வித்தியாசமாக ஒரு ஆய்வு ….முன்பு சிந்து சமவெளியில் இருந்ததும் தமிழர்களே …!!!

……………………………………

……………………………………

…………………………………………………………………………………………………………

“1924 செப்டம்பர் 20-ல்தான் சிந்து சமவெளி நாகரிகம் பற்றி
முதன்முதலில் லண்டனில் அறிவித்தார் தொல்லியல் ஆய்வாளர்
சர் ஜான் மார்ஷல். அடுத்த ஆண்டு சிந்துவெளி ஆய்வுக்கு
நூற்றாண்டு.

அதற்கு ஓராண்டுக்கு முன்பு ‘ஒரு பண்பாட்டின் பயணம் :
சிந்து முதல் வைகை வரை’ நூல் வெளியாகியிருக்கிறது’’ –
மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ததும்பப் பேசுகிறார்
ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.

சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் தமிழ்மொழிக்கும் உள்ள உறவு
குறித்த இவரது ‘Journey of a Civilization: Indus to
Vaigai’ நூல் 2019-ல் வெளியானபோது பல தாக்கங்களை
ஏற்படுத்தியது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது
வெளியாகியிருக்கும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு,
பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

35 ஆண்டுக்கால இந்திய ஆட்சிப்பணியில் இந்தியாவின்
பல மாநிலங்களில் பணியாற்றிய ஆர்.பாலகிருஷ்ணன், அங்கு
பல ஊர்களின் பெயர்களும் மனிதர்களின் பெயரும் தமிழ்ப்
பெயர்களாகவும் தமிழ்ப்பெயர்களை ஒத்த பெயர்களாகவும் இருப்பதை
அறிந்து வியந்தார். சங்க இலக்கியத்தில் காணப்படும் சிந்துசமவெளி
குறித்த தடயங்களையும் அதனுடன் இணைத்துப்பார்த்தார்.
அகழ்வாய்வு, மொழியியல், பெயராய்வு, இலக்கியச்சான்றுகள்,
கல்வெட்டுகள், சமூக மரபுகள் ஆகியவற்றின் அடிப்படையில்
இவரது ஆய்வுகள் அமைந்திருப்பதால், நூல் வெளியீட்டுவிழா
மேடையில் மானுடவியல் ஆய்வாளர் பக்தவச்சல பாரதி
‘இது ஆய்வுமுறைகளினூடாக – ஆய்வுமுறைகளைக் கடந்த ஆய்வு’
(Trans-disciplinary research) என்று குறிப்பிட்டுப்
பாராட்டினார். ‘‘இதுவரை திராவிட இயக்கத்தினர் சங்க இலக்கியம்
பற்றிப் பேசும்போதெல்லாம் ‘அது இலக்கியம்தானே, வரலாறு
இல்லையே’ என்று பலர் சொன்னார்கள்.

இப்போது அது வரலாறு என்று நிறுவ ஒரு நூல் கிடைத்திருக்கிறது. சொல்லியலாக இருந்த சங்க இலக்கியத்தைத் தொல்லியல் சான்றாக மாற்றியமைத்திருக்கிறார் பாலகிருஷ்ணன் …

பாலகிருஷ்ணன் சொல்கிறார் –

சிந்துசமவெளி நாகரிகம் திராவிடப் பண்பாடு என்பது புதிய
விஷயமில்லை. சிந்து சமவெளி நாகரிகம் பற்றி முதன்முதலில்
சர் ஜான் மார்ஷல் அறிவித்த அதே 1924-ம் ஆண்டு டிசம்பரில்
‘மாடர்ன் ரிவ்யூ’ இதழில் சுனிதி குமார் சட்டர்ஜி என்ற ஆய்வாளர் ‘திராவிடர்களின் தோற்றமும் இந்தியப் பண்பாட்டின் தொடக்கமும்’
என்னும் கட்டுரையை எழுதினார்.

‘சிந்து சமவெளி நாகரிகம் ஆரியருக்கு முற்பட்டது,
ஆரியர் அல்லாதது; திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது’ என்று
அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டார்.
அஸ்கோ பர்போலா போன்ற வெளிநாட்டு அறிஞர்களும் ஐராவதம்
மகாதேவன் போன்றோரும் திராவிடக் கருதுகோளை
முன்வைத்திருக்கிறார்கள்.

இந்திய வரலாற்றில் இரண்டு முக்கியமான புதிர் முடிச்சுகள்
உள்ளன. சிந்து சமவெளி மக்கள் யார், அவர்களின் மொழி என்ன,
அவர்கள் எங்கு போனார்கள் என்பது ஒரு புதிர் முடிச்சு.

அதேபோல் திராவிட மொழிகளின் தோற்றம் என்பது
இன்னொரு புதிர் முடிச்சு. இரண்டு புதிர்
முடிச்சுகளுக்கான விடைகளைத் தேடும் முயற்சிதான் என் ஆய்வு.

‘சிந்துசமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட
இடமும் ஒன்றே’ என்பதை என் ஆய்வுகள் மூலம்
முன்வைத்திருக்கிறேன்.

திராவிடக் கருதுகோள் முன்வைக்கப்பட்ட காலங்களிலேயே
சிந்து சமவெளி நாகரிகம் இந்தோ ஆரிய நாகரிகம், வேதப்பண்பாடு
என்ற கருத்தும் சிலரால் முன்வைக்கப்பட்டது. ஆனால் தமிழுக்கும் சிந்துவெளிக்குமான தொடர்புதான் அதிகம் என்பதற்கான விரிவான தரவுகளைத் திரட்டி நூலாக்கியிருக்கிறேன்.

இந்த நூல் இந்தியாவின் பன்மியத்தைக் கொண்டாடுகிறது.
எந்த இனத்தையும் வெளித்தள்ளவில்லை. வெறுப்புணர்வு இல்லாத பொறுப்புணர்வுதான் இந்தப் புத்தகத்தின் அடிப்படை.

அதனால்தான் இந்த நிகழ்ச்சியிலேயே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற வாக்கியத்தை ஒடிசாவைச் சேர்ந்த மணல்சிற்பக் கலைஞர்
சுதர்சன் பட்நாயக் உருவாக்கியிருந்தார்.
சிந்து சமவெளியில் கிடைத்த குடித்தலைவர் சிலை, கீழடிப் பானை
உருவத்தை ஒடிசாவைச் சேர்ந்த சிற்பக்கலைஞர் அசோக்
மகாராணாவைக் கொண்டு உருவாக்கி
முதல்வர் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகளாக
வழங்கினோம்.

‘‘தமிழர்களுக்குத் தொன்மையான வரலாறு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் சிலரே ‘உங்கள் ஆய்வுகள் தமிழர்களை
வெளியிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களாகக் காட்டுவது தவறு’
என்று கூறுகிறார்களே…..?’’ என்கிற கேள்விக்கு –

‘‘வரலாற்று ஆய்வு என்பது உறுதி செய்யப்பட்ட தரவுகளை
அடிப்படையாகக் கொண்டதே தவிர, நம் அரசியல் விருப்பங்களைச்
சார்ந்தது அல்ல.

சிந்துசமவெளியில் நிலவியது வேதகாலப் பண்பாடு என்று ஒருசாரார் கூறிவந்தனர். அதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. ஆனால்
அது திராவிடப் பண்பாடு என்பதற்கும், தமிழுக்கும் அந்தப்
பண்பாட்டுக்கும் பிணைப்பு இருக்கிறது என்பதற்கும் சங்க
இலக்கியமே சாட்சி.

வடமொழி இலக்கியங்களில் தென்னிந்தியா பற்றிய விரிவான,
தெளிவான சித்திரிப்புகள் இல்லை. ஆனால் நம் பழந்தமிழ்
இலக்கியங்களில் வட இந்தியா பற்றிய வியப்பூட்டும் சித்திரிப்புகள்
உள்ளன.

பனிமலைகள், பாலைவனங்கள், ஒட்டகம் போன்றவை சங்க
இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன. ஆண் ஒட்டகம், பெண் ஒட்டகம், ஒட்டகக் குட்டியை எப்படி அழைப்பது என்று இலக்கணம் சொல்கிறது தொல்காப்பியம். ஒட்டகம் சுமை தூக்கப் பயன்படுத்தப்பட்டதையும்
அப்படி சுமை தூக்கிச் செல்லும்போது அந்த ஒட்டகம் எலும்பைத் தின்று
பசி ஆறியதையும் சங்க இலக்கியம் பாடுகிறது.

ஒட்டகமே இல்லாத தமிழ்நிலத்தில் இது எப்படி சாத்தியம்?
வடக்குநிலப்பகுதிகள் குறித்த சித்திரிப்புகள் தமிழ் இலக்கியத்தில்
எப்படி வந்தன?

சங்க இலக்கியம் என்பது அப்போதைய சமகால இலக்கியப்பதிவுகள்
மட்டும் அல்ல. பழங்கால புலப்பெயர்வுகள் பற்றிய மீள்நினைவுகளை உள்ளடக்கிய வாய்மொழி மரபுகளின் ஆவணப்பதிவும் ஆகும்.
அதனால் அதை நான் பல்லடுக்கு இலக்கியம் என்கிறேன். இதற்கான
விரிவான ஆதாரங்களை நான் இந்த நூலில் முன்வைத்திருக்கிறேன்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்திருக்கும் செம்பு, வெண்கல உலோகக்
கலவைகள் பற்றிய தடயங்கள், உலோகக் கைவினைச் சிற்பங்கள்,
கீழடி போன்ற இடங்களில் கிடைக்கும் சிந்துவெளிக் குறியீடுகள்
போன்ற பானைக் கீறல்கள் ஆகியவை இந்த முடிவுகளுக்கு
வலுச்சேர்க்கின்றன. இதுவரை இந்தியாவில் நிலவிய நகர்மயப்பண்பாடுகளிலேயே பழைமையான பண்பாடு சிந்துவெளி நாகரிகம்தான் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
நாளையே அதைவிடப் பழைமையான நகரத்தைத் திருநெல்வேலியிலோ மதுரையிலோ கண்டுபிடித்தால் நம் ஆய்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்யலாம்.

ஆனால் இப்போதைய தரவுகளின் அடிப்படையில் சங்க இலக்கியம்
படைத்த மக்களின் மூதாதையர்கள் அதற்கும் முந்தைய‌ காலகட்டத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள்;
அதன் மீள்நினைவுகள் சங்க இலக்கியங்களில் ஆவண வடிவம்
பெற்றுள்ளன என்பதை நான் முன்வைக்கிறேன்.

அதற்காக இந்தியாவின் பிற பகுதிகள், குறிப்பாக தென்இந்தியா
யாருமற்ற வெற்றிடம் என்பது பொருள் அல்ல. தென்னிந்தியப்
பகுதிகளில் பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
புதிய கற்கால வாழ்வியல் சான்றுகள் உள்ளன.

ஆனால் நாம் இப்போது ஆய்வுக்கு உட்படுத்துவது
பண்பட்ட நகர்மயப்பண்பாடு; வெளிநாட்டு வணிகத்தை
உள்ளடக்கிய வாழ்வியல் ஆகியவற்றின் தோற்றம்
தொடர்ச்சி பற்றித்தான். நிலைத்த வேளாண்மை, உபரி உற்பத்தி, பண்டங்களுக்கு மதிப்புக்கூட்டும் கைவினைநுட்பம், வெளிநாட்டு வணிகத்தொடர்பு ஆகியவை இன்றி இது சாத்தியம் இல்லை.

மேலும், புலம்பெயர்வு என்பதையே இழிவாகப் பார்க்க
வேண்டியதில்லை. மனித வரலாறு பயணங்களால்
கட்டமைக்கப்பட்டது. குத்தவைத்து உட்கார்ந்து குளிர்காய்ந்தவன்
இன்னும் குகையில்தான் நிற்கிறான்.
நகர்ந்து வந்தவர்களே நாகரிகம் படைத்தார்கள்.
பயணத்தின் திசையைவிடப் பயணம் முக்கியம்.
பயணத்தைவிடப் பயணி முக்கியம்.
பயணத்தால் பட்டை தீட்டப்பட்ட ஒரு பண்பாட்டில்தான்
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘எத்திசை செல்லினும்
அத்திசை சோறே’, ‘பெரிதே உலகம் பேணுநர் பலரே’ போன்ற
கருத்தாக்கங்கள் வெளிப்படும்.

வடவேங்கடம் முதல் தென்குமரி வரை என்று சங்க இலக்கியம்
சொல்லும் அரசியல் நிலப்பரப்பும் சங்க இலக்கிய மீள்நினைவில்
உள்ள நிலப்பரப்பும் ஒன்று கிடையாது.

நான் உறுதியாகச் சொல்கிறேன்.
தமிழ் ஒரு மாநிலத்தின் மொழியல்ல;
மாவட்டத்தின் மொழியல்ல,
அது ஒரு நாகரிகத்தின் மொழி.
நம் சங்க இலக்கியம் இந்தியத் துணைக்கண்டத்தின்
நாடு தழுவிய இலக்கியம்.’’

‘‘மண்பாண்டங்கள் பற்றிய ஆய்வுகள் மட்டுமே தொல்லியல்
ஆய்வு கிடையாது என்று சில எதிர்க்குரல்கள் கேட்கின்றனவே…?’’

‘‘பானையை வைத்துத்தான் வரலாற்று ஆய்வைச் செய்ய முடியும். செங்கற்களால் கட்டப்பட்ட நாகரிகம் சிந்து சமவெளி. அங்கு சுட்ட
செங்கல்கள் மில்லியன் கணக்கில் இருக்கின்றன. செங்கல்
செய்பவர்களும் பானை வனைபவர்களும்தானே இந்த நாகரிகத்தின் அடிப்படைகள். அவர்களை விட்டுவிட்டு எப்படி வரலாற்றாய்வு
செய்ய முடியும்?

பானைகளின் முக்கியத்துவத்தைத் தெளிவாக அறிந்தவர்கள் வரலாற்றாய்வாளர்கள். இந்தியத் தொல்லியல் கழகத்தின்
தலைவராக இருந்த பி.பி.லால் 1969-ல் பாட்னாவில் நடைபெற்ற
இந்திய மட்பாண்டங்கள் பற்றிய தேசியக் கருத்தரங்கத்தில் பேசிய
ஒரு உரையே உதாரணம்.

‘பழந்தமிழ் இலக்கியங்கள் ரோமிலிருந்து இந்தியாவுக்கு ஒயின்
இறக்குமதி செய்யப்பட்டதைத் தெரிவிக்கின்றன. இலக்கியத்தில்
கூறப்படும் இந்தத் தகவலை வரலாறாக உறுதிசெய்ய முடியுமா…?

அரிக்கமேட்டில் கனமான இரு கைப்பிடிகளுடன் கூடிய கூம்பு வடிவ
மது ஜாடிகள் கிடைத்துள்ளன. இந்த ஜாடிகளின் உட்புறத்தில்
ஒட்டியிருந்த உதிர் துகள்களை வேதியியல் பரிசோதனை செய்தபோது அவற்றில் ஒயினின் எச்சமான பிசின் போன்ற பொருள்கள்
காணப்பட்டன’ என்றார். எனவே வரலாற்று ஆய்வுகளில்
பாண்டங்களைப் புறக்கணித்துவிட முடியாது.

மட்பாண்டங்கள் செய்பவர்களைக் கலம் செய் கோ, முதுவாய் குயவ,
வேட்கோ என்று கொண்டாடிய தமிழ் மரபிலிருந்து வரலாற்றைப் பார்ப்பவர்களுக்கும் பானை செய்யும் குயவர்களை சாதிய அடுக்கில் இழிவாகப் பார்ப்பவர்களுக்கும் வித்தியாசமிருக்கிறது.
தமிழ் மரபில் பானைகளைச் செய்யும் குயவர்கள்தான் நகரத்தின்
விழாக்களை அறிவிக்கிறவர்கள்; பலிக்கல்லுக்குப் படையலிட்டு
சாமியாடி வருபவர்கள். மதுரை மாவட்டத்தில் இன்றளவும் பூசாரிகளாக இருப்பவர்கள் குயவர்கள். கீழடி அருங்காட்சியகத்தில்
ஒரு கட்டடத்துக்குப் பெயரே ‘கலம் செய் கோ’ என்று
சூட்டப்பட்டிருக்கிறது. ஆனால் ரிக் வேதத்தின் புருஷ சூக்தமோ
பாண்டங்கள் செய்பவர்களை சூத்திரர்கள் என்று வரையறுக்கிறது.
அந்த மரபின் தொடர்ச்சியாகத் தங்களைக் கருதுபவர்கள்
‘மண்பானைகளை ஆய்வு செய்வதெல்லாம் ஓர் ஆய்வா?’
என்று கேட்கத்தானே செய்வார்கள்.’’

‘‘முக்கியமான ஆய்வுகளை முன்வைத்திருக்கிறீர்கள். இதன்
அடுத்தகட்ட நகர்வுகள் எப்படி இருக்க வேண்டும் என்று
கருதுகிறீர்கள்……?’’

‘‘நான் முன்பு சொன்னதைப்போல் வரலாற்றின் இரண்டு
புதிர் முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் இருப்பதற்கான காரணங்களில்
ஒன்று தமிழ்நாட்டில் போதுமான அகழாய்வுகள் நடைபெறாமல்
இருந்தது. இப்போது முழுவீச்சில் கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர்
என்று அகழாய்வுகள் நடக்கின்றன. இந்த ஆய்வுகளில் கிடைக்கும்
பல அம்சங்கள் நமக்கு சிந்துசமவெளியை நினைவுபடுத்துகின்றன.
இந்த ஆய்வுகள் மேலும் மேலும் தீவிரத்துடன் நடத்தப்பட வேண்டும்.

இன்றைய தேதியில் சிந்துவெளி, ஹரப்பா நகர்மயப் பண்பாட்டின்
தெற்கு எல்லை மகாராஷ்டிராவின் தைமாபாத்தில் முடங்கிக்
கிடக்கிறது.

தைமாபாத்துக்கும் கீழடிக்கும் இடையே அகழாய்வு
செய்யப்பட வேண்டிய எத்தனையோ தொல்லியல் நகரங்கள்
இருக்கின்றன. எதிர்கால அகழ்வாராய்ச்சிகள் இந்த எல்லையை
மேலும் தெற்கு நோக்கி நகர்த்தக்கூடும். அதன்மூலம் நமக்குக்
கிடைக்கும் தரவுகள் வரலாற்றின் புதிர்முடிச்சுகளை அவிழ்க்கக்கூடும்.
வரலாறு என்பது உறைபனி அல்ல; ஓடும் நதி’’ ——-என்கிறார் ஆர்.பாலகிருஷ்ணன்.

.
…………………………………………………………………………………………………………..…..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to வித்தியாசமாக ஒரு ஆய்வு ….முன்பு சிந்து சமவெளியில் இருந்ததும் தமிழர்களே …!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    நல்ல செய்திகளையும் ஆராய்ச்சி பற்றிப் பிறருக்குப் புரியுமாறு எழுதுபவர்களும், நல்ல அறுசுவை உணவை இலையில் பரிமாறி, ஒரு ஓரத்தில் மலத்தை வைப்பதுபோல் எழுதுவது அருவருப்பாக எனக்கு இருக்கிறது.

    //பானை செய்யும் குயவர்களை சாதிய அடுக்கில் இழிவாகப் பார்ப்பவர்களுக்கும் // – ஆராய்ச்சி நோக்கில் செல்லும் அகழ்வாராய்ச்சிகளை, சாதியைப் பார்த்து ஆராயவேண்டாம் என்று யாரேனும் சொல்லியிருக்கிறார்களா? இல்லை இழிவாக யார் பார்த்தார்கள்? இந்த மாதிரி நினைவே என் வாழ்வில் எழுந்ததில்லை. எல்லோருமே எனக்கு நண்பர்களாக இருந்தனர். என்ன ஒன்று, அவர்கள், தேவர் நண்பர்கள் போன்றவர்கள் கல்லூரியில் நுழையாமல் அவரவர் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். என்ன ஒண்ணு… அவர்கள் (குயவர்கள்) பானை வடித்த இடங்கள், செங்கல் சுட்ட இடங்கள் இப்போது நான் வாழ்ந்த கிராமத்தில் வெறுமையாக இருக்கின்றன. அவர்கள் எங்கே போனார்கள், அந்தத் தொழில் என்னானது என்றே தெரியவில்லை.

    பல தன் வரலாற்று நூல்களிலும் இந்த சாதி பேதத்தைக் குறிப்பிடும் விதமாக நான் படித்ததில்லை. உ.வெ.சாமிநாத ஐயர், அவரது புத்தகத்திலும் சென்ற நூற்றாண்டில் (அதாவது 1870 களில்) அந்த மாதிரி சாதி வித்தியாசம் பெரிதாக இருந்ததில்லை என்றே எழுதியிருக்கிறார்.

    நிற்க…. பூம்புகார் போன்ற பல கடல் வணிகம் நடைபெற்ற இடங்களைக் கடல் கொண்டுவிட்டது. குமரிக் கண்டத்திலும் ஏராளமான பண்டைய நாகரிகத்துக்குச் சான்றாக உள்ள இடங்கள் இருக்கும். மதுரையில் கோவிலிலிருந்து 3/4 கிமீ தூரத்தில் மதுரையைச் சுற்றி கோட்டைச் சுவர்கள் இருந்தன. நம் கண் முன்னாலேயே அவைகள் அழிந்துபட்டுவிட்டன.

    நான் இணையத்தில் சில காணிளிகள் பார்த்தேன். ரொம்ப இண்டெரெஸ்டிங். இராமாயணத்தில் வரும் சில நிகழ்வுகள் போன்றவற்றைச் சொல்லி, அவற்றை மெக்சிகோ இன்னும் பல இடங்களில் உள்ள சமூகத்தையும், அங்குள்ள அடையாளங்களையும் ஒப்பீடு செய்து, அந்த இடங்களைத்தான் இராமாயணம் சொல்கிறது என்று ஆய்வாளர் சொல்லும் காணொளி. பாதாள உலகம் என்பதையும் இராமாயணத்தில் உள்ள வரிகளை வைத்து விவரித்தது அந்தக் காணொளி. முடிந்தால் பகிர்கிறேன்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ..
      புதியவன்,

      இடுகையில் சொல்லப்படுவது இறுதியானதல்ல…
      அது அந்த ஆய்வாளரின் பார்வை -கோணம்
      என்கிற அளவிற்கே எடுத்துக் கொள்ளப்பட
      வேண்டும்.

      அதனால் தான், இடுகையில் என் கருத்து
      எதையும் சொல்லாமல், தனியே தருகிறேன்.

      இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது
      அவ்வளவு எளிதானதல்ல… இன்னும்
      எத்தனையோ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட
      வேண்டும்…. அப்போதும், ஓரளவு யூகிக்கலாமே தவிர,
      சான்றுகளுடனான உறுதியான முடிவாக அது இருக்காது.

      என் பங்குக்கு, கீழே நான் சில செய்திகளைச்
      சொல்கிறேன்…விவாத மேடைக்காக –

      ………….
      சிந்து சமவெளி காலமென்று தோராயமாக
      கி.மு 2600 இலிருந்து 1900 வரை சொல்லப்படுகிறாது….

      அதற்கும் முற்பட்டவர் அகத்தியர் …

      ராமாயண காலத்திற்கும் முற்பட்டவர்,
      தமிழ் முனிவரான அகத்தியர்.

      தமிழுக்கு, முதன் முதலில் –
      தொல்காப்பியத்துக்கும் முன்பாக –
      இலக்கணம் வடித்தவர் அகத்தியர்.

      ரிக் வேதத்தில் சில பகுதிகள் அகத்தியரால்
      இயற்றப்பட்டதாக வருகின்றன. …

      Agastya is the named author of
      several hymns of the Rigveda…

      எனவே, வேதகாலத்தையவர் அகத்தியர்
      என்று சொல்ல வேண்டும்…
      எனவே தமிழும், வேதகாலத்திற்கு முந்தையது…

      Archaeological evidence points
      archeologists from the Archaeological
      Survey of India (ASI) unearthed 169
      clay urns containing human skulls,
      skeletons, bones, husks, grains of rice,
      charred rice and celts of the
      Neolithic period, 3,800 years ago.
      The ASI archaeologists have proposed
      that the script used at that site is
      “very rudimentary” Tamil Brahmi.
      About 60,000 of the one-lakh odd
      inscriptions in India are in Tamil Nadu.
      More than 57% of the epigraphical
      inscriptions, about 57,000, found by
      the Archaeological Survey of India
      in India are in Tamil.

      எனவே, தமிழர் வடக்கேயிருந்து வந்தவர்களும் அல்ல.
      வடமொழி தெரியாதவர்களும் அல்ல….

      சம்ஸ்கிருதம் தெரியாமல், கம்பர் தமிழில்
      ராமாயணத்தை இயற்றியிருக்க முடியுமா….?

      தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும்,
      வேதங்கள் பற்றி ( நான்மறை…) சொல்லப்படுகிறது.

      …………………….

      எனவே, ஒரு வித்தியாசமான கோணம் என்கிற அளவிற்கே
      இந்த ஆராய்வாளரின் கருத்துகள் எடுத்துக்கொள்ளப்பட
      வேண்டும்….

      இன்னமும்- மிக மிக ஆழமான ஆராய்ச்சிகள்
      பல மேற்கொள்ளப்பட வேண்டும்….
      காத்திருப்போம் ….!!!

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • புதியவன் சொல்கிறார்:

        //எனவே தமிழும், வேதகாலத்திற்கு முந்தையது…//

        மொழியில் இரண்டுமே காலத்தால் முற்பட்டவை. இலக்கணம், மொழிச்சுவை என்று பலவற்றிலும் இது பெரிது என்று சொல்ல முடியாது. திருவாய்மொழி (4000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொல்லப்படுகிறது. ஆயினும் 3-4ம் நூற்றாண்டாக இருந்திருக்கலாம்) திராவிட வேதம் என்றே அழைக்கப்படுகிறது. வேதத்திலாவது, இதுதான் சரியான கருத்து என்று அறுதியிட முடிவதில்லை (அதனால்தான் த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம்… என்றெல்லாம் interpretations) ஆனால் திருவாய்மொழி clear cut ஆக அறுதியிடுகிறது என்று சொல்வர். ஆனால் இந்த இரண்டு மொழிகளும்தான் பாரதத்தின் (அகண்ட பாரதம்) மொழிகள் என்று உறுதியாகச் சொல்லலாம்.

        //About 60,000 of the one-lakh odd inscriptions in India are in Tamil Nadu.// இவர்கள் inscriptions என்று சொல்வது, கல்வெட்டுகளையா என்று தெரியவில்லை. கல்வெட்டுகள் என்றால், என் அனுபவப்படி, தெற்குப் பிராந்தியத்தில்தான் அதிலும் கோவில்களில் கல்வெட்டுகள் பதிப்பது என்று இருந்திருக்கிறது. வட்டெழுத்து, பிராமி என்று ஆரம்பித்து கல்வெட்டுத் தமிழ் வளர்ந்திருக்கிறது. கல்வெட்டுகளிலும், தெளிவாக இருப்பதாக நான் நினைப்பது ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய தஞ்சை பெரியகோவில். எப்படி வரலாற்றை எழுதிவைக்கணும் என்பதில் சோழ மன்னர்கள்தாம் மிகச் சிறந்தவர்களாக இருந்திருக்கின்றனர். அந்தக் கல்வெட்டைப் பார்த்தாலே (படிக்கத் தெரியவேண்டாம்) ஒவ்வொரு தமிழனும் பெருமிதம் கொள்ளலாம். வட இந்தியாவில் கல்வெட்டு என்பது மிகவும் அரிது. ஆனால் ஓலைச் சுவடியில் எழுதிவைப்பது காலம் காலமாக இருந்திருக்கிறது. தமிழிலும், வடமொழியிலும். இராமானுஜர், தன் சீடர் கூரத்தாழ்வானுடன் (900 ஆண்டுகளுக்கு முன்) காஷ்மீர் எல்லைக்கப்பால் சரஸ்வதி பண்டாரத்திலிருந்து பிரம்மசூத்திரம் என்ற புத்தகத்தை-ஓலைச் சுவடி வாங்கிக்கொண்டு வந்திருக்கிறார். காஷ்மீர்தான் சைவ மதத்தின் பிறப்பிடமாக இருந்தது என்றும், அங்கு கணக்கிலடங்கா அறிஞர்கள் இருந்தனர் என்றும் படித்திருக்கிறேன். காலடியில் பிறந்த ஆதிசங்கரர் காஷ்மீரம் வரை சென்றிருக்கிறார், பத்ரிநாத் போயிருக்கிறார், அவரது வரலாறு வட இந்தியாவில் இருந்த நூலகங்களைப் பற்றியும் அறிஞர்களைப் பற்றியும் சொல்லும் (6ம் நூற்றாண்டு?)

        எனக்கு, தமிழ் பக்தி இலக்கியங்களின் மற்றும் திருக்குறளின் காலம், 4ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகத்தான் இருந்திருக்கணும் என்று தோன்றும். ஆனால் வைணவ ஆச்சார்யர்களின் கருத்துப்படி, வைணவ தமிழ் பக்தி இலக்கியங்கள் 4000 வருடங்களுக்கும் முற்பட்டவை. (அதன் தமிழ்ச் சொல் வீச்சு, வார்த்தைகள் போன்றவை, 4ம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாகத்தான் இருக்கணும் என்று என்னை நம்பவைக்கிறது)

        மஹாபாரதம், போரில், எல்லா அரசர்களும் கலந்துகொண்டனர் (பாண்டியர்கள் உட்பட). ஆனால் சேர மன்னன், இரு படைகளுக்கும் பொதுவாக, உணவு தயாரிக்கும் பணியை மேற்கொண்டான், அவன் அதனால் பெருஞ்சோற்றுச் சேரலாதன் என்று அழைக்கப்பட்டான் என்று சொல்கிறது.

        கோவில்களையெல்லாம் (ஓரளவு) பார்த்த பிறகு, தமிழன், உலோகத்தை உபயோகப்படுத்துவதில், சிற்பக் கலையில் மிகத் திறமை வாய்ந்தவனாக இருந்தான் என்று தோன்றுகிறது. ஹொய்சாளர்கள் கால கட்டிடக் கலை, அஜந்தா எல்லோரா போன்றவைகளும் அசரடிக்கக்கூடியவை. வட இந்தியாவில், அப்படி என்னை அசரடிக்கும் சிற்பங்களை நான் கண்டதில்லை. இதுபற்றி பிறகு நேரம் வாய்க்கும்போது எழுதுகிறேன்.

  2. புதியவன் சொல்கிறார்:

    //இப்போதைய தரவுகளின் அடிப்படையில் சங்க இலக்கியம்
    படைத்த மக்களின் மூதாதையர்கள் அதற்கும் முந்தைய‌ காலகட்டத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள்// – இதுவுமே எனக்கு funnyயாகத் தெரிகிறது. (அப்படீன்னா தமிழர்களும் வெளியிலிருந்து வந்தவுக தானா? இதுவரை ஆரியர், திராவிடர் என்று கோஷம் போட்டதெல்லாம் வீணா? என்று மீம்ஸ் போட உபயோகம்).

    பஹ்ருளி ஆறு, குமரிமுனைக்குக் கீழே ஒரு கண்டமே பரந்து விரிந்துகிடந்தது (இராமாயண காலத்துக்கு முன்பு என்று நினைக்கிறேன்), அதற்கு லெமூரியா என்றொரு பெயர் (லெமூரியாக் கண்டம் என்று ஒரு பிரிட்டிஷ் ஆய்வாளர்தான் பெயர் கொடுத்திருக்கிறார் என்று நினைவு). We belong to south india and might have moved upwards. Our culture was different and our skillset was very good compared to others

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s