிரதமருக்கான ரேசில் இனி இருக்க முடியாது.
தகுந்த சமயம் வரும்போது பிரனாப் முகர்ஜி
கழட்டி விடப்படலாம் !

விளைவு – கொடுத்து வைத்த மன்மோகன் சிங்
போட்டி இல்லாத பிரதமராக தொடர்வார் !
ராகுல் காந்தி ரெடியாகும்
வரையில் மன்மோகன் சிங்கிற்கே அதிர்ஷ்டம்
தொடர்கிறது.

இவை அனைத்தும் அரசியல் சம்பந்தப்பட்ட
நிகழ்வுகள் – political developments.

ஆனால் – சுப்ரீம் கோர்ட்டில்  டாக்டர் சுவாமி
தாக்கல் செய்திருக்கும் மனுவை இது எந்த
விதத்திலும்  பாதிக்காது.

கோர்ட்டில் வியாழன் அன்று நிகழ்ந்த விசாரணையின்
போது –  சிபிஐ முழுவீச்சில்  ப.சிதம்பரத்தை
பாதுகாத்தது.  சிபிஐ  வழக்கறிஞர் வேணுகோபாலும்
ப.சிதம்பரமும் பல ஆண்டுகளாகவே நண்பர்கள்.
ஒன்றாக தொழில் புரிந்தவர்கள்.  கோர்ட்டில் சிபிஐ
ஒரு வித்தியாசமான வாதத்தை  முன் எடுத்து வைத்தது.
2ஜி அலைவரிசைகளை ஏலத்தில் விட வேண்டும்
என்பது தான் ப.சி.யின் கொள்கை என்றும் அவர்
ஏற்கெனவே பலமுறை இதைப் பற்றி பேசி இருக்கிறார்
என்றும் வாதிக்கப்பட்டது.

ஆனால் – லைசென்சுகளை ராஜாவின் அமைச்சகம்
கொடுத்து விட்ட பிறகு,  (முன்னாள் நிதியமைச்சர்)
ப.சிதம்பரம் அவர்களால் தனியாக அதில் செய்யக்கூடியது
ஒன்றுமில்லை.  முழு அரசாங்கமும் சேர்ந்து  செய்ய
வேண்டிய அளவிற்கு பெரிய பரிமாணம் கொண்டு
விட்டது என்றும்  வாதிக்கப்பட்டது.

ப.சி.யின் மீது குற்றம் சாட்டுபவர்கள் வெறும்
விளம்பரத்திற்காகவே அதைச்செய்கிறார்கள் என்றும்
அதில் சாரம் ஏதும் இல்லை என்றும் வாதிக்கப்பட்டது.

இதில் வேடிக்கை என்ன வென்றால் –
பிரனாப் முகர்ஜியின் 2 ஜி கடிதத்தில்,
ராஜாவால் லைசென்சு  கொடுக்கப்பட்டு விட்ட
நிலையில் கூட  முன்னாள்
நிதியமைச்சர் நினைத்திருந்தால் இந்த நிகழ்வை,
இந்த இழப்பை, தடுத்திருக்கலாம் என்று கூறப்பட்டி
ருக்கிறது. இந்த கடிதத்தை தான் டாக்டர் சுவாமி
சுப்ரீம் கோர்ட்டில் ஆவணமாகத தந்திருந்தார்.

ஆக  இந்நாள் நிதியமைச்சரின்( பிரனாப் முகர்ஜியின்)
வாதத்திற்கு எதிராக, முன்னாள் நிதியமைச்சருக்கு
(ப.சிதம்பரத்திற்கு ) ஆதரவாக  – சிபி ஐ
வழக்கறிஞர்  வாதாடுகிறார !

காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்திக்கும்,
சிபிஐ  க்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.
அவர் இவர்களை
பார்க்கவோ- பேசவோ எந்த விதத்திலும்
வாய்ப்பே  இல்லை. அவர் பேசும் வழக்கமும்
இல்லை !
ஆனால் என்ன மாயமோ தெரியவில்லை –

அவர் எண்ணத்தில்  உதிப்பவை எல்லாம்
சிபிஐ  க்கும்  உதிக்கிறது.  2ஜி வழக்கில்
எப்படி வாதாட வேண்டும் என்று அவர்
நினைத்திருப்பாரோ – அதே கோணத்தில்
வழக்கும் செல்வது  தான் ஆச்சரியம்  !!

அறிஞர் அண்ணா ஒரு முறை சொன்னார் –
“சட்டம் ஒரு இருட்டறை.
வக்கீல்களின் வாதம் ஒரு விளக்கு”

இன்று அதை இப்படி மாற்றிச்சொல்ல
வேண்டி இருக்கிறது. –

வக்கீல்களின் வாதம் ஒரு கொள்ளிக்கட்டை.
வெளிச்சமும்  கொடுக்கலாம்  –
கொளுத்தவும்   செய்யலாம் !
தன் தலையையே  சொரிந்தும் கொள்ளலாம் !!.

விசித்திரமான வழக்கு !
வினோதமான  வாதங்கள் ……. !!
.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.