அழகிப் போட்டி – ” IGNORANCE IS BLISS “…

………………………………………………….

………………………………………………….

நடு நிசியில் டி.வி.யில் சோனியோ, ஒல்லியோ
ஏதோ ஒரு சானலைத் தொட்ட போது
அழகழகான இளம்பெண்கள் தம் திறமைகளை வெளிக் காட்டும்
விதத்தில் அடி மேலடி வைத்து மிகையாக இடுப்பை
அசைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள்.

அனைவரும் பணக்கார வர்க்கப் பெண்கள்.
அந்த நடை வருவதற்குப் பெற்றோர்கள் ஏகதேசம்
ஐந்து லட்சம் செலவழித்திருப்பார்கள். நுனி நாக்கு
ஆங்கில வனிதா மணிகளின் பெயர்களே வினோதமாக
இருந்தன.

ராவி, மேக்கா, ஹிமானி, யோகினி, ஷிவாங்கி,
பாயல் என்று. இவர்கள் பிறக்கும்போதே ஃபெமினா
மிஸ் வோர்ல்ட் போட்டிக்குத் தயார் ஆகிறார்கள் என்று
நினைக்கத் தோன்றுகிறது. பெயரை வித்தியாசமாக
வைத்துக் கொள்ள வேண்டியது முதல் ரூல் போல்.

அங்காள பரமேச்வரி என்றால் ரியோடி ஜெனிராவில்
உச்சரிக்கக் கஷ்டப் படுவார்கள் என்று ‘அங்கா’
அல்லது ‘ங்கா’ என்று நாமம் சூட்டப் படுகிறார்கள்.

அழகிப் போட்டி பூனாவில் நடந்தது.
ஷாரூக்கான், பிரித்திஷ் நந்தி, வஹிதா ரெஹ்மான்,
அஸாருதீன் போன்றவர்கள் ஜட்ஜ்கள். சம்பிரதாய கேள்விகள்.
சம்பிரதாய பதில்கள்.

“நீ மறு ஜென்மம் எடுத்தால் யாராகப்
பிறக்கப் பிரியப் படுகிறாய்?”
பதில்–மதர் தெரஸாவாக….

விளம்பரதாரர்கள் கொடுத்த வித வித ஆடைகளில்,
புன்னகையைக் கழற்றாமல் நெர்வஸாகவே
எச்சரிக்கையுடன் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்கள்.

“நீங்கள் மிஸ் யுனிவர்சாகத் தேர்ந்தெடுக்கப் பட்டால்
என்ன செய்வீர்கள்?” என்பது தவறாமல் கேட்கப்படும்
கேள்வி.

அதற்குத் தவறாமல் ” சேரிக் குழந்தைகளுக்கும்
மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முதியோருக்கும்
சேவை செய்வேன்” என்ற கையிருப்புப் பதில்.

அழகிப் போட்டி நமது நகரங்களில் மிகப் பெரிய
வியாபாரம் ஆகி விட்டது. சோப், குட்கா,
குளிர் பானக்காரர்களிடம் நிறையக் காசிருப்பதால்
குட்டிகளை நடக்கவிட்டு அவர்களை ஒழித்துக் கட்டலாம்
என்று வயதான அதிபர்களின் ‘வாயரிச’ த்துக்கு வடிகால் இவை.

டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற நகரங்களில்
இதற்கென்றே பள்ளிகள் உள்ளன. அவர்கள்
இந்தப்பெண்களைத் தட்டிக்கொட்டி, தடுக்காமல், நடக்க
வைத்து, சிரிக்க வைத்து, இங்கிலீஷ் உச்சரிப்பைச்
செப்பனிட்டு, எல்லா அனாவசியப் பாகங்களையும் திருத்தி
காற்று கொஞ்சம் வேகமாகஅடித்தால் பறந்து
போகிற ரேஞ்சுக்குக் கொண்டு வந்து விடுவார்கள்.

18 வயதிலேயே உலகை வெல்லும் ஆசை இந்தப்
பெண்களுக்கு ஊட்டப்படுகிறது.
முதலில் 26 பெண்களை இந்தியா முழுதும் வலை
வீசித் தேடி, வண்டிச்சத்தம் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள்.

அவர்களை 13 ஆக்கி, பின் ஒன்பதாக்கி,
மூன்றாக்கி, நுட்பமாகச் சீவுகிறார்கள். இறுதியில் மூவர்
போட்டிக்குத்தயார்ஆகிறார்கள்.

மற்றவர் வீட்டுக்கு. ஆண்டாண்டு தோறும் அழுது
புரண்டாலும் இதே சமாசாரம்தான். இந்த ஆண்டு போட்டியில்
கடைசி கட்டமாக ஒரே ஒரு கேள்விகேட்டு
அதற்குப் பதிலாக குட்டியாக ஒரு கட்டுரை
எழுதச் சொன்னார்கள்.

‘ignorance is bliss’என்றால். எதற்காக நாம்
அறிவைத்தேட வேண்டும்? என்று ஒரு நீதிபதி கேட்டார்…

அதற்கு அழகிகள் அறியாமையை அறிவதற்கு அறிவு
வேண்டும் என்று என்னென்னவோ குழப்படி ஜல்லியடி
பண்ணி பதில் எழுதிப் படித்தார்கள்.

கேள்வி கேட்டவர், பதில் அளித்தவர் இருவருக்கும்
தெரியாத விஷயம். ‘ignorance is bliss’ என்கிற
வாக்கியம். எப்போது எந்தச் சூழ் நிலையில் யாரால்
எழுதப் பட்டது என்பதே…!

இன்று உலகமெங்கும் தப்பாக மேற்கோள் காட்டப்படும்
இந்த வரி தாமஸ் கிரே என்ற ஆங்கிலக் கவிஞரின்
‘Ode on a distant prospect of Eton college’
என்னும் கவிதையில் வருகிறது.
கிரே பொதுவாக சோக மித்ரன். அவருக்கு வாழ்க்கையின்
மேல் என்ன வெறுப்போ? இரங்கல் வருத்தப் பாடல்களாகவே
பாடி வருத்தினார். ஈட்டன் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்.

தூரத்தில் இளையர்கள் ஓடி ஆடுவதைப் பார்க்கும் அவர்
” விளையாடட்டும்…பிற்காலத்தில் அவர்களுக்குக் காத்திருக்கும்
சோகம் தெரியாதிருக்கட்டும் ….எல்லோரும் ஒரு காலத்தில்
வருத்தப்படவே போகிறார்கள். இப்போதே ஏன் அதைத்
தெரிந்து கொள்ள வேண்டும்?’ அறியாமையே இன்பம்
‘என்ற தொனியில் எழுதப்பட்ட கவிதை அது.

Why should they know their fate
Since sorrow never comes too late
And happiness too swiftly flies
Thought would destroy their paradise
No more ; where ignorance is bliss
Tis folly to be wise …

இந்த வரிகளை இயல்பாக மொழி பெயர்த்தால்,
எதற்காக அவர்கள் தம் விதியை அறிய வேண்டும்..?
துக்கம் நிச்சயம் தாமதிக்காமல் வந்தே தீரும்.
சந்தோஷம் அதி வேகமாகப் பறந்து செல்லும் சிந்தனை
அவர்கள் சொர்க்கத்தைக்கலைத்து விடும் …

வேண்டாம்.

அறியாமைதான் இன்பம் அறிவது பெரும் தப்பு…!

………………………………………………………………………………….

வேறு யாரால் எழுத முடியும் இப்படி –
சுஜாதா அவர்களைத் தவிர …..???


மிக்க நன்றி சுஜாதா சார்…!!!

.
…………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அழகிப் போட்டி – ” IGNORANCE IS BLISS “…

  1. புதியவன் சொல்கிறார்:

    //அங்காள பரமேச்வரி என்றால் ரியோடி ஜெனிராவில்
    உச்சரிக்கக் கஷ்டப் படுவார்கள் என்று// – நான் தாய்வானில் வேலை விஷயமாக பயணப்பட்டிருக்கிறேன். பல கம்பெனிகளில் பலரைச் சந்தித்திருக்கிறேன். பொதுவாக அவங்க எல்லோரும் புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும், சீனப் பெயருடன், அவர்கள் மேற்கத்தைய பெயர் ஒன்றையும் வைத்துக்கொள்வார்கள். அவர்களது பிஸினெஸ் கார்டில், communications etc. எல்லாவற்றிலும் இந்த மேற்கத்தைய பெயரை மாத்திரம்தான் உபயோகிப்பார்கள்.

    நான்கூட ஆரம்பத்தில் என்னடா..எல்லோரும் கிறிஸ்துவர்களாக இருக்கிறார்களே, அங்கும் நிறையபேர் கிறித்துவர்களா என்று நினைத்தேன். அங்கு சென்று அவர்களது தினப்படி மற்றும் வார இறுதி பொழுதுபோக்குகளில் பங்குபெற்றபோதுதான், அவங்களுடைய கல்ச்சரும், பிஸினெஸ் காண்டாக்ட்ஸ் தங்களை சுலபமாக அழைப்பதற்காக இந்த மாதிரி பெயர் வைத்துக்கொண்டுள்ளதும் தெரிந்தது.

    அதுவும் தவிர, சுஜாதா இப்போது இருந்திருந்தால், தமிழகத்தில் பிறக்கும் அனேகமாக எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் சமஸ்கிருத பெயர் மாத்திரம்தான் வைக்கிறார்கள், அங்காள பரமேஸ்வரி எல்லாம் வழக்கொழிந்துபோன சமாச்சாரம் என்று புரிந்துகொண்டிருப்பார்.

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    // தமிழகத்தில் பிறக்கும் அனேகமாக எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் சமஸ்கிருத பெயர் மாத்திரம்தான்
    வைக்கிறார்கள் //
    …………………………………………..

    ???

    …………………..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s