………………………………..

……………………………………

……………………………………….
திப்பு சுல்தானைப்பற்றி அவதூறு பேசும் சில குழுவினரை
கடுமையாகச் சாடி,
” குப்பைகளால் சூரியனை மறைக்க முடியாது …”
என்று சொல்லி கடுங்கோபத்துடன் நடிகர், இயக்குநர்,தயாரிப்பாளர் –
ராஜ்கிரண் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் ஒரு கட்டுரை
எழுதி இருக்கிறார்…. திப்பு சுல்தானைப்பற்றி, இரண்டுவித
நேர் விரோதமான கருத்துகள் அண்மையில் பரவி வருகின்ற
நிலையில் – அவசியம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை அது –
அதிலிருந்து கொஞ்சம் கீழே –
……………
மாவீரர் திப்பு சுல்தான் அவர்கள் சுதந்திரப்போராட்டத்தின்
“மூலவித்து” என்பதை சரித்திரத்தில் இருந்து நீக்கும் முயற்சிகள்
தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
சூரியனை, குப்பைகளால் மூடி மறைத்து விட, ஒருபோதும் முடியாது.
மைசூரை ஆண்ட மாவீரன் திப்பு சுல்தான் இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் பன்முக ஆளுமையாக திகழ்ந்தவர்.
- திப்பு சுல்தான் குறித்து ‘இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் உருவாக்கம்’
என்று, ‘1930 ‘யங் இந்தியா’ இதழில் மகாத்மா காந்தி
குறிப்பிட்டுள்ளார். - “ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர் திப்பு சுல்தான்” என்று ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டுள்ளார்.
- மஹாராஷ்டிர இந்து மன்னன், சிருங்கேரி மடத்தை கொள்ளையடித்து, அங்கிருந்த சாரதா தேவி சிலையையும் சேதப்படுத்தியதை,
அந்த மடாதிபதி திப்பு சுல்தானுக்கு தெரியப்படுத்த,
கேரளாவில் பிரிட்டிஷாருடன் போர் புரிந்துகொண்டிருந்த திப்பு சுல்தான்,
தனது பாதுகாப்புப்படையை உடனே சிருங்கேரிக்கு அனுப்பி,
மடத்திலிருந்து மஹாராஷ்டிர படைகளை விரட்டியதோடு, மடத்தை சீரமைக்கவும், சாரதா தேவி சிலையை மறுநிர்மானம் செய்யவும்
தேவையான அனைத்து உதவிகளையும் செய்ததோடு, நிதிகளையும் வழங்கினார். - தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலை போரின்
நாயகர்களான கட்டபொம்மன், கோபால் நாயக்கர், மருது சகோதரர்கள்,
வேலு நாச்சியார், தீரன் சின்னமலை, போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு உந்து சக்தியாய் இருந்ததோடு, ஆயுதங்களும் கொடுத்து உதவியவர்
திப்பு சுல்தான். - தான், திப்புவை கண்டு அஞ்சுவதாக 1798-ம் ஆண்டு தமது கும்பினி தலைமைக்கு கடிதம் எழுதினான் கவர்னர் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.
- சமத்துவம், சகோதரத்துவம் சுதந்திரம் என்ற சொற்கள் இந்த நாட்டில்,
திப்புவின் மண்ணில்தான் முதன்முதலில் ஒலித்தன. - பாளையக்காரர்கள், ஆற்காடு நவாப், ஹதராபாத் நிஜாம்,
தொண்டைமான் ஆகிய அனைவைரும் ஆங்கிலேயர்கள் பின்னால் நிற்க, தன்னந்தனியாக எதிரிகளை எதிர்கொண்டார் திப்பு. - எந்த சாதி மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி,
உழுபவருக்கே நிலம் சொந்தம் என்று திப்பு பிரகடனம் செய்தார்.
- சென்னை மாகாணத்தை போல் அல்லாமல் மைசூர் அரசில்
தலித் சமுதாயத்தினருக்கு பல இடங்களில் நிலஉடைமையை
வழங்கினார் திப்பு. ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம் என்று வருவாய் ஊழியர்களிடம் உறுதிமொழி வாங்கினார் திப்பு.
1792 போருக்கு பின் வேலூரிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசில் குடியேறினர். கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையை கட்டுவதற்காக 1798-ல் திப்புசுல்தான் அடிக்கல்
நாட்டினார். இந்துஸ்தானம் முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்கள்,
20 வணிக கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின்
கப்பல் துறை ஆகியவற்றை அமைக்கவும் திப்பு திட்டம் வகுத்திருந்தார்.
- மது விற்பனையை முற்றிலும் ஒழித்து மதுவிலக்கை அமல்படுத்தினார்.
- கஞ்சா விற்பனையை தடை செய்தார்.
- எல்லா சமுதாய மக்களின் ஆலையங்களுக்கும் அவர்களின் மக்கள்
தொகைக்கு ஏற்ப, மானியம் வழங்கி, அதனை பராமரித்தும் வந்தார்.
அநாதை இந்து சிறுமிகளை கோவிலுக்கு விற்பனை செய்யும் தேவதாசி முறையையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. - எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல்
வேலை வாங்ககூடாது என்று ஆணையிட்டார் திப்பு. - கோவில் மணி ஓசைக்கும் பள்ளிவாசலின் பாங்கு அழைப்பிற்கும்
சம மரியாதை தந்தார் திப்பு. நெப்போலியனை வீழ்த்திய ஆர்த்தர் வெல்லெஸ்லி கூட திப்புவின் முன் நிற்கமுடியாமல் போனது வரலாறு.
தன்னை, நாட்டின் மன்னன் என்று நினைக்காமல், “குடிமகன் திப்பு”
என்று கூறுவதில் பெருமைப்பட்டவர் திப்பு. திருக்குர்ஆனின் அத்தனை போதனைகளையும் தன் வாழ்நாளில் கடைபிடித்து வாழ்ந்து
வந்தார், திப்பு. ஆதலால், பிற மதத்தினர், இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறுவதை ஆதரிக்கவில்லை. “இறைவன் நினைத்திருந்தால், எல்லா மக்களையும் இஸ்லாமியராகவே படைத்திருக்க மாட்டானா” என்றதோடு,
அவரவர் மார்க்கம் அவரவர்க்கு என்றார்.
விடுதலை போரில் சரணடைய மறுத்து, வீரத்துடன் போரிட்டு தன்னுடன்
மாண்ட 11,000 வீரர்களுள் ஒரு சாதாரண வீரனைப்போல, வீரமரணம் அடைந்தார் திப்பு சுல்தான். இந்தத்தகவல்கள் எல்லாம், புராண, இதிகாச கதைகள் அல்ல லண்டன் அருங்காட்சியகத்தில், இன்றும் போற்றிப்பாதுகாக்கப்படும் வரலாறு…
(லிங்க் – https://tamil.behindtalkies.com/rajkiran-post-about-tipu-sultan/ )
…………………………………..
ராஜ்கிரணின் இந்த முகநூல் பதிவு, என்னை – திப்புவைப்பற்றி, மேலும் நிறைய தகவல்களை தேடிப்படிக்கச் செய்தது.
நான் படித்தவற்றிலிருந்து ஏற்றுக்கொள்ளத்தக்கவை என்று கருதும்
சில தகவல்களை கீழே தந்திருக்கிறேன்.
……….
முதலில் திப்பு சுல்தான் வரலாறு —-மிகச்சுருக்கமாக –
திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, – மே 4, 1799, ),
மைசூரின் புலியென அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து
1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர்.
திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃபாதிமாவின் மகன்.
பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார்.
ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு அகற்றுவதற்காகப்
பிரான்சின் மாவீரன் நெப்போலியனுடன் பேச்சுவார்த்தை கூட
நடத்தினார். மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில-மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார். மே 4, 1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித்
தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் போரின்போது இறந்தார்.
………….
உண்மையில், ஆங்கிலேயரை எதிர்த்து அதி தீவிரமாக போராடிய
முதல் சுதேசி மன்னன் திப்பு சுல்தான் தான்…
“கிழக்கிந்திய கம்பெனியின் குலை நடுக்கம் ” திப்புவின் மைசூர்
அரசைப் பார்த்து லண்டன் பத்திரிகைகள் வியந்து எழுதின.
“ஆம் நான் அவனைக்கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த
மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள்
மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தை கண்டும்
நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிர்ஷ்டம்”.
என்று லண்டனுக்கு கடிதம் எழுனார் கவர்னர் வெல்லஸ்லி…!!!
திப்புவால் தான் போர்களில் பயன்படுத்தும் – “ஏவுகணை” உலகிலேயே
முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது – என்று பெருமையோடு
சொன்னார் நமது பெருமதிப்புற்குரிய மறந்த ஜனாதிபதி
அப்துல் கலாம் அவர்கள்.
மைசூர் ஏவுகணைகள் – திப்பு சுல்தானின் ஏவுகணைத் தொழில்நுட்பமே பிற்கால பிரிட்டிஷாரின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் முன்னோடி.
இலண்டன் அருகில் ஊல்ரிச் எனும் ஊரில் உள்ள ரோதுண்டா அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்க இந்தியாவின் முன்னாள்
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முயற்சி எடுத்துக்கொண்டார்.
உலக அளவில் முதல் இராணுவ ஏவுகணைகள் அவையே என்பதையும் பிற்காலத்தில் பிரிட்டிஷார் ஆய்வு நடத்தி அவற்றைத் திருத்தியமைத்துப் பயன்படுத்தியதையும், மேலும் இது இந்தியாவில் திப்பு சுல்தானின்
சொந்த தொழில்நுட்பம் என்பதையும், பிரெஞ்சு நாட்டினரிடமிருந்து
கற்றது அல்ல என்பதினையும் சர் பெர்னார்டு லோவல் எனும்
பிரபல பிரிட்டிஷ் விஞ்ஞானி எழுதிய ’விண்வெளி ஆராய்ச்சிகளின்
தோற்ற மூலங்களும், பன்னாட்டுப் பொருளாதாரங்களும்
(The Origins and International Economics of Space Explorations) எனும் நூலின் உதவியோடு அப்துல் கலாம் நிரூபிக்கிறார்…
திப்பு சுல்தானை இந்துக்களின் விரோதியாக சித்தரிப்பதை
கீழ்க்கண்ட உதாரணங்கள் மறுக்கின்றன –
திப்பு, தனது அரசில், திறமையான இந்து அதிகாரிகள் பலரை
நியமித்திருந்தார்….
திப்பு சுல்தானின் பொருளாளராகக் கிருஷ்ணா ராவ் என்பவரும்,
ஷாமையா ஐயங்கார் அவரது தபால் மற்றும் காவல்துறை அமைச்சராகவும், அவரது சகோதரர் ரங்கா ஐயங்கார் ஒரு அதிகாரியாகவும்,
பூர்ணையா என்பவர் “மிர் அசாஃப்” எனும் மிக முக்கியமான
பதவியையும் வகித்தனர். மேலும், மூல்சந்த் மற்றும் சுஜன் ராய் அவரது தலைமை முகவர்களாக இருந்தனர், மேலும் அவரது “பெஷ்கர்”
தலைவரான சுபா ராவும் என்பவரும் ஒரு இந்துவாக இருந்தார்…
……………..
1930 ஆம் ஆண்டு யங் இந்தியாவில் -காந்தியால் எழுதப்பட்ட
ஒரு கட்டுரை கூறியது:
“மைசூர் ஃபதேஹலி திப்பு சுல்தான், தனது இந்து குடிமக்களை
ஒடுக்கி அவர்களை வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றிய
வெறியராக வெளிநாட்டு வரலாற்றாசிரியர்களால்
குறிப்பிடப்படுகிறார். ஆனால் அவர் அப்படி இல்லை.
மறுபுறம், அவரது இந்து குடிமக்களுடன் அவரது உறவுகள் முற்றிலும் இணக்கமான இயல்புடையவை.
….
திப்பு சுல்தானைப்பற்றிய எதிர்ப்பு பிரச்சாரங்கள்
தேவையற்றவை,
அரசியல் காரணமாக எழுப்பப்படுபவை –
என்றே நான் நினைக்கிறேன்.
.
………………………………………………..
காமராஜரை நாடார்களின் தலைவனாகப் பார்த்ததுபோல, ஒவ்வொருவரையும் அவரவர் சாதி மதத்தை வைத்துத்தான் எடை போடுகிறோம், அரசும் எடைபோடுகிறது. வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு எந்தச் சிறப்பு செய்தாலும் பிள்ளைமார்களின் வாக்குகள் மிகவும் குறைவு என்பதால், அவரைக் கண்டுகொள்ளாமல் விடுவதும், பூதூர் வைத்தியநாத ஐயர், மதுரைக் கோவிலில் எல்லோரும் நுழைந்து வணங்க அனுமதிக்கணும் என்று போராடியது மறைக்கப்பட்டு, கேரளாவில் வைக்கம் என்ற ஊரில் தானும் போராடியவர்களில் ஒருவர் என்று சென்ற ஈவெராவை, ஏதோ தாழ்த்தப்பட்டவர்களுக்கு கேரளாவில் வைக்கத்தில் போராடியவர் அவர் மட்டுமே என்று சித்தரிப்பதும், சின்ன மருது, பெரிய மருது என்று சிலை வைப்பதும் இந்தக் காரணத்தினால். ராஜ்கிரண் (முஸ்லீம்) திப்புசுல்தானைத் தாங்கிப்பிடிக்கக் காரணமும் அதேதான். நங்கநல்லூர் கோவில் விழாவின்போது (தீர்த்தவாரி) இறந்த அர்ச்சகர்களுக்கு அரசு 2 லட்சமும், அதே நேரத்தில் துபாயில் இறந்த இரண்டு முஸ்லீம்களுக்கு ஆளுக்கு 10 லட்சமும் அரசு தருவதன் காரணமும் அதேதான். பாரதியாரைப் பற்றி நீங்கள்தான் இங்கு எழுதியிருந்தீர்கள்.
வரலாறு காட்டும் அரசர்களை எடைபோடுவது மிகவும் கடினமானது. அப்போது நடந்த நிகழ்ச்சிகளை வைத்துத்தான் ஓரளவு எடைபோடலாம். ஔரங்கசீப் ஒரு கொடுங்கோலன் என்று சொல்வதன் காரணமும் இதுதான் (வாள் முனையில் மதமாற்றம், கோவில்களை இடித்து அங்கு மசூதி கட்டியது என்று பெரிய லிஸ்ட்). திப்பு சுல்தான் பற்றி இருவேறு அபிப்ராயங்கள் உண்டு. தன்னளவில் ஒரு முஸ்லீமாக இருந்தவன். அவனது புகைப்படமே வேறு. நாம் இங்கு உபயோகிக்கும் படமே வேறு. அதில் அரசியல் உண்டு. திப்பு சுல்தான் இப்படிப்பட்டவன் என்று அறுதியிடும்விதமான நூல்களோ இல்லை ஆதாரங்களோ கிடையாது.
திப்பு சுல்தான் ஆட்சி செய்த நிலப்பரப்பு, இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த நிலப்பரப்பு. திப்புவும் இந்த நாட்டைச் சேர்ந்தவன். நாட்டைக் கட்டுப்படுத்த, அவனது அமைச்சரவையில் இந்துக்கள் இருந்தார்கள், படையில் இந்து வீரர்கள் இருந்தார்கள் என்பதெல்லாம் பெரிய விஷயம் அல்ல. அப்படி இல்லாமல் ஆட்சி செய்வது நடக்காது. ஆனால் அவர்களுக்கு எப்படிப்பட்ட அதிகாரங்கள் இருந்தன என்று பார்க்கவேண்டும். தற்காலத்திலேயே திருமா, கூட்டணிக் கட்சிகளில் ஒருவராகவும், கூட்டணியில் உள்ள தலைவராகவும் அறியப்படுகிறார். அவருக்கு என்றைக்காவது மேடைகளில் மரியாதை வழங்கப்பட்டிருக்கிறதா? பிளாஸ்டிக் சேரோ இல்லை பின்னால் நிற்கும் இடம்தானே வழங்கப்படுகிறது. திமுகவின் துணைத் தலைவராக தாழ்த்தப்பட்டவர்கள் வந்திருக்கிறார்களா? ராஜா காமராஜரின் அமைச்சரவையில் கக்கனுக்கு எப்படிப்பட்ட மரியாதையும் பொறுப்பும் இருந்தது? அரசரைப் பொறுத்து எப்படி நடந்துகொள்வார்கள் என்பது மாறுபடும்.
ஸ்ரீரங்கபட்டினத்தில் சமீபத்தில் சுற்றுப்பயணம் சென்றிருந்தேன் (சில வாரங்களுக்கு முன்னால்). திப்பு சுல்தான் கோட்டை, அவன் சடலம் கிடைத்த இடம், அவனுடைய பாதாளச் சிறை போன்ற பலவற்றையும் பார்த்தேன். திப்புசுல்தான் மேல்கோட்டை யோக நரசிம்மர் கோவிலுக்கு ஒரு முரசு வழங்கியிருக்கிறான். அவனது கோட்டைக்குள்ளேயே ஸ்ரீரங்கபட்டினம் ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இவன் இப்படித்தான் என்று அறிதியிட்டுச் சொல்லும்படியாக சான்றுகள் கிடையாது.
பிரச்சனை எங்கு வருகிறது என்றால், திப்பு ஜெயந்தி, எங்கள் முஸ்லீம் ஆண்ட நிலப்பரப்பு என்று முஸ்லீம்கள், அரசியலுக்காக மதத்தை முன்னிறுத்துவதும், முஸ்லீம்லீக், திப்பு ஜெயந்தி என்று கொண்டாடுவதும், அவர்கள் இடங்களிலெல்லாம் இந்த ஜெயந்தி அமர்க்களப்பட்டு, அங்கு வாழும் இந்துக்களுக்கு அச்சுறுத்தலாக அமைவதும், இந்த மத அரசியலை நிறுத்த பாஜக அரசு திப்பு ஜெயந்தி கொண்டாட்டங்களைத் தடை செய்ததும்…ஆக மொத்தம் திப்பு சுல்தான் பெயர் கெட்டதுதான் மிச்சம். வரலாற்றை தக்க சான்றுகள் இல்லாமல் ஆராய்வது, முடிவுக்கு வருவது மிகக் கடினம். (தன் மனைவியை நேருவிடமிருந்து காப்பாற்றிக்கொள்வதற்காகத்தான் மௌண்ட் பேட்டன் அவசர அவசரமாக இந்தியாவிற்குச் சுதந்திரம் தந்தான் என்றும் சிலர் பேசுகின்றனர்)
கடைசி வரிகளை நீங்கள் நீக்கலாம். ஒரு நகைச்சுவைக்காகத்தான் நான் எழுதியிருக்கிறேன். நான் சொன்னவற்றிர்க்குப் புகைப்பட ஆதாரங்கள் உண்டு என்பது உங்களுக்கே தெரியும்.
பொதுவாக இந்திய வரலாறு என்பது முதலில் ஆங்கிலேயர்களால் அவர்களுக்கு சாதகமாகவும் பின்பு அவர்களது அடியை ஒட்டி மார்க்சிய நேருவிய வரலாற்று ஆசிரியர்களால் அப்போதைய ஆட்சியாளர்களின் அரசியல் கருத்தியலுக்கு ஏற்ப எழுதப்பட்டது தான். இதற்கு திப்புவின் வரலாறும் விதிவிலக்கல்ல. திப்பு ஒரு பொழுதும் தன்னை ஒரு இந்தியனாக முன்னிறுத்தி ஆங்கிலேயர்களை எதிர்த்தவர் அல்ல. மைசூர் பிரதேச அரசராக ஆங்கிலேயர் அவருக்கு ஒரு எதிரி எவ்வாறு என்றால் ஹைதராபாத் நிஜாம் போலவும் மராத்தியர்களைப் போலவும் ஏனைய சிற்றரசர்களைப் போலவும் ஆங்கிலேயரும் அவருக்கு ஒரு பொதுவான எதிரி ஆனால் அதே நேரம் பலம் வாய்ந்த எதிரி தனது ஆக்கிரமிப்பை விரிவாக்கிக் கொண்டே இருந்த ஒரு எதிரி அதன் அடிப்படையில் தான் திப்பு ஆங்கிலேயர்களை எதிர்த்தாரே ஒழிய ஆங்கிலேயர்கள் அந்நியர்கள், இந்தியாவிலிருந்து அவர்களை அகற்றியே ஆக வேண்டும் என்பதற்காக அல்ல. அவரது சமகாலத்திய ஆட்சியாளர்களைப் போல் திப்புவும் நல்லதும் கெட்டதும் இரண்டும் கலந்த ஒரு ஆளுமை தான். ஹிந்து மதத்திற்காக இதை செய்தார் அதை செய்தார் என்று போற்றிக் கூறும் அதே வேலையில் தான் இவர்களால் போற்றி கூறப்படும் திப்பு ஒரு தீபாவளி நாள் அன்று மண்டையம் ஐயங்கார்கள் பேரை இஸ்லாம் மதத்தை தழுவ மறுத்தார்கள் என்ற காரணத்திற்காக தூக்கிலிட்டும் வாளால் வெட்டியும் கொன்றார். இதன் காரணமாகத்தான் மண்டையம் ஐயங்கார்கள் இன்றளவும் தீபாவளி திருநாளை கொண்டாடுவதில்லை. கர்நாடகத்தின் கூர்க் மங்களூர் உடுப்பி பகுதிகளில் இன்றளவும் தெரு நாய்களை குறிப்பிடும் போது திப்பு என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்துகின்றனர். இறுதி ஆங்கிலோ மைசூர் போரின் போது நெப்போலியனுக்கு கடிதம் எழுதி படை உதவி கேட்டது இந்தியாவை ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற பரந்த நோக்குடன் அல்ல தனது அரசாங்கத்தை காப்பாற்றிக் கொள்ள எதிரிக்கு எதிரி நண்பன் என்ற யுக்தியின் அடிப்படையில் தான். இதே யுக்தியின் அடிப்படையில் தான் திப்புவின் கை தளர்ந்திருந்த பொழுது அவரது எல்லையை ஒட்டி அமைந்திருந்த இதர சுதேச மன்னர்கள் ஆங்கிலேயர்களுடன் கைகோர்த்து திப்புவினை அழித்தது. திப்புவின் ஆட்சிக்காலத்தில் இந்துக்கள் அவரது ஆட்சி அமைப்பில் பங்கு பெற்றிருந்ததைப் போலவே முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த விஜயநகர பேரரசின் ஆட்சியில் முஸ்லிம்களும் பங்கு பெற்றிருந்தார்கள் என்பது வரலாறு. மார்க்சிய நேருவிய வரலாற்று ஆய்வாளர்களால் ஒற்றை நோக்குடன் எழுதப்பட்ட இந்திய வரலாற்றினை சமீப காலமாக மாற்றுச் சிந்தனை உடைய விக்ரம் சம்பத், சஞ்சீவ் சந்யால், தீபக்சாய் போன்ற இளம் தலைமுறை வரலாற்று ஆய்வாளர்கள் ஒப்பு நோக்கி ஆராய்ந்து வெளிப்படுத்தும் உண்மைகள் வரலாற்றில் திப்புவிற்கு வேறு முகம் இருந்துள்ளது என்பதை நிரூபிக்கின்றன. திப்பு ஜெயந்தி கொண்டாடுபவர்களுக்கு இருக்கும் தேவையும் நியாயமும் எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு திப்புவை எதிர்ப்போர் விஷயத்திலும் நியாயம் உள்ளது என்பதை புரிந்து கொண்டால் குப்பைகளால் சூரியனை மட்டும் அல்ல உண்மைகளையும் மறைக்க இயலாது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
மாண்டியா தீபாவளி சம்பவங்கள் திப்புவின் கறுப்புப் பக்கங்கள். இன்றுவரை மாண்டியா பிராமணர்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை. மேல்கோட்டையில் இருக்கும் கோவிலில் முஸ்லீம்கள் உடைத்தெறிந்த சிற்பங்கள் உள்ளன.