இயக்குநர் பாலசந்தரின் “புன்னகை” … இந்த வயதிலும் கூட மனசாட்சி உறுத்தாதா ?

இயக்குநர் பாலசந்தரின் “புன்னகை” …
இந்த வயதிலும் கூட மனசாட்சி
உறுத்தாதா ?

1969ஆம் ஆண்டு.
நான் துடிப்பான, கோபக்கார இளைஞனாக
இருந்த சமயம். அப்போது தான் பணியில்
சேர்ந்திருந்தேன்.வட இந்தியாவில்
பணி புரிந்துகொண்டு  இருந்தேன்.

அப்போதெல்லாம் நான் நிறைய
இந்தி படங்கள் பார்ப்பது வழக்கம்.

எதற்குமே அழக்கூடிய வயதில்லை அது.
அழும் பழக்கமும் எனக்கு இருந்ததில்லை.

நான் – என் வாழ்க்கையில் முதல் தடவையாக
கடைசி 15 நிமிடங்களை அழுதுகொண்டே பார்த்த
ஒரு திரைப்படம் – என்னை மிகவும் பாதித்த
ஒரு படம் –

இந்தி திரைப்பட இயக்குநர் ரிஷிகேஷ் முகர்ஜியின்
(அவர் ஒரு வங்காளி)“சத்யகாம்” என்கிற
இந்தி திரைப்படம்.

தர்மேந்திரா, சஞ்சீவ்குமார், அஷோக் குமார்,
ஷர்மிலா தாகூர், ஆகியோர்
நடித்தது. அந்த வருடத்தின் சிறந்த இந்தி
திரைப்படத்திற்கான தேசீய விருதையும் பெற்ற
படம் அது.

அந்தப் படம் அதே”சத்யகாம்” என்கிற பெயரை
கொண்ட புகழ்பெற்ற  வங்காள நாவல் ஒன்றை
அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.
அதன் ஆசிரியர் நாராயண் சன்யால்
என்கிற வங்காளி.

மிகவும் உணர்ச்சிகரமான கதை.
உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ விரும்பும்
“சத்யவிரத்”என்கிற ஒரு வாலிபனின் வாழ்க்கையில்
ஏற்படும் அற்புதமான, மனதை உருக்கும்
அனுபவங்கள்.

கற்பழிக்கப்பட்ட பெண் ஒருவளை மனைவியாக
ஏற்றுக்கொண்டு, அதன் விளைவாக அவளுக்குப்
பிறக்கும் மகனை தன் மகனாகவே ஏற்றுக் கொண்டு,
கடைசி வரை நேர்மையாக வாழும்
அந்த வாலிபன், பொய் சொல்ல மறுத்து,
அதன் விளைவாக மனைவியையும், மகனையும்
இழந்து இறுதியில் வாலிப வயதிலேயே
உயிரையும் விட நேர்கிறது.

அந்தச் சிறிய வயதில் – இந்தப் படம் என் மனதில்
ஏற்படுத்திய விளைவுகள் அநேகம்.
இப்படிக் கூட ஒரு மனிதனால் வாழ முடியுமா
என்று எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டு –
நிறைய நாட்கள் தூங்க முடியாமல் தவித்தேன்.
ஒருவன் வாழ்நாள் முழுவதும் பொய் சொல்லாமல்
இருந்திருக்கிறானே – நம்மால் atleast வாரத்தில்
ஒரு நாளாவது பொய் சொல்லாமல்
இருக்க முடியுமா ?
முயன்று பார்த்தால் என்ன  என்று நினைத்தேன்.

அன்றைய தினமே ஆரம்பித்தேன்.
வாரத்தில் – குறிப்பிட்ட  ஒரு நாளில்
உண்மை மட்டுமே பேசுவது என்று வழக்கில்
கொள்ள ஆரம்பித்தேன். பிற்காலங்களில் இன்னும்
சில நாட்களையும் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தேன்.
எனக்குள்ளேயே ஒரு திருப்தி – அந்த
கதாபாத்திரத்திற்கு நியாயம் கற்பித்தது
போன்ற நிம்மதி.
(இதனால் நான் சந்திக்க நேர்ந்த சங்கடங்களை
பின்னால் சமயம் வரும்போது எழுதுகிறேன் )

4-5 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு தடவை
விடுமுறையில் தமிழ் நாட்டிற்கு வந்தபோது
இயக்குநர் பாலசந்தர் அவர்களின் “புன்னகை”
என்கிற படத்தை பார்த்தேன்.
ஜெமினி கணேசன், ஜெயந்தி நடித்தது.
படத்தைப் பார்த்த பிறகு தான் தெரிந்தது.
முழுக்க முழுக்க அதே இந்தி படம் “சத்யகாம்”தான்.
ஒரே ஒரு அபத்தமான காட்சி மட்டும்
பாலசந்தரால் தமிழில் சேர்க்கப்பட்டிருந்தது.
(கயவன் ஒருவன் தன்னை கற்பழிக்க வரும்போது,
ஜெயந்தி “ஆணையிட்டேன் – நெருங்காதே”
என்று பாடிக்கொண்டே இங்கும் அங்கும் ஓடுவார் !)

ஆனால், டைட்டிலிலோ – வேறு எங்குமோ
அது சத்யகாம் படத்தை தழுவியது என்றோ,
இயக்குநர் ரிஷிகேஷ் முகர்ஜிக்கோ,
கதாசிரியர் நாராயண் சன்யாலுக்கோ நன்றி
என்றோ போடவே இல்லை. ஒரு தழுவல்(ரீமேக்)
படம் என்று எங்குமே acknowledge செய்யவில்லை !

மிக அதிசயமாகவும், கோபமாகவும் இருந்தது எனக்கு.
மிக நேர்மையாக வாழ்ந்த ஒரு மனிதனின் கதையை
எடுத்த பாலசந்தர் இவ்வளவு நேர்மைக்குறைவாக
நடந்து கொள்கின்றாரே என்று.

பின்னர் நான் தெரிந்து கொண்டது –
அந்த படத்துக்கு
தமிழில் சிறந்த படம் என்று பரிசு வேறு
கிடைத்தது என்று.

சாதாரணமாக தழுவல் படங்கள் பரிசுக்கு
தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இது தழுவல் என்பது
சொல்லப்படாததால் -தெரியாமல்
தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

————

இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு இதனை
நினைவு படுத்தி இப்போது என்னை இதை எழுதத்
தூண்டியது பாலசந்தர் அவர்களே தான்.

இயக்குநர் பாலசந்தர் இந்த வார ஆனந்த விகடன்
இதழில் ஒரு கேள்விக்கு
பதில் அளிக்கையில் தான் இயக்கிய படங்களிலேயே
தனக்கு மிகவும் பிடித்தமான படம் “புன்னகை”
என்று சொல்லி இருக்கிறார்.

ஒரு பிறமொழிப்படத்தை அப்படியே தமிழில்
ரீமேக் செய்து விட்டு, அந்த கதை, நிகழ்வு
அத்தனையும் வேறொருவர் கற்பனையில் உதித்தது
என்பதை அடியோடு மறைத்து விட்டு – பாலசந்தர்
அதற்கு சொந்தமும், உரிமையும் கொண்டாடுவது
சரியா ?

(அந்த படத்தை தமிழில் எடுப்பதற்கான
உரிமையை அவர் இயக்குநர் ரிஷிகேஷ்
முகர்ஜியிடமோ,
கதாசிரியர் நாராயண் சன்யாலிடமோ
பணம் கொடுத்து வாங்கி இருக்கலாம்.
இருந்தாலும் மூலம் எங்கிருந்து
வந்தது என்பதை அவர் நேர்மையாகச் சொல்லி
இருக்க வேண்டாமா ?)

அந்த வயதில் சொல்லத் தவறியதை –
இந்த 80 வயதிலாவது சொல்லி,சரி செய்திருக்க
வேண்டாமா ?
மனசாட்சி உறுத்தாதா ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to இயக்குநர் பாலசந்தரின் “புன்னகை” … இந்த வயதிலும் கூட மனசாட்சி உறுத்தாதா ?

  1. bganesh55's avatar bganesh55 சொல்கிறார்:

    புதிய தகவல் தந்துள்ளீர்கள். திரையுலகில் பிதாமகராக மதிக்கப்படுபவரே இப்படியா என்று அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    திரு.கா.மை.

    இந்த உலகம் இயங்கி கொண்டிருப்பது “பொய்” எனும் எரி சக்தியினால்!ஒருவேளை அத்தனை மனிதர்களும் தாம் உண்மையைத்தான் பேசுவது என்று முடிவெடுத்து செயல்படுத்தினால் ஏற்படும் விளைவுகள், மிக கடுமையாக இருக்கும்.தாங்கிக்கொள்ள மனோதிடமோ,முதிர்ச்சியோ நமக்கு கிடையாது.

    ஒரு பொய்யான உலகத்தில், பொய்கள் பல பேசி,பொய்யான வாழ்க்கை வாழ்ந்து, கடைசியில் மெய் நீங்கி, மெய்யாக போய் சேருகிறோம்.ஜெயகாந்தனின் ஒரு அற்புதமான சிறுகதை “உண்மை சுடும்” ; படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்

    .”நான் அழகாக இருக்கேனா அப்பா?”
    என வினவும் என் அன்பு மகளிடம்,
    “உனக்கென்ன கண்ணு! ஐஸ்வர்யாராய் போல் இருக்கே” என்று நான் சொல்லும் ஒரு yoctogram பொய்யிலிருந்து,
    “நான் மக்கள் பணத்தை மனதால் கூட தீண்டியதில்லை!”
    என நம் வசனாநிதி சொல்லும் ஒரு yottagram பொய் வரை எல்லாம் இதில் அடக்கம்.

    பிரசவ வலி தாளாத ஒரு பெண்,இதற்கு சரிபாதி காரணம் சம்பந்தப்பட்ட ஆணும்தானே அப்படியிருக்க வலி முழுவதும் பெண் படுவது என்ன நியாயம் எனக்கருதி இனி பிரசவ வலியில் பாதியை குழந்தையின் அப்பாவும் அனுபவிக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டி,அந்த வரத்தையும் போராடி பெற்று அதனால் ஏற்பட்ட விபரீதங்கள் என்ன என்பதும் அனைவரும் அறிவோம்.

    எனவே பிறந்தது முதல் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு ,இருபது வயதில் முற்றும் துறந்து காவி அணிந்து,மடத்தில் சேர்ந்து எளிய வாழ்க்கை வாழும் ஒரு மனிதனுக்கு மனம் நினைப்பதை சொல்வதுதான் சத்தியம் என்பது சரியாக இருக்கலாம்..

    ஆனால் மனைவி,மக்கள் குடும்பம் குட்டிஎன அன்றாடம் ஜீவனோபாயத்திற்கு போராடி வாழ்க்கை நடத்தும் ஒரு எளியோனுக்கு சரியான கொள்கை:

    “வாய்மை எனப்படுவது யாதெனின்,யாதொன்றும்
    தீமை இலாத சொலல்”

    முடிவாக பாலசந்தர்…

    தான் சாதாரண இயக்குனர் என நினைத்து செயல்பட்ட காலத்தில் சிறந்த திரைப்படங்களையும்,தான் சிறந்த இயக்குனர் என நினைத்து செயல்பட்ட காலத்தில் சாதாரண திரைப்படங்களையும்,உருவாக்கியவர்.

    நன்றி.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக கண்பத்,

      மிகச்சரி.
      உண்மை தான்.

      மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காத
      வரையில் எதுவும் உண்மை தான்.

      நடைமுறையில் இது தான் சாத்தியம்.

      இந்த அளவிற்கு வாழ்வதே
      மிகச்சிலருக்கு தான் சாத்தியப்படுகிறது.

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  3. gardenerat60's avatar gardenerat60 சொல்கிறார்:

    All his movies had some kind of flaws. He was over rated.

  4. Vasanth's avatar Vasanth சொல்கிறார்:

    உங்கள் பதிவு சரியான சமயத்தில் வந்துள்ளது.பாலச்சந்தர் ஒரு திறமையான இயக்குனர் என்று பெரும்பாலான மக்கள் நினைத்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர் ஒரு காப்பி கேட்.அவரின் முக்கால்வாசி படங்கள் (முழுசுமே என்று கூட சொல்லலாம்)வங்காள ஹிந்தி மற்றும் மலையாள மொழி படங்களின் அப்பட்ட காப்பி என்பதை அறிந்தவர்கள் வெகு சிலரே. வங்காளத்தின் திறமை வாய்ந்த ரித்விக் கட்டக், சத்யஜித் ரே போன்றவர்களின் படைப்பை ஒரு மூன்றாந்தர திருடனைப்போல சத்தமில்லாமல் திருடி அதை தன் பெயரில் துணிச்சலாக தமிழில் வெளியிடும் அறிவு ஜீவி இயக்குனர் நமது பாலச்சந்தர் அவர்கள்.இதை அவர் என்றைக்குமே ஒப்புக்கொண்டதில்லை என்பதை விட அதை பற்றி பேசுவதே கிடையாது. பாலச்சந்தர் போன்ற கதை திருடிகளிடம் நியாயத்தை எதிர் பார்ப்பது முட்டாள்தனம்.இவரை ஒரு மகா இயக்குனர் என்று சொல்பவர்களை பார்த்து சிரிக்க தோன்றுகிறது. பாலச்சந்தரை விட பாரதி ராஜா எவ்வளவோ மேல்.

  5. பாண்டியன்'s avatar பாண்டியன் சொல்கிறார்:

    நீங்க தவறான தகவல் தந்து இருக்கீங்க. புன்னகை படத்தின் டைட்டிலில் கதையின் மூலம் எங்கிருந்து வந்தது எனபதை தெரியப்படுத்தி இருக்கிறார். நிழல்நிஜமாகிறது, தண்ணீர் தண்ணீர், 47 நாட்கள், நூல்வேலி, சொல்லத்தான் நினைக்கிறேன் என்று அவர் இயக்கிய பல படங்கள் பிறரின் கதையே. கதாசிரியரின் பெயரை ஒரு போதும் அவர் டைட்டிலில் வெளிக்காட்ட மறந்ததில்லை. மறுத்ததும் இல்லை.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் பாண்டியன்,

      ஒரு எழுத்தாளரின் கதையை
      ஒரு இயக்குநர், புதிதாக இயக்குவது
      ஒரு விஷயம். அதில் அவரது கற்பனைக்கு,
      உருவாக்கலுக்கு (creativity) அதிகம்
      முக்கியத்துவம் இருக்கும்.

      வேறு ஒரு மொழியில் ஏற்கெனவே
      திரைப்படமாக வந்து வெற்றி பெற்ற ஒன்றை
      ரீமேக் செய்வது வேறு விஷயம். முக்கியமாக
      ரீமேக் படங்களில் பெரும்பாலும்
      ஒரிஜினல் படங்களின்
      தாக்கமே அதிகமாக இருக்கும்.

      இன்னும் ஒரு படம் கூட பாலசந்தர்
      இது போல் பண்ணி இருக்கிறார்.
      பிரபு, ரமேஷ் அர்விந்த்,மீனாட்சி சேஷாத்ரி
      நடித்து தமிழில் வெளிவந்த படம் “டூயட்”.

      இது சல்மான்கான், சஞ்ஜய் தத்,
      மாதுரி தீக்ஷித் ஆகியோர் நடித்து இந்தியில்
      வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற
      “சாஜன்” என்கிற படத்தின்
      ரீமேக் தான்.

      நீங்கள் சொல்லி இருக்கும் மற்ற
      படங்களைப் பற்றிய முழு விவரங்கள்
      எனக்கு தெரியாது. எனவே நான் ஒன்றும்
      சொல்வதற்கில்லை. புன்னகை மூலம் பற்றி
      இந்த நிலையில் என்னால் உறுதிப்படுத்த
      முடியவில்லை.

      பாலசந்தர் பல நல்ல படங்களை தந்திருப்பதாக
      நீங்கள் நினைக்கலாம்.
      அது வேறு விஷயம். தனியே விவாதிக்கப்பட
      வேண்டிய ஒன்று. ஆனால் அது இந்த இடுகையில்
      கூறப்பட்டுள்ள கருத்தை மாற்றாது.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  6. rajanat's avatar rajanat சொல்கிறார்:

    புன்னகை இந்திப்பட தழுவல் என்பதே நீங்கள் சொல்லித்தான் எல்லோருக்கும் தெரியும் போல இருக்குதே:)
    பாலசந்தர் பட வரிசைகளில் அனைவரும் மறந்து போன படம் புன்னகை.அதுவே அவரது மழுப்பலுக்கான தண்டனையாக இருக்கட்டுமே!

  7. shenisi's avatar shenisi சொல்கிறார்:

    சொன்னால் அவருக்கு என்ன பிரச்சினையோ?!

  8. பாண்டியன்'s avatar பாண்டியன் சொல்கிறார்:

    புன்னகை மூலம் பற்றி
    இந்த நிலையில் என்னால் உறுதிப்படுத்த
    முடியவில்லை ///// என்கிறீர்கள். அப்படி என்றால் நீங்கள் புன்னகை பட டைட்டிலை சரியாக பார்க்கவில்லை என்று தானே அர்த்தம்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் பாண்டியன்,

      என்னுடைய இடுகையின் முக்கிய கருத்து –

      “புன்னகை” பாலசந்தருடையது அல்ல.
      அதற்கு கிடைக்கும் பெருமையோ, புகழோ
      அதன் இந்திப்பட இயக்குநர் ரிஷிகேஷ் முகர்ஜிக்கு
      தான் போய்ச்சேர வேண்டும்.
      “சத்யகாம்” மூலக்கதையை பெங்காலியில்
      படித்து விட்டு இந்த படத்தை எடுத்திருக்க முடியாது.
      “சத்யகாம்” இந்தி படத்தைப் பார்த்து விட்டு,
      அதன் பாதிப்பில் தான் எடுத்திருக்கிறார் என்பது
      நிதரிசனம்.
      (ஆனால் – இன்று வரை ரிஷிகேஷ் முகர்ஜி என்று
      ஒரு இயக்குநர் இருந்ததாகவே பாலசந்தர்
      காட்டிக்கொள்ளவில்லை !)

      பாலசந்தர் பல படங்களை பிற மொழிகளிலிருந்து
      தழுவி /ரீமேக் செய்து எடுத்திருந்தாலும்,
      அந்த செய்தி வெளிவராமல் பார்த்துக்
      கொள்கிறார்.அதன் ஒரிஜினல் க்ரியேட்டருக்கு
      போய்ச்சேர வேண்டிய புகழையும், பாராட்டையும்
      சற்றும் தயக்கம் இல்லாமல் இவர்
      பெற்றுக்கொள்கிறார்.

      பாலசந்தர் திறமைசாலி.
      தொழில் தெரிந்த நல்ல இயக்குநர்.
      பல நல்ல படங்களை தந்துள்ளார் என்பது
      உண்மையே. நான் அதை மறுக்கவில்லை.

      அதே சமயம் அவரது படைப்புகளும்,
      செயல்பாடுகளும் – புனிதமானவையோ,
      விவாதத்திற்கு
      அப்பாற்பட்டவையோ அல்ல.

      மிகச்சிறந்த இயக்குநர்களான சத்யஜித் ராயோ,
      சாந்தாராமோ – என்றுமே வியாபார நோக்கில்
      கேவலமான குணசித்திரங்களை
      உருவாக்கியதில்லை. எனவே தான் அவர்கள்
      மீது இத்தகைய விமரிசனங்கள் வந்ததில்லை.

      ஆனால் -பாலசந்தரின் விசேஷமே –
      விசித்திரமான,
      வில்லங்கமான,
      குணாதிசயங்களுடன்
      பாத்திரங்களை உருவாக்குவதுடன்,
      முறையற்ற உறவுகளையும்
      விவஸ்தை கெட்ட நடத்தைகளையும்
      விஸ்தாரமாகக் காட்டுவது தான்.

      அவரது சில படங்கள் கேவலமான விதத்தில்
      முறையற்ற உறவுகளையும்
      விவஸ்தை கெட்ட குணங்களையும்
      கதாபாத்திரங்கள் மூலம் காட்டி வியாபாரம்
      செய்ய உதவின என்பதை மறுக்க முடியாது.

      நீங்கள் ஒருவேளை பாலசந்தரின்
      தீவிர அபிமானியாக இருக்கலாம். இருந்தாலும்,
      பிடிக்கிறதோ – பிடிக்கவில்லையோ,
      உண்மைகளை ஒப்புக்கொள்ளும் மனப்போக்கு
      இருந்தால் தான் நாம் வளர முடியும் –
      இல்லையா ?

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  9. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ஒரு நண்பர் surferzworld என்கிற விலாசத்துடன்
    புன்னகை படத்திற்கான லிங்க் என்று
    வியாபார நோக்கிலான ஒரு தளத்திற்கு லிங்க்
    கொடுத்திருக்கிறார்.. எனவே அந்த மறுமொழியை
    இங்கே தவிர்த்திருக்கிறேன்.

    அந்த பெயர் கூறாத நண்பருக்கு –
    தயவு செய்து தேவை இல்லாத இடத்திற்கு எல்லாம்
    அழைத்துச் செல்ல முயற்சிக்க வேண்டாம்.
    டைட்டிலில் மூலக்கதை ஆசிரியர் பெயர்
    வந்திருக்கிறது என்பதை ஏற்கெனவே
    நண்பர் பாண்டியன் கூறி இருக்கிறார்.
    நீங்கள் கூற வந்த விஷயத்திற்கு நான் மேலே
    விளக்கம் கூறி இருக்கிறேன்..

    இந்த தளத்தை தவறாகப் பயன்படுத்த
    முயற்சி செய்ய வேண்டாம்.நீங்கள் கொடுக்கும்
    லிங்க் சட்டபூர்வமானது அல்ல.

    -காவிரிமைந்தன்

  10. P Rajeswaran's avatar P Rajeswaran சொல்கிறார்:

    KB’s products were a mix of originals, re-makes and full or partial copies. Even the scene in ‘MoonrU MUdichu’ where kamal drowns & Rajni doesn’t save him despite SriDevi’s pleas, was ‘shot’ from a double XX rated movie in which ‘an elder brother falls form the boat and is not delibertely saved by his sister & her illicit lover who rows the boat’. I can list quite a number of scene like that. Paying due credits to the original (idea or person) has not been in the good habots of some of our ‘great’s unfortunately. But we cannot deny the fact that he is a talented director. He introduced scores of actors who later became glittering stars. He had an eye for spotting talent. Let us give him credit for those ‘plus points’ and forgive him for his ‘lapses’!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.