போதை ………

போதை ………

மதுவும், மங்கையும்  தரும் போதை –
வெற்றியும்,  புகழும்  – தரும்  போதை  !

வேறு எந்த தொழிலுக்கும் இல்லாத மவுசு
திரைப்படத் துறைக்கு இருக்கிறது.
காரணம் – அங்கு ஒருவன் தன்னை –
தன் திறமையை நிரூபித்து விட்டால் –
அவனுக்கு கிடைக்கிற  பணம், புகழ்,
மரியாதை, அங்கீகாரம்  (recognition ?) –

மற்றும்  –
அவை அனைத்தும் சேர்ந்து கொடுக்கும் போதை  –
இவற்றிற்கு ஈடு  இணையான சுகம்,
சந்தோஷம் – உலகில்
வேறு எந்த  தொழிலிலும்   கிடைக்காது
என்பது தானே !

ஆனால் இதில் புகழ் பெறவும், கிடைத்த
புகழை தக்க வைத்துக்கொள்ளவும் ஒவ்வொருவர்
என்ன பாடுபட வேண்டி இருக்கிறது !

40 வருடங்கள்  –
35,000  பாடல்கள்,
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி
அத்தனை மொழிகளிலும் முறிக்க முடியாத சாதனைகள் !
அத்தனையும்  ஒருவர் தன் திறமையாலும்,
கடுமையான உழைப்பாலும் சாதித்தவை.
திறமையும் உழைப்பும் மட்டும் தானா காரணம்
இந்த பணமும்  புகழும்  வந்து சேர ?

துணை நின்றவை – இனிய பழக்க வழக்கங்கள்,
அனைவரின் பாலும் அன்பு, அரவணைப்பு, நேசம்,
ஒழுக்கம், உயரத்திலும்  பணிவு.
கிடைத்த புகழை தக்க வைத்துக்கொள்ள
ஒரு தந்தை என்ன பாடு
பட்டிருப்பார் ? எவ்வளவு உழைத்திருப்பார் ?

அத்தனையையும்  எவ்வளவு சுலபமாக
நாசம் செய்து விட்டார் மகன் ?

முதல் தலைமுறை உழைப்பைக் கொடுத்து,
உயிரைக்கொடுத்து, திறமையை  நிரூபித்து –
சம்பாதித்தது அத்தனையையும் –
அடுத்த தலைமுறை
மதுவிலும் மங்கையிலும் நாசம் செய்து விட்டதே !
போனது பணம் மட்டுமா  ?
தந்தையின்  நிம்மதி, கௌரவம், புகழ், குடும்ப
உறவுகள் – அத்தனையும்  நாசம்.

கோடம்பாக்கத்தில் இன்று  எத்தனை எத்தனை
இளைஞர்கள் –
தெற்கே மதுரையிலிருந்தும்,
அதற்கும் அப்பாலிருந்தும் வந்தவர்கள் –
இருக்க இடம் இல்லாவிட்டாலும் –
பசியாற  உணவில்லா விட்டாலும் –
எப்படியாவது தனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா ?
தன் திறமையை இந்த உலகம் ஏற்று பாராட்டாதா
என்று தவித்துக் கொண்டிருக்கின்றனர் !

குடி, சூதாட்டம்,  பொய்யான காதல்,
அடுக்கடுக்கான கொலைகள் – இவற்றை கவர்ச்சியாக
காட்டி அதன் மூலம் தப்பானவர்கள் தான்
வாழ்க்கையில் சுலபமாக ஜெயிக்க முடியும் என்று
காட்ட ஒரு படம் எடுத்து, அதன் வெற்றியை
கொண்டாட – மது, மங்கையுடன் ஒரு விருந்து.
இந்த டீமை கொஞ்சம் உற்று கவனித்தால் தெரியும் –
அத்தனையும் வெள்ளிக்கரண்டியுடன் பிறந்த
பணக்காரக் கூட்டம். தந்தையோ, அவர் தந்தையோ
நல்ல வழியிலோ, கெட்ட வழியிலோ சேர்த்து வைத்த
பணம்.  பெற்றவர் பின்னணியில் துவக்கத்திலேயே
பெரிய அளவில் அறிமுகம் (பேனர் ?).  
ஆட்டம் போடுவதற்கு என்றே
தேர்ந்தெடுத்த துறை !

இதே திரையுலகில் தான்
அற்புதமான கதாபாத்திரங்களுடன்,
சிறப்பான குணசித்திரங்களுடன்,
இயற்கையான  நடப்புகளுடன் – கூடவே
சமூகத்திற்கு மிகவும் அவசியமான செய்தியையும்
அழகாக, மிக அழகாக,
மிகச்சிறப்பாக, சுவையாக,
விறுவிறுப்பாக சொல்லும்  சரவணன் என்கிற
இளைஞனையும் (எங்கேயும் எப்போதும்)  பார்க்கிறோம்.  

கடந்த இரண்டு
ஆண்டுகளில் எத்தகைய  பின்புலனும் இன்றி,
சுயமுயற்சியில் – வெறியுடன்  ஒரு அங்கீகாரத்துக்காக
உழைக்கும் இத்தகைய திறமைசாலிகள் பலரை
தமிழ்த் திரையுலகம்  வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

பரம்பரை பின்னணியும்,  பணவசதிகளும்
திறமைசாலிகளை  உருவாக்குவதற்கு பதிலாக –
குடிகாரர்களையும், சூதாடிகளையும் தான்
உருவாக்குகின்றனவோ என்று ஒரு அச்சம்
உருவாகிறது.

தகப்பன் சேர்த்து வைத்த பணத்தில்
கொண்டாடும் போது –
மதுவும், மங்கையும்  தரும் போதையை விட –

சுய உழைப்பில், திறமை வெளிப்படுத்தலில்,
அதன் விளைவாகக் கிடைக்கும் புகழில்,
வெற்றியில் – கிடைக்கும் போதை மிக மிக
உயர்வானது  என்பதை  –
வெள்ளிக்கரண்டியுடன் பிறந்த இளைஞர்கள்
புரிந்து கொள்ள வேண்டும்.

அது அவர்களுக்கும்  நல்லது.
சமூகத்துக்கும்  நல்லது !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to போதை ………

  1. rajasekhar.p's avatar rajasekhar.p சொல்கிறார்:

    அன்புள்ள கா.மை மற்றும் நண்பர்களுக்காக ………………….

    நமது 2G ராஜாவின் குடிசை..

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    இதே,இதே,,,,,,,,,
    40 வருடங்கள் –
    35,000 கோடி ரூபாய்,(தோராயமாக)
    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி
    அத்தனை மாநில அரசியல்வியாதிகளாலும் முறிக்க முடியாத சாதனைகள் !
    அத்தனையும் ஒருவர் தன் “திறமை”யாலும்,
    “கடுமை”யான “உழைப்பாலும்” சாதித்தவை.
    திறமையும் உழைப்பும் மட்டும் தானா காரணம்
    இந்த பணமும் பெயரும் வந்து சேர ?

    துணை நின்றவை – தீய பழக்க வழக்கங்கள்,
    அனைவரின் பாலும் வெறுப்பு, அடுத்துகெடுத்தல், துவேஷம்,
    கயமை, தோல்வியிலும் அகம்பாவம்.
    கொள்ளை அடித்த பணத்தை தக்க வைத்துக்கொள்ள
    ஒரு தந்தை என்ன பாடு
    பட்டிருப்பார் ? எவ்வளவு உழைத்திருப்பார் ?

    இவருக்கு வாய்த்த வாரிசுகளோ
    இவரைகாட்டிலும் பல படி மேல்!
    “வியாபாரத்தை” விருத்தி செய்வதில் சமர்த்தர்கள்.
    பேரன் பேத்திகள் இன்னும் திறமை வாய்ந்தவர்கள்.
    இது மட்டும் எப்படி.???
    இது என்ன நியாயம்?தர்மம?
    நல்லவருக்கு தீயவர் வாரிசு என்றால்,
    தீயவருக்கு நல்லவர் தானே வந்து பிறக்க வேண்டும்??
    ஏன்??
    உண்டியல் வசூல் போதாமல்
    “அவரும்”
    சூட கேஸ் வாங்க ஆரம்பித்து விட்டாரோ???

    பி.கு:இதற்கு வரும் பதில்களில் “தர்மத்தின் வாழ்வதனை சூதுகவ்வும்,,”எனும் செய்யுள் பதிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.