……………………………………………

…………………………………………..
அந்த காலைப்பொழுதில் லேசாகக் குளிர்காற்று அடிக்க
சேலைத்தலைப்பை போர்த்திக்கொண்டு அந்த
பூங்காவில் அமர்ந்திருந்தாள் ஒரு தாய்.
கண்ணில் சாரை சாரையாய் நீர்.
அந்தத் தாயின் பக்கம் கொஞ்சம் தள்ளி ஒருவர் வந்து
அமர்ந்தார். சட்டென சுதாரித்துக்கொண்டு கண்ணீரைத்
துடைத்துவிட்டு எழுந்த அந்த தாயைப் பார்த்து,
“உட்காருங்க. நான் தினமும் உங்களை இந்த பூங்காவில்
பார்ப்பேன். காலையிலேயே வந்துவிட்டு பத்துமணி
போல்தான் போவீங்க. இன்னைக்கி என்ன சீக்கிரம்
கிளம்பிட்டீங்க. கண்ணுல தண்ணி வேற. எங்கிட்ட
இஷ்டம் இருந்தா சொல்லுங்க.
என்னைப்பத்தி சொல்லிர்றேனே. நான் ஒரு அனாதை.
எல்லாம் இருந்தும் அனாதை. என்னஅப்படி பார்க்குறீங்க.
இரண்டு பையன், ஒரு பொண்ணு.
நல்லாதான் படிக்கவச்சேன். மூணுபேரும் வெளிநாட்டுல
போய் செட்டிலாயிட்டாங்க. எப்பவாவது இந்த அப்பா
ஞாபகம் வந்தா போன் பண்ணுவாங்க.
வீடு இருக்கு; கடை இருக்கு. அதுல வர்ற வாடகைய வச்சி பொழப்பு
ஓடுது. இதெல்லாம் பார்க்கக்கூடாதுன்னு தான் தர்மபத்தினி
அப்பவே போய்சேர்ந்துட்டா..” என்று சொல்லி கண்கலங்கினார்.
“தனிமையிலேயே எவ்ளோ நேரம் தான் இருக்கிறது. அதான்
காலையிலேயே இப்படி நடக்க ஆரம்பிச்சுடுவேன். அப்படித்தான்
உங்கள இங்க பாக்குறது” என்றார். அவரது மனதின் பாரம்
இப்போது கொஞ்சம் குறைந்தது போலிருந்தது.
“உங்க பாரத்தை இறக்கிவச்சிட்டிங்க. என்னோட பாரத்த சொல்லி
உங்க மனச ஏன் நோகடிக்கணும். ஆனாலும் சொல்றேன்.
ஒரே பையன். நல்லா படிக்கவைச்சேன். நல்ல வேலைக்குப்
போனான். அவனே ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தான்.
நான் ஒண்ணும் சொல்லல.
கல்யாணம் ஆன புதுசில அவனே கட்டிக்கிட்டு வந்துட்டானேன்னு
ஏதோபெத்த வயிறு திட்டிட்டேன். அதெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு
எது செஞ்சாலும் குத்திக் குத்தி பேசுறா மருமக.
காலையில காபி போட்டு குடிச்சேன். இதுக்கு ஒண்ணும்
கொறைச்சலில்லை இந்த கிழவிக்குன்னு சொல்றா..
வெட்கம் விட்டு சொல்றேன். பாத்ரூம் போனாக்கூட
பசங்க பள்ளிக்கூடத்துக்கு கெளம்பும்போது போய்
உட்கார்ந்துக்கிச்சின்னு சொல்றா..
மகனும் கேக்கறது இல்ல.. பொறுத்துக்கோம்மாங்கறான்..
அவங்களுக்கும் வயசாகும்ங்கறத மறந்துர்றாங்க…
யார்கிட்ட போறது.. கணவரும் இல்ல.. பொறந்தவங்களும்
இல்ல.. இந்த வயசான காலத்துல என்ன செய்யறது.. ???
பையன் வேலைக்குப் போயிடுவான்..
பிள்ளைங்களும் ஸ்கூல் போயிடுவாங்க.. போனப்புறம்
பத்து மணிக்குத்தான் வீட்டுக்கு போவேன்.. ஏதாவது இருக்கான்னு அடுக்கலைக்குப் போய் பத்துபாத்திரத்தை எல்லாம் தேய்ச்சுட்டு
சாப்டலாம்னா.. கத்திக்கிட்டே தான் இருப்பா…
என்ன செய்யறது.. வயிறு கேக்கமாட்டேங்குதே..”
“நான் ஒண்ணு சொல்றேன்.. கேக்குறீங்களா”,
என்று அவர் கேட்க..
“சொல்லுங்க” என்றாள் அந்தத் தாய்.
“இந்தாங்க என்னோட விலாசம்”, வாங்கிக்கொண்டாள்.
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா”, என்றார்…அவர்….!!!
………….
அவர் கேள்விக்குறியோடு பார்த்த அந்தத் தாயிடம்,
“என்ன பார்க்குறீங்க.. சந்தோஷத்துக்காக இல்ல..
இந்த தனிமை இல்லாம ஒருத்தருக்கொருத்தர் பேச்சுத்துணையா
இருப்போம்” என்றார் அவர். திரும்பிப்பார்க்காமல்
வேகமாக நடந்துவிட்டாள் அந்தத்தாய்..
அவள் மனதுக்குள்
” இந்த ஊர் உலகம் என்ன சொல்லும்.. ???
ஆமா, நாம தனியா இருக்கும்போது யாராவது வந்து
உதவி செஞ்சாங்களா.. பெத்த பிள்ளையே நமக்கு
இல்லைனு ஆச்சு.. என்ன பண்ண…..??? “
சில நாட்கள் கழித்து…
கணவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அந்த
விலாசத்தில் போய் நின்றாள்.
முகம் மலர அவர் வரவேற்றார்.
“நான் ஒண்ணு கேக்கட்டா”, என்றாள் அந்தத் தாய்.
“கேளுங்க”, என்றார் அவர்.
“கணவரும் இல்லாம பெத்த பிள்ளையும் இல்லாம தனியா
உங்க தங்கச்சி வந்துருக்கேன். ஏத்துப்பீங்களா”..???,
என்றாள்.
அவர் திடுக்கென நிமிர்ந்து சுதாரித்தவராய்..
“உன்னோட பிறந்த வீட்டுக்கு வந்துருக்க.. இனிமே இதுதான்
உன் வீடு. இந்த அண்ணனும் தங்கச்சியும்
சேர்ந்து ஒரு ஹோம் ஆரம்பிக்கலாமா”, என்றார்.
“ம்”, என்றாள் கண்ணீருடன்..
“இப்போ சூடா அண்ணனுக்கு ஒரு காபி போடு. வா
அடுக்களையைக் காண்பிக்கிறேன்”
யாரைப்பற்றியும் கவலைப்படாமல் காலத்தை ஓட்டுவோம்
என்றவாறே உள்ளே சென்றனர் இருவரும்….
காலத்தின் கட்டாயம்…!!!
(நன்றி -ஒளிபரவட்டும்…)
.
…………………………………………………………………………………………………………….
ஏற்கனவே companionship என்று விளம்பரங்கள் வர ஆரம்பித்துவிட்டன. பொதுவா நான் நினைப்பது இதுதான்.
1. பசங்க வெளிநாட்டு வேலை, அதன் காரணமாக நம்மோடு இருப்பது எல்லாம் உறுதியில்லாத நிலை. நாம் இருவர் என்று இருந்தால், அந்த இருவர் ஒருவராவது எப்போது, அதன் பிறகு என்ன ஆகும் என்றெல்லாம் கவலையில் தற்போதைய காலத்தைக் கழிப்பது என்று இருக்கும் நிலைமை கடந்த பத்து வருடங்களாக ஆரம்பித்துவிட்டது.
2. முதியோர் குடியிருப்பு – என்று பலவும் அவ்வளவாக நன்றாக இல்லை. நாம் நன்றாக இருக்கும்வரை பரவாயில்லாமல் ட்ரீட் பண்ணுவார்கள். அனாதையாகத்தான் மறைவோம் என்ற நிலைமை.
3. ஒவ்வொருத்தருக்கும் சம்பந்தி அமைவார்கள். அவர்களோடு ஒத்துப்போய் இரு குடும்பங்களும் அருகருகேயோ இல்லை சேர்ந்தோ வசிக்க ஆரம்பித்தால், ஓரளவு பிரச்சனை சரியாகும்.
எப்படி இருந்தாலும், நம் கையில் (துணைவியின் கையிலும்) காசு வேண்டும். திருமணம் என்று ஆகிவிட்டால், நம் மூக்கை நுழைக்கக்கூடாது. அவங்க அடல்ட், அவங்க வாழ்க்கை அவங்களுக்கு என்ற எண்ணம் வேண்டும். நிறையபேர் செய்யும் தவறு, மருமகள் இருக்கும்போது வெளியாரிடம் அல்லது மற்ற சொந்தக்காரர்களிடம் குசுகுசுவெனப் பேசுவது. அதை முதலில் நிறுத்தி, சந்தேகத்துக்கிடமில்லாமல் வெளிப்படையாக மருமகளைப் பாராட்டக் கத்துக்கணும்.
அவரவர் ஸ்டேஷன் வந்தால் அவரவர் இறங்கித்தான் ஆகணும். அதனால் எப்படியும் நமக்குத் தனிமை வாய்க்கும். அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், மற்றவர்கள் நம்மை அந்த நிலைக்கு forcefulஆகத் தள்ளாமல் நடந்துகொள்ளும் பக்குவமும் நமக்கு வேண்டும்.