எடப்பாடி & கோ – சந்திப்பில் நடந்தது உண்மையில் இது தானா….???

…………

……………….

டெல்லியில், அமீத்-ஜி மற்றும் எடப்பாடியார் கம்பெனி சந்திப்பு
குறித்து முதலில் பத்திரிகைகளில் என்னென்னவோ கதை
விட்டிருந்தார்கள். இப்போது விகடன் தளம் சொல்வதை கேட்டால்,
கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறது…. அந்த சந்திப்பு குறித்து,
வாசக நண்பர்களும் தெரிந்து கொள்வதற்காக – விகடன் தளம் தந்திருப்பதிலிருந்து …….. கொஞ்சம் மட்டும் கீழே …!!!

……

“கூட்டணி குறித்துத் தீர்மானிக்கக்கூடியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். நாங்கள் ‘பாஸ்’கூடத்தான் பேசுவோம். மாநிலத் தலைவர்களுடன் அல்ல. அண்ணாமலை குறித்து என்னிடம் பேசாதீர்கள்” என ‘கட் அண்ட் ரைட்’டாகச் சொன்னார் எடப்பாடி. இந்த ‘சவுண்ட்’ எல்லாம் அவர் டெல்லிக்குச் செல்லும் வரையில்தான்.

ஏப்ரல் 27-ம் தேதி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய எடப்பாடி, ஒரேயடியாக அந்தர் பல்டி அடித்தார். “எங்களுக்கும் அண்ணாமலைக்கும் எந்தத் தகராறும் இல்லை. அருள்கூர்ந்து இதற்கு மேல் கேட்காதீர்கள்” எனச் சொல்லி செய்தியாளர்களையே மிரளவைத்தார்.

கடந்த ஆண்டு நவம்பரில், அமித் ஷா சென்னைக்கு வந்தபோது,
‘அவரைச் சந்திக்கவேண்டிய அவசியமில்லை’ என்று தைரியமாகப்
பேட்டி கொடுத்தவர், திடீரென இப்படித் தலைகீழாகப் பதுங்குவதை
அ.தி.மு.க சீனியர் நிர்வாகிகளே ரசிக்கவில்லை. சரி, இதோடு தாமரையும் இலையும் சமரசமாகிவிட்டனவா என்றால், இல்லை.

“25 சீட்டுகள் வேண்டும். நாங்கள்தான் கூட்டணிக்குத் தலைமை”
என பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கத்தியை எடுத்து வீச… பதிலுக்கு, “இதற்கு அண்ணாமலை விளக்கமளிக்க வேண்டும்” என
வாளைத் தூக்கி வீசினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக, இரு கட்சிகளுக்குமிடையேயான வார்த்தைப்போர் வலுத்துக்கொண்டேதான் போகிறது. அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி உறவில் என்னதான் நடக்கிறது… டெல்லியில் அப்படி என்னதான் பேசப்பட்டது… விரிவாக விசாரித்தோம் …..!

நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சிலர், “அ.தி.மு.க பொதுச்செயலாளர் அங்கீகாரத்தைத் தேர்தல் ஆணையம்
எடப்பாடிக்கு வழங்கியவுடன், அவரைச் சந்தித்த முன்னாள்
அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும், ‘டெல்லிக்குச் சென்று
அமித் ஷாவிடம் பேசிவிட்டு வருவோம்’ என்றனர். இதைத்
தொடக்கத்தில் எடப்பாடி ஏற்கவில்லை. ஆனால், அவர்கள்
விடாப்பிடியாக நச்சரித்தனர்.

அ.தி.மு.க ஆட்சியில், ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சராக வேலுமணி இருந்தபோது, சென்னை, கோவை மாநகராட்சிப் பணிகளுக்கு முறைகேடாக டெண்டர்களை வெளியிட்டதாகவும், வருமானத்துக்கு அதிகமாகச்
சுமார் 58 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்ததாகவும்
அறப்போர் இயக்கமும், தி.மு.க-வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதியும்
புகார் எழுப்பினர். அவர்கள் தொடர்ந்த வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. உள்ளாட்சித்துறையில் பெரும்பங்கு நிதி
மத்திய அரசின் பங்களிப்பாக வருகிறது. மத்திய அரசு நினைத்தால்,
சி.பி.ஐ விசாரணைக்கு நேரடியாகவே உத்தரவிட முடியும். இதனால்,
தன்னைப் பாதுகாத்துக்கொள்ள டெல்லியின் உதவி வேலுமணிக்குத்
தேவை. அதனால்தான் எடப்பாடியுடன் டெல்லிக்குச் செல்வதில்
விடாப்பிடியாக நின்றார் வேலுமணி.

அதேபோல, தங்கமணி அமைச்சராக இருந்த காலகட்டத்தில்,
நிலக்கரிக் கொள்முதலில் 908 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக
தி.மு.க குற்றச்சாட்டு எழுப்பியது. ஏப்ரல் 24-ம் தேதி, நிலக்கரி
இறக்குமதி முறைகேடு தொடர்பாக செட்டிநாடு குழுமங்கள் மீது
சோதனை நடத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், தங்கமணிக்கு நெருக்கமான ஒரு நிறுவனத்திலும் சோதனையிட்டார்கள்.
தன் தலைக்கு மேலேயும் கத்தி தொங்குவதை உணர்ந்த தங்கமணி, டெல்லிக்குச் சமாதானத் தூதுவிடத் தீவிரமாக இருந்தார். கொங்குப்
பகுதியில் இவர்களில்லாமல் அரசியல் நடத்த முடியாது என்பதை
உணர்ந்த எடப்பாடி, அவர்களின் அழுத்தத்துக்கு மறுப்பேதும்
சொல்ல முடியாமல் டெல்லிக்குச் செல்வதற்குச் சம்மதித்தார்.

அமித் ஷாவைச் சந்திப்பதற்காக நேரம் கேட்டபோது, தமிழ்நாடு
பா.ஜ.க-வுக்கு எதிராகத் தொடர்ந்து பேசிவரும் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, டி.ஜெயக்குமார் ஆகியோரையும்
உடன் அழைத்துவர ஆர்டர் போட்டது டெல்லி.

இதை எடப்பாடி ரசிக்கவில்லை. அதேசமயம், சி.ஏ.ஜி அறிக்கையில்
தன் ஆட்சி மீதான விமர்சனங்கள் எழுந்திருப்பது, நிலக்கரி இறக்குமதி தொடர்பான அமலாக்கத்துறை சோதனை என அ.தி.மு.க-வைக்
குறிவைத்து ‘காய்கள்’ நகர்த்தப்பட்டதால், டெல்லியின் ஆர்டரை
அவரால் எதிர்க்க முடியவில்லை.

இறுகிய முகத்துடனேயே அமித் ஷாவைச் சந்தித்தார். அதேநேரம்
ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் என்கிற மரியாதையைக்கூட
அவர்கள் தராததால் கடுப்பாகிவிட்டார். ஆனால், அந்தக் கடுப்பை
வெளியில் காட்ட முடியாதபடி எடப்பாடியின் வாயை அடைத்துவிட்டது
டெல்லி” என்றனர் விரிவாக.

சீண்டும் பா.ஜ.க… பதுங்கும் எடப்பாடி…
தாமரை – இலை புகைச்சல்!
தமிழில் எடப்பாடி… இந்தியில் அண்ணாமலை… !!!

எடப்பாடியின் டெல்லிப் பயணம், மிகக் கசப்பாகவே அவருக்கு
அமைந்துவிட்டது என்கின்றன இலைக் கட்சி வட்டாரங்கள்.

எடப்பாடியுடன் அமித் ஷாவைப் பார்க்கச் சென்றிருந்த முன்னாள்
அமைச்சர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், “அண்ணாமலை
வகையறாக்களின் சேட்டைகளைத் தெளிவாகக் கூறுவதற்காகத்தான் பிரதானமாக டெல்லிக்குச் சென்றோம்.

ஆனால், கர்நாடகாவில் பிரசாரத்திலிருந்த அண்ணாமலையை
எங்களுக்கு முன்னதாகவே தன் இல்லத்துக்கு வரவழைத்திருந்தார்
அமித் ஷா. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அறைக்குள்
நுழைந்தவுடன், ‘நமஸ்தே ஜி… பைட்டோ, பைட்டோ…’ என
சோபாவைக் கைகாட்டினார் அமித் ஷா.

எடப்பாடிக்காகத் தனி இருக்கையை நாங்கள் தேடியபோது,
தனக்கருகே இருந்த ஒரு பெரிய சோபாவில் எடப்பாடியையும்
மற்ற அ.தி.மு.க தலைவர்களையும் அமரச் செய்தார்.
நல விசாரிப்புகளுக்குப் பிறகு எடப்பாடி பேசத் தொடங்கினார்.

தலையாட்டிக்கொண்டிருந்த அமித் ஷா திடீரென அண்ணாமலையை வரவழைத்து, எடப்பாடிக்கு நேர் எதிரே அவரை உட்காரச் சொன்னார்.

ஏற்கெனவே தனக்கு தனியாக ஓர் இருக்கைகூட வழங்கப்படாத
கடுப்பில் இருந்த எடப்பாடியின் முகம் சட்டென கறுத்துவிட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரே பெரிய
கட்சியே அ.தி.மு.க-தான். அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரைப்
பத்தோடு பதினோறாவது நபராக இப்படி நடத்தியதை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. பொதுச்செயலாளர் ஆனதற்கு ஒரு வாழ்த்துகூடச் சொல்லவில்லை.

அண்ணாமலையின் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக அ.தி.மு.க
குறித்து அவதூறாகவும் கிண்டலடித்தும் பேசிவருவதை அமித் ஷா,
ஜே.பி.நட்டா இருவரிடமுமே தெளிவுபடுத்தினார் எடப்பாடி.
உடனிருந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மொழிபெயர்த்தார். குற்றச்சாட்டுகளைக் கேட்டுக்கொண்ட அமித் ஷா,
அண்ணாமலையைத் திரும்பிப் பார்க்க, அவர் சரளமாக இந்தியில்
பேசத் தொடங்கினார். அவர் என்ன சொன்னாரென எங்களுக்குப் புரிபடவில்லை. ஆனால், அண்ணாமலை சொன்னதைக் கேட்கக்
கேட்க அமித் ஷாவின் கண்கள் சிவக்கத் தொடங்கின.

எடப்பாடி பக்கம் திரும்பிய அமித் ஷா, ‘உங்க ஆளுங்களும்தான்
பா.ஜ.க பற்றி அவதூறாகப் பேசுகிறார்கள். அதை நீங்கள் கண்டித்திருக்கலாமே?’ எனப் படபடவென வெடித்தார்.
‘அவர்கள்தான் ஆரம்பித்தார்கள்’ என எடப்பாடி பதிலளித்தும்
அதை ஏற்கும் மனநிலையில் அமிஷ் ஷா இல்லை.

‘நம்ம கூட்டணி உறுதியான கூட்டணி. இதில் எந்தக் குழப்பமும்
வரக் கூடாது. இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். சுமுகமாகச் செல்லுங்கள். கூட்டணி
தொடர்கிறது என்பதை மீடியாக்களிடம் தெளிவுபடுத்துங்கள்.
தேர்தலுக்குக் கொஞ்ச காலமே இருக்கிறது. கூட்டணியை உறுதிப்படுத்தினால்தான் தொண்டர்கள் இணக்கமாகப்
பணியாற்றுவார்கள்’ என எடப்பாடியிடம் சொன்னார் அமித் ஷா.
ஏதோ இந்தியில் அண்ணாமலையையும் கண்டித்தார்.

கொடநாடு வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென
எடப்பாடி வைத்த கோரிக்கையைப் பரிசீலிப்பதாகச் சொன்னார்
அமித் ஷா. பி.டி.ஆர் ஆடியோ விவகாரம் குறித்தும் பேசப்பட்டது.

கூட்டணி குறித்துப் பேசினோமே தவிர,
சீட் பங்கீடு குறித்து ஏதும்
பேசவில்லை…!!!!!!

உள்துறை அமைச்சருடன் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நீண்டாலும், எடப்பாடியின் முகத்தில் சின்னதாகக்கூட சந்தோஷம்
இல்லை. தன்னை அண்ணாமலையுடன் ஒப்பிட்டு டெல்லி ‘டீல்’
செய்ததை எடப்பாடியால் ஏற்க முடியவில்லை. டெல்லியில் ஹோட்டல் அறைக்குத் திரும்பியவுடன் எங்களிடம் வெடித்துத் தீர்த்துவிட்டார்’”
என்றார் விரிவாக.

ஹோட்டல் அறைக்குத் திரும்பியவுடன், உடனிருந்தவர்கள் பலருக்கும்
கடும் ‘டோஸ்’ விழுந்திருக்கிறது. வேலுமணியிடம், ‘என்னை அவமானப்படுத்திட்டீங்க. இப்ப சந்தோஷமா..?’ என வெடித்துத்
தீர்த்தாராம் எடப்பாடி. இந்தச் சத்தமெல்லாம் ஹோட்டல்
அறைக்குள்ளேயே முடிந்துபோனது.

அடுத்த நாள் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி, “எங்களுக்கும் அண்ணாமலைக்கும் இடையே எந்தத் தகராறும் இல்லை. பா.ஜ.க
கூட்டணி தொடர்கிறது” என விளக்கமளித்தார். எடப்பாடி பதுங்கிப்போனதைத் துளியும் எதிர்பார்க்கவில்லை அ.தி.மு.க-வின்
இரண்டாம் கட்டத் தலைவர்கள்.

டெல்லியின் கட்டப்பஞ்சாயத்துக்குப் பிறகு அ.தி.மு.க., பா.ஜ.க தரப்பில் வார்த்தைகளுக்கு வேலி போடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க தரப்பில் வேலியை மேய்ந்துவிட்டார்கள்.

அமித் ஷாவைச் சந்தித்துவிட்டு, அ.தி.மு.க தலைவர்கள் திரும்பிய
மறுநாளே,

“பா.ஜ.க வாங்கும் இடத்தில் இல்லை,
அ.தி.மு.க-வும் கொடுக்கும் இடத்தில் இல்லை.
மத்தியில் ஆளப்போவது மோடி. ஆறாக உடைந்து
கவர்ச்சிகரமான தலைமையே இல்லாத அ.தி.மு.க-வுடன்
25 சீட்டுகள் கொடுத்தால்தான் கூட்டணி… இல்லையேல்
பா.ஜ.க தலைமையில் தனிக் கூட்டணி” என
பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்,
‘ட்வீட்’ மூலமாகச் சீண்டினார்.

டென்ஷனான அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
“எஸ்.ஆர்.சேகர், அண்ணாமலை சொல்லித்தான் சொல்லுகிறாரா… ‘பகிரங்கமாக எங்களின் பொருளாளர் எனக்குத் தெரியாமல் செய்தி போட்டிருக்கிறார். அது தவறு, அவரைக் கண்டிக்கிறேன்’ என்ற
கருத்தை அண்ணாமலை தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அண்ணாமலைமீது எங்களுக்குச் சந்தேகம் இருக்காது.
இல்லையென்றால், அண்ணாமலை சொல்லித்தான் சொல்கிறார்
என்று நாங்கள் நினைக்கவேண்டியிருக்கும்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

“அண்ணாமலை குறித்து ஒருமையில் பேசுவதை ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், பதிலுக்கு நாங்களும் பேசுவோம்” என்று சமூக வலைதளங்களில், பா.ஜ.க-வினரும்
கம்பு சுற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.

தாமரை – இலை உறவில் எரியும் நெருப்பை டெல்லி அணைத்துவிட்டது
என பிம்பம் எழுந்த வேளையில், அதில் பெட்ரோலை ஊற்றி
யிருக்கின்றன இவ்வாறான விமர்சனங்கள். ஜெயக்குமார்
சொல்வதுபோல, எஸ்.ஆர்.சேகரின் கருத்து தன்னிச்சையாக
வெளிப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ‘கூட்டணி தொடர்கிறது’ என கிருஷ்ணகிரியில் ஜே.பி.நட்டாவும், டெல்லியில் அமித் ஷாவும் சொன்ன பிறகுதான், ‘தனித்தே போட்டியிடுவோம்’ எனப் பட்டாசைக்
கொளுத்தினார் அண்ணாமலை.

‘அவரைக் கண்டித்துவைக்க டெல்லி விரும்பவில்லை’ என்பதே அ.தி.மு.க-வின் கோபமாக இருந்தது. இதைச் சொல்லத்தான் டெல்லிக்கும் போனார்கள். ஆனால், வந்தவர்களை ஓர் ஓரமாக உட்காரவைத்து, ‘அண்ணாமலைக்கு மட்டுமல்ல… உங்களுக்கும் நான்தான் பாஸ்’ என மறைமுகமாகச் சொல்லி அனுப்பிவைத்திருக்கிறார் அமித் ஷா.

இதுவரை ஸ்ட்ராங்காகப் பேசிவந்த எடப்பாடி, டெல்லிக்குச் சென்று திரும்பியதிலிருந்து அடக்கி வாசிக்கிறார். ஒரு பக்கம் பன்னீர்,
ஒரு பக்கம் அண்ணாமலை, ஒரு பக்கம் தன் சகாக்களிடமிருந்தே
தனக்குக் கொடுக்கப்படும் நெருக்கடி, ஒரு பக்கம் தி.மு.க அரசு
தொடரும் வழக்குகள் என நான்கு பக்கமும் கட்டம்கட்டி
நெருக்கப்படுகிறார் எடப்பாடி. இப்போது எடப்பாடி பதுங்குவது,
பாய்வதற்கா இல்லை உண்மையாகவே பயந்துவிட்டாரா
என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

சந்திப்பில் சமுதாயச் சலசலப்பு!

அமித் ஷா-வைச் சந்திக்கச் சென்ற அ.தி.மு.க தலைவர்களில்
மூன்று பேர் கவுண்டர் சமூகத்தினர், இரண்டு பேர் வன்னியர்
சமூகத்தினர், ஒருவர் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
ஆனால், முக்குலத்தோர் சமூகத்திலிருந்து ஒருவர்கூட அழைத்துச் செல்லப்படவில்லை…..இத்தனைக்கும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,
அறைக்கு வெளியேதான் இருந்திருக்கிறார். ஆனால், அவரைக்கூட
எடப்பாடி உடன் அழைத்துச் செல்லவில்லை …..!

.

…………………………………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to எடப்பாடி & கோ – சந்திப்பில் நடந்தது உண்மையில் இது தானா….???

  1. Karthikeyan Palanisamy சொல்கிறார்:

    விகடன் செய்தியாளர் பக்கத்துல உக்காந்து எப்படி பார்த்தார்

  2. புதியவன் சொல்கிறார்:

    நான் நம்புவது இதைத்தான். முக்குலத்தோர்/தென்மாவட்ட ரெப்ரெசெண்டேடிவ் ஏன் இல்லை, அவங்களும் இருந்தால்தான் அதிமுக முழுமை பெறும் என்று அமித்ஷா சொல்லியிருப்பார். அவர் சொல்லாதது, எங்கள் கட்சியில் மாநிலத் தலைவர் இல்லாமல் அரசியல் பேச்சுக்கள்/கூட்டணி பற்றிப் பேசுவதில்லை என்று. பாஜகவுடன் சேர்ந்துதான் 2024 தேர்தல் என்பதை அறிவிக்கச் சொல்லியிருப்பார். அதிக இடங்களை எதிர்பார்க்கிறோம், அண்ணாமலை பிறகு லிஸ்ட் தருவார் என்று சொல்லியிருக்கலாம். அண்ணாமலைக்கு அடுத்ததுதான் அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கான இடம்.

    மற்றபடி, சிரித்தார், முதுகில் தட்டிக்கொடுத்தார், தமிழிலேயே வணக்கம் சொன்னார், இவங்க இவங்களைக் கூட்டிட்டுவாங்க என்று சொன்னார், வேலுமணி/தங்கமணி சொல்லித்தான் அமித்ஷாவைச் சந்தித்தார் என்பதெல்லாம் விகடன், அவங்க அலுவலக அறையில் உட்கார்ந்து மிக்சர் சாப்பிட்டுக்கொண்டே இட்டுக்கட்டும் கதை. எழுத்தின் த்வனியும் அண்ணாமலையைக் குறைவாகக் காட்டுவதைப் பாருங்கள். எடப்பாடி என்ன இரண்டு மாதமாக அரசியலில் இருப்பவரா? சின்னப் பையனைப் போன்று அமித்ஷாவிடம் பஞ்சாயத்து பண்ண? முன்னப் பின்ன இந்த விகடன் புனைகதையாளர்கள், நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பில் அல்லது தலைமைப் பதவியில் இருந்திருந்தால், எப்படி இந்த மாதிரி சந்திப்புகள் நடக்கும் என்று புரிந்துகொண்டிருப்பார்கள். அண்ணாமலை, சீமான் சொல்வதுபோல, பொடிப்பசங்களுக்கு என்ன தெரியும்? என்ன அனுபவம் இருக்கும்?

    எங்கிட்ட 47 எம்.எல்.ஏக்கள் இருக்காங்க என்று தலைவரை மிரட்டினாராமே அமைச்சர். அந்த மாதிரி மிரட்டல்களையெல்லாம் சந்திக்கும் திராணி இரண்டு கட்சித் தலைவர்களுக்கும் கிடையாது. They are not legends like MGR, JJ and Karunanithi. (கருணாநிதியே வீரபாண்டி ஆறுமுகத்திடம் கெஞ்சிக்கேட்டுக்கொண்டு திமுகவில் தக்கவைத்தார் என்ற செய்தி உண்டு. ஜெ. யாரைப் பற்றியும் கவலைப்படாதவர், தைரியமானவர்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s